பாம்பை கொல்வது குற்றமா? பாம்பை கண்டால் என்ன செய்ய வேண்டும்?

- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
கோயம்புத்தூரில் பாம்பை ஒருவர் அடித்துக் கொன்ற காணொளி சமூக ஊடகத்தில் பரவியதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாம்புகளை அடித்துக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம்? அதற்கு வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என்ன தண்டனை வழங்கப்படுகிறது? குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகளை எதிர்கொள்ளும்போது அவற்றை அடித்துக்கொல்லாமல் நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
பாம்பை அடித்துக் கொல்லும் வீடியோ
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜி. இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள காடம்பாடி பகுதியில் வேலை செய்து வருகிறார். அந்த இடத்தில் அகப்பட்ட சாரைப் பாம்பை கையால் பிடித்து அதைத் தரையில் பலமுறை அடித்துக் கொன்றார்.
மேலும், பாம்பின் தலையை கல்லால் அடித்துச் சிதைத்தார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
இதைத் தொடர்ந்து கோவை வனசரகர் தலைமையிலான குழுவினர் விஜியை கைது செய்து வனக் குற்ற வழக்குப் பதிவு செய்து சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாம்பைக் கொன்ற குற்றத்திற்காக காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1972, பிரிவு 9 மற்றும் 51-இன் படி நீதிமன்ற காவலில், கோவை மத்திய சிறையில் விஜி அடைக்கப்பட்டார்.
'ஹீரோயிசத்தை காட்டுகின்றனர்'

இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி பாதிப்புகளில் 90 சதவீதம் கண்ணாடி விரியன், கட்டு விரியன், நல்ல பாம்பு, சுருட்டை விரியன் ஆகிய நான்கு பாம்புகள் மூலம் ஏற்படுகின்றன.
ஆனால், சாரைப்பாம்பு போன்ற நஞ்சற்ற பாம்புகளும் மனிதர்களின் தாக்குதலுக்கு இலக்காக உயிரிழந்துவிடுகின்றன. பாம்புகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், பாம்பைப் பார்த்தாலே அடித்துக்கொல்ல வேண்டும் என்ற எண்ணமுமே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாக இருப்பதாக கூறுகிறார் விஸ்வா.
ஊர்வனம் என்ற அமைப்பின் மூலம் பாம்புகளை மீட்பது, அது தொடர்பான பயிற்சிகளை வழங்குவது போன்றவற்றில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
“நஞ்சுள்ளது, நஞ்சற்றது என்றில்லாமல் பாம்பைப் பார்த்தாலே அடித்துக் கொல்ல வேண்டும் என்ற நினைப்பு பெரும்பாலான மக்களிடம் உள்ளது. ஒரு சிலர் தங்களின் ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பாம்புகளை அடித்துக் கொல்கின்றனர்.
‘கொடிய உயிரினத்தை நான் தைரியமாக அடித்துக் கொன்றுவிட்டேன்’ என்று தன்னை ஒரு தைரியசாலியாக வெளிப்படுத்த இதைச் செய்கின்றனர்” என்று விஸ்வா தெரிவித்தார்.
காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
கோவை வனச சரக அலுவலர் அருண்குமார் பிபிசியிடம் பேசுகையில், “ஹீரோயிசத்துக்காக அந்த நபர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். காட்டுயிர்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதற்கேற்ற அட்டவணைகளில் அவை சேர்க்கப்படுகின்றன. காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 1972இல் அட்டவணை 1, பிரிவு சி-யின் கீழ் பாம்புகள் வருகின்றன.
யானைகள், புலிகள் போன்ற முக்கிய உயிரினங்குகள் இந்த அட்டவணையின் கீழ் வருகின்றன. அவற்றுக்குத் தீங்கிழைப்பதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதேபோல், 5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்,” என்றார்.
கா்டுயிர்களைக் கொல்வது, அவற்றின் உடல் பாகங்களைக் கடத்துவது மட்டுமல்ல அவற்றைத் துன்புறுத்தி வீடியோ வெளியிடுவது போன்றவையும் தண்டனைக்குரியதுதான் என்றும் அவர் கூறுகிறார்.
“மான், கிளி போன்றவை அட்டவணை 2, 3 ஆகியவற்றில் வருகின்றன. இதன் கீழ் அபராதம் விதிக்க முடியும். காட்டு முயல்களை ஒரு சிலர் இறைச்சிக்காகக் கொல்கின்றனர். இதுவும் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதுதான்.
அதுபோல், கீரியின் முடியில் இருந்து பிரஷ்களை செய்கின்றனர். அத்தகைய செயல்களில் ஈடுபடுவர்களைப் பிடிக்கும்போது, இது தவறு என்று தங்களுக்குத் தெரியாது என்று கூறுகின்றனர். தண்டனை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் காட்டுயிர்கள் இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மனிதர்கள் பாம்புக் கடிக்கு உள்ளாவது ஏன்?
மனிதர்களின் பார்வையில் பாம்புகள் கொடிய உயிரினமாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், பாம்புகள் மனிதர்களைப் பார்த்து பயப்படும் சுபாவம் கொண்டவை. மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவே அவை நினைக்கும்.
மனிதர்கள் பாம்புகளுக்கு மிக அருகில் செல்லும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே அவற்றின் தீண்டலுக்கு உள்ளாக நேர்கிறது என்று கூறுகிறார் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பான யுஎஸ்இஆர்-இன் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் ந.ச.மனோஜ்.
“தெரிந்தோ, தெரியாமலோ பாம்புகளுக்கு மிக அருகில் மனிதர்கள் செல்லும்போது தன்னை தற்காத்துக் கொள்வதற்காகவே அவை தீண்டுகின்றன. அப்போதுகூட சில நேரங்களில் நச்சுப்பாம்புகள் Drybite தான் செய்கின்றன. அதாவது அவை கடிக்கும், ஆனால் நஞ்சை செலுத்தாது,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அதேநேரம், அவற்றை நாம் அச்சமூட்டும்போது அவை மூர்க்கமாக தீண்டி விடுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
“ஓர் எடுத்துக்காட்டுக்கு வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அது வெளியேற வாய்ப்பு தராமல் நாம் அதை நெருங்கும்போது அதற்குப் பதற்றம் அதிகரிக்கிறது. அப்போது நம்மைத் தீண்டுவது (Fakebite) போன்று சைகை செய்யும்.
நாம் அது வெளியேற வழிவிட்டால் தானாகவே அது சென்றுவிடும். அவ்வாறு செய்யாமல் அடிக்க முயற்சி செய்யும்போது அதன் பதற்றம் மேலும் அதிகரித்து நம்மைக் கடிக்கும். அப்போது அதிகப்படியான நஞ்சைத்தை இறக்கிவிடுகின்றன,” என்று மனோஜ் கூறுகிறார்.
பாம்பை கண்டால் என்ன செய்ய வேண்டும்?
“பாம்பு நம் வீடுகளுக்குள் வந்துவிட்டது என்றால் அவற்றை முறையாக மீட்க வேண்டும். சிலர் பயிற்சியே இல்லாமல் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். அப்போது பாம்பு அவர்களைத் தீண்டும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு நிறைய உயிரிழப்புகள் நிகழ்கின்றன. எனவே, பாம்பைப் பார்த்தால் முடிந்தவரை அதன் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பாம்பு பிடிப்பவர்களின் உதவியை நாட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
இதேபோல், வெளிப்புறங்களில் பாம்பைக் கண்டால் அதனிடம் இருந்து விலகிச் செல்ல வேண்டும். அதன் பக்கத்தில் நெருங்கிச் செல்லும்போதுதான் தீண்டப்படுவது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன,” என்கிறார் விஸ்வா.
அதுமட்டுமின்றி, பாம்புகளை அருகில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அரிதிலும் அரிது என்று கூறும் மனோஜ் அப்படியே பார்த்தாலும் விலகிச் செல்வதே நல்லது என்கிறார்.
“காலில் செருப்போ ஷூவோ அணிந்திருக்கும்போது பாம்பை நீங்கள் அருகில் பார்ப்பதற்கு வாய்ப்பு அதிகம். நாம் நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை வைத்து அவை விலகிச் சென்றுவிடும்.
எதிர்பாராத சில சூழல்களில் அவற்றை நாம் அருகில் பார்க்கக்கூடிய நிலை ஏற்படலாம். அப்போது அவற்றிடம் இருந்து விலகிச் செல்வதே இருதரப்புக்கும் நல்லது,” என்று கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












