தமிழ்நாடு: பனை மரங்கள் கடலரிப்பை தடுக்கும், நிலத்தடி நீரை சேமிக்கும் என்பது உண்மையா?

பனை மரங்கள் கடலரிப்பை தடுக்குமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடல் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுக்க கோடிக்கணக்கான பனை விதைகள் தமிழக கடற்கரை மாவட்டங்களில் நடவு செய்யப்பட்டுள்ளன.

பனை மரங்கள் கடலரிப்பைத் தடுக்கும் என்ற அடிப்படையில் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இது எந்த அளவுக்கு பயனளிக்கும்? பனை மரங்கள் வளர ஆண்டுகள் பல ஆகும் என்பதால் அதுவரையிலும் என்ன செய்வது? பனை மரங்கள் குறித்த அறிவியல் உண்மை என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

நடவு செய்யப்பட்ட பனை விதைகள்

நிலத்தடி நீரை சேமிக்கவும், கடல் அரிப்பை தடுக்கவும் பனை மரங்கள் முக்கிய பங்காற்றி வருவதாக தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நல வாரியம், 'கிரீன் நீடா' சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம், தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியவை அரசுடன் இணைந்து புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 கடலோர மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பனை விதைகளை நடவு செய்துள்ளனர்.

ஆசிட் ஊற்றி அழிக்கப்படும் பனை மரங்கள்

கடல் அரிப்பை தடுக்க உதவுமா பனை மரம்

10 பனை மரங்கள் இருக்கும் இடத்தில் கிணற்று நீர் வற்றாது என்ற நம்மாழ்வார் சொல்லுக்கு ஏற்ப கடந்த ஐந்து ஆண்டுகளாக பனை விதைகளை தமிழகம் முழுவதும் விதைத்து வருவதாக கூறுகிறார் 'கிரீன் நீடா' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும், கடல் அரிப்பு மற்றும் இயற்கை பேரிடர்களில் இருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்க தமிழகம் முழுவதும் பனை விதைகள் நட வேண்டும் என முடிவு செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் முதல் கட்டமாக பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நீடாமங்கலம் அருகே உள்ள கிராமங்களை ஒன்றிணைத்து பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட பனை விதைகளை விதைத்து வருகிறோம்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்து பனை விதைகளை விதைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தற்போது தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த அக்டோபர் 2ந் தேதி சென்னை திருவள்ளூர், பழவேற்காட்டில் தொடங்கி 14 கடலோர மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரி ஏழுதேசம் வரை ஒரு கோடி 9 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பனை விதைகள் அதிகம் கிடைக்கிறது. ஆனால் தென் மாவட்டங்களில் பனங்கொட்டைகளில் இருந்து கிடைக்கும் பனங்கிழங்குகள் மக்கள் சாப்பிட பயன்படுத்துவதால் இப்பகுதிகளில் பனை விதைகள் அதிக அளவு கிடைப்பதில்லை. இதனால் பனை விதைகளை சேகரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது." என்றார்.

கடல் அரிப்பை தடுக்க உதவுமா பனை மரம்
படக்குறிப்பு, கஜா புயலின் போது டெல்டா மாவட்டங்களின் ஒரு சில கிராமங்களைச் சுற்றி வளர்ந்திருந்த பனை மரங்களினால் அந்த ஊருக்கு பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை என்கிறார் ராஜவேலு

மேலும் தொடர்ந்த அவர், "முன்னாள் முதல்வர் காமராஜர் கடல் அரிப்பை தடுப்பதற்கு பல இடங்களில் பனை மரங்களை நட்டு கடலரிப்பை தடுத்துள்ளார் என்ற அடிப்படையில் கடற்கரை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்து வருகிறோம்.

நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் பனை மரங்கள் கடற்கரை ஓரத்தில் வேலி போல் வளர்ந்துள்ளதால் கஜா புயல், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் அந்த கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறான தகவல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதன் பயனாக அரசு தற்போது பனை விதைகளை நடவு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல் வெளிகளில் பனை மரங்கள் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக பனை மரங்களை ஆசிட் ஊற்றி அழித்து வருகின்றனர்.

எனவே டெல்டா மாவட்டங்களில் சமூக வலைதளங்கள் ஊடாகவும், இளைஞர்கள் மூலமாகவும் பனை மரம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்கள் விரைவில் பனை மரங்களால் பலன் பெறும்" என்று நம்புவதாக தெரிவித்தார்.

பனை விதைகள் துளிர்க்குமா?

கடல் அரிப்பை தடுக்க உதவுமா பனை மரம்
படக்குறிப்பு, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பனங்கிழங்கின் பயன்பாடு அதிகம் இருப்பதால், இந்த பகுதிகளில் பனங்கொட்டை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது

இது குறித்து தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழகத்தில் 15 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது 4 கோடி பனை மரம் மட்டுமே உள்ளது.

கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்காததால் பெரும்பாலான பனை மரங்கள் பராமரிக்கப்படாமல் அழிந்து போய்விட்டன.

கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும் பனைத் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவும் தமிழகம் முழுவதும் 14 கடலோர மாவட்டங்களில் 430 இடங்களில் பனை விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு தொடர்ந்து பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பனை விதைகள் நடவு செய்வதால் இயற்கை பேரிடர் மற்றும் கடல் அரிப்பை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த பணி நடைபெற்று வருகிறது.

கடும் சிரமத்திற்கு மத்தியில் பனை விதைகளை சேகரித்து விதைத்து வருகிறோம். ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பனை விதைகள் சேகரிக்கப்படுகிறது.

பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது ஆனால் சட்டம் இயற்றப்படவில்லை. எனவே வரும் சட்டமன்ற கூட்டத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்கிறார் எர்ணாவூர் நாராயணன்.

கடல் அரிப்பால் வெளியே வந்த மனித எலும்பு கூடுகள்

கடல் அரிப்பை தடுக்க உதவுமா பனை மரம்
படக்குறிப்பு, கடல் அரிப்பால் சாயல்குடி உள்ளிட்ட ஊர்களில் கடற்கரை ஓரத்தில் இருக்கும் கல்லறையில் அரிப்பு ஏற்பட்டு மனித எலும்புகள் வெளியே தெரிகின்றன

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் கடல் அரிப்பால் பல பனை மரங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்ல பட்டுள்ளதுடன் கடற்கரையில் உள்ள கல்லறையில் இருந்து மனித எலும்பு கூடுகள் வெளியே தெரிவதாக கூறுகிறார் சாயல்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆதி.

"தமிழகத்தில் அதிக பனை மரங்களை கொண்ட மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கள் இறக்க அனுமதி மறுப்பு, பனை பொருட்களுக்கு போதிய விலை இல்லை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான பனை தொழிலாளர்கள் தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு சென்றதால் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதே போல் சாயல்குடி, ரோஜ்மா நகர், நரிப்பையூர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்த பனை மரங்கள் போதிய பராமரிப்பு இன்றி அழிந்து போனதால் கடல் நீர் உட்புகுந்து பல அடி தூரம் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடல் அரிப்பால் கடற்கரை ஓரங்களில் உள்ள கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுவதுடன், மனித எலும்புக்கூடுகள் வெளியே தெரிந்து வருகிறது.

கடல் அரிப்பை தடுக்க பனை மரங்களை நடவு செய்து அது மரமாக வளர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் கடல் அரிப்பை தடுப்பதற்கு மாற்று வழியை கடல் சார் விஞ்ஞானிகளுடன் இணைந்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் ஆதி.

கடல் அரிப்பை தடுக்கும் இராவணன் மீசை புல்

கடல் அரிப்பை தடுக்க உதவுமா பனை மரம்

பட மூலாதாரம், Getty Images

பனை விதைகளை கடற்கரை ஓரம் விதைப்பதால் கடல் அரிப்பை தடுக்க முடியாது என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், மதுரை அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் டி ஸ்டீபன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பனைமரத்தை பலரும் தமிழகத்தின் பூர்வீக மரம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பனை மரம் கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது.

இலங்கையில் பனை விதைகள் அதிக அளவு விதைக்கப்பட்டு பனை மரங்கள் வளர்க்க பட்டது. நாளடைவில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த மக்கள் தமிழக கடற்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு பனை மரத்தை வளர்த்தனர்.

பனைமரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாக போகாது. அதே போல் வேர்கள் அகலமாகவும் படராது என்பதால் மரத்தின் வேர்கள் மரத்தைச் சுற்றி சுமார் 2 அடி அளவுக்கு மட்டுமே இருக்கும். இதனால், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பனை மரங்களை நட்டு பனை வேலி போல் இருந்தால் ஒரு அளவுக்கு கடல் அரிப்பை தடுக்குமே தவிர அதுவும் பெரிய அளவு பலன் அளிக்காது.

பனை மரங்களின் இலை விசிறி போல் இருப்பதால் மழை நீர் மரத்தின் மீது பட்டு வெளியே சிதறாமல் மரத்தின் தண்டு வழியாக வேர் பகுதிக்கு சென்று நீர் சேமிக்கப்படுவதால் பனை மரங்கள் வறட்சி தாங்கி வளர்கின்றதே தவிர நிலத்தடி நீரை சேமிக்க பனை மரம் உதவுவதாக கூறுவதில் உண்மை இல்லை. அது அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படவில்லை.

பனை மரங்களால் காற்றின் வேகம் குறைந்து கடற்கரையில் மணல் திட்டுகள் உருவாகும். அதனால் சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து கடற்கரை கிராமங்கள் பாதுகாக்கப்படும்.

கடல் அரிப்பை தடுப்பதற்கு பனை மரத்தை நடவு செய்வதற்கு பதிலாக இராவணன் மீசை புல், தாழம்பூ, பூவரச மரம் உள்ளிட்டவைகளை நட்டு வளர்த்தால் உடனடியாக கடல் அரிப்பை தடுக்கலாம்.

பனை மரம் கற்பக விருட்சம் என அழைக்கப்படுவதால் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மக்களுக்கு பயன் அளிக்குமே தவிர சுற்றுச்சூழலுக்கு பலன் அளிக்காது என்பது தான் அறிவியல் உண்மை" என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)