காணொளி: 'காமனெயி கொல்லப்பட்டார்' - இரானில் என்ன நடந்தது?
அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதனை இரான் அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேபோல, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் மத்திய கிழக்கிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், இரானின் அதி உயர் தலைவர் காமனெயி, இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் ,”வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இறந்துவிட்டார். இது இரான் மக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கும், உலகம் முழுவதும் பல நாடுகளைச் சேர்ந்த காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி கொண்ட கும்பலால் கொல்லப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட மக்களுக்கும் நீதி ஆகும்.
எங்கள் உளவுத்துறை மற்றும் மிக உயர்ந்த தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகளை அவரால் தவிர்க்க முடியவில்லை. மேலும் இஸ்ரேலுடன் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியவில்லை.
இது இரான் மக்களுக்கு தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றிக்கொள்ள கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகும். அவர்களுடைய IRGC, ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு, காவல் படையினர் பலரும் இனி போராட விரும்பவில்லை. எங்களிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம்.
நேற்று இரவு நான் கூறியபடி, “இப்போது அவர்கள் பாதுகாப்பைப் பெறலாம்; பின்னர் அவர்கள் பெறுவது மரணம் மட்டுமே!
IRGC மற்றும் காவல் துறை இரான் தேசபக்தர்களுடன் இணைந்து, ஒன்றுபட்ட அணியாக செயல்பட்டு, நாட்டை அது பெற வேண்டிய மகத்துவத்துக்கு மீண்டும் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறோம். அந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். ஏனெனில் காமனெயின் மரணம் மட்டுமல்ல, அந்த நாடும் ஒரே நாளில் பெரிய சேதத்தை சந்தித்துள்ளது.
அதேநேரம், மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநிறுத்தும் எங்கள் இலக்கை அடையும் வரை, துல்லியமான குண்டுவீச்சு வாரம் முழுவதும், அல்லது தேவையான காலம் வரை, எந்த இடையூறும் இன்றி தொடரும்” என டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுன் காமனெயி சென்றுவிட்டார் என கூறியிருந்தார்.
இரானின் அரசு ஊடகமும் காமனெயியின் இறப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
இரானின் கடைசி ஷாவின் மகனும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான ரேசா பஹ்லவி காமனெயி இறப்பு செய்தியை வரவேற்றுள்ளார்.
“இரானின் ஆயிரக்கணக்கான வீரமான மகன்களையும் மகள்களையும் கொன்ற, அலி காமனெயி, வரலாற்றுப் பக்கங்களில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டார்.” என சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த காமனெயி?
இரானை சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்த சக்தி வாய்ந்த நபராக காமனெயி பார்க்கப்படுகிறார்.
காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார்.
ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களைப் போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலைச் சார்ந்தே அதிகம் இருந்தது.
சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார். அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.
பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார். சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார்.
1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



