ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டு வந்தவர் பேட்டி

இஸ்ரேல் vs பாலத்தீனம்

ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 2 பேரை இன்று அதிகாலை விடுவித்தது. அவர்கள் 79 வயதான நூரித் கூப்பர் மற்றும் 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் ஆவர். ஆனால் இவர்களது கணவர்கள் இன்னும் ஹமாஸ் பிடியிலேயே இருக்கிறார்கள். இதன் மூலம் ஹமாஸ் விடுவித்திருக்கும் பணயக் கைதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது.

அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திடீர் தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 20 பேர் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களை ‘பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில்’ ஒளித்து வைத்திருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

இதுவரை 4 பணயக்கைதிகள் விடுவிப்பு

ஹமாஸ் இயக்கத்தினர் தாங்கள் கடத்தி சென்றவர்களில் தாய்-மகள் இரண்டு பேரை அக்டோபர் 20ம் தேதி விடுவித்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியது. அதன் தொடர்ச்சியாக, இன்று 2 வயது முதிர்ந்த பெண்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. அவர்கள் 79 வயதான நூரித் கூப்பர், 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் ஆவர்.

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பின்னர், யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Jenny Yerushalmi, Ichilov Hospital

சுரங்கப் பாதை நெட்வொர்க் எப்படி உள்ளது?

கடந்த இரண்டு வாரங்களாக ஹமாஸ் பிடியில் இருந்த அவர், தனது அனுபவங்களை செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.

கிப்புட்ஸில் இருந்து மோட்டார் சைக்கிளில் தன்னை ஹமாஸ் கடத்திச் சென்றதாக அவர் கூறினார். ஒரு கதவு வழியாக காசாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது பல இடங்களில் காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் கூறினார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமும் இருந்தது.

ஹமாஸ் போராளிகள் அவரை எப்படி தடிகளால் தாக்கினார்கள் என்று அவர் கூறினார். எல்லையில் வேலி அமைப்பதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் பல கோடி ரூபாயை செலவிட்டிருப்பதாகவும் ஆனால் அது ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதைத் தடுக்கவில்லை என்றும் லிஃப்ஷிட்ஸ் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில், லைஃப்ஷிட்ஸின் மகள் ஷரோன், ஈரமான வயல்களில் பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டிய கட்டாயம் அவரது தாய்க்கு ஏற்பட்டதாகக் கூறினார்.

ஹமாஸ் ஒரு பெரிய நிலத்தடி சுரங்கப் பாதை வலையமைப்பை தயார் செய்துள்ளதாக ஷரோன் கூறினார். ஷரோன் இந்த சுரங்கங்களை சிலந்தி வலையுடன் ஒப்பிட்டார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

உணவு, சிகிச்சை, பாதுகாப்பு எப்படி?

ஹமாஸ் போராளிகள் தனது தாயின் நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை கூட எடுத்துச் சென்றுவிட்டதாக லைஃப்ஷிட்ஸின் மகள் கூறினார். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கியதும், அங்கிருந்தவர்கள், தாங்கள் குர்ஆனை நம்புகிறோம், அதனால் அவளுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

லைஃப்ஷிட்ஸ் மற்றும் 24 பணயக்கைதிகள் சுரங்கப் பாதைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பணயக் கைதிகள் சுத்தமான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உறங்குவதற்கு மெத்தைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

"இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவரைக் கண்காணிக்க ஒரு மருத்துவர் வருவார். காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது காயமடைந்த பணயக்கைதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஐந்து பணயக் கைதிகளையும் கண்காணிக்க ஒரு காவலர் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

சுரங்கப்பாதையில் தங்கியிருந்தபோது, அவருக்கும் அவரது குழுவினருக்கும் வெள்ளைப் பாலாடைக்கட்டி மற்றும் வெள்ளரிகள் உணவாக வழங்கப்பட்டதாக லைஃப்ஷிட்ஸ் கூறினார். அதே உணவையே ஹமாஸ் போராளிகளும் சாப்பிட்டனர்" என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

"நரகத்திற்கு சென்று வந்தது போல் இருந்தது"

லைஃப்ஷிட்ஸ் தாம் நரகத்துக்குச் சென்று வந்தது போல் இருந்ததாக ஹமாஸ் பிடியில் இருந்ததைப் பற்றித் தெரிவித்தார்.

ஹமாஸ் துப்பாக்கிதாரிகளால் மோட்டார் சைக்கிள்களில் தான் கடத்திச் செல்லப்பட்டதை விவரிக்கும் போது, ​​தான் நரகத்தில் இருந்ததாக கூறுகிறார்.

மற்ற பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதை தனது நோக்கமாக இருக்கும் என்று விடுவிக்கப்பட்ட லைஃப்ஷிட்ஸின் மகள் ஷரோன் தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)