உலகக்கோப்பை அரையிறுதியில் நுழையும் 4 அணிகள் எவை? சீறும் கத்துக்குட்டிகள், திணறும் ஜாம்பவான்கள்

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐசிசி 50 ஓவர்கள் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பெரும்பாலான அணிகள் 5 போட்டிகளை நிறைவு செய்துள்ளநிலையில் நாக்அவுட் சுற்றான அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கும் என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது, இந்திய அணி அடுத்து இரு வெற்றிகளைப் பெற்றாலே பாதுகாப்பாக அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். இன்னும் 4 போட்டிகள் இந்தியாவுக்கு மீதமிருந்தாலும், அதில் இரு அணிகள் வலிமையான அணிகளாக இருப்பதால் கடும் சவாலாக இருக்கும். இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதி செல்வதில் சிக்கல் இருக்காது.

ஆனால், அடுத்த 3 இடங்களைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும். இதில் எந்த 3 அணிகள் டாப்-3 இடங்களை பிடிக்கப் போகிறார்கள் என்பதுதான் ஸ்வரஸ்யமாகும்.

நியூசிலாந்து அணியும் அரையிறுதி நோக்கி நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை அளித்துவரும் நியூசிலாந்து அணியும் அரையிறுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் விஸ்வரூபம் எடுத்து, விளையாடி வருகிறது. நிகர ரன்ரேட் ராட்சதத்தனமாக இருப்பதால், அரையிறுதிக்குள் இந்த முறை தென் ஆப்ரிக்காவை எதிர்பார்க்கலாம்.

அரையிறுதிக்குள் செல்லும் 4வது அணி பாகிஸ்தானா, அல்லது ஆஸ்திரேலியாவா அல்லது ஆப்கானிஸ்தானா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த 10 அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்புக் குறித்து விரிவாக அலசி ஆராயலாம்.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி: மீதமுள்ள போட்டி-4 (இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து, இலங்கை)

இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் மோதி, அனைத்திலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது, நிகரரன்ரேட் 1.353 என்ற அளவில் இருக்கிறது.இன்னும் இந்திய அணிக்கு 4 போட்டிகள் மீதமுள்ளன. இதில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டங்கள் மட்டும் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, நெதர்லாந்து இடையிலான ஆட்டங்களில் இந்திய அணி வென்றாலே 14 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் சென்றுவிடும் .

தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அந்த அணிக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் சொதப்பி, நம்பிக்கையிழந்து காணப்படுகிறது. அதற்காக அந்த அணி தொடரிலிருந்து வெளியேறும் என்று ஊகிக்க முடியாது. எந்த நேரத்திலும் இங்கிலாந்து அணி விஸ்வரூமெடுத்து ஆடக்கூடியது என்பதால், இந்திய அணிக்கு எந்த நேரத்திலும் ஷாக் அளிக்கும் திறமையுடையது. ஆதலால், இந்திய அணிக்கு 2 போட்டிகள் கடும் சவாலாக இருக்கும்.

இந்த இரு போட்டிகளில் இந்திய அணி தோற்காது என்றாலும், எந்த மோசமான சூழலை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக இருக்க வேண்டும், நிகர ரன் ரேட்டை இந்திய அணி குறையவிடாமல் பார்க்க வேண்டும்.

வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு கொண்டுள்ள இந்திய அணிக்கு, இலங்கை, நெதர்லாந்து அணிகளை வெல்வது பெரிய சவாலாக இருக்காது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிட்டது என்றாலும், இப்போதுள்ள சூழலில் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

நியூசிலாந்து: மீதமுள்ள போட்டி-4 (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரி்க்கா, இலங்கை)

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து அணி தொடக்கத்தில் குட்டி அணிகளை வெளுத்து வாங்கி புள்ளிகளை எளிதாகப் பெற்றுக்கொண்டு, 2-வது இடத்தில் நீடிக்கிறது. 5 போட்டிகளில் மோதிய நியூசிலாந்து அணி 3 வெற்றிகள், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராகக் கிடைத்தவை. இனிமேல்தான் நியூசிலாந்து அணிக்கு உண்மையான சோதனையே இருக்கிறது.

இனிவரும் ஒவ்வொரு போட்டிகளும் நியூசிலாந்து அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக, எந்த முடிவையும் சந்திக்கும் துணிச்சலோடுதான் களமிறங்க வேண்டும். ஏனென்றால் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்குள் செல்ல கடுமையாக முயன்று வருவதால், வெற்றிக்காக கடுமையாக உழைக்கும். ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து காயம்பட்ட புலியாக பாகிஸ்தான் இருப்தால், அடுத்துவரும் ஆட்டங்களை எளிதாக எடுக்கமாட்டார்கள்.

தென் ஆப்பிரிக்க அணியின் ஃபார்ம் இந்தத் தொடரில் ராட்சதத் தனமாக இருப்பதால், நியூசிலாந்து எவ்வாறு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சமாளிக்கப் போகிறது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பரமவைரிகள் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் முடிவு எந்தநேரத்திலும் மாறும் ஆட்டமாக இருக்கக்கூடும். ஆதலால், நியூசிலாந்து அணிக்கு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வேண்டுமானால் வெற்றி கிட்டும் என உறுதியாகக் கூற முடியும். மற்றவகையில் 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்து வெற்றி என்பது சுவற்றின் மீது நிற்கும் பூனைபோன்றதுதான். ஆதலால் நியூசிலாந்து அணிக்கு அடுத்து 2 போட்டிகளில் வெற்றி இருந்தால்தான் நாக்அவுட் சுற்று உறுதியாகும்.

ஒருவேளை நியூசிலாந்து அணி இந்த 3 அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோற்றால், அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பையே இழக்க நேரிடும், அனைத்துக் கணிப்புகளும் மாறக்கூடும். ஆதலால், அடுத்துவரும் ஆட்டங்கள் உச்சக் கட்ட பரபரப்பை ஏற்படுத்தும்.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்பிரிக்கா: மீதமுள்ள போட்டி-4 (பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான்)

தென் ஆப்பிரிக்க அணிஇந்த உலகக் கோப்பையில் புதிய அவதாரத்துடன் களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டர் விஸ்வரூமெடுத்து விளையாடி ராட்சதத் தனமான ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகிறார்கள்.

இதுவரை 5 போட்டிகளிலும் 4 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி 350 ரன்களுக்கு மேல் குவித்து எதிரணிகளை மிரளவைத்துள்ளது. எதிரணிகளுக்கு மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக வைத்து, திக்குமுக்காடச் செய்து வெற்றியை பெறும் உத்தியை தென் ஆப்பிரிக்கா பின்பற்றி வருகிறது.

தற்போது தென் ஆப்பிரிக்க அணி 5போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் அனைத்து அணிகளையும்விட வலிமையாக 2.370 என்று இருப்பது கடைசிநேரத்தில் உதவும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்துவரும் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான ஆட்டங்கள் வாழ்வா, சாவா என்றுதான் இருக்கும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் என்றாலும், அந்த வெற்றி நிச்சயம் எளிதாக இருக்காது.

ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை எளிதாக ஒப்புக்கொள்ளாது, எந்த நேரத்திலும் தென் ஆப்பிரிக்க அணிக்கே ஷாக் அளிக்கும் தன்மை கொண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய ஸ்கோரை அடித்து மிரள வைத்தால்தான் தென் ஆப்பிரிக்க வெற்றி எளிதாகும்.

வலிமையான பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு வைத்துள்ள இந்தியஅணியை வெல்வது தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதானது அல்ல. சிறிய தவறுகூட தென் ஆப்பிரிக்காவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதால், இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் முக்கியமானதாக இருக்கும்.

அதேபோலத்தான் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும். இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்த்துள்ளன. நியூசிலாந்து அணிக்கு இன்னும் 2 வெற்றிகள் இருந்தாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், வெற்றிக்காக கடுமையாகப் போராடும்.

பாகிஸ்தான் அணியும் அரையிறுதி வாய்ப்பை தவறவிடாது என்பதால், தென்ஆப்பிரிக்காவுக்கு பந்துவீச்சு, பேட்டிங்கில் கடும் சாவலாக இருக்கும். ஆதலால் அடுத்த 3 போட்டிகள் தென்ஆப்பிரிக்காவுக்கு கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் இருக்கும். ராட்சதத்தனமான ஃபார்மை வெளிப்படுத்திவரும்தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து அதேபாணியைப் பின்பற்றினால் வெற்றி எளிதாகும் இல்லாவிட்டால் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா(மீதமுள்ள போட்டி-4( வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து)

உலகக் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலிய அணி தோல்வியுடனே தொடங்கியது. தொடர்ந்து இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரு தோல்விகளைச் சந்தித்தது. பின்னர் மீண்டு, இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளைப் பெற்றது. தற்போது 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 4 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் அரையிறுதிக்குள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனென்றால், நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணியின் நிகர ரன்ரேட் மைனசில் இருந்தது. நெதர்லாந்து அணிக்கு எதிராக 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்றபின், ஆஸ்திரேலிய நிகர ரன்ரேட் மைனசில் இருந்து பிளசுக்கு உயர்ந்துவிட்டது. இதனால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இருஅணிகளை இதேபோன்ற அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், நிகர ரன்ரேட்டும் உயர்ந்து 10 புள்ளிகள் பெறும்.

அதன்பின், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஏதாவது ஒரு ஆட்டத்தில் வென்றாலே ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால், இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் ஆஸ்திரேலிய அணி அடுத்துவரும் நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றி கிடைத்தாலும் அரையிறுதி செல்வது, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகப் பெறும் வெற்றியைப் பொறுத்துதான் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

ஆனால், இந்த இரு அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அடுத்துவரும் அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றால், பாதுகாப்பாக அரையிறுதிக்குள் செல்லலாம். தற்போதுள்ள சூழலில் ஆஸ்திரேலிய அணியின் நிகரரன்ரேட் மைனஸில்தான் இருக்கிறது. குட்டி அணிகளுக்கு எதிராக பெரிய ஸ்கோரை அடித்து, ரன்ரேட்டை உயர்த்த முயல வேண்டும்.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான்: மீதமுள்ள போட்டி-4, (தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து)

பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு என்பது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப்பின் மருகியுள்ளது. பாகிஸ்தான் தற்போது 5 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகள், 2வெற்றிகள் என 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் மைனசில் இருக்கிறது. அடுத்துவரும் 4 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும்கூட அந்த அணி அரையிறுதி செல்லுமா என்பதில் உறுதியில்லை.

அவ்வாறு அரையிறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல வேண்டுமென்றால் அது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைச் சார்ந்துதான் அமையும்.அடுத்துவரும் ஒரு போட்டிகளில் தோற்றால்கூட பாகிஸ்தான் அணி, தாயகத்துக்கு டிக்கெட் போட்டுவிட வேண்டியதுதான். ஆனால், அடுத்துவரும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை இப்போது பாகிஸ்தான் இருக்கும் ஃபார்மில் வெல்வது எளிதானது அல்ல.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் பாகிஸ்தானின் பலவீனம் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால், அடுத்து இந்த 3 அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும் முள்மீது பாகிஸ்தான் நடப்பதுபோலத்தான் இருக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்ல வேண்டுமென்றால், அடுத்துவரும் 4 போட்டிகளிலும் வென்று, நிகர ரன்ரேட்டையும் உயர்த்த வேண்டும் இல்லாவிட்டால், பாகிஸ்தான் லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதுதான்.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்து: மீதமுள்ள போட்டி-5 (இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா,நெதர்லாந்து, பாகிஸ்தான்)

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை பெரும் அதிர்ச்சியான முடிவுகளை வழங்கியுள்ளது. 4போட்டிகளில் மோதிய இங்கிலாந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நிகர ரன்ரேட்டும் படுமோசமாகச் சரிந்துள்ளது.

அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்புள்ள அணியாக இங்கிலாந்து கணிக்கப்பட்டநிலையில் அதன் செயல்பாடு படுமோசமாகியுள்ளது. அரையிறுதி வாய்ப்பும் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கிறது. இங்கிலாந்து அணி வீறுகொண்டு எழுந்து, அடுத்துவரும் 5 ஆட்டங்களிலும் வென்றால் 12 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்குள் செல்லும்.

நெதர்லாந்து, இலங்கை அணிகளை இங்கிலாந்து எளிதாக வென்றுவிட வாய்ப்புள்ளது. ஆனால், பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்துவது கடினமான போராட்டமாக அமையும். அதிலும் இந்திய அணி தற்போதிருக்கும் ஃபார்மில் வெற்றி பெறுவது கடினமானது. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கடும்போட்டி எப்போதுமே இருக்கும் என்பதால், அந்த ஆட்டத்திலும் வெற்றி கிடைப்பது கடினம். பாகிஸ்தானும் நாக்அவுட் சுற்று செல்ல கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும். இந்த சவால்களைக் கடந்து இங்கிலாந்து வெல்ல வேண்டும்.

இங்கிலாந்து அணியின் நம்பிக்கையற்ற பந்துவீச்சு, சோர்வடைந்த பேட்டிங், சுறுசுறுப்பில்லாத பீ்ல்டிங் போன்றவை அந்த அணியை ஏற்கெனவே குழிக்குள் தள்ளிவி்ட்டது. இனிமேலும் விழிக்காவி்ட்டால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மோசமாகத் தொடரிலிருந்து வெளியேறும்.

இங்கிலாந்து அணி கடந்த 3 நாட்களாக எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல் 10-வது இடத்தில் இருந்தது. ஆனால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியால், இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திலிருந்து, 9-வது இடத்துக்கு உயர்ந்து, நெதர்லாந்து தோல்வியால் 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வங்கதேசம் சந்தித்த மாபெரும் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நெதர்லாந்தின் மோசமான தோல்விதான் இங்கிலாந்து அணியின் தரவரிசையை உயர்த்தியுள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இலங்கை: மீதமுள்ள போட்டி -5 (இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து)

இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல்வெற்றியைப் பெற்ற கடைசி அணியாக இலங்கை இருக்கிறது. அந்த அணியில் உள்ள முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இல்லாதது பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று, 3 போட்டிகளில் இலங்கை தோற்று, 2 புள்ளிகளுடன் உள்ளது.

நாக்அவுட் சுற்றுக்குள் செல்ல அடுத்துவரும் 5 போட்டிகளிலும் வெல்வது இலங்கைக்கு கட்டாயம். ஆனால், அது சாத்தியமில்லை. இந்தியா, நியூசிலாந்து அணிகளின் ஃபார்மிற்கு முன், நிச்சயமாக இலங்கை அணி தோல்வியைத் தழுவும். இலங்கை அணி ஒரு தோல்வி அடைந்தால்கூட தாயகம் திரும்ப வேண்டியதுதான். 8-வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி தன்னை உயர்த்திக்கொள்ள வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை வெல்லலாம்.

அதிலும் ஆப்கானிஸ்தான் ஃபார்மைப் பொறுத்தவரை இலங்கை அணியையே வீழ்த்தும் வல்லமை கொண்டதாக மாறியுள்ளது. ஆதலால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பு என்பது காகிதத்தில் மட்டுமே சாத்தியம், நிதர்சனத்தில் வார்த்தைக்கு வேண்டுமானால் கூற முடியும்.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தான்: மீதமுள்ள ஆட்டங்கள்-5, (இலங்கை, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா)

இந்த உலகக் கோப்பைத் தொடரில் யாரும் கணிக்க முடியாத அணியாக ஆப்கானிஸ்தான் உருவெடுத்துள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை தோற்கடித்து அதிர்ச்சி அளித்த ஆப்கான் அணி, பாகிஸ்தானையும் வீழ்த்தி மற்ற அணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் அடுத்துவரும் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானை எந்த அணியும் எளிதாக எடுக்கமாட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் அணி 3தோல்விகள், 2வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் பாகிஸ்தானுக்கு கீழே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்க எதிராக வெல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள்வரை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளை ஆப்கானிஸ்தான் அணியால் வெல்வது கடினம்தான். ஆனால், ஆப்கானிஸ்தானின் ஃபார்மிற்கு எதுவும் நடக்கலாம். ஒருவேளை இரு அணிகளில் ஒரு அணியை வீழ்த்தினாலும், புள்ளிப்பட்டியல் பரபரப்பாகச் செல்லும். அந்த இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்புக்கே ஆப்கானிஸ்தான் வேட்டுவைத்துவிடும்.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசம்: மீதமுள்ள ஆட்டம்-4 (நெதர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா)

வங்கதேச அணியின் அரையிறுதிக் கதவு ஏற்ககுறைய அடைக்கப்பட்டுவிட்டது என்று கூறலாம். வங்கதேசம் நாக்அவுட் சுற்று செல்ல, மற்ற அணிகள் வெற்றியைத் தியாகம் செய்தால்தான் சாத்தியமாகும். அது நடக்கவே நடக்காது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகள், 2 புள்ளிகளுடன் வங்கதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது. அதிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 149 ரன்களில் தோல்வி அந்த அணியை கடைசி இடத்துக்கு இழுத்துச் சென்றது.

இ்ன்னும் வங்கதேச அணிக்கு 4 ஆட்டங்கள் மீதமுள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் வங்கதேசம் வென்றால்கூட அரையிறுதி வாய்ப்புக் கிடைக்காது. வங்கதேசம் அடுத்துவரும் இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பெற முயலலாம். ஆனால், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவது எளிதல்ல. இனிவரும் போட்டிகளில் ஒரு தோல்வி அடைந்தாலும், வங்கதேசம் தொடரிலிருந்து வெளியேறும்.

உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

நெதர்லாந்து (மீதமுள்ள ஆட்டங்கள்-4 வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா)

நெதர்லாந்து அணி உலகக் கோப்பைத் தொடங்கியதில் இருந்து உயர்தரமான கிரிக்கெட்டை அனைவரும் எதிர்பார்த்ததைப் போல் வெளிப்படுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி மற்ற அணிகளை துவைத்து வரும் நிலையில் அந்த அணியையே “மண்ணைக் கவ்வவைத்தது” நெதர்லாந்து.

நெதர்லாந்து அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று(25ம்தேதி) நடந்த ஆட்டத்தில் 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து தோற்றதையடுத்து, அரையிறுதி செல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. அனைத்து ஆட்டங்களில் வென்றால்கூட அரையிறுதி வாய்ப்பு சாத்தியமில்லை. நெதர்லாந்து நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.902 என குறைந்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால், அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது.

அடுத்து, இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெல்வதும் நெதர்லாந்துக்கு சாத்தியமில்லை. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக நெதர்லாந்து போராடி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியுமேத் தவிர நாக்அவுட் சுற்றுக்குள் வர முடியாது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)