பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் என்ன?

பாபர் ஆசம்

பட மூலாதாரம், Getty Images

தற்போது நடந்து வரும் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியடைந்து, தற்போது அந்த அணி அரையிறுதிக்குச் செல்வதே மிகவும் கடினம் என்ற நிலை உண்டாகிவிட்டது.

அரையிறுதிக்குச் செல்லும் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைகள் கேசவ் மகாராஜின் உள்ளிட்ட தென் ஆப்பிரிக்க ஆட்டக்காரர்களால் கிட்டத்தட்டத் தகர்க்கப்பட்டுவிட்டன என்று விளையாட்டு நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானோடு விளையாடிய ஆட்டத்திலும் தோல்வியையே தழுவியிருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் வளமான வரலாற்றைக் கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 1992இல் இம்ரான் கான் தலைமையில் உலகக் கோப்பையையும், 2009இல் யூனிஸ் கான் தலைமையில் டி-20 உலகக் கோப்பையையும் வென்றது.

தற்போதைய அணியில் அந்தப் பழைய அணிகளின் நிழல்கூட இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் ஆதரவைக் கோரியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தாக்குதல் பந்துவீச்சில் உலகின் சிறந்த அணியாக கருதப்பட்டது. ஆனால் இந்தத் தாக்குதல் மனப்பான்மை இப்போது எங்கும் காணப்படவில்லை

தென் ஆப்பிரிக்காவுடனான தற்போதைய தோல்வியைத் தொடர்ந்தும், பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தையும் அந்த அணியையும் பலர் விமர்சித்து வருகின்றனர். பாபர் ஆசமின் தலைமையையும் விமர்சித்து வருகின்றனர்.

சென்னையில் ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் பாபர் ஆசமின் தலைமை சோபிக்கவில்லை என்றும், இறுதி ஓவர்களில் பாகிஸ்தான் அணி ஆட்டத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதாகக் கையளித்து விட்டது என்றும் குறிப்பிட்டனர்.

இதேபோல்தான் ஆப்கானிஸ்தானுடனான தோல்விக்குப் பின்னும் பாகிஸ்தான் அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போது ரசிகர்களிடையே கவலை மற்றும் தவிப்பு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

மேலும், இதுபோன்ற சவாலான நேரத்தில், கேப்டன் பாபர் ஆசம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு, ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என நம்புவதாகவும் அதன் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.

மேலும், “தற்போதைய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்னும் நான்கு முக்கியப் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளது. வரும் போட்டிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நம்பிக்கையுடன், நேர்மறையாக விளையாண்டு தடைகளைத் தாண்டி நன்றாக விளையாடும் என்ற எதிர்பார்ப்புகளுடன் பிசிபி காத்திருக்கிறது,” என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

“ஐசிசி உலகக்கோப்பை 2023க்கான அணியை வடிவமைத்து உருவாக்கும் சுதந்திரம் கேப்டன் பாபர் ஆசம் மற்றும் இன்சமான்-உல்-ஹக்கிடம் அளிக்கப்பட்டுள்ளது,” என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், இனிவரவிருந்த நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் நன்றாக விளையாடுவதற்குத் தேவையான, அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்றும், பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கிப் பயணிக்கும் நேரத்தில் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் அணிக்கு பக்கபலாம நிற்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது.

ஆனால் அடுத்த ஆட்டத்திலேயே மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவி, மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானிடம் தோற்றபோது என்ன நடந்தது?

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியினர் மகிழ்ச்சிக் களிப்பில் கொண்டாடினர்.

அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆப்கான் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோக்கள் பகிரப்பட்டன. அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கும் ஆப்கானிஸ்தானை இந்த வெற்றி ஒன்றுபடுத்தியதாகப் பேசப்பட்டது.

உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வென்றது நீண்ட நாள் நினைவில் நிற்கும் என்று ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் பேசின.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததையடுத்து பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும் தங்கள் அணி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

அப்போது பாகிஸ்தான் ஊடகங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்ட்சித்திருந்தன.

ஆங்கில நாளிதழான டான்-இன் (Dawn) விளையாட்டு ஆசிரியர் அப்துல் கஃபர், "கேப்டன் பாபர் ஆசாம் மீது பெரும்பாலான கேள்விகள் எழுப்பப்படுகின்றன, ஆனால் ஷாஹீன் ஷா அப்ரிடியிடம் ஏன் கேட்கக்கூடாது? பாபர் அசாமுடன் ஒப்பிடும்போது ஷஹீன் ஷா அப்ரிடி மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளார். பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியிருந்தார்.

அப்துல் கஃபர் மேலும், "இப்போது பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இது தவிர, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் எஞ்சிய போட்டிகளில் தோல்வியடைய வேண்டும். தவிர, பாகிஸ்தானும் தனது ரன் விகிதத்தை மேம்படுத்த வேண்டும்," என்றிருந்தார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

‘அம்பலமான பாகிஸ்தானின் பலவீனங்கள்’

அப்போது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டி தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் பல பகுப்பாய்வுகள் வெளியாகின. அவற்றில் பெரும்பாலானவற்றின் தலைப்பு: ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை ஏன் இப்படி ஆனது?’ என்றிருந்தது.

2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு என்ன தவறு என்று ஜியோ டிவி ஒரு அலசலை வெளியிட்டிருந்தது. அதில், "இந்த உலகக் கோப்பையில் இந்தியா சிறந்த அணி என்பது தெளிவாகியிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானும் மோசமான அணியாக பார்க்கப்படவில்லை. பாகிஸ்தானும் ஒரு நல்ல தொடக்கத்தை எடுத்தது. ஆனால், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பல பலவீனங்கள் அம்பலமானது,” என்றிருந்தது.

“இன்னும் சொல்லப்போனால் திட்டமிடல் இல்லாமையும், வரையறைகளுக்கு வெளியே சிந்திக்கும் தன்மையும் தென்படவில்லை,” என்றும் கூறியிருந்தது.

பாகிஸ்தானுக்கு முதல் தர கிரிக்கெட்டில் ஆர்வமில்லையா?

சில மாதங்களுக்கு முன்பு வரை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தாக்குதல் பந்துவீச்சில் உலகின் சிறந்த அணியாக கருதப்பட்டது. ஆனால் இந்தத் தாக்குதல் மனப்பான்மை இப்போது எங்கும் காணப்படவில்லை.

நசீம் ஷா இல்லாததால் தான் பந்துவீச்சில் அந்த தாக்கம் தெரியவில்லை என்று சொல்ல முடியாது. அது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பந்துவீச்சில் தேவையான மாற்றங்களைச் செய்யாததற்கு யார் பொறுப்பு?

ஜியோ டிவி, பாகிஸ்தான் தனது சொந்த அணியையே மோசமாக்கிக் கொண்டதாகவும், அதற்காக இப்போது பெரும் விலையை செலுத்துவதாகவும் கூறியிருந்தது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், ‘முதல் தர கிரிக்கெட்டில் நமது வீரர்களுக்கு அதிக ஆர்வம் இல்லை’ என்றிருந்தார். டி-20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டாலும், ஒருநாள் போட்டிகளில் அதன் செயல்திறன் மோசமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பாபர் அசாம் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை அவரது மற்ற அணி வீரர்களின் முயற்சிகள் ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மூன்று கேட்ச்களைக் கைவிட்டது.

இது தவிர, பீல்டிங்கிலும் சிக்கல் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பீல்டிங் செய்யும் போது அணியின் செயல்திறன் சராசரிக்கும் குறைவாக இருந்தது. இது வீரர்களின் உடற்தகுதி குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

பாகிஸ்தா, ஆப்கானிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு, ஆப்கான் பொதுமக்கள் தெருக்களில் இறங்கிக் கொண்டாடினர்

முக்கியமானதாகப் பார்க்கப்படும் வெற்றி

2014-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 276 ரன்கள் எடுத்திருந்த ஆப்கானிஸ்தான், இப்போது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தானின் 283 ரன்கள் இலக்கை அடைந்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பைக்கு முன், 2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

ஆனால், இம்முறை பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி, ஆப்கானிஸ்தானின் ஊடகங்களில் முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் காபூலில் வசிக்கும் அஷ்ரஃப் ஆலம், ஆப்கனிஸ்தானின் டோலோ நியூஸ் இணையதளத்திடம், "நேற்று இரவு, நான் எனது குடும்பத்தினருடன் டிவியில் முழு போட்டியையும் பார்த்தேன். என் வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் கூட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர்," என்று கூறினார்.

‘கிரிக்கெட் மட்டுமே எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது’

காபூலைச் சேர்ந்த கபீர், டோலோ நியூஸிடம், "கிரிக்கெட் மட்டுமே எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் கிரிக்கெட்தான் நாங்கள் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான ஒரே வழி," என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் நிபுணர் ரஹ்மான் ரஹிமி, டோலோ நியூஸிடம், "பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடக்கும் போது, அதில் அரசியல் பிரச்னைகளும் தலைதூக்கும். ஆப்கானிஸ்தான் வீரர்கள் போட்டியின் போது ஒரு தவறையும் செய்யாததற்கு இதுவே காரணம்," என்றார்.

பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு, ஆப்கான் பொதுமக்கள் தெருக்களில் இறங்கிக் கொண்டாடினர். மக்கள் பாடியும் நடனமாடியும் மகிழ்ச்சியில் துப்பாக்கிகளைச் சுடுவதையும் காண முடிந்தது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி கூறுகையில், "எதிர்வரும் போட்டிகளிலும் இதேபோன்ற மகிழ்ச்சியை எங்கள் நாட்டு மக்களுக்கு வழங்க முயற்சிப்போம். நல்ல நேரத்திலும், மோசமான சமயங்களிலும் எங்கள் அணிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க எங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறோம்," என்றார்.

தாலிபான்களும் கொண்டாடும் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியால் ஆப்கானின் தலிபான் ஆட்சியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் அமு செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் எழுதியிருந்தது.

தலிபான் பிரதம மந்திரி அலுவலகத்தின் அரசியல் துணை மௌல்வி அப்துல் கபீர், எக்ஸ் சமூக தளத்தில், "இந்த வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, கிரிக்கெட் வாரியம் மற்றும் அனைத்து ஆப்கானிஸ்தான் வீரர்களையும் நாங்கள் வாழ்த்துகிறோம். ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும் என்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது. மேலும் வெற்றிபெற எங்களின் வாழ்த்துகள்," என்று எழுதியிருந்தது.

பிபிசி பாஷ்டோ தனது அறிக்கையில், "11 ஆண்டுகளுக்கு முன்பு 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆப்கானிஸ்தான் தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடித் தோற்றது," என்று எழுதியிருந்தது.

மேலும், “ஆனால் 2023 உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடைந்தனர். இந்தத் தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி மோசமான நிலையில் உள்ளது," என்று எழுதியிருந்தது.

பாகிஸ்தானில் சர்ச்சையான இர்பான் பதானின் நடனம்

ஆப்கானிஸ்தானின் வெற்றிக்குப் பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுடன் ஸ்டேடியத்தில் நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பாகிஸ்தானிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இர்பான் பதான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதுபற்றி ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சித் தொகுப்பாளர், "கிரிக்கெட்டில் இர்ஃபானால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர் களத்தில் ரஷித் கானுடன் பாங்க்ரா ஆடுகிறார்," என்றிருந்தார்.

இது குறித்து டிவி ஸ்டுடியோவில் அமர்ந்திருந்த நிபுணர் ஒருவர், "ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், நீங்கள் ஏன் நடனமாடுகிறீர்கள்? இந்தக் காட்சி நடந்திருக்கவே கூடாது," என்றிருந்தார்.

இதுகுறித்து மற்றொரு நிபுணர் கூறுகையில், "இர்ஃபான் நடனமாடியதறுகுக் காரணம், உலகக் கோப்பை தொடங்கியதில் இருந்தே நாம் பார்க்கும் அந்த வெறுப்புதான். எங்கள் பத்திரிகையாளர்களுக்கோ, கிரிக்கெட் ரசிகர்களுக்கோ விசா வழங்கப்படவில்லை. இந்தியாவில் போட்டிகளில் செய்தி சேகரித்த ஒரு பத்திரிகையாளர், இந்தியாவில் அன்பைப் பார்க்கவில்லை என்று கூறுகிறார்,” என்றிருந்தார்.

பாகிஸ்தா, ஆப்கானிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் மற்றும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் தங்களது உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்

‘பாகிஸ்தான் அணி அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கக்கூடாது’

இது சற்றுக் கடுமையான விமர்சனமாகத் தோன்றினாலும், பாகிஸ்தான் அணியின் பீல்டிங் ஒரு உள்ளூர் கிரிக்கெட் கிளப்பையும் விட மோசமாக இருந்தது என்று ஜியோ நியூஸ் எழுதியிருந்தது.

“எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, வீரர்களிடையே எனர்ஜி இல்லை, விருப்பமும் இல்லை, அணுகுமுறையும் இல்லை, எதுவும் புலப்படவில்லை. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே வீரர்கள் சோம்பலாக காணப்பட்டனர்,” என்று எழுதியிருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் அணி கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் தங்களது உத்திகளை மறுபரிசீலனை செய்து புதிய திட்டத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பாகிஸ்தான் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் அது இன்னும் போட்டியில் இருந்து வெளியேறவில்லை.

ஜியோ நியூஸ், “பாகிஸ்தான் ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்து, விவாதிக்கப்பட்ட ‘பாகிஸ்தான் வழியைக்’ காட்ட வேண்டும். ஆனால் கடைசி கட்டத்திற்கு தகுதி பெற பாகிஸ்தான் தனது சொந்த அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க முடியாது, தனது செயல்திறன் மூலம் முன்னேற வேண்டும்,” என்று எழுதியிருந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)