ஆப்கானிஸ்தானுடன் தோற்ற இந்த அணியா நம்பர் ஒன்? பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கொந்தளிப்பு

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் தோல்வியடைந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளன.
பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த 3வது தோல்வி, அந்த அணியின் அரையிறுதி பாதையை கடினமானதாக மாற்றியிருக்கிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தோல்விகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வி, நிலைமை இன்னும் மோசமாக்கியுள்ளது.
இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நோக்கி கடுமையான கேள்வி எழுப்பப்படுகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
புள்ளிப்பட்டியலில் முந்திய ஆப்கானிஸ்தான்

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலகக் கோப்பைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இப்போது நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து கடைசியில் உள்ளது. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானைத் தவிர, இங்கிலாந்து அணியையும் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது. இதற்கு முன், இரு அணிகளும் ஏழு முறை மோதியதில், ஆப்கானிஸ்தான் அனைத்திலும் தோல்வியடைந்திருந்தது.
ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பையில் அந்த அணி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். நடப்புத் தொடரில் பெற்ற இரண்டு வெற்றிகளை தவிர்த்து, 2015ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான்.
கோபமடைந்த ஷோயப் அக்தர்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது இந்த தோல்வி எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, என்கிறார் அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர்.
பாகிஸ்தான் அணி சீராக இல்லையென்றும், கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்ட விதம்தான் இதற்கு காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், “ஆப்கானிஸ்தான் மக்கள் எங்கள் சகோதரர்கள், நாங்கள் எங்கள் சகோதரர்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம், இப்ராஹிமின் ஆட்டத்தை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உலக கிரிக்கெட் அரங்கில் அவர் தன்னை நிரூபித்துள்ளார்,” என்றார்.
பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த நிலையை எட்டியுள்ளது என்று ஷோயப் அக்தர் கூறினார்.
“கடந்த ஐம்பது வருடங்களாக ஆப்கானிஸ்தான் மக்கள் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர். அங்கே கிரிக்கெட் விளையாடுவதற்கான முறையான உள் கட்டமைப்பு இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கிறது. இத்தனைக்கும் நடுவே அந்த அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை ஆப்கானிஸ்தான் காட்டியுள்ளது.”
நேற்றைய ஆட்டம் குறித்து தொடர்ந்து பேசிய அவர், “ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் நம்மை விட சிறப்பாகி வருகிறது. நாணயத்தின் மதிப்பு நம்மை விட மேம்பட்டு வருகிறது. இப்போது கிரிக்கெட்டும் நம்மை விட சிறப்பாகியுள்ளது. உங்கள் அணியிடம் உற்சாகம், ஆர்வம் என அனைத்தும் உள்ளது. இதில் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், சரியான நபரை சரியான இடத்தில் களமிறக்குவதுதான். அதுவே. உங்கள் வெற்றியின் ரகசியம்,” என்றார்.
பாகிஸ்தான் அணியின் இந்த நிலைக்கு கிரிக்கெட் வாரியமே பொறுப்பு என்று கூறிய ஷோயப் அக்தர், "கிரிக்கெட்டில் அனுபவமே இல்லாதவர்கள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
‘எங்கள் வீரர்கள் தலா 8 கிலோ சாப்பிடுகிறார்கள்’

பட மூலாதாரம், Getty Images
"உலகக்கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளுக்கான சர்வதேச தர வரிசையில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அணியின் தற்போதைய ஆட்டத்தை பார்க்கும் போது, ‘நம்பர் ஒன் அணி’ என்று அழைக்கக் கூடிய வகையில் பாகிஸ்தானின் செயல்பாடு இல்லை" என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு தொலைக்காட்சியான ஏ ஸ்போர்ட்ஸில், நேற்றைய போட்டிக்கு பிறகு நடந்த நிகழ்ச்சியின் போது வாசிம் அக்ரம் இவ்வாறு தெரிவித்தார்.
“கடந்த 6-8 மாதங்களாக பாகிஸ்தான் அணியை நம்பர் ஒன் என்று கேள்விப்பட்டு வருகிறோம். இது என்ன மாதிரியான நம்பர் ஒன்? ஆப்கானிஸ்தான் அணியின் அணுகுமுறை மற்றும் திறமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர்களின் ஆட்டம் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது. இதற்கு முன்பு உலக சாம்பியனை வீழ்த்தியது. இப்போது பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ளது.”
அணியின் உடற்தகுதி குறித்த பிரச்னையை எழுப்பிய வாசிம் அக்ரம், “எங்கள் அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி தேர்வு நடக்கவில்லை. வீரர்களின் முகத்தைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் தலா 8 கிலோ சாப்பிடுவது போல இருக்கிறது. நிஹாரியை(மாமிசம் கொண்டு சமைக்கப்படும் ஓர் உணவு) அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்பது தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தியும் வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலியும் வீரர்களின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பினார்.
“அணியின் உடற்தகுதி குறித்து எந்த திட்டமிடலும் இல்லை. பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று வந்ததால் வீரர்கள் சோர்வாக காணப்படுகின்றனர்.” என்று அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வாரியத்தை சாடிய வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
அணியின் தற்போதைய நிலைக்கு கிரிக்கெட் வாரியமே பொறுப்பு என்று ஷோயப் மாலிக் கூறினார். அவர் கூறுகையில், “நல்ல அணிகளுடன் போட்டியிட நாங்கள் தயாராக இல்லை என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. எங்கள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் மோசமடைந்துள்ளது என்பது அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது,” என்றார்.
“நேற்றைய போட்டியின் போது ஆட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒருபுறம், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். மறுபுறம், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.” என்று அவர் கூறினார்.
“ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிங்கிள் எடுப்பதற்கு கூட கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது,” பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரமீஸ் ராஜா, “உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் தோல்வி அந்த அணிக்கு விழுந்த கடுமையான அடியாகும். இந்தத் தோல்விக்குப் பிறகு பாபர் ஆசம் நிலைகுலைந்து போனார்,” என்று தெரிவித்தார்.
“பாகிஸ்தான் அணி இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததில்லை, ஆனால் இந்த வெற்றிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதியானது. சென்னை ஆடுகளத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று. அதை ஆப்கானிஸ்தான் நிகழ்த்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் இப்படியே தொடர்ந்தால், நிச்சயம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற வாய்ப்புகள் அதிகம்.” என்று ரமீஸ் ராஜா கணித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












