வாட்ஸ்அப் சர்வதேச எண் மோசடி அழைப்பு மூலம் பணம் திருடும் கும்பல் - எப்படி தவிர்ப்பது?

வாட்ஸ் அப் மோசடி அழைப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அண்மை காலமாக இந்தியாவில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்பு உங்களுக்கும் வருகிறது என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை மோசடி அழைப்புகள் ஆகும்.

வெளிநாட்டு எண்களில் இருந்து தங்களும் வரும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களை வாட்ஸ் அப் பயனர்கள் சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். சில காலங்களுக்கு முன்பு துனீசியா போன்ற நாடுகளின் எண்களில் இருந்து மொபைல்களுக்கு அழைப்புகள் வருவது வாடிக்கையாக இருந்த நிலையில், தற்போது வியட்நாம், தாய்லாந்து போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சில ஆப்ரிக்க நாடுகளின் எண்களில் வாட்ஸ் அப் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த அழைப்புகள் கடந்த சில நாட்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று சமூக ஊடகங்களும் மெட்டா நிறுவனத்தின் கீழ் வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் மட்டும் 48 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் அப் பயனர்கள் உள்ளனர்.

மோசடி அழைப்புகள்/ மோசடி மெசேஜ்கள்

இத்தகைய மோசடி அழைப்புகள் அதிகமாக +230(மொரீசியஸ்). +66(தாய்லாந்து), +251 (எத்தியோப்பியா), +60 (மலேசியா), +62 (இந்தோனீசியா), +254 (கென்யா), மற்றும் +84 (வியட்நாம்) ஆகிய எண்களில் தொடங்குகின்றன.

அதே நேரத்தில், அந்த நாடுகளில் இருந்துதான் இந்த அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நாம் உறுதியாக நம்ப முடியாது என்று கூறுகிறார் சைபர் குற்றவியல் நிபுணர் கார்த்திகேயன்.

"வாட்ஸ் அப் அழைப்புகள் இணையம் மூலம் மேற்கொள்ளப்படுவதால் உலகின் எந்த பகுதியில் இருந்தும் இத்தகைய அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்தியாவில் இருந்தும் வெளிநாட்டு எண்களில் பேச முடியும். பொதுவாக இத்தகைய நம்பர்களில் இருந்து மிஸ்டுகால்கள் வரும் நீங்கள். அதற்கு வினையாற்றத் தொடங்கினால், உங்களுக்கு வாட்ஸ் அப்பில் மேசேஜ் செய்யத் தொடங்குவார்கள். அப்படியே மோசடி லிங்க்களையும் அனுப்புவார்கள். அதனை நீங்கள் கிளிக் செய்தால், உங்கள் போனை ஹேக் செய்துவிடுவார்கள்," என்றார்.

வாட்ஸ் அப் மோசடி அழைப்பு

நமது நேரடி அனுபவம்

இதேபோல், பகுதி நேர வேலை தொடர்பான மெசேஜ்களும் வாட்ஸ் அப்பில் சமீக காலமாக வரத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு எண்களில் இருந்து `பிரபல நிறுவனங்களின் பெயர்களை கூறி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புகின்றனர். அதில், யூ டியூப்பில் சில நிமிட வீடியோக்களை பார்ப்பது மூலமாகவோ, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சில கணக்குகளை பின் தொடர்வது மூலமோ பகுதி நேரமாக தினமும் 2000 முதல் 10000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று கூறி வலை விரிக்கின்றனர்.

நமக்கும் இதேபோன்ற மெசேஜ் வந்தது. அப்போது, அவர்களை அழைப்பு மேற்கொள்ளும்படி நாம் கூறியபோது, `ஒரே நேரத்தில் பலரது பணி நியமனம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதால் அழைத்துப் பேச முடியாது` என்று தெரிவித்தனர்.

அவர்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக, `வேலை செய்வதற்கு விருப்பம்` என்று பதிலளித்தோம். அப்போது, மூன்று பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நமக்கு அனுப்பி வைத்து அவற்றை நாம் பின் தொடர வேண்டும், லைக் செய்ய வேண்டு என்று தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக ஸ்கிரின்ஷாட்டை அனுப்பி வைக்க கூறினர். நாமும் அவ்வாறு செய்தோம்.

அதன் பின்னர், டெலிகிராம் முகவரி ஒன்றை அனுப்பிய அவர்கள், இது வரவேற்பாளரின் எண், அவருக்கு நாங்கள் அனுப்பும் `ஜாப் கோர்டு`ஐ அனுப்புங்கள் என்று கூறினர். அவர்கள் குறிப்பிட்ட டெலிகிராம் கணக்கை தொடர்புகொண்டு, "அழைப்பு மேற்கொள்ளும்படி` மேசேஜ் அனுப்பியபோது, அவர்கள் அழைப்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. ஒரு லிங்கை அனுப்பி ` இந்த ஃபார்மை` பூர்த்தி செய்ய வேண்டும்," என்று நம்மிடம் கூறினர்.

இதற்கு மேலும் தொடர்வது ஆபத்து என்பதால், அவர்களின் எண்களை பிளாக் செய்துவிட்டு ரிபோர்ட் செய்தோம்.

வாட்ஸ் அப் மோசடி அழைப்பு

பட மூலாதாரம், Karthikeyan

படக்குறிப்பு, கார்த்திகேயன்- சைபர் குற்றவியல் நிபுணர்

லிங்கை திறப்பது ஆபத்தாக அமையும்

இது போன்ற லிங்கை திறப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார் கார்த்திகேயன், "இத்தகைய லிங்கை நாம் ஓப்பன் செய்யும்போது நமது மொபைலை அவர்கள் ஹேக் செய்யக் கூடும்.

தற்போது நாம் மொபைலை அழைப்புகள் மேற்கொள்வதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. வங்கி சேவை, பணப்பரிமாற்றம் போன்றவற்றுக்கும் அதிகளவில் பயன்படுத்துகிறோம். எனவே, நமது மொபைலை ஹேக் செய்து அதில் இருந்து பணத்தை எடுப்பது, நமது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டி பணம் பறிப்பது போன்றவற்றில் அவர்கள் ஈடுபடக்கூடும்," என்று அவர் கூறுகிறார்.

வாட்ஸ்அப் அழைப்பு மோசடியின் பின்னால் உள்ள சிலந்தி வலை

இத்தகைய வாட்ஸ் அப் அழைப்புகளுக்கு பின்னால் மிகப்பெரிய சிலந்தி வலையே இருப்பதாக எச்சரிக்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநரான ஹரிஹரசுதன் தங்கவேலு.

இது தொடர்பாக பிபிசியிடம் விரிவாக பேசிய அவர், "முதலில், வாட்ஸ் அப் மூலம் மிஸ்டு கால் கொடுப்பார்கள். நீங்கள் அவர்களை திருப்பி அழைத்தால், `நீங்கள் ஏற்கனவே பகுதி நேர வேலைக்கு இணையத்தில் தேடியிருந்தீர்கள். அதன் அடிப்படையில் உங்கள் எண்ணை தேர்வு செய்தோம்," என்று பிரபல வேலை தேடுதல் தளத்தின் பெயரை குறிப்பிட்டு உங்களிடம் தெரிவிப்பார்கள்.

பின்னர், இன்ஸ்டாகிராம் பக்கத்தை லைக் செய்யுங்கள் போன்ற எளிமையான டாஸ்க்கை கொடுப்பார்கள், அதற்கு 100, 150 ரூபாய் என நமது அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்புவார்கள். அடுத்தடுத்து மற்றொரு பக்கத்தை லைக் செய்ய சொல்லுவார்கள். நாம் அவ்வாறு செய்யும்போது மீண்டும் 200, 300 ரூபாய் என நமது அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பி வலை விரிப்பார்கள். அதன் பின்னர் டெலிகிராம் லிங்கை அனுப்புவார்கள். அங்கு தான் அவர்களின் திட்டத்தை செயல்படுத்த தொடங்குவார்கள்` என்றார்.

வாட்ஸ் அப் மோசடி அழைப்பு

பட மூலாதாரம், HariHarasudhan

படக்குறிப்பு, ஹரிஹரசுதன் தங்கவேலு - சைபர் பாதுகாப்பு வல்லுநர்

தொடர்ந்து பேசிய அவர், "டெலிகிராமில் 300 பேர் இருக்கும் குரூப்பில் உங்களை இணைத்து விடுவார்கள். ரிசப்ஷனிஸ்ட் என்று ஒருவர் இருப்பார், அவர் டாஸ்க் குறித்து நம்மிடம் எடுத்துரைப்பார்.

பின்னர், 1500 ரூபாய் கட்டுங்கள், உங்களுக்கு 3000 ரூபாய் திருப்பி கிடைக்கும் என்று நம்மிடம் கூறுவார்கள். நாம் தயக்கம் காட்டும்போது, அதே குழுவில் பலரும் நான் 3000 ரூபாய் கட்டினேன் 5000 ரூபாய் கிடைத்தது, 5000 ரூபாய் கட்டினேன் 10000 ரூபாய் கிடைத்தது என்று மெசேஜ் அனுப்பிக்கொண்டிருப்பார்கள்.

இது உங்களுக்குள் ஆசையை தூண்டும், தயக்கத்தில் இருக்கும் நபர்கள் சரி சிறிய தொகைதானே என்று 1500 ரூபாயை கட்டினால் சில நேரங்களில் உங்கள் கணக்கிற்கு அவர்கள் 1700 அல்லது 1800 ரூபாயை அனுப்பக்கூடும். இதையடுத்து பலரும் நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து பணம் அனுப்ப தொடங்குவார்கள். ஆனால், அந்த பணம் திரும்பி கிடைக்காது. எனக்கு தெரிந்து பலர் லட்சக்கணக்கில் இதில் இழந்துள்ளனர்," என்று விளக்கினார்.

ரிசப்ஷனிஸ்ட் இருப்பார். அவருக்கு மேல் கிளஸடர் மேனேஜர் என்பவர் இருப்பார், இவர்களுக்கு அனைவருக்கும் மேல் ஒரு தலைவர் இருப்பார். அவரிடம் இந்த பணம் சென்றப்பின், அதை அவர் கிரிப்டோ கரன்ஸியாக மாற்றிக்கொள்வார். அவர் பற்றி பொதுவாக யாருக்கும் தெரிந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் மோசடி அழைப்புகள்

பட மூலாதாரம், PA Media

வாட்ஸ்அப் என்ன கூறுகிறது?

இத்தகைய மோசடி அழைப்புகள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கும்படி தொலைத்தொடர்பு நிறூவனங்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன.

அதேநேரம், என்டிடிவிக்கு வாட்ஸ் அப் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள விளக்கத்தில், பயனர்களின் பாதுகாப்புதான் வாட்ஸ் அப்-க்கு பிரதானமாகும். மோசடிகளில் இருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு ஏற்ற வகையில், ஆட்கள் மற்றும் கருவிகள் மூலம் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அர்ப்பணிப்போடு செய்து வருகிறோம். தெரியாத சர்வதேச எண்களில் இருந்தோ உள்ளூர் எண்களில் இருந்தோ அழைப்புகள்/ மேசேஜ் வரும்போது அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டு புகார் அளிப்பது என்பது மோசடிக்கு எதிரான சரியான நடவடிக்கையாக இருக்கும்` என்று வாட்ஸ் அப் கூறியுள்ளது.

இதேபோல், வாட்ஸ் அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ` இதுபோன்ற அழைப்புகள் வரும்போது, அந்த எண்களை ரிப்போர்ட் செய்வது முக்கியம். அப்போதுதான், அந்த எண் மீது நடவடிக்கை எடுத்து வாட்ஸ் அப்பில் இருந்து தடை செய்ய முடியும்` என்று குறிப்பிட்டார்.

சர்வதேச மோசடி அழைப்புகள் தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்திய தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக மாநிலங்களுக்கான தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீத் சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாகவும் இதையடுத்து, செயற்கைத் தொழில்நுட்பம் போன்றவற்றின் உதவியோடு இந்த மோசடி அழைப்புகளை 50 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளதாகவும் ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் இணைய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

விதிகளை மீறியதாக கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 47 லட்சம் கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ் அப் கடந்த மே முதல் வாரத்தில் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாட்ஸ்அப் மோசடி அழைப்புகள்

பட மூலாதாரம், Getty Images

எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

முதலில் இது ஒரு மோசடி என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இன்ஸ்டாகிராமில் லைக் செய்வது மூலமோ, ஒருவரை ஃபாலோ செய்வது மூலமோ பணம் வராது என்பதை உணர வேண்டும் என்று கூறுகிறார் ஹரிஹரசுதன் தங்கவேலு. ` ஒருவேளை நீங்கள் தெரியாமல் இந்த குழுவில் இணைந்துவிட்டு தொடக்கத்தில் பணத்தை இழந்தால் உடனடியாக அதில் இருந்து முடிந்தவரை வெளியே வருவது நல்லது. 2000 ரூபாய் பணத்தை இழந்துவிட்டு, அதனை திரும்ப பெற வேண்டும் என்று மேலும் மேலும் பணத்தை அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக, நீங்கள் பணத்தை இழந்திருந்தால், உங்களை தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்ட மொபைல் எண், உங்களுக்கு வந்த தகவல்கள் அனைத்தையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு விரைவாக புகார் அளிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பணம் திருப்பிக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவற்றையெல்லாம் விட, இத்தகைய அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது பாதுகாப்பானது` என்றார்.

மிரட்டல்களுக்கு பயப்படக்கூடாது

பொதுவாக தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் அவற்றை எடுக்காமல் இருப்பது நலம். அவர்கள் மெசேஜில் எதாவது லீங்கை அனுப்பியிருந்தால் அதனை நிச்சயமாக திறந்து பார்க்கக்கூடாது என்று எச்சரிக்கிறார் கார்த்திகேயன். ` நீங்கள் லிங்கை க்ளிக் செய்தால் உங்கள் மொபைலில் ஸ்பைவேர் பதிவிறக்கம் செய்யப்படும். அதன் மூலம் மொபைலின் கட்டுப்பாட்டை அவர்கள் பெறக்கூடும். லிங்க் என்றில்லை ஒரு புகைப்படத்தில் கூட ஸ்பைவேரை இணைத்து அவர்கள் அனுப்பக்கூடும். அவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்தாலும் மொபைலின் கட்டுப்பாடு அவர்கள் வசம் சென்றுவிடும்.

பின்னர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, அந்தரங்க புகைப்படத்தை எடுத்துக்கொண்டு மிரட்டுவது போன்றவற்றில் அவர்கள் ஈடுபடுவார்கள். இவ்வாறு மிரட்டும்போது பயப்படுவதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் பயந்தால் அவர்களின் மிரட்டல்கள் அதிகரிக்கும். எனவே உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும்` என்று அவர் தெரிவித்தார்.

இந்த தவறை செய்யக்கூடாது

இத்தகைய ஸ்ஃபைவேர் நமது மொபைலில் இன்ஸ்டால் ஆகியிருந்தால் அது குறித்து நமக்கு தெரிவது கடினம். எனவே, மொபைலை தொடர்ச்சியாக கண்காணிப்பது அவசியம் என்கிறார் கார்த்திகேயன், ` திடீரென ஒரு செயலி தானாகவே செயல்பட தொடங்குகிறது அல்லது தானாகவே மூடுகிறது, இரவில் நாம் பயன்படுத்தாத போதும் மொபைலில் லைட் எரிகிறது என்றால் ஒருவேளை அது ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.

ஒருசிலர் மொபைல் ஃபோன் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் தோன்றினால், அதில் இருப்பதை எல்லாம் பேக் அப் எடுத்துவிட்டு, ஃபோனை ஃபார்மர்ட் அடித்துவிட்டு மீண்டும் ஃபைல்களை ரீஸ்டோர் செய்வார்கள் இது தவறு. உங்கள் மொபைலில் தேவையில்லாத அப்ளிகேஷன்ஸ் இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், அவற்றையெல்லாம் 'அன்இன்ஸ்டால்' (அகற்றி விட்டு) செய்துவிட்டு தேவையானதை மட்டுமே பேக்அப் எடுக்க வேண்டும். பின்னர் ஃபோனை ஃபார்மேட் செய்து 'ரீஸ்டோர்' செய்து கொள்வதுதான் சரி` என்று அவர் அறிவுறுத்துகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: