'பறக்கும் கார்' முன்பதிவு - பெருநகரங்களில் ஒரே நேரத்தில் பல நூறு கார்கள் எப்படி செல்லும்?

பறக்கும் கார்கள், விமானம், போக்குவரத்து

பட மூலாதாரம், ALEF

    • எழுதியவர், அட்ரியன் பெர்னார்ட்
    • பதவி, பிபிசி

நம்மில் பலரும் பறக்கும் கார்களைப் பற்றிக் கற்பனை செய்திருப்போம்.

அறிவியல் புனைகதைகளிலும் ஆக்ஷன் படங்களிலும் அவற்றைப் பார்த்திருப்போம்.

அவை சாத்தியப்படுவதற்கான காலம் நெருங்கி வந்திருக்கிறது. ஆனால் அவை முழுதும் சாத்தியப்பட பல பெரிய சவால்கள் எதிர்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதியன்று, அமரிக்காவின் ஃபெடரல் விமானப் போகுவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration - FAA) அலெஃப் எரோனாடிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள பறக்கும் கார் மாடலுக்கு சிறப்பு விமான தகுதிச் சான்றிதழை வழங்கியிருக்கிறது.

மேம்பட்ட விமான இயக்கம் (Advanced Air Mobility - AAM) என்பது பயணிகள் அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்களைக் குறிக்கும் சொல்லாகும். இவ்விமானங்கள் பெரும்பாலும் தானியங்கிகளாக உள்ளவை. இவை ஏர் டாக்சிகள் அல்லது செங்குத்தாகக் கிளம்பி மேலே செல்லும் (VTOL) விமானங்கள் இவை என குறிப்பிடப்படுகின்றன.

கோட்பாட்டு அளவில் இந்த வாகனங்கள் வேகமான, பாதுகாப்பான அன்றாடப் போக்குவரத்தை வழங்குபவை. கட்டமைப்புகளோ, தரையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களோ அவற்றின் பயணத்தைத் தடை செய்யாது.

பறக்கும் கார்கள் இன்னும் ஒரு கனவாகவே இருந்தாலும், அலெஃப் நிறுவனத்தின் மாதிரி காருக்கு FAA அங்கீகாரம் அளித்திருப்பது எதிர்காலத்தின் விமானப் போக்குவரத்துக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

பறக்கும் கார்கள், விமானம், போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

கார்கள் பறப்பதற்கு முன் என்னென்ன சவால்கள் காத்திருக்கின்றன?

உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பறக்கத் துவங்குவதற்கு முன் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன.

அலெஃப் நிறுவனத்தின் நிறுவனர்கள் 2015-ம் ஆண்டு இதில் பணிபுரியத் துவங்கினர். 2019-ல் முதல் முழு அளவிலான பறக்கும்-கார் முன்மாதிரியை உருவாக்கினர். இதன் பெயர் ‘மாடல் A’.

இந்தச் சட்டப்பூர்வமான பறக்கும் கார் இரண்டு பயணிகளைச் சுமந்துகொண்டு 322கி.மீ. சாலையிலும் 177கி.மீ. வானத்திலும் செல்லக்கூடியது. இது நேர்த்தியாகவும் கச்சிதமான்வும் வடிவமைக்கப்பட்டது. வழக்கமான கார் போன்று தோற்றமளிப்பது. இதற்கு மேலே எழும்ப ஓடுபாதை தேவையில்லை, மேலும் சாதாரண பார்க்கிங் இடம் போதும்.

இதன் செயல்பாடு இன்னும் புதுமையானது. இது செங்குத்தாக மேலே எழும்பிச் செல்லும். நடுவானில் தனது இரண்டு கதவுகளை இறக்கைகளாக மாற்றிக்கொள்ளும்.

ஆனாலும், 2019-ல் நடந்த இதன் சோதனை ஓட்டத்தை ஒரு சில முதலீட்டாளர்கள் பார்த்துள்ளனர் என்று நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இதற்கான பல தொழில்நுட்ப சவால்கள் இன்னும் உள்ளன.

"இந்த விமானத்திற்குத் தேவையான சில பாகங்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை," என்கிறார் அலெஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜிம் டுகோவ்னி. "உதாரணமாக, இதனை வடிவமைக்க எங்களுக்கு மிகவும் மேம்பட்ட ப்ரொப்பல்லர் மோட்டார் அமைப்புகள் தேவை," என்கிறார்.

இவ்விமானத்தின் அளவு, எடை, மற்றும் விலை ஆகியவை சார்ந்த கட்டுப்பாடுகள், இவை எவ்வளவு விரைவில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்பதையும், அவை பாதுகாப்பாகச் செல்லுமா என்பதையும் தீர்மானிக்கும்.

பறக்கும் கார்

பட மூலாதாரம், Getty Images

பறக்கும் கார்களுக்கான முன்பதிவு துவங்கியது

கலிபோர்னியாவில் அமைந்துள்ள அலெஃப் நிறுவனம் 2025 அல்லது 2026-ன் தொடக்கத்தில் இந்தப் பறக்கும் கார்களின் உற்பத்தியைத் தொடங்கும் என்று நம்புகிறது.

இருப்பினும் இவற்றை முன்பதிவு செய்யலாம். தற்போதைய விலை 300,000 டாலர்கள் (2.4 கோடி இந்திய ரூபாய்). ஆனால் இறுதியாக விற்கப்படும்போது இவற்றின் விலையை 35,000 டாலர்கள் (28 லட்சம் இந்திய ரூபாய்) வரை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது.

மாடல் A எடை குறைந்த, குறைந்த வேக வாகனம் என்று கருதப்படுகிறது. சிறிய மின்சார வாகனங்களைப்போல. "இது ஒரு முன்னோடி," என்கிறார் டுகோவ்னி. "கார்கள் குதிரைகளை மாற்றத் தொடங்கியபோது, இதே போன்ற கேள்விகள் நிறைய எழுந்தன. பாதுகாப்பு பற்றி, நகரங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி. பலர் குதிரைகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினர். சரியாகச் செய்தால், பறக்கும் கார் பாதுகாப்பாக இருக்கும்."

என்ன இருந்தாலும் மாடல் A என்பது ஒரு கார் தான். ஒரு கார் வானில் பறக்கும்படி இலகுவானதாக, இருந்தால், அது சாலையில் செல்ல பாதுகாப்பானதாக இல்லாமல் போகலாம். "மிகவும் கடினமான பகுதி என்னவெனில், இந்த வாகனம் தரையில் இருந்து வானுக்கு மாறும்போது என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது," என்கிறார் டுகோவ்னி.

நகரத்திற்கு ஏற்றவையா?

பறக்கும் கார்கள், விமானம், போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

இவை நகரப் போக்குவரத்துக்கு ஏற்றவையா என்பதும் பெரும் கேள்வி.

ஃபெடரல் விமானப் போகுவரத்து நிர்வாகம் வெளியிட்ட ஒரு அறிக்கை இப்பிரச்னைகளை எழுப்புகிறது.

இந்தப் பறக்கும் கார்களை யார் ஓட்டுவார்கள்? பயணிகளுக்கு உரிமம் தேவையா? இந்த வாகனங்கள் அருகில் ப்றந்துகொண்டிருந்தால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு எத்தகைய சிக்கல்கள் உண்டாகும்? நடுவானில் ஏற்படும் விபத்துக்கு எந்த அதிகாரிகள் பொறுப்பேற்பார்கள்?

இவை வானில் பறக்கும் போது இவற்றின் வேகம் காரணமாக கார்களுக்கிடையில் அல்லது கட்டிடங்களுடன் மோதுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே துல்லியமான, அறிவியல் பூர்வமாக வழிநடத்தப்பட்ட பாதை மற்றும் பாதை திட்டமிடல் அவசியம். ஆனால் இன்றுவரை, பறக்கும் கார் பாதையை திட்டமிடுவதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை.

இன்னொரு முக்கியமான் பிரச்னை: சத்தம். பறக்கும் கார்களை அமைதியானவையாக வடிவமைப்பது கடினமானது. குறிப்பாக ஒவ்வொரு மணி நேரமும் நூற்றுக்கணக்கான டேக்-ஆஃப்கள் மற்றும் தரையிறக்கங்கள் இருக்கும் போது. எலக்ட்ரிக் ப்ரொப்பல்லர்கள் மற்றும் பிற உந்துவிசை வடிவமைப்புக் கூறுகள் ஒலி மாசுபாட்டைக் குறைக்கலாம். ஆனால் இரைச்சல் அளவைக் கட்டுப்படுத்த கடுமையான அரசாங்க விதிமுறைகள் தேவைப்படலாம்.

இரைச்சலற்றப் பறக்கும் கார்களை வடிவமைப்பதில் உற்பத்தியாளர்களுக்கு உதவும் முயற்சியில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற தொழில்துறை தலைவர்களுடன் நாசா இணைந்துள்ளது. பல நூறு பறக்கும் கார்கள் ஒரே நேரத்தில் பறக்கும்போது உண்டாகும் சத்தம் எப்படி இருக்கும் என்பதுபற்றி ஆராய்கிறார்கள்.

இப்போதக்கு, லண்டன் அல்லது நியூயார்க் போன்ற மக்கள் அடர்ந்திருக்கும் நகரங்களில் போக்குவரத்து உச்சத்தில் இருக்கும்போது மட்டும் விமான டாக்சிகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். வணிக ரீதியான விமானப் பயணத்தின் ஆரம்ப நாட்களில் இருந்ததைப் போலவே, வசதிபடைத்தவர்கள் மட்டுமே முதலில் பறக்க முடியும். அதன்பிறகு அனைவருக்குமானதாக இவை மாறலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: