மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு தமிழ்நாட்டுக்கு வெளியே செல்லுபடியாகுமா?

மம்தா பானர்ஜி ‘அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்’ என்று கூறுகிறார். ஆனால் அது எந்த அளவு பயனளிக்கும், அது தலைவர்களுக்கிடையில் பிம்பப் போட்டியாக உருமாறாதா? போன்ற கேள்விகளும் எழுகின்றன, என்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் சந்தீப் ஷாஸ்திரி. இந்நிலையில் தான் இக்கூட்டணியில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் பங்கும் கவனத்துக்குரியதாகிறது. இக்கூட்டணியில் ஸ்டாலினின் தாக்கம் எந்த அளவு இருக்கும், தேசிய அளவில் தி.மு.க எவ்வளவு பெரிய சக்தியாக இருக்கும் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் தேசிய அரசியலைக் கூர்ந்து நோக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடம் பேசியது.

பட மூலாதாரம், M.K.Stalin

வரவிருக்கும் 2024ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை (பா.ஜ.க.) எதிர்கொள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முன்னெடுப்பில் தி.மு.க, ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் மற்றும் மநிலக் கட்சிகள் பங்கேற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ம் தேதி நிறைவடைந்தது.

இக்கூட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று (ஜூன் 18), பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (இந்தியா - இந்திய தேசிய வளர்ச்சிக்கான அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணி) (INDIA - Indian National Development Inclusive Alliance) என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘பா.ஜ.க.வுக்கு எதிராக கடந்த ஒரு தசாப்தத்தில் எதிர்கட்சிகள் முன்னெடுத்திருக்கும் மிக முக்கியமான முயற்சி’ என்று அரசியல் நோக்கர்களால் வர்ணிக்கப்படும் இந்தக் கூட்டணிக்கான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

முக்கியமான முயற்சி, ஆனால் தாக்குப்பிடிக்குமா?

இது முக்கியமான முன்னெடுப்பு என்று அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், இதில் பல சிக்கல்களும் உள்ளடங்கியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த அனைத்து கட்சிகளின் பொதுவான நோக்கம் பா.ஜ.க எதிர்ப்பாக இருந்தாலும், மாநில அளவில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் இக்கூட்டணிக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

திமுக, காங்கிரஸ், பாஜக, கூட்டணி, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், INCIndia

படக்குறிப்பு, 'பா.ஜ.க.வுகு எதிராக கடந்த ஒரு தசாப்தத்தில் எதிர்கட்சிகள் முன்னெடுத்திருக்கும் மிக முக்கியமான முயற்சி’ என்று அரசியல் விமர்சகர்கள் இக்கூட்டணியை வர்ணிக்கின்றனர்

மம்தா பானர்ஜி ‘அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்’ என்று கூறுகிறார். ஆனால் அது எந்த அளவு பயனளிக்கும், அது தலைவர்களுக்கிடையில் பிம்பப் போட்டியாக உருமாறாதா? போன்ற கேள்விகளும் எழுகின்றன, என்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் சந்தீப் சாஸ்திரி.

இந்நிலையில் தான் இக்கூட்டணியில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் பங்கும் கவனத்துக்குரியதாகிறது.

இக்கூட்டணியில் ஸ்டாலினின் தாக்கம் எந்த அளவு இருக்கும், தேசிய அளவில் தி.மு.க எவ்வளவு பெரிய சக்தியாக இருக்கும் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள பிபிசி தமிழ், தேசிய அரசியலைக் கூர்ந்து நோக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடம் பேசியது.

‘தி.மு.க மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது’

திமுக, காங்கிரஸ், பாஜக, கூட்டணி, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், INCIndia

படக்குறிப்பு, இக்கூட்டணியில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் பங்கும் கவனத்துக்குரியதாகிறது

பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் அரசியல் நோக்கருமான விஜய் க்ரோவர், தென்னிந்தியாவின் முக்கியமான கட்சியான தி.மு.க.வின் தலைவர் என்ற அடிப்படையில் இக்கூட்டணியில் மு. க. ஸ்டாலினின் இருப்பு முக்கியத்தும் வாய்ந்தது என்கிறார்.

அவரது கருத்துப்படி, இதுவரை ஸ்டாலின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் செல்லாததும், அவர்மீதான எதிர்பார்ப்பை வலுப்படுத்தும்.

“தற்போது தி.மு.க. மக்களவையில் 39 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மொத்த 543 தொகுதிகளில் இது 7%. அதனால் இக்கூட்டணியில் தி.மு.க மிக முக்கியப் பங்காற்றும்,” என்கிறார் க்ரோவர்.

திமுக, காங்கிரஸ், பாஜக, கூட்டணி, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், VijayGrover/YouTube

படக்குறிப்பு, பெங்களூருவைச் சேர்ந்த மூத்தப் பத்திரிகையாளரும் அரசியல் நோக்கருமான விஜய் க்ரோவர் ஸ்டாலின் மதிமுக, விசிக போன்ற தனது கூட்டணிக் கட்சிகளை எவ்வாறு கையாள்கிறார் என்பது இக்கூட்டணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்கிறார்

ஸ்டாலின் மதிமுக, விசிக போன்ற தனது கூட்டணிக் கட்சிகளை எவ்வாறு கையாள்கிறார், அவர்களோடு எப்படித் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்கிறார், அது எப்படி வாக்குகளாக மாறப்போகிறது ஆகிய அனைத்தும் இக்கூட்டணிக்கு முக்கியமானதாக இருக்கும் என்கிறார்.

மேலும் பேசிய அவர், ‘cow belt’ எனப்படும் மத்தியப் பிரதேசம், ஹரியானா, மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியப் பகுதியில் பா.ஜ.க வலுவான கட்சியாக இருக்கிறது. அங்கு குறைந்தது 250 தொகுதிகளில் அவர்கள் வலுவாக உள்ளனர் என்றார்.

“அந்த இடங்களில் காங்கிரஸ் முன்னெடுக்கும் ‘இந்தியா’ கூட்டணி பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாது. அங்கு இது வலுவற்ற ஒரு கூட்டணியாகவே இருக்கும்,” என்றார் க்ரோவர்.

அதனால், இக்கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் தென் மாநிலங்களில் தான் அதிகமாக இருக்கின்றன, என்று கூறும் அவர், “அதற்குத் தி.மு.க. முக்கியப் பங்காற்றும். அதன்மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும்,” என்கிறார்.

‘தேசிய அளவில் பெரிய தாக்கம் இருக்காது’

தில்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஷரத் குப்தா, ‘இந்தியா’ கூட்டணியில் ஸ்டாலினின் பங்கு முக்கியமானதுதான் என்றாலும், அது தமிழக அளவில் மட்டுமே உணரக்கூடியதாக இருக்கும் என்கிறார். மேலும் தேசிய அளவில் ஸ்டாலின் மற்றும் தி.மு.கவின் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் என்கிறார்.

“உள்ளதுபோலவே, தற்போது தமிழகத்தில் பெரும் கட்சி தி.மு.க. தான். ஆனால் தமிழகத்துக்கு வெளியே அதனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது,” என்கிறார் குப்தா.

உதாரணமாக, ஸ்டாலின் இந்தக் கூட்டணிக்காக உத்தர பிரதேசத்திலோ, பீகாரிலோ, பஞ்சாபிலோ தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அதற்கு எந்தப் பயனும் இருக்காது, என்கிறார் அவர்.

திமுக, காங்கிரஸ், பாஜக, கூட்டணி, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Sharad Gupta

படக்குறிப்பு, தில்லியைச் சேர்ந்த மூத்தப் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஷரத் குப்தா, கூட்டணிக் கணக்குக்குத் தமிழக அளவில் தி.மு.க மிக முக்கியப் பங்காற்றும் என்கிறார்

கூட்டணிக் கணக்கில் தி.மு.க.வின் பங்கு

இக்கூட்டணியின் பிரதான நோக்கமே, பா.ஜ.க.வுக்கு எதிரான மாநிலக் கட்சிகள் மற்றவர்களின் வாக்குகளைப் பிரிக்காமல் இருப்பதும், தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு அதிக தொகுதிகளைச் சேர்ப்பதும் தான் என்கிறார் குப்தா.

அதாவது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கிழக்கு உத்தர பிரதேசத்திலோ பீகாரிலோ போட்டியிட்டால், அது சமாஜ்வாதி கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும். அப்படிப் பிரிக்காமல், பா.ஜ.கவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒரே அணியில் இருக்க வைப்பதுதான் இக்கூட்டணியின் முக்கியமான வியூகம், என்கிறார் குப்தா.

“இதன்படி, அந்தந்த மாநிலங்களின் கட்சிகள் அவர்களது பகுதிகளில் அதிகபட்சத் தொகுதிகளை வெல்வதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கம். தேர்தலுக்குப் பிறகு, இக்கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸ் அனைத்து உறுப்பினர் கட்சிகளின் தொகுதிகளையும் ஒன்றாக இணைத்து தனது எண்ணிக்கையை வலுப்படுத்தும். அதுதான் அவர்களது தேர்தல் கணக்கு,” என்கிறார்.

இந்தக் கணக்குக்குத் தமிழக அளவில் தி.மு.க மிக முக்கியப் பங்காற்றும் என்கிறார் குப்தா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: