தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய சாவுகள்: நடந்தது என்ன? யார் காரணம்? - பிபிசி கள ஆய்வு

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மே 13ஆம் தேதியன்று காலை 11 மணிவாக்கில், வெளியே போய்விட்டு வருவதாகச் சென்ற சுரேஷ், சில மணிநேரத்திற்குப் பிறகு குடித்துவிட்டு வீடு திரும்பினார். சுரேஷ், மரக்காணம் எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த ஒரு மீனவர்.
அவர் குடித்துவிட்டு வீடு திரும்பிய உடனே படுத்து உறங்கவும் தொடங்கினார். இது அவருடைய வழக்கம்தான் என்பதால் வீட்டினர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத வயிற்று வலியால் படுத்திருந்த அறை முழுக்க உருள ஆரம்பித்தார் சுரேஷ். வாந்தியும் எடுக்கத் தொடங்கினார்.
இரவில் சாப்பிடாமல் படுத்ததால், இப்படி ஆகியிருக்கலாம் என்று நினைத்த குடும்பத்தினர் அவருக்கு சாப்பாடு கொடுத்தனர். அவரால் அதைச் சாப்பிட முடியவில்லை.
சிறிது நேரத்தில் உடல் முழுக்க எரிவதாகக் கூறினார். இதையடுத்து வீட்டினர் அவரை குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தனர். அப்போதும் எரிச்சல் தீரவில்லை. பிறகு கண்கள் சிவக்க ஆரம்பித்து மூச்சுத் திணறலும் தொடங்கியது.
அப்போதுதான் குடும்பத்தினருக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கே இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறப்பட்டதால் புதுச்சேரியில் இருந்த புதுச்சேரி இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சிற்கு கொண்டு செல்லும்படி கூறப்பட்டது.
ஆம்புலன்ஸ் உடனடியாகக் கிடைக்காததால் காரில் அவரை ஏற்றிச் சென்றனர். அங்கு சென்ற சில மணிநேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் எக்கியார்குப்பத்தில் உள்ள பல வீடுகளில் இதுபோல மரணம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. 51 வயதாகும் முனியம்மா கண் புரை நோய்க்காக அறுவை சிகிச்சை செய்துவிட்டு, சனிக்கிழமை காலையில்தான் வீடு திரும்பியிருந்தார்.
மருத்துவமனையில் இருந்து அவரும் அவருடைய மகளும் வீட்டிற்குள் நுழைந்தபோது முனியம்மாவின் கணவர் தரணிவேலு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தார்.
மாலையில் எழுந்த தரணிவேலு, யாரிடமோ பணம் வாங்கி வருவதாகக் கூறிப் புறப்பட்டவர், அப்படியே அமர்ந்துவிட்டார். உடல் முழுவதும் வலிப்பதாகத் துடிக்க ஆரம்பித்தார்.
பிறகு கண் சிவந்து, விழிகள் வெளியில் வருவதைப்போல ஆனது. "நான் சாகப்போறேன்... சாகப்போறேன்னு சொன்னாரு. அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை. உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். ஆனால், பலனில்லை" என்கிறார் முனியம்மா.
சங்கர் என்பவரும் இதேபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டு உயிரிழந்தார். சுரேஷ், தரணிவேலு, சங்கர் ஆகியோரின் குடும்பத்திற்குத் தங்கள் வீட்டு ஆண்கள் ஏன் திடீரென உயிரிழந்தனர் என்பது முதலில் புரியவில்லை.
ஆனால், ஊருக்குள் அடுத்தடுத்து இதேபோன்ற அறிகுறிகளோடு பலர் மருத்துவமனைக்கு செல்ல ஆரம்பித்ததும்தான் எல்லோருக்கும் விபரீதம் புரிய ஆரம்பித்தது. ஞாயிற்றுக்கிழமை விடிந்தபோது, பலர் உயிரிழந்திருந்தார்கள்.

விழித்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், உடனடியாக வீடு வீடாகச் சோதனை நடத்தி யாரெல்லாம் முதல் நாள் சாராயம் குடித்திருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மருத்துவனையில் சேர்த்தது.
"மரணங்களை தடுத்திருக்க முடியும்"
தமிழ்நாட்டின் இருவேறு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மரக்காணத்தில் மட்டும் 79 பேர் இந்தச் சாராயத்தைக் குடித்துள்ளனர். வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் இதுபோன்ற மரணங்கள் நேர்ந்தது எப்படி?
மொத்தம் 79 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருந்தபோதும் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமைக்குள் அந்தச் சிறு கிராமத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
அதேபோல், சனிக்கிழமையன்று செங்கல்பட்டில் உள்ள சித்தாமூருக்கு அருகில் இருக்கும் பெருக்கரணை, பேரம்பாக்கம் ஆகிய இரு கிராமங்களிலும் இதேபோன்ற சாராயத்தை அருந்தியவர்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
எக்கியார் குப்பத்தில் சாராயம் குடித்து இறந்துபோன ராஜவேலுவின் மைத்துனரான சக்திவேல், கொஞ்சம் சுதாரித்திருந்தால் இந்த மரணங்களைத் தடுத்திருக்க முடியும் என்கிறார்.

"வழக்கமாக சாராயம் விற்பவர்களிடம்தான் இவர்கள் வாங்கிக் குடித்துள்ளனர். இந்தச் சம்பவம் சனிக்கிழமையன்று நடந்தது. அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமையன்று இந்த ஊரைச் சேர்ந்த சுப்பராயன் என்ற ஊனமுற்றவர், இந்தச் சாராயத்தை வாங்கிக் குடித்திருக்கிறார்.
வெள்ளிக்கிழமையன்றே அவர் இறந்துவிட்டார். ஆனால், அவர் வயதானவர் என்பதால் இறந்திருக்கலாம் எனக் கருதிவிட்டோம். இல்லாவிட்டால் சனிக்கிழமை யாரும் போய் அந்தச் சாராயத்தை வாங்கிக் குடித்திருக்க மாட்டார்கள்" என்கிறார் சக்திவேல்.
ராஜவேல் குடும்பத்தில் மட்டும் மூன்று பேர் இந்தச் சாராயத்தைக் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்தக் கள்ளச்சாராய சாவுகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மாநில அரசு உடனடியாக இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் செய்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைபெற்று வருபவர்களைப் பார்வையிட்டார்.
சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட அனைவருமே மீனவர்கள் அல்லது விவசாய வேலை செய்பவர்கள். அனைவருமே வறுமையில் உழல்பவர்கள்.
இறந்துபோன பலரை நம்பித்தான், அவர்களது குடும்பமே நடந்து வந்திருக்கிறது. பலரது குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரது வீடு பாதி கட்டப்பட்ட நிலையில் நிற்கிறது. இப்படியாக பல கனவுகளையும் வாழ்க்கையையும் சிதைத்திருக்கிறது இந்தக் கள்ளச்சாராயம்.
கள்ளச்சாராய நெட்வொர்க்: காவல்துறை கண்டுகொள்ளவில்லையா!
இத்தனை பேரின் உயிரைப் பலிவாங்கிய சாராயத்தை விற்றது அமரன், முத்து ஆகிய இருவர்தான் என்கிறார்கள் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்தவர்கள். எக்கியார்குப்பத்திற்கு வழக்கமாக சாராயம் விற்கும் இவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுவிட்டனர்.
இந்த இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, எக்கியார்குப்பத்தை ஒட்டியுள்ள தோப்புப் பகுதியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்தனர். அந்தப் பகுதி முழுக்க கள்ளச்சாராய பாக்கெட்கள் இறைந்துகிடக்கின்றன.
அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுவின் விலை அதிகம் என்பதால், இந்தப் பகுதியை ஒட்டிய பெரும்பாலான கிராமங்களில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தையே நாடுகின்றனர். ஒரு பாக்கெட் சாராயம் 25 ரூபாய் முதல் 30 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டாண்டு காலமாகவே இந்த விற்பனை எந்தத் தடையுமின்றி நடந்து வருகிறது.
"என் வீட்டுக்காரரால் ஒரு நாளும் சாராயம் இல்லாமல் இருக்கமுடியாது. ஒரு உறை முப்பது ரூபாய் என்றால் 2 உறைக்கு 60 ரூபாய் தினமும் அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். கொடுக்கவில்லையென்றால் தூங்க மாட்டார். வேலை பார்க்க மாட்டார். இது வழக்கமான ஒன்றுதான்" என்கிறார் உயிரிழந்த தரணிவேலுவின் மனைவி முனியம்மாள்.

சாராயத்தில் கலக்க மெத்தனால் கிடைத்தது எப்படி?
ஒரே நாளில் ஒரே மாதிரி, இரு வேறு இடங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு இடையிலான தொடர்பு முதலில் யாருக்கும் புரியவில்லை. கள்ளச்சாராயம் விற்றவர்களைத் தேடும் நடவடிக்கையைத் துவங்கிய காவல்துறை, முதலில் எக்கியார் குப்பத்தில் சாராயம் விற்ற ஓதியூரைச் சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவரைக் கைது செய்தது.
அமரனை விசாரித்ததில் அவர் முத்து என்பவரிடம் சாராயம் வாங்கியதாகவும் முத்து, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஏழுமலையிடம் சாராயம் வாங்கியதாகவும் தெரிவித்தார். இதற்குப் பிறகு, சித்தாமூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட அம்மாவாசை என்பவரைக் கைது செய்து விசாரித்ததில் அவர் ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்திரன் ஆகியோரிடம் சாராயம் வாங்கியதாகத் தெரிவித்தார்.
வேலுவை பிடித்து விசாரித்ததில் அவர் பனையூர் ராஜேஷ் என்பவரிடம் சாராயம் வாங்கியதாகத் தெரிவித்தார். பனையூர் ராஜேஷை பிடித்து விசாரித்தபோது, அவர் விளம்பூர் விஜி என்பவரிடம் வாங்கியதாகத் தெரிவித்தார். விளம்பூர் விஜியை விசாரித்தபோது, அவர் பாண்டிச்சேரி ஏழுமலையிடம் வாங்கியதாகத் தெரிவித்தார்.
ஆகவே, செங்கல்பட்டு, மரக்காணம் ஆகிய இரு இடங்களிலும் விஷச் சாராயத்தை சப்ளை செய்தது பாண்டிச்சேரி ஏழுமலை என்பவர்தான் எனத் தெரிய வந்தது. இப்போது இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்குப் பிறகு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 1,192 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. அந்தச் சாராயத்தைச் சோதனைக்கு அனுப்பியபோது, அதில் ரசாயன வண்ணங்களில் பயன்படுத்தப்படும் தின்னர் தயாரிக்க உதவும் மெத்தனால் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விளம்பூர் விஜியும் ஏழுமலையும் விசாரிக்கப்பட்டதில், இவர்கள் இந்தச் சாராயத்தில் கலப்பதற்கான மெத்தனாலை சென்னை வானகரத்திலிருந்து செயல்பட்ட ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியது தெரியவந்தது.

இந்த ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டட் என்ற ஆலையை 2018ஆம் ஆண்டு இளைய நம்பி என்பவர் வாங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளிலேயே கொரோனாவால் பொது முடக்கம் ஏற்பட்டதால் பெரும் இழப்பைச் சந்தித்த அவர் தொழிற்சாலையையே மூடிவிட்டார்.
அப்போது அவர் வசம் இருந்த 1,200 லிட்டர் மெத்தனாலை பாண்டிச்சேரி ஏழுமலைக்கும் ராஜா என்ற பரக்கத்துல்லாவுக்கும் 66,000 ரூபாய்க்கு விற்றார்.
இந்த மெத்தனால் கலந்த சாராயம் தயாரிக்கப்பட்ட பிறகு, அதை சித்தாமூருக்கும் மரக்காணத்திற்கும் கொண்டு செல்வதில் விளம்பூர் விஜி ஈடுபட்டதாகக் காவல்துறை கண்டறிந்திருக்கிறது.
இதையடுத்து ஜெயசக்தி நிறுவனத்தின் உரிமையாளர் இளைய நம்பி, விளம்பூர் விஜி, ஏழுமலை உள்ளிட்ட 13 பேர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வழக்கை மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.
பிபிசியிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி, "பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிட்டனர். புதிதாக கேஸ் வருவது இல்லை. முதல் இரண்டு நாட்கள் கிராமங்களுக்கு நாங்களே போய் வீடு வீடாகச் சோதித்து சாராயம் குடித்தவர்கள் அனைவரையும் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம்.
சாராயம் குடித்திருந்த 79 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிட்டனர். இவர்களில் 13 பேர் விழுப்புரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இவர்களில் ஒன்றிரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மற்றவர்கள் சாதாரணமாகவே உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒன்றிரண்டு நாட்களில் வீடு திரும்பிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து மரக்காணம் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, மேல் மருவத்தூர், மதுராந்தகம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்குப் பிறகு தமிழக காவல்துறை மேற்கொண்ட சோதனைகளில் 1842 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 1,500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 19,000 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டுமே இந்த கள்ளச்சாராய பிரச்னைக்குத் தீர்வாக இருக்காது என்பது அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் யாருக்கும் புரியும்.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வீட்டில் இருக்கும்போதே, அதற்கு சில வீடுகள் தள்ளி சிலர் அமர்ந்து மது அருந்தும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.
கள்ளச்சாராயம் அருந்தி, தற்போது சிகிச்சை பெற்றுவரும் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த மணிமாறனிடம் பேசியபோது, "குடிக்காமல் இருக்க முடியாது. டாஸ்மாக்கில் வாங்கும் அளவுக்கு வசதியும் கிடையாது. அதனால் இங்கு வாங்கிக் குடிக்கிறோம்" என்றார்.
ஒருபுறம், இந்த விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளை மூடச் சொல்வதற்கான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன.
மற்றொரு புறம், அரசின் மதுபானக் கடைகளுக்கு வெளியில் மிகப் பெரிய அளவில் சாராய விற்பனையும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சிக்கலான பிரச்னையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தமாக 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவற்றில் உள்ள மெத்தனாலை சரிபார்க்கும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
பெரும்பாலான கள்ளச்சாராய சாவுகளுக்கு, அவற்றில் மெத்தனால் கலக்கப்படுவதே காரணமாக இருப்பதால் கடந்த 2002ஆம் ஆண்டு மெத்தனாலின் பயன்பாடு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் (1937)ன் கீழ் கொண்டு வரப்பட்டது. மெத்தனால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த, 1959ஆம் ஆண்டின் தமிழ்நாடு டீ நேச்சர்ட் ஸ்பிரிட், மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
இருந்தபோதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு இந்த அபாயகரமான வேதிப்பொருள் ஏதோ வழியில் தொடர்ந்து கிடைத்து வருவதும் அது பல குடும்பங்களைச் சிதைப்பதும் சமீபத்திய சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சாமாகியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













