'இந்திய ராணுவ வீரர் ஒருவர் கூட இருக்கக் கூடாது' - மாலத்தீவு அதிபராகும் முய்சு இவ்வாறு கூறுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, பிபிசி செய்திகள்
"மாலத்தீவு மண்ணில் வெளிநாட்டு இராணுவத்தினர் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதை மாலத்தீவு மக்களுக்கு நான் உறுதியளித்தேன். பதவியேற்கும் முதல் நாளிலிருந்தே எனது வாக்குறுதியை நிறைவேற்றப் பணி செய்வேன்."
கடந்த மாதம் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் முகமது முய்சு, நேரத்தைச் சிறிதும் வீணடிக்காமல், இந்தியாவைத் தனது படைகளை மாலத்தீவிலிருந்து வெளியேற்றும்படி கேட்டிருக்கிறார்.
அடுத்த மாதம் (நவம்பர் 2023) பதவியேற்கவுள்ள முய்சு, பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், வெற்றி பெற்ற சில நாட்களுக்குப் பிறகு இந்தியத் தூதரை சந்தித்து, "இங்குள்ள ஒவ்வொரு இந்திய ராணுவ வீரரும் வெளியேற வேண்டும்" என்று மிகத் தெளிவாகக் கூறியதாகச் சொன்னார்.
மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் உள்ளது. முய்சுவின் கோரிக்கை இரு நாடுகளுக்குக் இடையே இராஜ தந்திரப் பதற்றங்களை தூண்டக் கூடும்.
16 ஆயிரம் கோடி ரூபாய் உதவி
உண்மையில், முய்சு மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது இந்தியாவிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அவரது போட்டியாளரும், தற்போதைய இருப்பு அதிபருமான இப்ராஹிம் முகமது சோலி 2018-இல் பதவியேற்றதிலிருந்து மாலத்தீவை இந்தியாவுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தார்.
சோலியின் இந்திய நெருக்கத்தை, முய்சுவை ஆதரிக்கும் கூட்டணி, மாலத்தீவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சித்தரித்தது.
மாலத்தீவில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் மற்றும் மானியங்கள் வடிவில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை முதலீடு செய்த சீனாவுடன் முய்சுவின் கூட்டணி நெருக்கமான உறவுகளை ஆதரிக்கிறது.
ஆனால், இந்தியப் பெருங்கடலின் முக்கியப் பகுதியைக் கண்காணிக்க, மூலோபாய ரீதியாக அமைந்துள்ள தீவுகளில் கால் பதிக்க விரும்பும் இந்தியா, மாலத்தீவின் வளர்ச்சிக்கு உதவியாக சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
இந்தியப் படைகள் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மீதான கோபம் எப்படி வளர்ந்தது?
ஆனால் இந்தியா மாலத்தீவுக்கு வழங்கிய ‘பரிசுகள்’ மீதான கோபம் — 2010 மற்றும் 2013-இல் இரண்டு ஹெலிகாப்டர்கள், மற்றும் 2020-இல் ஒரு சிறிய விமானம் — இந்தியாவை வெளியேற்றும் இந்தப் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
இந்த வானூர்திகள் மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ உதவிகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டியவை என்று இந்தியா கூறியிருந்தது.
ஆனால், 2021-ஆம் ஆண்டில், இந்திய விமானங்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் சுமார் 75 இந்திய ராணுவ வீரர்கள் நாட்டில் இருப்பதாக மாலத்தீவு பாதுகாப்புப் படை கூறியது. இது அந்நாட்டில் சந்தேகத்தையும் கோபத்தையும் தூண்டியது. ஏனெனில் இந்த வானூர்திகள் மாலத்தீவில் இந்திய ராணுவ இருப்பை தக்க வைக்க ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படுவதாக பலர் கருதினர்.
குறிப்பாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் இமயமலை எல்லையில் அதிகரித்து வருவதால், இந்தத் துருப்புக்களின் இருப்பு மாலத்தீவை ஆபத்தில் ஆழ்த்தக் கூடும் என்று முய்சு கூறுகிறார்.
"மாலத்தீவு மிகவும் சிறிய நாடு. இந்த உலகளாவிய அதிகாரப் போராட்டத்தில் நாங்கள் சிக்கிக்கொள்ள மாட்டோம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சீனாவுடன் நெருக்கமாகிறதா மாலத்தீவு?
அதிபர் தேர்தலுக்கு முன் பிபிசியிடம் பேசிய, பதவி விலகும் அதிபர் சோலி, இந்திய துருப்புகளின் இருப்பு குறித்த அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறினார்.
"மாலத்தீவில் ராணுவ ரீதியாகச் செயல்படும் வெளிநாட்டுப் பணியாளர்கள் யாரும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள இந்தியப் பணியாளர்கள் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் செயல்பாட்டுக் கட்டளையின் கீழ் உள்ளனர்," என்று அவர் கூறினார்.
ஆனால் பிரச்னை விமானங்கள் பற்றி மட்டுமானதல்ல. சமீப ஆண்டுகளில் மாலத்தீவு இந்தியாவுடன் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக முய்சு கூறுகிறார்.
“அவற்றில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. நாடாளுமன்றத்தில் கூட விவாதத்தின் போது சில எம்.பி.க்கள் அதில் என்ன இருக்கிறது என்று தங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். அதை நிச்சயம் கண்டுபிடிப்போம்,” என்று அவர் கூறினார்.
முய்சுவின் வெற்றிக்குப் பிறகு, மாலேயில் உள்ள சீனத் தூதர் அவரை வாழ்த்தினார் என்று பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் முய்சுவை வாழ்த்தினார். ‘இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்லவும், நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முய்சுவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும்,’ கூறினார்.
முய்சு மாலத்தீவில் சீன உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பற்றி உயர்வாகப் பேசியுள்ளார். சீன முதலீடுகள் மாலே நகரத்தை மாற்றியமைத்து மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வந்ததாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
‘மாலத்தீவு தான் முதன்மையானது’
இருப்பினும், தாம் ‘இந்தியா சார்பு’ சோலிக்கு எதிரான ‘சீனா சார்பு’ வேட்பாளர் என்பதை மறுத்துள்ளார்.
"நான் மாலத்தீவுக்கு ஆதரவானவன். என்னைப் பொருத்தவரை, மாலத்தீவு தான் முதன்மையானது. எங்கள் சுதந்திரம் தான் முதன்மையானது," என்கிறார் அவர். “நான் எந்த நாட்டுக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இல்லை,” என்கிறார்.
இருந்த போதிலும், மாலத்தீவை சீனாவுடன் நெருக்கமாக நகர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் கட்சி முய்சுவின் கூட்டணியில் உள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்தியா மற்றும் மேற்கத்திய கடன் வழங்குநர்கள் யாமீனின் நிர்வாகத்திற்கு கடன் வழங்கத் தயாராக இல்லை. தற்போது யாமீன் ஊழல் வழக்கில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவர், எந்த நிபந்தனையும் இல்லாமல் நிதி வழங்கிய சீனாவிடம் நெருக்கமாக இருந்தார்.
பின்னர் அவர் ஷி ஜின்பிங்கின் புதிய பட்டுப்பாதை எனப்படும் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்தார். இது சீனாவை சாலை, ரயில் மற்றும் கடல் இணைப்புகள் மூலம் உலகின் பிற பகுதிகளுக்கு இணைக்கும் திட்டமாகும்.

பட மூலாதாரம், Getty Images
முய்சுவின் முன்னிருக்கும் மிகப்பெரும் சவால்
தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருக்கும் யாமீனின் பினாமியாகப் பார்க்கப்பட்டார் முய்சு.
தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, முய்சு, யமீனை, உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்து தலைநகர் மாலேவில் வீட்டுக் காவலுக்கு மாற்றுமாறு தற்போதைய நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால் இந்தியாவிடனான யாமீனின் பதற்றமான உறவைக் கருத்தில் கொண்டால், இருநாட்டு உறவுகளைச் சமநிலைப்படுத்துவது முய்சுவின் புதிய கூட்டணிக்கு ஒரு போராட்டமாக இருக்கலாம்.
முய்சு யாமீனின் நிழலில் இருந்து வெளிவர ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும் உள்நாட்டிலும், நாட்டின் வெளிநாட்டு விவகாரங்களிலும் ஒரு புதிய பாதையை உருவாக்கத் தயாராகிவிட்டார்.
அவரது தீர்க்கமான வெற்றியைப் பொருத்தவரை, அவர் உள்நாட்டில் அதிக எதிர்ப்பை எதிர்கொள்ளாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் ஆரம்ப கட்டங்களிலாவது.
மாலத்தீவை இந்தியாவின் நிழலிலிருந்து வெளியேற்ற அவர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தியாவைத் தனது படைகளைத் திருப்பி அழைத்துக் கொள்ளச் சொல்வது பெரிய சவாலாக இருக்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












