பாகிஸ்தானை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தாலிபன்கள் கூறியது என்ன?

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி, பல தசாப்தங்களாக எல்லாவிதமான துன்பங்களுடன் போராடி வரும் மக்களுக்கு மகிழ்ச்சியடைவதற்கான ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் திங்கள் கிழமை சென்னையில் உள்ள எம்ஏசிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக தோற்கடித்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் பதற்றத்துடன் இருந்து வருகின்றன. மேலும் அவர்களின் போட்டித்தன்மை கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிப்படையாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், ACB

'பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படும் ஆப்கன் மக்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்'

திங்கள் கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஸத்ரான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸத்ரான் 87 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆட்ட நாயகன் விருதை வாங்க வந்த ஸத்ரானிடம் அவர் இதை யாருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறார் என்று கேட்கப்பட்டது, அதற்கு இந்த கோப்பை பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் ஆப்கான் குடிமக்களுக்கானது என்றார்.

“இந்தப் போட்டியில் நான் நன்றாக ஆடியதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நேர்மறையான அணுகுமுறையுடன் விளையாட விரும்பினேன். பலமுறை குர்பாஸும் நானும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். 16 வயதுக்குக் குறைவானோருக்கான போட்டிகளில் ஆடிய நாட்களில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். இந்த ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

பாகிஸ்தான் அரசு சுமார் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானின் இந்த முடிவை விமர்சித்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் நிலைமை எவ்வாறு உள்ளது?

ஆப்கானிஸ்தான் அணி இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தாலும் அனைத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளது.

எட்டாவது போட்டியில்தான முதல் முறையாக வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு முன்பாக இங்கிலாந்து அணியை தோற்கடித்துள்ளது.

இது உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் மூன்றாவது வெற்றியாகும். முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணி 2015-ல் ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்திருந்தது.

பாகிஸ்தான் மீதான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் மகிழ்ச்சியின் அலை வீசுகிறது.

ஹபீப் கான் என்பவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர். அவர் எக்ஸ் தளத்தில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார், அதில் துப்பாக்கிகள் சுடும் ஒலி கேட்கிறது.

இந்த காணொளி கிளிப்பைப் பதிவிட்டு, ஹபீப் கான் எழுதியுள்ளார், "இது முன்னணி போர்க்களம் அல்ல, ஆனால் காபூலில் பாகிஸ்தானை தோற்கடித்ததை கொண்டாடும் ஒரு நிகழ்வு."

கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், X/HABIB KHAN

ஹபீப் கான் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் பல காணொளி கிளிப்புகளைப் பதிவிட்டுள்ளார். இந்த காணொளிகளில், ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுவது தெரிகிறது.

ஹபீப் கான் எம்ஏசிதம்பரம் ஸ்டேடியத்தின் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார், அதில் ஒரு ஆப்கானியர், "பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது உலகக் கோப்பையை வென்றது போன்றது. எங்கள் பணி வெற்றி பெற்றது. இப்போது நாம் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பலாம். " என்று கூறுகிறார்.

பாகிஸ்தானை தோற்கடித்த பிறகு, ஆப்கானிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உடன் ஆடிக்கொண்டிருப்பது தெரிகிறது.

அதன் படத்தைப் பகிர்ந்துள்ள ஹபீப் கான், "இந்தியாவைச் சேர்ந்த ஒரு பதான் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பதானுடன் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடுகிறார்" என்று எழுதியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி, "வாழ்த்துகள்! எங்கள் அணி இந்த வெற்றிக்காக நீண்ட காலமாக காத்திருந்தது. எங்கள் வெற்றி எங்கள் திறமை மற்றும் குழுப்பணி காரணமாகும்." என பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், X/WAZHMA AYOUBI

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகரும் ஆப்கானிஸ்தான் மாடலுமான வஸ்மா அயூபி அணி பேருந்தின் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார், அதில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆடிக்கொண்டிருப்பது தெரிகிறது.

"நான் என்னுடைய நடன காணொளியை இங்கு பதிவிட முடியாது, எங்கள் அணியின் வேடிக்கையைப் பாருங்கள். நானும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறேன், அடுத்த சில நாட்களுக்கு ஆடிக்கொண்டே இருப்பேன்." என்று அவரு குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல பெண்கள் இந்த கிரிக்கெட் வீரர்களின் நடன காணொளியைப் பகிர்ந்துள்ளனர், மேலும் "எங்களால் நடனமாட முடியாது, நீங்கள் இந்த காணொளியைப் பாருங்கள்" என்று எழுதியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கோஸ்ட் நகர வீதிகளில் ஏராளமான மக்கள் இந்த வெற்றியை கொண்டாடினர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளது. அதில் காபூலில் உள்ள மக்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். இந்த காணொளியில், சில சிறுமிகளும் மகிழ்ச்சியுடன் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

“ஜிந்தாபாத், ஜிந்தாபாத், ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத்” என்று அவர்கள் உற்சாகமாகக் கோஷமிடுகிறார்கள்.

இந்த காணொளியில் ஓர் இளைஞர், "இது ஆப்கானிஸ்தான் முழுவதற்கும் ஒரு கொண்டாட்ட நாள். இந்த வெற்றி நாங்கள் செழிப்பு நோக்கி நகர்ந்து வருகிறோம் என்பதைக் காட்டுகிறது" என்று கூறுகிறார்.

ஆப்கானிஸ்தான் Vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

தாலிபன்கள் என்ன சொன்னார்கள்?

காபூல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளரும் தலிபானின் கூட்டாளியுமான காலித் சத்ரான் ட்விட்டரில், "எங்கள் தேசிய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. பலர் சாத்தியமற்றது என்று கூறிய வெற்றியை நாங்கள் அடைந்துள்ளோம். இந்த வெற்றி சிலருக்கு ஒரு சிறப்பு செய்தியாகும்." என்று கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தாலிபான் அரசின் பிரதமர் அலுவலகத்தின் தலைமைச் செயலரும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், "ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. இந்த வெற்றிக்காக தேசிய கிரிக்கெட் அணி, கிரிக்கெட் வாரியம் மற்றும் அனைத்து ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கும் வாழ்த்துகள்" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்ஸாய், "ஐம்பது ஓவர்கள் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்ததற்காக அணிக்கு வாழ்த்துகள். அடுத்த போட்டிகளுக்காக வாழ்த்துகள்" என்று எழுதியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் டெல்லிக்கான தூதர் ஃபரித் மமுன்ட்ஸாய், "இந்த சவாலான நேரத்தில், இந்த வெற்றி எங்கள் நாட்டிற்கு மிகவும் தேவையான மகிழ்ச்சியை அளித்துள்ளது. விளையாட்டு எங்களை ஒன்றிணைத்து புன்னகைக்க வைக்கிறது. அன்பு மற்றும் ஆதரவை வழங்கிய இந்திய ஆதரவாளர்களுக்கு நன்றி" என்றார்.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கான தூதரகம் தற்போது மூடப்பட்டுள்ளது. தலிபான் அரசு ஃபரித் மமுன்ட்ஸாயை தூதராக ஏற்றுக்கொள்ளவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)