தமிழ்நாடு: 50 ஆண்டுகளாக கிடைக்காத சாலை வசதி; 48 மணி நேர தொடர் போராட்டத்தால் சாதித்த பழங்குடியின மக்கள்

உடுமலை போராட்டம்

பட மூலாதாரம், MAHADEVAN

படக்குறிப்பு, சாலை வசதி வேண்டி ஜூலை 12ம் தேதியிலிருந்து 14ம் தேதி வரை 48 மணிநேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்

கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி மலை அடிவாரத்தில் இருந்து குருமலை மலைக்கிராமம் வரை உள்ள மலைப்பாதையில் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கினார். ஆனால், இந்த அனுமதி இரண்டு தலைமுறை பழங்குடியின மக்கள் போராடியும் கிடைக்காமல், இறுதியாக கடந்த ஜூலை 12ம் தேதி துவங்கி ஜூலை 14ம் தேதி வரை இரவு பகலாக நடந்த தொடர் போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது என்பதுதான் இதன் சுவாரஸ்யம்.

போராட்டத்தின் பின்னணி என்ன ?

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஆனைமலை புலிகள் சரலாயணத்திற்கு உட்பட்ட மலைப்குதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசிக்கும் மலைக்கிராமங்கள் உள்ளன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள வனம் மற்றும் மலைப்பகுதிகள் முழுவதும் ஆனைமலை புலிகள் சரலாயணத்திற்கு உட்பட்டது. அப்பகுதிகளில் எந்த விதமான புதிய கட்டுமானங்கள் செய்யக்கூடாது என்பது வன விதி.

இதனால், பெரும்பாலான கிராமங்களுக்கு செல்ல சாலை வசதிகளின்றியும், வீடுகளில் மின் வசதியின்றியும் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.

இதில், குறிப்பாக உடுமலைப்பேட்டை திருமூர்த்திமலைப்பகுதியில் உள்ள தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு குருமலை பகுதியில் சாலை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அப்பகுதி புலிகள் சரணாலயத்திற்குள் வருவதால், வனத்துறை அதிகாரிகளால் அந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்க முடியவில்லை. மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் இணையதளமான பரிவேஷ்(PARIVESH) மூலம் விண்ணப்பிக்க பழங்குடியின மக்களை வனஅதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

48 மணி நேர மக்கள் போராட்டம்

இந்தச் சூழலில்தான் கடந்த ஜூலை 12ம் தேதி, திருமூர்த்திமலைப்பகுதியில் உள்ள சுமார் 25 மலை கிராம மக்கள் சாலை வசதி கோரி பேரணியாக உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிடாத மக்கள், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்தனர்.

உடுமலை போராட்டம்

பட மூலாதாரம், MAHADEVAN

படக்குறிப்பு, இரவு நேரத்திலும் பழங்குடியின மக்கள் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்கு துவங்கியது இந்த போராட்டம்?

“இன்று துவங்கியது அல்ல இந்த போராட்டம். எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்தே இந்த ஆறு கிலோ மீட்டர் தூரம் சாலை அமைத்துத்தரக்கோரி கேட்டு வருகிறோம். எத்தனை நாள்தான் நாங்களும் அரசு நடவடிக்கை எடுக்கும் என காத்திருப்பது? நாங்கள் காத்திருக்கும் காலங்களில் பல உறவினர்களை இழந்துள்ளோம். இனியும் நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை,” என்றார் குருமலையை சேர்ந்த செல்வம்.

சாலை வசதி இல்லாததால், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவாக பேசிய செல்வம், “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் உடல்நிலம் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல், 30க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். அதேபோல, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்,” என்றார்.

உடுமலை போராட்டம்

பட மூலாதாரம், MAHADEVAN

படக்குறிப்பு, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம் மற்றும் பலரும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதவிர, மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வியும் பாதிக்கப்பட்டு வந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“மலைப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், அங்கு வந்து பாடமெடுக்கும் ஆசிரியர்கள் கீழே உள்ள சமவெளிப்பகுதியில் இருந்துதான் வர வேண்டும். அவர்கள் வந்து செல்வதற்குக்கூட சாலை வசதியில்லாததால், அவர்களால், தொடர்ந்து பள்ளிக்கு வர முடிவதில்லை. அதனால், எங்கள் குழந்தைகளின் ஆரம்பக்கால கல்வியே கேள்விக்குள்ளாகியுள்ளது,” என்கிறார் குருமலை கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன்.

மலைப்பகுதியில் விவசாயம் செய்து வரும் முருகன், சாலை வசதியில்லாததால், அவர்கள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த முடிவதில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

“நாங்கள் பெரும்பாலும் கடலை, பீன்ஸ் உள்ளிட்டவற்றையே இங்கு பயிரிடுகிறோம். ஆனால், அவற்றை பெரும்பாலும் எங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. சாலை வசதியில்லாததால், அவற்றை சமவெளிப்பகுதிக்கு எடுத்துச்சென்று சந்தைப்படுத்த முடிவதில்லை,” என்றார்.

விடிய விடிய நடந்த போராட்டம்

உடுமலை போராட்டம்

பட மூலாதாரம், MAHADEVAN

படக்குறிப்பு, இரவு நேரத்திலும் போராட்டக்களத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்கிய பழங்குடியின மக்கள்

பேரணியாக சென்று வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை அங்கிருந்து கலைந்து செல்லப்போவதில்லை என் அறிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அதிகாரிகள் எப்போதும்போல நாங்கள் அங்கிருந்து கலைந்து செல்வதற்காக அனைத்து யுத்திகளையும் கையாண்டனர். ஆனால், இந்த முறை நாங்கள் கலைந்து செல்வதாக இல்லை என உறுதியாக இருந்தோம். குறிப்பாக இதில் பெண்கள் அதிகளவில் பங்கெடுத்ததால், காவல்துறையும் செய்வதறியாது திகைத்தது,” என்கிறார் போராட்டத்தில் பங்கேற்ற மணிகண்டன்.

ஜூலை 13ம் தேதி புதன்கிழமை மதியம் துவங்கிய போராட்டம், அன்றைய இரவை கடந்து மறு நாள் காலையும் தொடர்ந்தது. போராட்டத்தின் நடுவே மக்கள் களைப்பு தெரியாமல் இருக்க, பழங்குடியினர் தங்களது இசைக்கருவிகளை வாசித்து மகிழ்ந்தனர்.

உடுமலை போராட்டம்

பட மூலாதாரம், MAHADEVAN

படக்குறிப்பு, சாலை வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்கள்

வியாழனன்று மாலை பேச்சுவார்த்தை நடத்திய வன அதிகாரிகள், மீண்டும் பர்வேஷ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி கூறியதாக கூறுகிறார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ. சண்முகம்.

“சட்டத்தின் வழிமுறைப்படி செல்வதில் எங்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், அப்படி விண்ணப்பித்தால், எத்தனை நாட்களில் அனுமதி வழங்குவீர்கள் என வனத்துறையினரிடம் கேட்டதற்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை, எந்த உத்திரவாதமும் இல்லை. அதனால், போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தோம்,” என்கிறார் சண்முகம்.

உடுமலை போராட்டம்

பட மூலாதாரம், MAHADEVAN

படக்குறிப்பு, கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த பழங்குடியின மக்கள்

பழங்குடியின மக்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதிக்கு, மிகவும் எளிதாக மாவட்ட அளவிலேயே ஒப்புதல் வழங்க முடியும் எனவும் கூறுகிறார் விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம்.

சாலை வசதிக்கு அமைத்து தருவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்பதை விளக்கிக்கூறும் சண்முகம், மேலும் பேசுகையில், “மலைவாழ் மக்களுக்கும் வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும் காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டம் டிசம்பர் 15, 2006ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்திற்கான விதிகள் ஜனவரி 1, 2008 முதல் நடைமுறைக்கு வந்தன. வன உரிமைச் சட்டத்தின்படி மக்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர ஒரு ஹெக்டேர் வரை வன நிலத்தை ஒதுக்கலாம். அந்த நிலப்பரப்பிற்குள் மரங்கள் இருந்தால், 75 மரங்களுக்கு மேல் வெட்டப்படாத வகையில் இருக்க வேண்டும். இது குறித்து கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானத்துக்கு கோட்ட அளவிலான வனக்குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட வன உரிமைக் குழு ஒப்புதல் வழங்க வேண்டும். எந்த ஒரு வனப்பகுதிக்கும் இது பொருந்தும்

ஆனால், வனத்றையினர் இந்த சட்டம் வனச்சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் பொருந்தாது எனக்கூறுவதால்தான் இந்த போராட்டம்,” என்கிறார் சண்முகம்.

எவ்வளவு தூரம் மக்கள் பயணிக்கின்றனர்?

குருமலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் குருமலையிலிருந்து உடுமலைப்பேட்டை செல்வதற்கு குறைந்தது 110 கிலோ மீட்டர் ஆகிறது என்கின்றனர்.

“குருமலையில் இருந்து வால்பாறை, அப்பர் ஆழியார் அணை வரை 40 கிலோ மீட்டர் மலை மற்றும் மண் சாலையில் வந்து, பின் 70 கிலோ மீட்டர் அப்பர் ஆழியார் அணையில் இருந்து அட்டகட்டி வழியாக பொள்ளாச்சி பாதையில் உடுமலைப்பேட்டைக்கு வர வேண்டியுள்ளது. அதே சமயம் நடந்து வந்தால், 6 கிலோ மீட்டர் தொலைவில் திருமூர்த்திமலைக்கு வந்துவிடலாம்,” என்கிறார் அப்பகுதியை சேர்ந்த அம்சவேனி.

பேச்சுவார்த்தைக்கு பிறகு கிடைத்த தீர்வு

உடுமலை போராட்டம்

பட மூலாதாரம், MAHADEVAN

படக்குறிப்பு, போராட்டத்தின் இறுதியில், சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உறுதியளித்தார்.

புதன் கிழமை இரவு நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வியாழன் இரவும் பேச்சுவார்த்தைக்காக வனத்துறையினர் முயற்சித்துள்ளனர். ஆனால், மலைவாழ் மக்கள் சார்பாக நான்கு பேர் மட்டுமே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்காக வர வேண்டும் எனக்கூறியதால், அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

இரண்டாவது நாள் இரவும் போராட்டம் தொடர்ந்ததால், வெள்ளிக்கிழமையன்று மலைவாழ் மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்.

பேச்சுவார்த்தைக்கு பின், மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று, சாலை அமைப்பதற்காக, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்ததுடன், அதற்கு தேவையான நிதியையும் விரைவில் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், உரிய ஆலோசனைக்கு பிறகு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“தற்போது சட்டரீதியாகவோ, அலுவல் ரீதியாகவோ அங்கு சாலை அமைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அவர்களுக்கு தேவையான தடையின்மை சான்றும், தீர்மானத்திற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில், சாலை அமைக்க உரிய நிதி ஒதுக்கப்படும்,” என்றார்.

ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு அளித்துள்ள ஒப்புதலின்படி, திருமூர்த்திமலை முதல் குருமலை கிராமம் வரை சுமார் 5.37 கி.மீ. தூரத்திற்கு 1.47 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக சுமார் 0.54 ஹெக்டேர் நிலம் பயன்பாட்டில் உள்ளதால், மீதமுள்ள 0.93 ஹெக்டேர் நிலத்தில் சாலை அமைக்க சமுதாய உரிமை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எத்தனை கிராம மக்கள் பயன்பெறுவார்கள்?

திருமூர்த்தி மலை அடிவாரத்திலிருந்து குருமலை வரை 6 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைத்தால், குருமலையில் உள்ள 102 குடும்பங்கள், மேல் குருமலையில் உள்ள 49 குடும்பங்கள், பூச்சுக்கொட்டாம்பாறையில் உள்ள 46 குடும்பங்கள், குழிப்பட்டியில் உள்ள 170 குடும்பங்கள், மாவடப்பில் உள்ள 130 குடும்பங்கள், காட்டுப்பட்டியில் உள்ள 65 குடும்பங்கள், கருமுட்டியில் உள்ள 65 குடும்பங்கள் என 627 குடும்பங்கள் பயன்பெறும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: