வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல்

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி நியூஸ்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்களின் அடிப்படையில் இப்பகுதியில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் கலைநயத்துடன் வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இங்கு கிடைக்கும் அகழாய்வு பொருட்களால் வெம்பக்கோட்டையில் வணிகம் நடந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது.
குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட வெம்பக்கோட்டை
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் வைப்பாற்றின் இடது கரையில் அமைந்துள்ளது வெம்பக்கோட்டை.
இது சேதுபதி, பாண்டி சேதுபதி ஆகிய குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி ஆகும்.
அந்த காலத்தில் அமைக்கப்பட்ட எண்கோண சந்தியா மண்டபம் மற்றும் வற்றாத நாழிக்கிணறு, 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பழங்கால மண்டபங்கள் இன்றும் நினைவுச் சின்னங்களாக கரையில் உள்ளன.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் ஆற்றின் கரையோர பகுதிகளில் தொல்லியல் அகழாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணி, பாசிமணி, சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகளும் அதனைத் தொடர்ந்து, ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், சுடு மண்ணால் செய்யப்பட்ட தோசைக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அக்கால மக்கள் கூட்டமாக வாழ்ந்து வந்ததையும், அப்போது அவர்கள் தோசை சுடுவதற்காக சுடுமண்ணால் ஆன தோசைக்கல்லை பயன்படுத்தியதைக் காட்டுவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழடிக்கும் வெம்பகோட்டை க்கும் என்ன தொடர்பு?
இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் மற்றும் பானை ஓடுகள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டுவந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இப்பொருட்கள், வைப்பாற்றங்கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்றாக உள்ளன.
கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளதை போல் வெம்பக்கோட்டையில் தொழிற்சாலை செயல்பட்டதற்கான சான்று உள்ளது. எனவே வெம்பக்கோட்டை ஒரு வணிக தளமாக செயல்பட்டுவந்தது என தெரிய வருகிறது.
அகழாய்வில் 3,254 தொல்பொருட்கள் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டையில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள், அவை பயன்படுத்தப்பட்ட காலத்தில் மனிதர்கள் இங்கு வணிகம் செய்ததற்கான சான்றாக உள்ளன என கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணிகளின் இயக்குனர் பாஸ்கர். இது குறித்து பிபிசி தமிழிடம் விரிவாக பேசிய அவர், வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள 25 ஏக்கர் மேட்டுப்பகுதியில் தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், இந்த நிலத்தின் மேற்பரப்பில் முதல் கட்ட அகழாய்வில் சுடுமண் பொம்மைகள், சங்கு வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன என்றும் கூறினார். மேலும், இப்பகுதியில் தொடர்ந்து அகழாய்வு செய்ய திட்டமிட்டு இந்த இடத்தை தொல்லியல் மேடாக உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு 3,254 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

"வெம்பக்கோட்டை யில் நடைபெற்ற முதலாவது அகழாய்வு மற்றும் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது அகழாய்வு பணிகளின் போது கிடைத்த பொருட்களைக் கொண்டு பார்த்தால், சங்கு வளையல் செய்யக்கூடிய தொழிற்சாலைகள் இங்கு செயல்பட்டது தெரிய வருகிறது.
சுடுமண்ணால் ஆன அனைத்து விதமான அலங்கார பொருட்கள், உருவ பொம்மைகள் கிடைக்கின்றன. இங்கு கிடைப்பது போல் பல அகழாய்வு தளங்களில் பொருட்கள் கிடைத்தாலும் இங்கு கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் சுடுமண் பொருட்களாக உள்ளன.
குறிப்பாக சூது பவள மணிகள், யானை தந்தங்களால் ஆன பதக்கங்கள் வெம்பக்கோட்டையில் அதிக அளவு கிடைத்துள்ளன.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுத் தலங்களில் மக்கள் வாழ்விடப் பகுதிகளில் சங்கு வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. ஆனால் வெம்பக்கோட்டையில் கிடைக்கும் சங்கு வளையல்கள், அலங்கரிக்கப்பட்டவையாக இருப்பதோடு, வண்ணம் பூசப்பட்டவையாகவும் இருக்கின்றன. இது போன்ற வளையல்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்திருப்பது வெம்பக்கோட்டை பகுதியில் வணிகம் நடந்ததற்கான சான்றாக உள்ளது," என்றார் பாஸ்கர்.
அகழாய்வில் கிடைத்த சுடுமண் திமிலுடன் கூடிய காளைகள்
தொடர்ந்து பேசிய வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநர் பாஸ்கர், சுடுமண் முத்திரைகள் என அனைத்தையும் பார்க்கும்போது வைப்பாறு கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்று கிடைத்துள்ளது என்றும், வெம்பக்கோட்டையில் கிடைக்கக்கூடிய சுடுமண் காளைகள் அனைத்தும் திமில் உள்ள காளைகளாக கிடைக்கின்றன என்றும், ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் திமில் உள்ள காளைகள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பதால் இவை முக்கியத்துவம் பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார்.
"வெம்பக்கோட்டையில் கிடைக்கும் சங்கு வளையல்கள், கண்ணாடி பொருட்கள் அனைத்தும் கலைநயத்துடன் கிடைக்கப் பெறுவதால் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கலை நயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது தெரிய வருகிறது.
கீழடியை பொறுத்த அளவில் தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வெம்பக்கோட்டையில் கிடைக்கும் பொருட்களும் இப்பகுதியில் தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்கள் என்றே கருதப்படுகிறது.
கீழடியில் கிடைத்த குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள், முதிர்ச்சியடைந்த நிலையில் கிடைத்துள்ளன. ஆனால் வெம்பக்கோட்டையில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வில் குறியீடுகள் எதுவும் கிடைக்கவில்லை.
கீழடியில் கிடைக்கப்பெற்ற செங்கற்களை போன்ற செங்கற்கள் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. ஆனால் கீழடியில் காணப்படுவது போல் பழங்கால சுவர்கள், கட்டிடங்கள் எதுவும் இதுவரை வெம்பக்கோட்டையில் கிடைக்கவில்லை.
வெம்பக்கோட்டையில் கிடைக்கும் சுவர்கள் அனைத்தும் இடிந்த நிலையில் மட்டுமே கிடைக்கின்றன. இருப்பினும் தொடர்ந்து அகழாய்வு செய்தால் இப்பகுதியில் நல்ல நிலையில் உள்ள கட்டிடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது" என்கிறார் பாஸ்கர்.

தோசை கல், எலும்புகள் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கடந்தாண்டு நடைபெற்ற அகழ்வாய்வின்போது ஒரே ஒரு தங்க ஆபரணம் மட்டும் கிடைத்தது என்றும், ஆனால் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வில் மூன்று தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன என்றும் கூறுகிறார்.
அதில் ஒன்று தங்க தகடு, மற்றொன்று தங்க ஆபரணம் செய்யும் போது தொடக்கநிலையில் உள்ள தங்கம் என்று தெரியவந்துள்ளது. அந்த தங்கத்தை ஆய்வு செய்த போது அது மிகவும் பழமையான தங்கம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தங்கம், பெண்களுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகை தாலியாக இருக்கலாம், ஏனெனில் அதில் தாலிக்கான அமைப்பு உள்ளது. சூது பவள மணிகள், காசுகள் கிடைப்பதன் மூலம் வெம்பக்கோட்டையில் வணிகத்தளம் இருந்ததற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு சுடுமண்ணால் ஆன தோசை கல் ஒன்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெற கூடிய அகழ்வாய்வு மேடைகளில் சுடுமண் பானை, தட்டு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தாலும் வெம்பக்கோட்டை யில் கிடைத்துள்ள இந்த சுடுமண் தோசைக்கல் கைப்பிடியுடன் ஒரு முழு அமைப்பில் உள்ளது.
எனவே இங்கு வசித்த மக்கள் இந்த தோசை கல்லை உணவு சமைக்க பயன்படுத்தி இருக்கலாம் என்பதால் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் சில எலும்புகளும் கிடைத்துள்ளன. அவை மனிதர்களின் எலும்புகளா, அல்லது மிருகங்களின் எலும்புகளா எனக்கண்டறியும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என பாஸ்கர் கூறினார்.
மேலும், தொடர்ந்து வெம்பக்கோட்டையில் கிடைக்கும் பொருட்களின் அடிப்படையில் இது ஒரு வாணிபத் தலமாக இருந்திருக்கும் என்பது உறுதியாகிறது என்கிறார் வெம்பகோட்டை அகழாய்வு இயக்குநர் பாஸ்கரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












