இந்திய அணியின் வெற்றி பற்றி பாகிஸ்தான் வீரர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்துக்கு எதிராக 229 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்து இந்தியா 100 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் மிக முக்கிய காரணம்.
இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் 3 பேரை கிளீன் போல்டாக்கிய ஷமி, 8 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியில் அபாரமாக செயல்பட்ட அவர், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை சமன் செய்தார்.
2015 முதல் 2023 வரை ஒருநாள் போட்டி உலகக் கோப்பைப் போட்டியில் 4 விக்கெட்டுகளுக்கு மேல் 6 முறை எடுத்த பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்ஷெல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் ஷமி சமன் செய்தார்.
உலகக் கோப்பையில் 56 விக்கெட்டுகளை ஸ்டார்க் எடுத்தநிலையில் ஷமி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 விக்கெட்டுகளை 4 முறையும், 5 விக்கெட்டுகளை இரு முறையும் ஷமி வீழ்த்தியுள்ளார்.
பும்ரா 6.5 ஓவரில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
"பும்ரா தற்போது உலகின் சிறந்த வீரர். அவர் செயல்படும் விதம், பந்து வீசும் வேகம் மிக உறுதியாக உள்ளது" என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பெஞ்சில் அமர வைக்கப்பட்ட ஷமி
இந்தியாவுக்காக முக்கியமான வெற்றிகளில் பங்களித்தவர்; ஒரு நாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை அதிகமுறை வீழ்த்திய வீரர்களுள் ஒருவர், உலகக் கோப்பைகளில் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முன்னிலை வகிப்பவர். ஆயினும் முகமது ஷமி இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிப்பது அரிதாகவே இருக்கிறது என்ற விமர்சனம் பொதுவாக உண்டு.
இந்த உலகக் கோப்பையின் முதல் 4 ஆட்டங்களில் அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அணியில் வேறு வழியில்லாத காரணத்தாலேயே நியூசிலாந்துடனான போட்டியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆயினும் அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் முக்கியமான விக்கெட்டுகள் அனைத்தையும் வீழ்த்தி அந்த அணியின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினார். அந்த அணி கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி கடினமானதாக இருந்திருக்கும்.
இந்த வெற்றிக்காக இந்தியா கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்தது. இறுதியாக தரம்சாலாவில் நடைபெற்ற 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மாவின் அணி இந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பட மூலாதாரம், Getty Images
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐசிசி போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வென்றுள்ளது.
இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியை விட, OTTயில் அதிகமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியைப் பார்த்திருப்பதில் இருந்தே இந்தப் போட்டி எவ்வளவு முக்கியமானது என்பதை அறியலாம்.
மேலும், அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில், விராட் கோலி (354) மற்றும் ரோஹித் ஷர்மா (311) இப்போது இந்தப் போட்டியின் முதல் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆனார்கள்.
விராட் கோலி 95 ரன்களில் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். இந்தத் தொடரில் முதல்முறையாக பேட்டிங் செய்ய வந்த ரவீந்திர ஜடேஜா கடைசி வரை ஆடுகளத்தில் இருந்தார், வெற்றிகரமாகவும் விளையாடினார்.
ஆனாலும், அதிகம் பாராட்டப்பட வேண்டியது முகமது ஷமிதான்.
ஷமியின் அபாரமான பந்துவீச்சு
ஷமிக்கு இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆட்டத்தில் அவர் பந்துவீசிய விதம் இனிமேல் அவரைப் புறக்கணிப்பது கடினம் என்று காட்டியது.
அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.
ஷமி 10 ஓவர்களில் 5.4 என்ற வீதத்தில் பந்துவீசி ஐந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பினார். பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நியூசிலாந்து அணி 273 ரன்களில் தோற்றது ஷமியின் அற்புதமான பந்துவீச்சால் தான்.
ஷமி இடது கை மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.
அவர் தனது ஃபுல் லெங்த் பந்தில் இரண்டு விக்கெட்டுகளையும், குட் லெங்த் பந்தில் ஒரு விக்கெட்டையும், ஷார்ட் ஆஃப் குட் லெங்த் பந்தில் ஒரு விக்கெட்டையும் எடுத்தார், அதே நேரத்தில் அவர் ஒரு பேட்ஸ்மேனை யார்க்கர் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
அணியில் இல்லாததுபற்றி ஷமி என்ன சொன்னார்?
ஷமி இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை நேற்று பெற்றார். அதேசமயம் இந்த போட்டிக்கு முன்பு, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அணியில் சேர்க்கப்படாதது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஷமி பதிலளிக்கையில், "அணி நன்றாக விளையாடினால், வெளியே இருப்பது கடினம் அல்ல. உங்கள் சகாக்கள் சிறப்பாகச் செயல்பட்டால் நீங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். அணி சிறப்பாகச் செயல்படுவதுதான் முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
அவரது செயல்பாடு மற்றும் அணிக்கு திரும்பியது குறித்து ஷமி கூறுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பும் போது ஒருவர் தன்னம்பிக்கை பெற வேண்டும். முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பது தன்னம்பிக்கை அளிக்க்கும் விஷயம். இந்தப் போட்டி எனக்கும் அதைக் கொடுத்தது," என்றார்.
ஆட்டத்திற்குப் பிறகு, கேப்டன் ரோஹித் சர்மாவும் ஷமியின் பந்துவீச்சையும் அனுபவத்தையும் பாராட்டினார். மேலும் "ஷமி இங்குள்ள சூழ்நிலைகளை நன்றாகப் பயன்படுத்தினார்," என்று கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தின் கொண்டார், என்றார்.
இர்ஃபான் பதான் தனது x சமூக வலைதளப் பக்கத்தில், “முகமது ஷமி ஃபெராரி காரைப் போன்றவர். அதை எப்போது கேரேஜிலிருந்து வெளியே எடுத்தாலும், அதே வேகத்தையும், சிலிர்ப்பையும், மகிழ்ச்சியையும் தரும்,” என்று பதிவிட்டுருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மா என்ன சொன்னார்?
போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா பேசுகையில், போட்டித்தொடர் சிறப்பாகத் தொடங்கியிருந்தாலும், பாதி கிணற்றை மட்டுமே தாண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
நடு ஓவர்களில் நியூசிலாந்தின் பேட்டிங் குறித்துப் பேசிய ரோகித், "ஒரு கட்டத்தில் அவர்கள் 300 ரன்களுக்கு மேல் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். மிட்செல் மற்றும் ரச்சின் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப்பில் பேட்டிங் செய்தனர். பனி பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்தது. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக மறுபிரவேசம் செய்தார்கள். அவர்கள் ஸ்கோரை 273 ரன்களுக்குள் நிறுத்தியது பெரிய செயல்,” என்றார்.
இந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஆடுகளத்தில் இருந்தவரை ரன் ரேட் ஆறுக்கு மேல் இருந்தது.
சுப்மான் கில்லுடன் இன்னிங்ஸின் வலுவான தொடக்கத்தைப் பற்றிப் பேசிய ரோகித், "கில்லுடன் பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன். நாங்கள் இருவரும் இருவேறு வகையான ஆட்டக்காரர்கள். எங்கள் விளையாட்டு முறைகளும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவை. நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் பிரியமானவர்கள். எங்களால் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாவிட்டாலும், அணி வெற்றி பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி எதில் கவனம் செலுத்த வேண்டும்?
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அணி நிர்வாகம் குறித்த சில விஷயங்கள் சீர்படுத்தப்பட வேண்டியுள்ளன.
உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் சிறந்த ஃபீல்டிங்கிற்காக பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. களத்தில் காணக்கூடிய ஃபீல்டிங்கில் அணி மிகவும் கடினமாக உழைத்துள்ளதாக ஆரம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர் ரோகித் சர்மாவே கூறியிருந்தார்.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில், சில கேட்சுகளை இந்தியா தவறவிட்டது. இதைப் போட்டியின் பின்னர் ரோகித் குறிப்பிட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் கேட்சைத் தவறவிட்டால் போட்டியை இழக்க நேரிடும்.
போட்டிக்குப் பின் ரோகித் கூறுகையில், "கடந்த நான்கு போட்டிகளில் நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா போன்ற உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவர் கேட்சைத் தவறவிட்டார். கேட்சைத் தவறவிடுவது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால் எதிர்வரும் போட்டிகளில் பீல்டிங் மிகவும் முக்கியமானதாக இருக்கும்," என்றார்.
எனவே ஃபீல்டிங்கில் இந்திய அணி இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.
இப்போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஜோடி வேகமான தொடக்கத்தை கொடுத்தது. அப்போது ஒரு முனையில் கடந்த போட்டியில் சதம் அடித்த விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் உடனிருந்தனர்.
அதாவது இந்த போட்டியில் இந்திய அணியின் பிடி வலுவாக இருந்தது. இருந்த போதிலும், கே. எல். ராகுலுக்குப் பதில் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறினார்.
அரையிறுதி போன்ற எதிர்வரும் போட்டிகளில் மிடில் ஆர்டரின் தவறு பேட்டிங் வரிசையை வலுவிழக்கச் செய்யும் என்பதால் இந்திய அணி இதில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஷார்ட் பிட்ச் பந்துகள் ஸ்ரேயாஸின் பலவீனமா?
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். புல், ஃபிளிக், கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ் போன்ற சிறப்பான ஷாட்களில் 6 பவுண்டரிகளை அடித்தார்.
இருப்பினும், டிரென்ட் போல்ட்டின் ஷார்ட் பிட்ச் பந்தை விளையாட முயன்ற போது அவுட் ஆனார்.
ஸ்ரேயாஸ் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ரன்களை எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் நீண்ட காலமாக அவர் இவற்றால் அடிக்கடி ஆட்டமிழக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஷார்ட் பிட்ச் பந்தில் பலியாகி, இரண்டாவது போட்டியில் 38 ரன்கள் எடுத்தபோது, தனது பலவீனத்தைப் பற்றிப் பேசியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
‘மனநிலையில் மாற்றம் தேவை’
அப்போது ஸ்ரேயாஸ் கூறுகையில், "முதல் ஒருநாள் போட்டியில் ஷார்ட் பால் வரும் என்று தெரிந்தது. ஆனால் குழப்பத்தில் இருந்தேன். இரண்டாவது போட்டியில் பந்தைப் பார்த்து எனது ஷாட்டைப் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தேன்," என்றார்.
அப்போது அவர், “இது மனநிலையுடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன். அதில் கொஞ்சம் மாற்றம் தேவை. இது நீங்கள் எப்படி விக்கெட்டில் நிற்கிறீர்கள் என்பது பற்றியது. சற்று குனிந்து நிற்காமல் நேராக நிற்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஷார்ட் பால் விளையாடுவது எளிதானது," என்றார்.
அப்போதிருந்து, ஸ்ரேயாஸ் வெஸ்ட் இண்டீஸின் வேகமான ஆடுகளங்களில் சராசரியாக 53 ஆகவும், நியூசிலாந்து மண்ணில் 64 சராசரியாகவும் பேட்டிங் செய்தார். இந்தியாவில் இருந்தபோது, அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 191 சராசரியில் விளையாடினார், மேலும் இந்த உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, அவர் ஆஸ்திரேலியாவுடன் 52 சராசரியில் பேட்டிங் செய்தார்.
இந்த காலகட்டத்தில், அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார்.
கேப்டன் ரோகித் தொடர்ந்து ஸ்ரேயாஸ் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தாலும், அடுத்த போட்டிக்கு முன் இந்த பலவீனத்தை சரி செய்ய வேண்டும். ஏனெனில் டக் அவுட்டில் அமர்ந்திருக்கும் இஷான் கிஷனும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இந்தியாவின் வெற்றி பற்றி பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு பாகிஸ்தானிலும் விவாதிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் ‘தி பெவிலியன்’ என்ற நிகழ்ச்சியில் ஜஸ்பிரித் பும்ரா பற்றி பேசினர்.
பும்ரா 6.5 ஓவரில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
"பும்ரா தற்போது உலகின் சிறந்த வீரர். அவர் செயல்படும் விதம், பந்து வீசும் வேகம் மிக உறுதியாக உள்ளது" என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
“இப்படிப்பட்ட ஆடுகளத்தில் புதிய பந்தைக் கொண்டு இப்படித்தான் பந்தை வீச வேண்டும். பந்து வீசப்படும் வேகம். முதல் ஓவரில் உள்நோக்கி இரண்டு பந்துகள், பிறகு வெளியே இரு பந்துகள் வீசினார். பும்ரா ஒரு முழுமையான பந்து வீச்சாளர்" என்றார் அவர்.
"பும்ராவை கட்டுப்படுத்த ஒரு வழி இருக்கிறது, நீங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினால், அவருடைய காலணிகளைத் திருடுங்கள்" என்று பதிலளித்தார்.
மிஸ்பா-உல்-ஹக் கூறுகையில், " ஏற்கெனவே ஆடிய பந்துகளை மற்றவர்கள் ஸ்விங் செய்யும்போது, பும்ரா புதிய பந்திலேயே ஸ்விங் செய்கிறார். ஸ்விங், லெங்த் மற்றும் லைன் ஆகியவை பேட்ஸ்மேனை ஆட விடாமல் செய்கிறது" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












