ராஜஸ்தான் தேர்தல்: காங்கிரஸின் ரூ.25 லட்சம் காப்பீட்டு திட்டம் பாஜகவை வீழ்த்த உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பைசல் முகமது அலி
- பதவி, பிபிசி நியூஸ்
சன்வாரி தேவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், “சிகிச்சைக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும்,” என்று அவரது கணவர் கேசரிமால் கவலைப்படத் தொடங்கினார்.
சிறு விவசாயத் தொழிலாளியான கேசரிமால், கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது மனைவியை சிகிச்சைக்காக பிரதாப்கரில் இருந்து உதய்பூர் மற்றும் பன்ஸ்வாராவுக்கு ஏற்கனவே அழைத்து சென்றார்.
பயணம் மற்றும் மருத்துவச் செலவினங்களுக்குப் போதுமான பணம் அவரிடம் இல்லாததால் அப்போது கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தற்செயலாக, அவரது சகோதரர் லக்ஷ்மண் மீனா சுகாதார ஊழியர் விஜய் பாலைச் சந்தித்தார். லக்ஷ்மண் பேசிய போது, "எப்படி இவ்வளவு பணம் செலவழிப்பீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியதுடன், "சிரஞ்சீவிக்கு விண்ணப்பிக்கவும்" என்று ஆலோசனை கூறினார்.
2021 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தானில் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் சிரஞ்சீவி யோஜனா, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 25 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாகும்.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
கடந்த ஆண்டு (2022) வரை, ஒரு குடும்பத்திற்கு ரூ.15 லட்சமாக இருந்த அதன் உச்ச வரம்பு, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்தும் நபர்களும் இந்த ரொக்கமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். ஆனால் இதற்காக அவர்கள் ஆண்டு பிரீமியமாக ரூ. 850 செலுத்த வேண்டும்.
சிரஞ்சீவி சுகாதாரக் காப்பீட்டு அடையைப் பெற்ற பிறகு, உதய்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சன்வாரி தேவியின் சிகிச்சை தொடங்கியது. அங்கு முதல் முறையாக அவர் பதினைந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டார்.
"முதன்முறையாக சென்றபோது ரூ.1.5 லட்சம் செலவு செய்தோம். எங்கள் மொபைலுக்கும் மெசேஜ் வந்தது. ஆனால் பயணத்திற்கு செலவழித்த பணத்தைத் தவிர ஒரு பைசா கூட செலுத்த வேண்டியதில்லை," என்கிறார் லக்ஷ்மன் மீனா.
பின்னர், சன்வாரி தேவிக்கு 'கீமோ தெரபி' கொடுக்க வேண்டியதாயிற்று. இருப்பினும், இரண்டு வருட சிகிச்சைக்குப் பிறகு, அவர் இந்த ஆண்டு பிப்ரவரியில் உயிரிழந்தார்.
லக்ஷ்மண் கூறுகையில், சகோதரனின் மனைவியின் சிகிச்சைக்காக ஒன்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
சிரஞ்சீவி யோஜனா எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பர்சாதி லால் மீனா இதுபற்றிப் பேசிய போது, “எங்கள் குடும்பங்களில் 90 சதவீதம் பேர் சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளனர். இது நாட்டிலேயே மிக அற்புதமான ஒரு திட்டமாகும். 1 லட்சத்து 38 ஆயிரம் குடும்பங்களின் பிரீமியத்தை அரசே நேரடியாக செலுத்துகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2500 கோடி செலவிடப்படுகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய், இதய நோய் போன்ற பெரிய நோய்களுக்குக் கூட அரசு செலவில் சிகிச்சை பெற முடியும்.
மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருவாய் கொண்ட, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
ராஜஸ்தானில் உள்ள ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, அரசுடன் இணைந்து, இந்தத் தனியார் மருத்துவமனைகளிலும் சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளலாம்.
இருப்பினும், சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய தன்னார்வ நிறுவனங்கள் தனியார் துறையை ஈடுபடுத்துவதில் அதிக ஆர்வத்துடன் இருப்பதில்லை.
ஜன் ஸ்வஸ்திய அபியானின் திட்டத்தைச் சேர்ந்த சாயா பஞ்சோலி, அரசு மற்றும் தனிநபர்கள் தனியார் சுகாதாரத் துறையைச் சார்ந்திருப்பதைத் தான் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அதிகரிக்கும் என்று வாதிடுகிறார்.
அவர் பேசிய போது, “தனியார் மருத்துவமனைகள் பல நேரங்களில் நோயாளிகளுக்கு என்று ஒரு பேக்கேஜ் இருந்தபோதிலும் சிகிச்சையை மறுக்கின்றன அல்லது முதலில் பணத்தை டெபாசிட் செய்யும்படி கேட்கின்றன. தேவையில்லாமல் சிகிச்சை அளித்தது தொடர்பான நிகழ்வுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தனியார் துறைக்கு அரசு கொடுக்கும் அதே பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அரசு துறையை பலப்படுத்தலாம். இதனால் தனியாரை சார்ந்திருப்பதை குறைக்க முடியும்” என்றார்.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
மக்களின் புகார்கள் என்ன?
பிரதாப்கர் நகரிலிருந்து சிறிது தொலைவில் உள்ள பாடி பாம்போரி கிராமத்தைச் சேர்ந்த லீலாவுக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.
இவரது மூன்று வயது மகன் கௌரவ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவரது கால் உடைந்தது.
சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்குமாறு லீலா கேட்டபோது, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் வருவதில்லை எனக் கூறி தனியார் மருத்துவமனை மறுத்துவிட்டது.
ஆபரேஷன், பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவமனை செலவுகள் என ரூ.18 ஆயிரம் சேர்த்து கௌரவின் சிகிச்சைக்கு ரூ.33 ஆயிரம் செலவானது.இதற்காக குடும்பத்தினர் கடன் வாங்கி நகைகளை அடமானம் வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தை செலவு செய்தனர்.
அதே மருத்துவமனைதான் தற்போது சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் விபத்திற்குப் பிறகு காலில் செருகப்பட்ட கம்பியை அகற்றி சிகிச்சை அளிக்க தயாராக உள்ளது. ஆனால் அதற்கு, மொத்த செலவான ரூ.12 ஆயிரத்தில் லீலா ரூ.3 ஆயிரத்தை தன்னிடமிருந்து செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
இத்திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு பணம் செலுத்த வேண்டியதில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்தபோது, ஒன்பதாயிரம் ரூபாய் பாக்கி என்ற நிலையில், மூவாயிரம் ரூபாய்தான் செலவாகும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் லீலா.
சாயா பஞ்சோலி பேசிய போது, "தொலைதூர கிராமங்களில் இருந்து வருபவர்களுக்கு எங்கு புகார் செய்வது என்று கூடத் தெரியவில்லை. தனியார் துறையின் மீது முழுமையான கண்காணிப்பு இல்லாவிட்டால், காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது," எனக்கவலை தெரிவித்தார்.
டாக்டர் நரேந்திர குப்தா சமீபத்திய சிஏஜி அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசிய போது, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், இறந்த அல்லது இறந்துவிட்டதாகக் காட்டப்பட்ட நோயாளிகளுக்குக் கூட மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது எனத்தெரிவித்தார்.
ஒரே நோயாளி ஒரே நேரத்தில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும் பல புகார்கள் எழுந்துள்ளன.
ஒரே மொபைல் எண்ணிலிருந்து ஏராளமான நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். குறைந்தது 2.25 லட்சம் பேருக்கு இது போல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் நோயாளியின் அறுவை சிகிச்சை தேதி டிஸ்சார்ஜ் தேதிக்கு முன்னரே காட்டப்பட்ட நிகழ்வுகளும் அடக்கம்.
மத்திய சுகாதார அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளில் பல தவறானவை என்று கூறியுள்ளது.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
தனியார் மருத்துவமனைகள் எந்தளவுக்கு உதவுகின்றன?
நரேந்திர குப்தா சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படும் பிரயாஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
அரசின் இலவச மருந்துத் திட்டத்தின் அவுட்லைன் தயாரிப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
'அரசு காப்பீட்டு திட்டங்களில் தனியார் மருத்துவமனைகளின் நடத்தை' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் செலுத்தப்படும் சேவைகளுக்கு காப்பீட்டுத் தொகைகளைக் கோரி விண்ணப்பங்களை அளிப்பது கண்டறியப்பட்டது.
அதே நேரம் பல சுகாதார வசதிகளை நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் வழங்கவில்லை.
காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள சேவைகளுக்கும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து தனித்தனியாக கட்டணம் வசூலித்தன. ஆனால், அவர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது.
ராஜஸ்தானில் உள்ள பழைய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (பாமாஷா) குறித்து லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் பொருளாதார நிபுணர் ராதிகா ஜெயின் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், 16 லட்சம் காப்பீட்டு கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, 20 ஆயிரம் நோயாளிகளிடம் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
இந்த ஆராய்ச்சி சில காலம் பழமையானது என்றாலும், அது வெளிப்படுத்திய விவரங்கள் இன்றும் குறையாமல் தொடர்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
தனியார் மருத்துவமனைகள் என்ன கூறுகின்றன?
ராஜஸ்தான் மட்டுமின்றி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பல தனியார் மருத்துவமனைகளுக்கு வசதியாக இல்லை.
வசதிகளைப் பொறுத்து ஒரே அறுவை சிகிச்சைக்கு இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் இரண்டு கட்டணங்கள் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் ராஜஸ்தான் பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் அசோக் கோயல் கூறுகையில், ஸ்டென்ட் வைக்க அரசு ஒரு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. ஆனால் சில நேரங்களில் அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இது, அந்த கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்டென்ட் பொருத்திய பிறகு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதை மருத்துவர் எப்படி நோயாளிக்கு விளக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சிக்கல்கள் காரணமாக அவர் தனது மருத்துவமனையை எந்த அரசு காப்பீட்டுத் திட்டத்திலும் சேரவில்லை என்று டாக்டர் கோயல் கூறுகிறார்.
யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் நடத்திய ஆய்வில், காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் நான்கு ஆண்டுகளில், 75 சதவீத விண்ணப்பங்கள் தனியார் மருத்துவமனைகள் மூலம் மட்டுமே வந்ததாகக் கண்டறிந்துள்ளது. இதன் ஒரு பொருள், நோயாளிகள் சுகாதார சேவைகளுக்கு அரசு சேவைகளுக்கு பதிலாக தனியார் துறை சேவைகக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதாகும்.
சுகாதாரத் துறையில் நடத்தப்பட்ட அரசு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 65 சதவீத மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
காப்பீட்டுத் திட்டங்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன?
அரசு மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாததால் தனியாரிடமிருந்து அதிக சேவைகளைப் பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டலாம்.
இதன் காரணமாக சாமானிய மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதில் அரசும் தனியாரை நம்பி வருகிறது.
ஆக்ஸ்பாம் நடத்திய 2020 கணக்கெடுப்பின்படி, ஆரோக்கியத்திற்கான செலவினங்களின் அடிப்படையில் இந்தியா கீழே இருந்து நான்காவது இடத்தில் உள்ளது. அரசுகள் பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை மட்டுமே சுகாதாரத் துறைக்கு செலவிடுகின்றன.
ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் பர்சாதி லால் மீனா, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு ஒரு சுமூகமான அமைப்பு இருப்பதாகக் கூறுகிறார். சிரஞ்சீவி திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் ஒரு குழு அத்திட்டத்தை தொடர்ந்து ஆன்லைனில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பதினெட்டு மருத்துவனைகள் மற்றும் நாற்பது நர்சிங் கல்லூரிகளைத் திறப்பதுடன், பஞ்சாயத்து அளவிலிருந்து மாவட்ட மருத்துவமனைகள் வரை சுகாதார மையங்களைத் திறப்பது குறித்தும் பர்சாதி லால் மீனா பேசுகிறார். மேலும் ஒரு குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் காப்பீடு வழங்குவதன் மூலம், அரசாங்கம் "ஏழைகளுக்கு வாழ வாய்ப்பும் உரிமையும் வழங்கியுள்ளது" என விவரிக்கிறார் அவர்.
14 பேர் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் பலன் பெற்றுள்ளனர். ரூ.10 லட்சம் பெற்ற பயனாளிகளும் சில நூறு பேர் இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் ரூ.5 லட்சம் அல்லது குறைவாக மட்டுமே இந்த காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்தியுள்ளனர்.
பாஜகவின் முக்கியத் தலைவரான ராஜேந்திர ரத்தோர் இத்திட்டம் குறித்துப் பேசியபோது, “மத்திய ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசு அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளது. ஆனால் அசோக் கெலாட் அரசு அதே ஆயுஷ்மான் திட்டத்தைத் திரித்து வேறு பெயரைச் சூட்டியுள்ளது,” என்றார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுகாதார உரிமைகள் மசோதா' ஒரு மைல்கல் என்று சுகாதாரத் துறையில் பணியாற்றும் பல தன்னார்வ அமைப்புகள் அழைக்கின்றன.
குழந்தை இறப்பு விகிதம், பிறப்பு விகிதம் போன்ற பல சுகாதார அளவுருக்களில் ராஜஸ்தான் பின்தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இலவச மருந்து விநியோகம் மற்றும் 'சுகாதார மசோதா' போன்ற சில முக்கிய நடவடிக்கைகளை இந்த ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றியுள்ள உரிமைகள் சட்டம் மூலம் மேற்கொள்ள மாநில அரசு தயாராகி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
மலிவான மருந்துகளை விற்பதன் முக்கியத்துவம்
மாநிலத்தில் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முதலமைச்சரின் இலவச மருந்து திட்டம் அமலில் உள்ளது.
இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்து, முன்பு இருந்த 26 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அரசு கூறுகிறது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜெனரிக் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக, மாநிலம் முழுவதும் 150 மருந்து விநியோக மையங்களும் திறக்கப்பட்டு, 2400 வகையான மருந்துகள் வினியோகிக்கப்படுகின்றன.
ராஜஸ்தான் மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷனின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இது நாட்டின் மற்ற மாநிலங்களை விட மிகவும் அதிகம் என்றார்.
ஜெனரிக் மருந்துகள் என்பது ஒரு மருந்தின் காப்புரிமை காலாவதியான பிறகு தயாரிக்கக்கூடிய மருந்துகளாகும். மேலும் அவை அசல் நிறுவனத்தின் மருந்தில் உள்ள அதே வேதிப்பொருட்களையும் கொண்டிருக்கின்றன.
2011 முதல் மாநிலம் முழுவதும் இந்த இலவச மருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், அதன் அடித்தளம் 2005 ஆம் ஆண்டிலேயே மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற சமித் ஷர்மா என்பவர் ஜலவார் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோதே உருவாக்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் பிபிசியிடம் பேசிய சமித் ஷர்மா, "உற்பத்தி விலை 2 ரூபாய் இருக்கும் பல மருந்துகளின் விலை பாக்கெட்டுகளில் 30 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது. அதேசமயம் மருந்து விற்பனையாளர்களும் கூட மிகக் குறைந்த விலையில் அவற்றைப் பெறுகிறார்கள். மருந்து உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து நேரடியாக அவற்றை வாங்கி, நோயாளிகளுக்குப் பொதுவான மருந்துகளை பெயரளவிலான விலையில் விற்றால், மக்களுக்கு மிகவும் மலிவான சிகிச்சை கிடைக்கும் என நான் திட்டமிட்டேன்," என விவரித்தார்.
ரூ. 200 கோடி செலவில் 2011ல் தொடங்கப்பட்ட இத் திட்டத்தில் மொத்தம் ரூ.1200 கோடி செலவிடப்படும்.
ஜெனரிக் மருந்துகளை குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதற்காக, மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு, மாவட்ட அளவிலும், நகர அளவிலும் கடைகளைத் திறக்கத் தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 5.5 கோடி இந்தியர்கள் சிகிச்சைக்கான செலவினங்களால் பலவீனமான பொருளாதார நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார செலவின விவரங்களை வழங்கும் தேசிய சுகாதார கணக்குகளின்படி, இந்தியாவில் 55 சதவீத மக்கள் தங்கள் சொந்த பணத்தை சுகாதாரத்திற்காக செலவிடுகின்றனர்.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
மருந்து விற்பனை தொடர்பான புகார்கள்
இலவச மருந்துத் திட்டத்தின் படி, சிகிச்சையின் போது நடத்தப்பட்ட சில பரிசோதனைகளையும் மாநில அரசு அத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது.
இலவச மருந்து திட்டம் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. ஆனால் அரசு திட்டங்களின் சிக்கல்கள் ஆங்காங்கே வெட்டவெளிச்சமாகத் தெரிகின்றன.
பிரதாப்கர் அரசு மாவட்ட மருத்துவமனையில், பர்கேடி கிராமத்திலிருந்து வந்த ஜெகதீஷின் தாயாருக்கு ஃபிலிம் இல்லாததால் எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை. இதற்காக அவர் ஒரு தனியார் எக்ஸ்ரே மையத்தில் முந்நூறு ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தது.
ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து இலவச மருந்துகளை பெறுவதில் எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை.
ஜெனரிக் மருந்துகளைப் பரப்புவதில் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. அவை எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்க வேண்டிய அவசியமில்லை.
சமித் ஷர்மா கூறுகையில், ஆயுதங்களுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய தொழில் மருந்துத் துறையாகும். அதற்கு அதன் சொந்த நலன்கள் ஏராளமாக உள்ளன என்றார்.

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBC
'சுகாதார உரிமை' சட்டத்தில் சர்ச்சை
ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமைச் சட்டமும், தனியாருக்கும் அரசுக்கும் இடையே எழுந்த மோதலால், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பிறகும் செயல்படுத்த முடியவில்லை.
1996 ஆம் ஆண்டு தீர்ப்பில், சுகாதார உரிமையை வாழ்வதற்கான உரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அனைவருக்கும் சுகாதார வசதிகளை வழங்குவது அரசின் பொறுப்பு என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மார்ச் மாதம் சுகாதார உரிமைச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு குடிமகனுக்கும் சிகிச்சை பெறும் உரிமையை வழங்கும் நாட்டின் முதல் மாநிலமாக ராஜஸ்தான் ஆனது.
ஆனால் சட்டம் இயற்றப்பட்ட சில நாட்களிலேயே, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தனியார் துறையின் கவலை என்னவென்றால், அவசரநிலை ஏற்பட்டால், மாநிலத்தில் உள்ள எந்த சுகாதார நிறுவனமும் நோயாளிக்கு சிகிச்சையை மறுக்க முடியாது என்று கூறுகிறது.
அவசரகாலச் சூழலைச் சமாளிக்கும் திறன் இல்லாத தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஏராளமாக உள்ளன என்று தனியார் மருத்துவமனைகள் சொல்கின்றன. அப்படியானால் என்ன செய்வது, நோயாளியின் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் எப்படி ஈடுகட்டப்படும் என்பது இரண்டாவது கேள்வியாக உள்ளது.
சிகிச்சை முடிந்து ஏழு நாட்களுக்குள் இந்தத் தொகையை தனியார் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் என்கிறார் பர்சாதி லால் மீனா.
மேலும், இது குறித்து தெளிவாக மருத்துவர்களிடம் விவரிக்கப்பட்டுள்ளதால், சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்றார்.
கடந்த அரசு ஆட்சியில் இருந்த போது நடைமுறைப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் துறையில் பலர் உரிய கட்டணத்தைப் பெறமுடியவில்லை, இதனால் அவர்கள் இழப்புக்களை எதிர்கொண்டதாக டாக்டர் அசோக் கோயல் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












