இது ஒரு மினி இந்தியா vs பாக்.: சென்னையில் ஆப்கன் வீரர் பேச்சுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images
திங்கள் கிழமையன்று பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இப்ராஹிம் ஜாத்ரன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டபோது, பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்படும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாக கூறினார்.
ஜாத்ரன் 87 ரன்களில் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் வெற்றியில் அவரது இன்னிங்ஸ் முக்கிய பங்கு வகித்தது.
போட்டியின் சிறந்த வீரர் என்ற பெயரை ஏற்க ஜாத்ரன் வந்தபோது, யாருக்கு அதை அர்ப்பணிப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், இந்த விருதை பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்காக நான் அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார்.
ஜாத்ரன் கூறுகையில், “அதிர்ஷ்டவசமாக இந்தப் போட்டியில் நான் சிறப்பாக விளையாடினேன். நான் நேர்மறையான அணுகுமுறையுடன் விளையாட விரும்பினேன். பலமுறை குர்பாஸும் நானும் சிறப்பான பார்ட்னர்ஷிப் செய்துள்ளோம். நாங்கள் ஒன்றாக நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளோம்.
16 வயதிற்குட்பட்ட நாட்களில் இருந்து, எனக்கும் என் நாட்டிற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவராக இருந்துவருகிறேன். பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்,” என்றார்.

பட மூலாதாரம், EPA
பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் குடிமக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியதாக பாகிஸ்தான் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. சரியான ஆவணங்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் மக்கள் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு இந்த மாதம் கூறியிருந்தது.
நவம்பர் 1ம் தேதிக்குள் நாடு திரும்பாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் கூறியிருந்தது. ஒரு புள்ளிவிவரத்தின்படி பாகிஸ்தானில் சுமார் 17 லட்சம் ஆப்கானியர்கள் உள்ளனர். இதுவரை 52 ஆயிரம் ஆப்கானிஸ்தான் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நாடு திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
பாகிஸ்தானின் இந்த நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்ததுடன், ஆப்கானிஸ்தான் குடிமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டது. அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கமும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது. இருப்பினும், தாலிபன்கள் தங்கள் குடிமக்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்காக பாகிஸ்தான் எல்லையில் கூடாரங்கள் அமைத்து உணவு மற்றும் பானங்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் இந்த அணுகுமுறையால் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசு கோபமடைந்துள்ளது, அதன் பிரதிபலிப்பு கிரிக்கெட் போட்டியிலும் தெரிந்தது. ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி பாகிஸ்தான் தனது உள் விவகாரங்களில் தலையிடுவதாக நீண்ட காலமாக நம்பி வருகிறது. ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியினர் பாகிஸ்தான் மீது கோபத்தில் உள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்படும் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு ஆட்ட நாயகன் விருதை இப்ராஹிம் ஜாத்ரன் அர்ப்பணித்தபோது இந்த சர்ச்சை மீண்டும் வெளிப்பட்டது. இப்ராஹிம் ஜாத்ரனின் இந்த நிலைப்பாடு பாகிஸ்தானில் எதிர்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் காஸ்மி, இப்ராஹிம் ஜாத்ரனின் வீடியோ கிளிப்பை ட்விட்டரில் வெளியிட்டு, “இரட்டை நிலைப்பாடு. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இப்ராஹிம் ஜாத்ரன் தனது ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேறிகளுக்கு அர்ப்பணித்துள்ளார். இது கிரிக்கெட் களத்தில் ஜாத்ரன் வெளியிட்ட அரசியல் ரீதியான அறிக்கை. ஐசிசி தூங்குகிறதா அல்லது எல்லா விதிகளும் பாகிஸ்தானுக்கு மட்டும்தானா?," என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் இந்த உலகக்கோப்பையில் அரசியல் சொல்லாடல் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானால் தொடங்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற தனது சதத்தை காஸா மக்களின் பெயரில் அர்ப்பணித்தார் முகமது ரிஸ்வான். ஹமாஸ் என்ற ஆயுதக் குழுவின் தாக்குதலுக்கு எதிராக காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 12 அன்று, அவர் ட்விட்டரில், "இது காஸாவில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகளுக்கானது" என்று எழுதினார். அக்டோபர் 11 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் ரிஸ்வான் இதைப் பதிவிட்டிருந்தார்.
ரிஸ்வான் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் எடுத்து தனது அணியை சாதனை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகளின் போது மதம் மற்றும் அரசியலை களத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பாகிஸ்தான் தலைவர்களும் கிரிக்கெட் வெற்றி, தோல்வியை மதத்துடன் தொடர்புபடுத்தி வருகின்றனர்.
அக்டோபர் 2021 இல், பாகிஸ்தானின் அப்போதைய உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித், உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிரான வெற்றியை இஸ்லாத்தின் வெற்றி என்று அழைத்தார். வெற்றி பெற்ற உடனேயே ரஷித் ட்விட்டரில் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டு அதில் கூறியிருந்தார்.
ரஷீத், "இந்திய முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்களின் உணர்வுகள் பாகிஸ்தானுடன் உள்ளன" என்று கூறியிருந்தார். “இஸ்லாத்திற்கு வாழ்த்துகள். வாழ்க பாகிஸ்தான்,” என்றும் எழுதியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் மற்றும் மதம்
இருப்பினும், பாகிஸ்தானில் இருந்து இதுபோன்ற அறிக்கை வருவது இது முதல் முறை அல்ல. 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சோயப் மாலிக், இஸ்லாமிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். அப்போது சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் 2010ல் திருமணம் செய்து கொண்டனர்.
2007 டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சோயிப் மாலிக் இருந்தார்.
இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு, சோயிப் மாலிக், "எனது நாடான பாகிஸ்தானுக்கும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் ஆதரவிற்கும் நன்றி" என்று கூறியிருந்தார். “மிக்க நன்றி என்பதுடன், நாங்கள் விளையாட்டில் எங்கள் 100 சதவிகிதம் முயற்சித்திருந்தாலும், உலகக் கோப்பையை வெல்லாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அப்போது அவர் கூறினார்.
அந்த போட்டியில் இந்தியாவின் இர்பான் பதான் ஆட்ட நாயகன் ஆனதையும் சோயப் மாலிக் மறந்துவிட்டார். சோயப் மாலிக்கை இர்பான் பதான் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது சோயிப் மாலிக்கின் இந்த கருத்துக்கு இந்திய முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கமல் ஃபரூக்கி, “இவருக்கு எப்படி இப்படிப் பேசத் தைரியம்? பாகிஸ்தானுக்குள் முஸ்லிம் அல்லாத ஆதரவாளர்கள் இல்லையா? அவரது பேச்சு பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது,” எனத்தெரிவித்திருந்தார்.
அப்போது இந்திய ஹாக்கி நட்சத்திரம் அஸ்லம் ஷேர் கான், "உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்ட அந்த பரிதாபமான விளையாட்டு வீரர்" என்று கூறியிருந்தார். அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்றாலும், தோல்விக்குப் பிறகு ஆங்கிலத்தில் பேச முயன்றார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூம் மற்றும் அரசியல் கலாசாரம் அவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. 2006 இல், டாக்டர் நசீம் அஷ்ரஃப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது வீரர்களுக்கு அவர்களின் மத நம்பிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகளை பொதுவில் காட்ட வேண்டாம் என்று கூறினார். எனினும், டாக்டர் நசீமின் அறிக்கை பாகிஸ்தான் வீரர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முகமது ரிஸ்வான் மைதானத்தில் தொழுவதை அடிக்கடி பார்க்க முடியும்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது, "வீரர்களின் மத நம்பிக்கை அவர்களை ஊக்குவிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அது அவர்களை ஒன்றாக வைத்திருக்கிறது. ஆனால் கிரிக்கெட் மற்றும் மதம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை இருக்க வேண்டும்,” என டாக்டர் நசீம் அஷ்ரஃப் தெரிவித்திருந்தார்.
“இது தொடர்பாக அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக்கிடம் (அப்போதைய கேப்டன்) பேசினேன். தனிப்பட்ட நம்பிக்கையில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இஸ்லாம் நம் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிப்பதை அனுமதிக்காது என்று இன்சமாமிடம் கூறியுள்ளோம்,” என்றார் அவர்.
2007ஆம் ஆண்டு சோயிப் மாலிக் கூறியதற்குப் பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்கள் என்று கமல் ஃபரூக்கி கூறியிருந்தார். வாசிம் அக்ரமின் அறிக்கையை நினைவுகூர்ந்த ஃபரூக்கி, "வங்கதேசத்திடம் தோற்ற பிறகு, வாசிம் அக்ரம் தோல்விக்கு 'சகோதர நாடு என்பது தான்' காரணம் என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இதுபோன்ற கருத்துகள் விளையாட்டின் உணர்வுக்கு எதிரானது,” என்று தெரிவித்திருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












