எதிரணிகளை பேரழிவில் தள்ளும் தென் ஆப்ரிக்காவின் புதிய உத்திக்குப் பலியான வங்கதேசம்

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா கடைபிடிக்கும் எதிரணிகளை பேரழிவில் தள்ளும் புதிய உத்திக்கு வங்கதேசம் பலியாகியிருக்கிறது. தென் ஆப்ரிக்க அணி மலையென குவித்த ரன்களை விரட்டிய வங்கதேச அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தாலும் மெஹ்மத்துல்லா மட்டும் தனி ஒருவனாக போராடினார். ஆனாலும், அது தோல்வி வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. முடிவில் தென் ஆப்ரிக்க அணி 4-வது வெற்றியை ருசித்து, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

தென் ஆப்ரிக்கா கடைபிடிக்கும் புதிய உத்தி என்ன? வங்கதேசத்திற்கு எதிராக ஜொலித்த வீரர்கள் யார்? தொடக்க வீரர் டி காக் படைத்துள்ள புதிய சாதனை என்ன?

தடுமாறிய தென் ஆப்ரிக்கா

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம், மும்பை ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என்பதைப் புரிந்து கொண்டு யோசிக்காமல் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தைப் பயன்படுத்திய வங்கதேச பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு பந்துவீச்சில் நெருக்கடி அளித்தனர்.

குயின்டன் டி காக், ஹென்ட்ரிக்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினாலும் ரன் சேர்க்கத் தடுமாறினர். இஸ்லாம் வீசிய 7-வது ஓவரில் ஹென்ட்ரிஸ் 12 ரன்கள் சேர்த்த நிலையில் கிளீன்போல்டாகி வெளியேறினார். சிறிது நேரத்தில் மெஹதி ஹசன் ஓவரில் கால் காப்பில் வாங்கி வென்டர் டூசென் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

10 ஓவர் பவர் ப்ளே முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 3வது விக்கெட்டுக்கு டி காக்குடன் கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை வேகமாகச் சேர்க்க வேண்டும் என்ற பரபரப்பு இன்றி பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்தினர்.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

நிதானமாக ரன் சேர்ப்பு

வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீசிய மோசமானப் பந்துகளை மட்டும் சிக்ஸருக்கும் , பவுண்டரிக்கும் டி காக் விரட்டினார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. டிடீ காக் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

20 முதல் 30 ஓவர் வரை டி காக், மார்க்ரம் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தியதால் 66 ரன்கள் கிடைத்தன. கேப்டன் மார்க்ரம் 57 பந்துகளில் அரைசதம் அடித்தார். 30 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தது.

நிதானமாக பேட் செய்த மார்க்ரம் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் கிளீன்போல்டாகி பெவிலியன் திரும்பினார். 3வது விக்கெட்டுக்கு டி காக், மார்க்ரம் ஜோடி,131 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து அதிரடி வீரர் ஹென்றிக் கிளாசன் களமிறங்கி, டி காக்குடன் சேர்ந்தார். இதன்பின்புதான் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரன் ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

டி காக் 3வது சதம்

பொறுப்புடன் பேட் செய்த டி காக் 101 பந்துகளில் சதம் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் டி காக் அடித்த 3வது சதமாகும். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் சாதனையை(2சதம்) டீ காக் முறியடித்தார்.

கிளாசன் களத்துக்கு வந்தபின், ஓவருக்கு 10 ரன்ரேட் வீதம் ரன்கள் சேர்க்கப்பட்டதால், தென் ஆப்பிரிக்க ரன்ரேட் எகிறத் தொடங்கியது. 35.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 200 ரன்களைத் தொட்டது. 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்திருந்தது.

ராக்கெட் வேகத்தில் ரன் ரேட்

கடைசி பவர்ப்ளே 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் கிளாசன், டி காக், மில்லர் ஆகிய மூவரும் வங்கதேச பந்துவீச்சை வெளுத்துவாங்கினர். ஓவருக்கு குறைந்தபட்சம் 10 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி சேர்த்தது, குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கப்பட்டதால் ரன் ரேட் வேகமாக அதிகரித்தது.

ஷகிப் அல்ஹசன் வீசிய 43வது ஓவரில் டி காக் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் என துவம்சம் செய்து 22 ரன்கள் சேர்த்தார் 150 ரன்களை எட்டினார். டி காக் தனது 150வது ஒருநாள் போட்டியில் களம் கண்ட நிலையில் 150 ரன்களை எட்டினார்.

ஷெரிபுல் இஸ்லாம் வீசிய 44வது ஓவரையும் டி காக், கிளாசன் நொறுக்கினர். டி காக் இரு பவுண்டரிகள், கிளாசன் ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச பந்துவீச்சை விளாசித் தள்ளிய கிளாசன் 34 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீ காக் 174 ரன்கள்(140 பந்துகள், 15 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்) சேர்த்த நிலையில் ஹசன் மெகமுத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு டி காக் - கிளாசன் ஜோடி 142 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

கிளாசன் ருத்ர தாண்டவம்

5-வது விக்கெட்டுக்கு வந்த மில்லர், கிளாசனுடன் சேர்ந்தார். அனுபவ பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் வீசிய 47-வது ஓவரை பதம்பார்த்த கிளாசன் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். இஸ்லாம் வீசிய 49-வது ஓவரில் மில்லர் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்தார்.

அதிரடியாக ஆடிய கிளாசன் 49 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து (2 பவுண்டரி, 8 சிக்ஸர்) ஹசன் மெகமுத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 75 ரன்கள் சேர்த்தனர். மில்லர் 34 ரன்களிலும், ஜான்சன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது.

41.5 வது ஓவரில் 250 ரன்களை எட்டிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 8 ஓவர்களில் 132 ரன்களைக் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் தென் ஆப்பிரிக்க அணி 144 ரன்கள் சேர்த்தது. கடைசி 20 ஓவர்களில் மட்டும் 238 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி சேர்த்தது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

7-வது முறையாக..

தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து தொடர்ந்து 7-வது முறையாக 300 ரன்களுக்கு மேல் குவித்தது. கடந்த 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, 2019ம் ஆண்டில் இங்கிலாந்து ஆகியவை தொடர்ந்து முதலில் பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் 7 முறை குவித்திருந்தது.

பரிதாபத்தில் வங்கதேசப் பந்துவீச்சாளர்கள்

வங்கதேசப் பந்துவீச்சாளர்கள் மும்பை ஆடுகளத்தில் பந்துவீசி சிக்கி சின்னாபின்னமாயினர். வங்கதேசத்தில் மெஹதி ஹசன் மட்டுமே ஓவருக்கு 4 ரன்ரேட்டில் வழங்கினார். மற்ற பந்துவீச்சாளர்கள் சராசரியாக ஓவருக்கு 8 ரன்கள் வீதத்தில் ரன்களை வாரி வழங்கினர். ஹசன் மெகமுத் 6 ஓவர்கள் வீசி 67 ரன்களும், ஷொரிபுல் இஸ்லாம் 9 ஓவர்கள் வீசி 76 ரன்களும், முஸ்தாபிஜூர் ரஹ்மான் 76 ரன்களும் வாரி வழங்கினர்.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

எதிரணியை “பேரழிவில்” தள்ளும் தென் ஆப்பிரிக்கா

இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி புதிய அவதாரம் எடுத்தது போல் விளையாடி வருகிறது. ஆங்கிலத்தில் “கார்னேஜ்” என்ற வார்த்தை உண்டு, மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்துதல் என்று பொருளாகும். அந்த வார்த்தைக்கு ஏற்றாற்போல், இந்த உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி எதிரணிகளை பேரழிவில் தள்ளும் புதிய உத்தியை கையாண்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதும் அணிகள், மிகப்பெரிய பள்ளத்தில் இருந்து மீண்டு வந்து, சேஸிங் செய்ய முடியாத வகையில் ஸ்கோரை அடித்துவிடுவதாகும். 300க்கும் அதிகமாக ஸ்கோர் செய்து எதிரணிகளை மிரளவைத்து, திணறடிப்பது, 350 ரன்களுக்கு மேல் சேர்த்து எதிரணிகளை சேஸிங் செய்யவிடாமல் திக்குமுக்காடச் செய்வது போன்றவற்றை தென் ஆப்பிரிக்கா உத்தியாக கையில் எடுத்துள்ளது.

எந்த அணி மோதினாலும் அந்த அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்வது, எந்த ஆடுகளத்தில் போட்டி நடந்தாலும், எந்த அணியின் பந்துவீச்சையும் நார்நாராக கிழித்து எறிந்து பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைக்கும் வேலையில் தென் ஆப்பிரிக்க அணி ஈடுபடுகிறது.

40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அடுத்த 10 ஓவர்களில் 144 ரன்களைச் சேர்த்தனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 143 ரன்கள் குவித்தது, இந்த ஆட்டத்தில் 144 ரன்கள் என மொத்தம் 287 ரன்கள் சேர்த்து எதிரணியை பேரழிவில் தள்ளி ரசிக்கும் உத்தியை கையாள்கிறது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

சீட்டுக்கட்டு போல் சரிந்த வங்கதேச பேட்டிங் வரிசை

382 ரன்கள் எனும் இமாலய இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியில் வங்கதேச பேட்டர்கள் களமிறங்கினர். இதுபோன்ற இமாலய ஸ்கோரை சேஸிங் செய்வது கடினம், சாத்தியமில்லை என்பது வங்கதேச பேட்டர்களின் ஆட்டத்திலேயே தெரிந்தது.

தான்சித் ஹசன் - லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் துல்லியமான லைன் அன்ட் லென்த் பந்துவீச்சில் பவுண்டரிகள் அடிக்க வங்கதேச பேட்டர்கள் திணறினர். முதல் 5 ஓவர்களில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது.

ஜான்சன் வீசிய 7வது ஓவரில் தான்சித் ஹசன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷாண்டே வந்தவேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார்.

3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் ஒரு ரன் சேர்த்தநிலையில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முஸ்தபிசுர் 8 ரன்கள் சேர்த்தநிலையில் கோட்ஸீ பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி தடுமாறியது.

நிதான பேட் செய்து வந்த லிட்டன் தாஸ் 22 ரன்கள் சேர்த்தநிலையில் ரபாடா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். மெஹதி ஹசன் 11 ரன்னில் கேசவ் மகராஜ் பந்துவீ்ச்சில் விக்கெட்டை இழந்தார். 30 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த வங்கதேசம் அணி அடுத்த 51 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசத்திற்காக போராடிய 'தனி ஒருவன்'

விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும், நிதானமாக பேட் செய்த மஹ்மத்துல்லா 67 பந்துகளில் அரைசதம் அடித்தார். 7வது விக்கெட்டுக்கு நசும் அகமது 19 ரன்னில் கோட்ஸி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மகமத்துல்லா, நசும் அகமது இருவரும் 7வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹசன் மெகமதுவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 15 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா பந்துவீச்சி்ல் ஹசன் ஆட்டமிழந்தார்.

கடைசி வரை போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய மெகமதுல்லா 104 பந்துகளில் சதம் அடித்து, 111 ரன்களில் கோட்ஸீ பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.9வது விக்கெட்டுக்கு மெகமதுல்லா, முஸ்தபிசுர் ரஹ்மான் கூட்டணி 68 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இதுதான் வங்கதேசத்தின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.

மெகமதுல்லா ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் ரஹ்மாந் 11 ரன்களில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். 46.4 ஓவர்களில் வங்கதேசம் அணி 233 ரன்களுக்கு ஆட்டமிழந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தென் ஆப்ரிக்கா vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசம் அணி ஏன் தோற்றது?

வங்கதேசம் அணியில் மெகமத்துல்லா மட்டும் கடைசிவரை போராடி சதம் அடித்து ஆட்டமிழந்தார். எந்த ஒரு வீரரும் 22 ரன்களைத் தாண்டவில்லை. வான்ஹடே மைதானம் பேட்டிங்கிற்கு அருமையாக ஒத்துழைக்கக் கூடியது. மெகமதுல்லா சதம் அடித்த நிலையில் மற்ற பேட்டர்களால் ஏன் விளையாட முடியவில்லை. ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், லிட்டன் தாஸ், தம்ஜித் ஹசன் போன்ற பேட்டர்கள் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை கையாண்டு இருக்க வேண்டும்.

இந்த ஆடுகளத்தில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக பேட் செய்திருந்தால், போட்டி, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆட்டம்போல் மாறியிருக்கும்.

ஆனால், வங்கதேச பேட்டர்களிடம் பொறுமை இல்லை, ரன் ரேட் அழுத்தம், பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவைதான் அவர்களை தவறான ஷாட்களை ஆடத் தூண்டி விக்கெட்டை இழக்க வைத்தது.

ரன்ரேட்டை பற்றிக் கவலைப்படாமல் நிதானமாக பேட் செய்திருந்தால், ஒரு கட்டத்தில் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், பேட்டர்களின் பொறுமையின்மை, மிகப்பெரிய ஸ்கோரால் ஏற்பட்ட மன அழுத்தம், பேட்டிங் ஆடும் முன்பே தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்ட மனநிலை ஆகியவைதான் வங்கதேச அணியின் தோல்விக்கான காரணங்களாகும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)