ஹாமூன்: வங்கக்கடலில் உருவாகும் அதிதீவிர புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வருமா?

ஹாமுன் புயல்

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருக்கும் ஹாமுன் புயல், மிகத் தீவிரப் புயலாக உருவெடுத்திருக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் இது அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயல் ஒன்று உருவானது. இதற்கு ஹாமுன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புயல் கடந்த ஆறு மணி நேரமாக கிழக்கு, வட கிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது.

தற்போது இந்தப் புயல் ஒதிஷாவின் பாரதீப்பிற்குக் கிழக்கே 290 கி.மீ. தூரத்திலும் மேற்கு வங்கத்தின் திகாவிற்கு தென்கிழக்கே 270 கி.மீ. தூரத்திலும் வங்கதேசத்தின் கெப்புபராவிலிருந்து தெற்கு தென் கிழக்கு திசையில் 230 கி.மீ. தூரத்திலும் மிகத் தீவிர புயலாக நிலை கொண்டிருக்கிறது.

இந்தப் புயல் இன்னும் சில மணி நேரங்களில் அதி தீவிர புயலாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்குமா?

இந்தப் புயல் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து, பலவீனமடைந்து சாதாரண புயலாக அக்டோபர் 25ஆம் தேதி மாலை கெப்புபராவிற்கும் சிட்டகாங்கிற்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் மழை கிடைக்கவோ, பாதிப்பு ஏற்படவோ வாய்ப்பு இல்லை.

அரபிக் கடல் பகுதியில் நிலவிய மிகத் தீவிர புயலான 'தேஜ்' இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏமன் நாட்டில் உள்ள அல் - கைதா பகுதியில் கரையைக் கடந்திருக்கிறது.

வானிலை எப்படி இருக்கும்?

வானிலையைப் பொறுத்தவரை, இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பத்து சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வடமேற்கு மற்றும் வடகிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழைக் காலம் துவங்கிவிட்டாலும், மாநிலத்தில் பெரிய அளவில் மழை பெய்யத் துவங்கவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)