குழந்தை தலையில் முட்டையை உடைத்து பிரான்க் செய்வது ஆபத்தானது - ஏன் தெரியுமா?

குழந்தைகளை பிரான்க் செய்வது ஆபத்து

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆதர்ஷ் ரத்தோர்
    • பதவி, பிபிசி இந்தி

சமீபத்தில், ஆந்திர பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் பிரான்க் வீடியோக்கள் உருவாக்கும் போக்கு நிலவியது. தாம் யாரென அறியாத குழந்தைகளைத் தங்கள் கார்களில் ஏற்றிச் சென்று, அவர்கள் கடத்தப்பட்டதாகச் சொல்வார்கள். குழந்தைகள் பயந்து அலறவும் அழவும் தொடங்குவார்கள்.

இதுபோன்ற வீடியோக்களின் தயாரிப்பாளர்கள், குழந்தைகளுக்கு அந்நியர்களின் கார்களில் அமரக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறினர். ஆனால், லைக்குகளுக்காகவும் பார்வைகளுக்காகவும் குழந்தைகளைத் துன்புறுத்துவதாக அவர்கள் விமர்சிக்கப்பட்டார்கள்.

தற்போது சமூக ஊடகங்களில் மற்றொரு பிரான்க் வைரலாகி வருகிறது, அதில் பெற்றோர் தங்கள் சிறு குழந்தைகளின் தலையில் முட்டைகளை உடைக்கிறார்கள்.

உலகம் முழுவதும் TikTok மற்றும் Instagramஇல் #eggcrackchallenge என்ற ஹேஷ்டேக்குடன் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை பிரான்க் செய்வது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகளை பிரான்க் செய்வது ஆரோக்கியமானது அல்ல என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த வீடியோக்களில் காணப்படும் குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு வயதுக்குள்ளான குழந்தைகளாவர். சில குழந்தைகள் தங்கள் தலையில் முட்டை உடைக்கப்படும்போது திகைத்துப் போவதைப் பார்க்க முடியும். சிலர் காயம் பற்றிப் பேசுகிறார்கள், சிலர் அழத் தொடங்குகிறார்கள், சிலர் தங்கள் பெற்றோரைத் தள்ளுகிறார்கள்.

இந்தக் காணொளிகளை உருவாக்கும் அவர்களின் பெற்றோர் சிரித்துக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான குழந்தைகள் இந்தத் பிரான்க்குகளை வேடிக்கையாகக் கருதவில்லை என்பதை அந்தச் செயல்கள் காட்டுகின்றன.

குழந்தைகள் இதுபோன்ற பிரான்க்குகளை அல்லது நகைச்சுவைகளைப் புரிந்து கொள்ளாததால் குழந்தைகளின் எதிர்வினை இயல்பானது என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

பிரான்க் என்றால் என்ன?

லக்னௌவில் உள்ள உளவியலாளர் ராஜேஷ் பாண்டே, பிரான்க் என்பது யாராவது ஒருவரை பாதிக்கப்பட்டவராக மாற்றும் ஒரு நகைச்சுவை என்று கூறுகிறார்.

மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்பாட்டைத்தான் வேடிக்கை என்று அழைக்கிறோம். ஒரு நகைச்சுவை போல. இதில், கதையைச் சொல்லும் நபரும் அதைக் கேட்பவரும் அந்த வேடிக்கையை அனுபவிக்கிறார்கள்.

பிரான்க்குகளிலும் வேடிக்கை இருக்கிறது. ஆனால் இதில், மனிதர்கள் ஒரு வகையில் சோதிக்கப்படுகிறார்கள். பிரச்னை என்னவென்றால், அந்தச் சோதனையில் அந்த நபர் காயமடையலாம், அவருக்குப் பயமாக இருக்கலாம் அல்லது அவர் மோசமாக உணரலாம்.

ராஜேஷ் பாண்டே ஒரு உதாரணம் கொடுத்தார். “வகுப்பறைக்குள் நுழையும் குழந்தையை யாராவது முயற்சி செய்து வீழ்த்தினால், அனைவரும் சிரிப்பார்கள். இதுவும் ஒரு பிரான்க் தான். ஆனால் விழும் நபர் காயமடையலாம். இதை ஒரு பொருத்தமான பொழுதுபோக்கு எனக் கருத முடியாது,” என்று கூறுகிறார் அவர்.

பிரான்க் மற்றும் இடையூறுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

குழந்தைகளை பிரான்க் செய்வது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்க் செய்யும்போது அந்த நகைச்சுவையை குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாது.

குழந்தைகளுக்கு நடக்கும் பிரான்க்குகளை பார்த்த பிறகு மக்கள் சங்கடமாக உணர்கிறார்கள், ஏனென்றால் பிரான்க் செய்வதற்கும் யாரையாவது இடையூறு செய்வதற்கும் இடையே மிகவும் நுட்பமான வேறுபாடு உள்ளது. பாதிக்கப்பட்டவர் சக்தியற்றவராக, அல்லது குறைவான சக்தி வாய்ந்தவராக இருக்கும்போது பிரான்க் செய்வது துன்புறுத்தலாக மாறும்.

நகைச்சுவைக்கு ஒரு விதி உள்ளது. 'மேலே குத்து, கீழே உதைக்காதே'.

அதாவது, செல்வாக்குள்ளவர்கள் கிண்டலுக்கு இலக்காகிறார்கள், பலவீனமானவர்கள் அல்ல. அதேநேரம் குழந்தைகளுக்கு நடக்கும் பிரான்க்குகளில், குழந்தைகள் எப்போதும் இலக்காகின்றனர்.

பிரான்க் செயல்களுக்கு இலக்காவது என்பது பதின்ம வயதினருக்கும் பெரியவர்களுக்கும்கூட எப்போதும் பொழுதுபோக்கு அளிப்பதில்லை.

ரேச்சல் மெல்வில்-தாமஸ் பிரிட்டனில் உள்ள குழந்தை மனநல மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.

அவர், "யாராவது தனக்கு ஒரு நகைச்சுவை செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளும்போது மட்டுமே ஒரு பிரான்க் வெற்றிகரமானதாகக் கருத முடியும். அப்போது, அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல், மற்றவர்களுடன் சேர்ந்து தானும் சிரிக்கத் தொடங்குகிறார்," என்று விளக்கினார்.

மேலும், “நாங்கள் ஒன்றாகச் சிரிக்க விரும்புகிறோம். இதைச் செய்வது சமூகக் குழுக்களுக்கு இடையே நெருக்கத்தை அதிகரிக்கிறது. ‘என்னவொரு பிரான்க்!’ என சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கும்போது மட்டுமே பிரான்க் வேடிக்கையானது. ஆனால் யாரோ ஒருவரின் தலையில் ஏதாவது ஒன்றை உடைத்தால் இது நடப்பது எளிதல்ல,” என்கிறார்.

குழந்தைகளின் மென்மையான மனதில் தாக்கம்

குழந்தைகளை பிரான்க் செய்வது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்க் செய்தால் குழந்தைக்கு பெரியவர்கள் மீது இருக்கும் நம்பிக்கை உடையும்.

பிரான்க் செய்யப்படும்போது, தான் மீது பிரான்க் செய்யப்படுவது தெரியாத நிலையில் பாதிக்கப்பட்டவர் இருப்பார். யாராவது தங்களை ஆச்சரியப்படுத்தும்போது வரும் சிரிப்பைப் புரிந்துகொள்வது குழந்தைகளுக்கு எளிதான காரியமல்ல.

சிறு குழந்தைகள் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளனர். எந்தவொரு நகைச்சுவையையும் உடனடியாகப் புரிந்து கொள்வது அவர்களுக்கு கடினம். இருப்பினும், குழந்தைகள் இளம் வயதிலேயே வேடிக்கையான விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

சில ஆராய்ச்சியாளர்கள், ஒரு குழந்தை ஐந்து முதல் ஆறு வயதில் கேலிகளைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறது என்று கண்டறிந்துள்ளனர். சில குழந்தைகள் நான்கு வயதில் நகைச்சுவைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்குகின்றன. இந்தக் கற்றல் செயல்முறை பருவமடைதல் வரை தொடரும்.

ஒரு விஷயம் அல்லது நிகழ்வை வேடிக்கையானதாகக் கருத பொதுவான விதியாக 'பொருத்தமின்மை' கருதப்படுகிறது. அதாவது, எதிர்பார்ப்புகளில் இருந்து வேறுபட்டதாக ஏதாவது இருப்பது. அதனால்தான் சிலர் கார்ட்டூன்கள் போன்ற விசித்திரமான அல்லது மிகைப்படுத்தப்பட்ட செயல்களை வேடிக்கையாகக் காண்கிறார்கள்.

குழந்தை தலையில் முட்டையை உடைத்து பிரான்க் செய்வது ஆபத்தானது

குழந்தைகளை பிரான்க் செய்வது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தலையில் முட்டை உடைப்பது, பயமுறுத்துவது என எந்த வகையான பிரான்க் செயல்களும் குழந்தைகளிடம் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.

குழந்தை முதலில் பொருத்தமற்ற அல்லது விசித்திரமான விஷயங்கள் எவை என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறது.

“உதாரணமாக, குழந்தைகள் யானையின் தலையில் தொப்பி இருப்பதை வேடிக்கையாகக் கருதுகிறார்கள். ஆனால் முட்டையை உடைக்கும் பிரான்க்குகளில் உள்ள பிரச்னை என்னவென்றால், நீங்கள் முதலில் குழந்தைகளுக்கு நம்பிக்கையை அளித்துவிட்டு, பின்னர் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறீர்கள்.

அம்மாவுடன் சேர்ந்து சமைக்கலாம் என்று சொல்லிவிட்டு, பிறகு திடீரென்று குழந்தையின் தலையில் முட்டையை உடைத்து காயப்படுத்துகிறீர்," என்று கூறுகிறார் மெல்வில் தாமஸ்.

பிரிட்டனில் உள்ள யார்க் செயின்ட் ஜான் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சி உளவியலாளரான பேஜ் டேவிஸ், குழந்தைகளின் நகைச்சுவை உணர்வு எப்படி உருவாகி வளர்கிறது என்பது குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

அவர், “முட்டையை உடைக்கும் பிரான்க்குகளில், பெரியவர்களுக்கு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியும். ஆனால் குழந்தைக்குத் தெரியாது. எனவே, கிண்ணத்திற்குப் பதிலாக அவரது தலையில் முட்டை உடைக்கப்பட்டதற்கு காரணத்தை அவர் புரிந்து கொள்ள முடியாது. பல வீடியோக்களில், குழந்தைகளால் தங்கள் மீது ஒரு நகைச்சுவை செய்யப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது அவர்களின் நம்பிக்கையை உடைக்கிறது."

குழந்தை மனநல மருத்துவர் ரேச்சல் மெல்வில்-தாமஸும் அதே கவலையை வெளிப்படுத்துகிறார்.

"ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு நீங்கள் ஒரு கேடயம் போன்றவர். அந்தக் குழந்தை நீங்கள் அவர்களை ஒருபோதும் காயப்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் நீங்கள் அவர்கள் தலையில் முட்டையை உடைத்தால், அந்த நம்பிக்கை காயப்படும்," என்றார்.

பெற்றோர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?

குழந்தைகளை பிரான்க் செய்வது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்க் என்ற பெயரில் குழந்தைகளைக் காயப்படுத்தி பெற்றோர் ரசிப்பது குழந்தைகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

இந்த பிரான்க்குகளில் இருக்கும் மற்றொரு பிரச்னை என்னவென்றால், இந்த வீடியோக்கள் குழந்தைகளின் அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.

குழந்தைகளுக்கு உடல்ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் தொல்லைகளை எப்படி பொழுதுபோக்கு அம்சமாகக் கருத முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக இந்த வீடியோக்களில் பல குழந்தைகளின் முக வடிவங்கள் அவர்கள் காயமடைந்ததைக் காட்டுகின்றன.

குழந்தைகள் இதுபோன்ற பிரான்க் வீடியோக்களுக்கு எதிர்மறையான எதிர்வினையை வெளிப்படுத்தும்போது, பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் எப்படி சிரிக்கிறார்கள் என ஆச்சர்யமாக இருப்பதாக குழந்தை மனநல மருத்துவர் ரேச்சல் மெல்வில்-தாமஸ் கூறுகிறார்.

இது பல குழந்தை உளவியலாளர்களால் அறிவுறுத்தப்படும் ‘இணக்கத்திற்கு’ எதிரானது. குழந்தை காயமடைந்தால் ஒரு தாய் வேதனையுடன் எதிர்வினை புரிவார். இது குழந்தைகளுக்கு எந்த சூழ்நிலையில் எந்த உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள உதவும். ஆனால் பிரான்க்குகளில் நடப்பது இதற்கு நேர்மாறானது.

பாதிக்கப்பட்டவரின் உணர்வுபூர்வமான எதிர்வினை அல்லது அவர்களுக்கு வலியை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட பிரான்க் வீடியோக்கள் சமூக ஊடகத்தின் கருப்பு பக்கம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"பெற்றோர்கள் பார்வைகள், மற்றும் லைக்குகளுக்காக இதைச் செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், அவர்களின் குழந்தை என்ன உணரக்கூடும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. பிரான்க் செய்யும்போது, குழந்தையின் தேவைகளைவிட தங்கள் சொந்த தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள்," என்று மெல்வில்-தாமஸ் கூறுகிறார்.

எச்சரிக்கை அவசியம்

இதுபோன்ற பிரான்க்குகள் குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் மற்றும் பெற்றோர்களுடன் அவர்களின் உறவையும் பாதிக்கலாம்.

பிரான்க் குழந்தைக்கு என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்பது முக்கியம் என்று குழந்தை மனநல நிபுணர் தாமஸ் மெல்வில் கூறுகிறார். உங்கள் நோக்கம் என்ன என்பது முக்கியமல்ல என்கிறார் அவர்.

"வேறு யாரையாவது பார்த்த பிறகு, நானும் அதையே செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நான் இதைச் செய்திருக்கக் கூடாது என்று உணர்ந்தேன், மன்னிக்கவும்," என்று குழந்தையிடம் பெற்றோர் சொல்லலாம் என்கிறார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பதால் இதைச் செய்வது முக்கியம். நாம் வருந்தத்தக்க வகையில் ஏதேனும் செய்துவிடும்போது என்ன செய்ய வேண்டும் என குழந்தைக்கு இது கற்றுக் கொடுக்கும்.

'சிரித்து மகிழ்ச்சியாக இருக்க பல ஆக்கப்பூர்வமான வழிகள் உள்ளன. பிரான்க் செய்யும்போது நீங்கள் வேடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் அந்த பிரான்க் மற்ற நபரிடம் என்ன விளைவை, எவ்வளவு ஆழமாக ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அளவிட முடியாது' என்று உளவியலாளர் ராஜேஷ் பாண்டே கூறுகிறார்.

வேடிக்கைக்காக யாரையாவது பயமுறுத்துவது, அதிர்ச்சியடையச் செய்வது அல்லது தொந்தரவு செய்வது சரி இல்லை என்று அவர் கூறுகிறார். முக்கியமாக இது குழந்தைகளுடனோ அல்லது பெரியவர்களுடனோ செய்யப்படக்கூடாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: