அரவிந்த் கேஜ்ரிவால் கைது பற்றி அமெரிக்கா கூறியது என்ன? இந்தியா எதிர்ப்பு ஏன்?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது விவகாரத்தை உற்று கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. கேஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஏற்கனவே ஜெர்மனி குரல் கொடுத்திருந்த நிலையில், 2வது நாடாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருப்பது இந்தியாவை அதிருப்தியடையச் செய்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரி கடந்த மார்ச் 21, 2024 இரவு கைது செய்தனர். புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. பாஜக பொய் வழக்கு போடுவதாக குற்றம்சாட்டிவந்த கேஜ்ரிவால் தொடர்ந்து ஆஜராகவில்லை.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்குள் வேளையில் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது கடும் அதிர்வுகளை கிளப்பியது. கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் கேஜ்ரிவாலுக்கு நாங்கள் நியாயமான வெளிப்படைத்தன்மையுடன் உரிய நேரத்தில் சட்ட உதவிகள் கிடைப்பதை ஊக்குவிப்பதாக அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கேஜ்ரிவால் தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்காவின் துணை தூதரக செயல் அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. புதன்கிழமை காலையில் அவர் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நேரில் ஆஜரானார். சுமார் 40 நிமிடங்கள் வரை அவர் அலுவலகத்தில் இருந்தனர் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் விதமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
"இந்தியாவில் நடைபெறும் குறிப்பிட்ட சட்ட நடைமுறைகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ராஜீய உறவுகளில், நாடுகள் பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சக ஜனநாயக நாடு என வரும்போது இதில் கூடுதல் பொறுப்பு உள்ளது. இல்லை எனில், இது ஆரோக்கியமற்ற முன்னுதாரனங்களுக்கு வித்திடலாம். இந்தியாவின் சட்ட நடைமுறைகள் சுயாதீன நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டது. உரிய நேரத்தில் முடிவுகளை தர உறுதியாக செயல்படுகிறது. அதற்கு குந்தகம் விளைக்கும் வகையில் விமர்சிப்பது தேவையற்றது" என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேஜ்ரிவாலுக்கு நியாயமான விசாரணைக்கு கிடைக்க உரிமை உண்டு என கடந்த வாரம் ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவித்திருந்தார். அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சியினரால் அதிகம் பகிரப்பட்டது.
ஜெர்மன் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் என்ஸ்வீலருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியதோடு,. இதுபோன்ற கருத்துகள் இந்தியாவின் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதை போன்று நாங்கள் கருதுகிறோம் என இந்திய வெளியுறவு அமைச்சகம், தமது அறிக்கை வாயிலாக கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, குடியிருமை திருத்தச் சட்டம் அமலானது குறித்தும் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. குடியிருமை திருத்தச் சட்டம் குறித்த அறிவிப்பால் நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியிருந்தார். இது தேவையற்றது, தவறான தகவல் எனக்கூறி அமெரிக்காவின் கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



