"விளம்பர வெளிச்சம் தேடுபவர்" - ஆளுநரை தாக்கி மீண்டும் 'முரசொலி' கட்டுரை

ஆளுநர் ஆர்.என். ரவி மீது முரசொலியின் தாக்குதல் தொடர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images/R.N.Ravi

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கள்ளச்சாராய சாவுகளை முன்வைத்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விளம்பர வெளிச்சம் தேடுவதாக தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் அவரை தாக்கி கட்டுரை வெளியாகியுள்ளது. ஆர்.என். ரவி ஆளுநர் பதவியின் தகுதியைச் சீரழிப்பதாகவும் அந்த கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கடந்த சனிக்கிழமை நடந்த கள்ளச்சாராய சாவுகளில் 21 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் 1,500க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவுசெய்துள்ள காவல்துறை, பலரைக் கைது செய்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக மாநில அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் கேட்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின.

அதில், "தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?

கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச் சாராயம் விற்கப்படவில்லை எனில், ஒரே நாளில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டது ஏன்?" போன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்புவிடம் ஆளுநர் விளக்கம் கோரியதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், ஆளுநரின் இந்த நடவடிக்கை தொடர்பாக கடுமையான விமர்சனத்தை ஆளும் தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி முன்வைத்துள்ளது.

"ஆளுநர் கேட்டதில் தவறில்லை. கேட்ட விதம்தான்..."

சிலந்தி என்ற புனைப் பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில், ஆளுநருக்கு அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

"தமிழ்நாட்டில் விஷச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த வேதனையில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டுள்ள நிலையில் நமது ஆளுநர் ரவியும் தன் பங்குக்கு அந்தத் துயரச் சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முட்பட்டுள்ளார்.

ஆளுநர் விரிவான விளக்க அறிக்கை கேட்பதில் என்ன தவறு என ஒரு சிலர் கேட்கக்கூடும். ஆளுநர் கேட்டதில் தவறில்லை. கேட்ட விதம்தான் அவர் எத்தகைய விஷமத்தனத்தோடு விஷம் கக்கியுள்ளார் என்பதை வெளிப்படையாக்குகிறது.

நடந்தவை குறித்து முழு விவரங்களை, மூத்த அதிகாரியை தொலைபேசியிலோ, நேரிலோ அழைத்து அறிந்துகொள்ள ஆளுநரால் முடியும் என்றாலும் அப்படிச் செய்யாது, அதை ஓர் அறிக்கையாக வெளியிட்டு, ஊடகங்களுக்கு அனுப்பி, தான் ஏதோ பெரிய செயலைச் செய்துவிட்டதாக எண்ணும் சிறுபிள்ளைத்தனம்தான் ஆளுநரின் நெஞ்சமெல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

அவர் எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்வியும் அவரது எஜமானர்கள் மேற்பார்வையில் நடக்கும் குஜராத் அரசையும் தாக்கிக் கடித்துக் குதறும் என்பதை அறியாமல் அசட்டுக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி மீது முரசொலியின் தாக்குதல் தொடர்வது ஏன்?

"ஆளுநர் ரவிக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை"

இந்தக் கேள்விகளை அரசிடம் எழுப்பும் முன் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷச் சாராயம் குடித்து பலியானார்களே அப்போது அங்குள்ள ஆளுநர்கள் இப்படி விஷமத்தனத்தோடு ஆளும் பா.ஜ.க. அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா?

ஒருமுறை சூடுபட்ட பூனைகூட மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கும். ஆனால், ரவி தான் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்கும் காரியங்களில் ஈடுபடாது எப்போதும் சிறுபிள்ளைத்தனத்தோடு செயல்பட்டு விமர்சனங்களுக்கு ஆளாகிறார்.

அவரைப் பொறுத்தவரை நெகட்டிவோ, பாசிட்டிவோ - எது எப்படியிருந்தாலும் சரி, விளம்பர வெளிச்சம் தன் மீது பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆளுநர் ரவிக்கு ஒரே நாளில் தமிழ்நாட்டில் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதும், கள்ளச் சாராயம் இல்லையென்றால் அவ்வளவு பேர் கைதுசெய்யப்பட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சந்தேகத்தை தமிழ்நாடு தலைமைச் செயலரிடம் கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யக் கோருவதை விடுத்து, இதுபோன்று 2,000 பேரை ஏன் கைது செய்யவேண்டும் என குஜராத் ஆளுநருக்கு ஒரு தொலைபேசி போட்டுக் கேட்டிருந்தால் அவர் விளக்கியிருப்பார்.

குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. காந்தி பிறந்த அந்த மாநிலத்தில் காந்தியார் பிறந்த இல்லத்திற்கு அருகில் எல்லாம் கள்ளச் சாராயம் மலிவுச் சரக்காக விற்பனையாவதாகப் பல நேரங்களில் புகைப்பட ஆதாரங்களுடன் ஏடுகளில் செய்திகள் வந்தன.

அந்த குஜராத் மாநிலத்தில் ஆளுநர் ரவிக்கு இஷ்டமான பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக அரசியல்தான் பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. எல்லாம் அறிந்த அதிமேதாவியாக தன்னைக் கருதிக்கொண்டு, அவ்வப்போது செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆளுநர் ஆர்.என். ரவி மீது முரசொலியின் தாக்குதல் தொடர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பாஜக ஆளும், மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு விஷச் சாராயத்திற்கு 42 பேர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பலர் கண் பார்வையைப் பறிகொடுத்ததாகவும் வந்த செய்திகள் ஆளுநர் ரவிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் காவல்துறையினர் 2500 பேரைக் கைது செய்ததாகவும் ஏறத்தாழ, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் செய்தி வெளிவந்ததை ஆளுநர் ரவி அறிந்திருப்பார். ஏனென்றால் அவர் மெத்தத் தெரிந்த மேதாவி.

தமிழ்நாட்டிலோ மதுவிலக்கு அமலில் இல்லை. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. இந்த விஷ மது அருந்தி பலர் மரணமடைந்த நிலையில், குஜராத் போலீஸ் 2,500 பேரைக் கைது செய்தபோது, அந்த மாநில ஆளுநர் குஜராத் அரசுக்கு, "மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலத்தில் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், இவ்வளவு பேரை, அதாவது 2,500 பேரைக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்று கேள்வி கேட்டு, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி கடிதம் எழுதி, அதை ஏடுகளுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால் பதவியைத் துறந்து அண்ணாமலையைப் போல ஒரு மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக ஆகிவிடலாம்.

அதை விடுத்து தாறுமாறாகச் செயல்பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதியைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது," என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மட்டும் 13 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர்.
படக்குறிப்பு, மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மட்டும் 13 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர்.

ஆளுநர் மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமியும் தாக்கிப் பேசினார்

"தமிழ்நாடு ஆளுநர், மாநில அரசைச் சாடுவதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார். இந்த முறை அவராக சனாதனம், திராவிடம் என்றெல்லாம் பேசவில்லை. கள்ளச்சாராய சாவு விஷயம் அவருக்குச் சிக்கிவிட்டது.

வழக்கமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, மாநில அரசிடம் இதுபோல ஆளுநர்கள் விரிவான விளக்கம் கேட்பார்கள். அது வெளியில் தெரியாது. அது பற்றி செய்திக் குறிப்பு வெளியிடப்படாது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே மீடியாவுக்கு இது பற்றிய தகவலை வெளியிடுகிறார்.

ஆளுநர் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இருப்பது குறித்து சட்டப்பேரவையில் தான் பேசிக்கொண்டிருக்கும்போது நேரலை துண்டிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார் அவர்.

இந்த கள்ளச்சாராய மரணத்தை ஒட்டி, 1,600 பேர் கைது செய்யப்பட்டிருப்பது, பலரால் ஒரு knee-jerk நடவடிக்கையாகத்தான் பார்க்கப்படுகிறது. அது ஆளுநருக்கு சரியான சந்தர்ப்பமாகிவிட்டது. இதில் அவரைக் குறைசொல்லி பிரயோஜனமில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

'டார்வினியன் மாடல்'

ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக வந்த பிறகு அவர் மீது ஆளும் கட்சி நாளிதழான முரசொலி தாக்குதல் தொடுப்பது இது முதல்முறையல்ல. கடந்த 2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து, 'கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி?" என்ற கட்டுரை வெளியாகியிருந்தது.

நீட் வருவதற்கு முன்பிருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது என்று ஆளுநர் தெரிவித்த கருத்தைக் கண்டித்து இந்தக் கட்டுரை வெளியாகியிருந்தது.

"அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து, ஓய்வுக்குப் பின்னர் கவர்னராக அமர்த்தப்பட்டவர். மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல் துறைக்குத் தேவை. பல நேரங்களில் அந்த பாணி கைகொடுக்கும்.

ஆனால், அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும். இது நாகாலாந்து அல்ல, தமிழகம் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்" என்று கடுமையாக விமர்சித்திருந்தது முரசொலி.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று நீட் மசோதா தொடர்பாக, ஆளுநரைத் தாக்கி கடுமையான தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது முரசொலி. மார்ச் 30ஆம் தேதியன்று, தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ரவி, "சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல" என்று குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

அதை 'டார்வினியன் மாடல்' என்று குறிப்பிட்ட ஆளுநர், "சில புத்திக்கூர்மையுள்ளவர்கள் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

"இதனால், சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஏழ்மையான, எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலடியாகவே அந்தத் தலையங்கம் எழுதப்பட்டதாகக் கருதப்பட்டது.

இதற்குப் பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதத் துவக்கத்தில், 75ஆவது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தமிழ்நாடு எனக் கூறுவதைவிட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும்" என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அகில இந்திய அளவில் #தமிழ்நாடு என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் ஆனது.

இதையடுத்து ஜனவரி ஆறாம் தேதி "பிரிவினையை வளர்த்தது யார்?" என்ற தலைப்பில் ஆளுநரைக் கடுமையாக விமர்சித்து தலையங்கம் ஒன்றை வெளியிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: