ஹமாஸ் பிடியில் பணய கைதிகளாக யாரெல்லாம் இருக்கிறார்கள்?

பட மூலாதாரம், லோதான் கூப்பர்
அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திடீர் தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களை ‘பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில்’ ஒளித்து வைத்திருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.
அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 20 பேர் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. பிபிசி உறுதி செய்த அல்லது நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலமாக உறுதி செய்யப்பட்ட பணய கைதிகளின் கதைகளை இங்கு வழங்குகிறோம்.
கடத்தி சென்றவர்களில் தாய்-மகள் இரண்டு பேரை அக்டோபர் 20ம் தேதி ஹமாஸ் விடுவித்தது.

பட மூலாதாரம், Getty Images
"நரகத்துக்கு சென்றது போல இருந்தது"
இவர்கள் தவிர நூரித் கூப்பர் மற்றும் யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகிய இரு முதிய பெண்களையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். ஆனால் இவர்களது கணவர்கள்கள் ஹமாஸ் பிடியிலேயே இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஹமாஸ் விடுவித்திருக்கும் பணயக் கைதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது.
மற்ற பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதை தனது நோக்கமாக இருக்கும் என்று விடுவிக்கப்பட்ட லைஃப்ஷிட்ஸின் மகள் ஷரோன் தெரிவித்துள்ளார்.
85 வயதான லைஃப்ஷிட்ஸ் தாம் நரகத்துக்குச் சென்று வந்தது போல் இருந்ததாக ஹமாஸ் பிடியில் இருந்ததைப் பற்றித் தெரிவித்தார்.
ஹமாஸ் துப்பாக்கிதாரிகளால் மோட்டார் சைக்கிள்களில் தான் கடத்திச் செல்லப்பட்டதை விவரிக்கும் போது, தான் நரகத்தில் இருந்ததாக கூறுகிறார்.
மோட்டார் சைக்கிளில் தன்னை காஸாவுக்குள் கொண்டு சென்றதாகவும் சவாரி செய்ததால், காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.
இஸ்ரேலிய அரசாங்கம் எல்லை வேலிக்காக கோடிக்கணக்கில் செலவழித்தாலும், அது ஹமாஸ் நுழைவதைத் தடுக்க எதுவும் செய்ய முடிவில்லை என்று அவர் கூறினார்.

டோரன், ராஸ் மற்றும் அவிவ் ஆஷர் ஆகியோர் காசா எல்லைக்கு அருகில் உறவினர்களுடன் தங்கியிருந்தபோது பிடித்துச் செல்லப்படனர். தனது மனைவியுடன் 5 மற்றும் 3 வயதேயான மகள்களை பிடித்து மற்ற பணயக் கைதிகளுடன் டிரக்கில் ஏற்றிச் செல்லும் காணொளியை கணவர் யோனி பார்த்தார். மனைவியின் அலைபேசி காஸாவில் இருப்பதையும் அறிந்துகொண்டார்.

பட மூலாதாரம், யோனி ஆஷெர்
மீரவ் தால், அவளுடைய இணையர் யாயர் யாகோவ் மற்றும் குழந்தைகள் யாகில் (12) மற்றும் ஆர் (16) ஆகியோர் பிணைக் கைதிகளாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் வீட்டுக்குள் நுழைந்த போது, தாயார் ரானானாவோடு குழந்தைகள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர். "என்னை அழைத்துச் செல்லாதே, நான் மிகவும் சிறியவன்!" என்று இளைய மகன் அழுவதையும் கேட்டுள்ளார். யயர் மற்றும் மெய்ரவ் இருவரும் பிணைக் கைதிகளோடு இருக்கும் காணொளியும் உள்ளது.

அமித் ஷானி, 16 கீப்புட்ஸ் பீரியில் அமைந்துள்ள வீட்டின் பாதுகாப்பு அறைக்குள் நுழைந்த ஆயுதமேந்திய ஹமாஸ் படையினர் அவரை காரில் ஏறுமாறு உத்தரவிட்டார்கள் என்று அவரது தாயார் நியூயார்க் டைம்ஸ் இதழிடம் தெரிவித்தார்.
சாச்சி இதான் என்பவரை ஆயுதமேந்திய ஹமாஸ் அழைத்துச் சென்றதை அவருடைய மனைவி கலி பார்த்ததுதான் கடைசி. அவர்களின் குடும்பத்தார் கிப்புஸ்ட் நஹல் ஓசஸில் அமைந்த வீட்டின் பாதுகாப்பு அறைக்குள் பதுங்கியிருந்தனர்.
அங்கு திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸ், அங்கு நடந்தவற்றை நேரடி ஒளிபரப்பு செய்தது. அவர்களின் பெரிய மகன் மாயன் - 18 வயதை எட்டியிருந்தார் - சுட்டுக் கொல்லப்பட்டதை கலி பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், குடும்பத்தாரார்
தெற்கு இஸ்ரேலில் காஸாவுக்கு அருகில் உள்ள நிர் ஓஸ் என்ற கிப்புட்ஸில் அமைந்த தனது வீட்டிலிருந்து 78 வயதான மார்கலிட் மோஸஸ் தூக்கிச் செல்லப்பட்டது காணொளியில் பதிவாகியிருந்தது. இதை அவரது சகோதரர் சானோன் கோஹன் சிபிஎஸ் தொலைக்காட்சியில் தெரிவித்தார். அவருக்கு உடல் உபாதைகள் உள்ளன; கிட்டத்தட்ட தொடர் மருத்துவ பராமரிப்பில் அவர் இருக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அமிராம் கூப்பர் 85, மற்றும் அவரது மனைவி நூரிட் 80, ஆகியோர் நிர் ஓஸில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பிபிசியிடம் அவர்களது மருமகள் நோவா தெரிவித்தார்.
ஹமாஸ் தாக்குதலின் போது கடைசியாக இருவருடனும் பேசினோம். அவர்கள் பாதுகாப்பு அறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அமிராமின் அலைபேசி அவர்கள் காஸாவில் இருப்பதை காட்டியது. இருவரிடமும் மருந்துகள் இல்லை என்று நோவா கூறினார்.
இவர்களில் நூரித் கூப்பர் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அமிராம் கூப்பர் இன்னும் ஹமாஸின் பிடியிலேயே இருக்கிறார்.
ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு 70 வயதான ஜூடித் வெய்ன்ஸ்டீன் ஹக்காய் மற்றும் கணவர் காட், 73 ஆகியோரும் நிர் ஓஸில் இருந்து காணவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு, அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் குடும்பத்தினரிடம் உறுதி செய்தது என கனடாவில் உள்ள சிடிவிஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. .
72 வயதான ஆதினா மோஷே, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் அவர் பிணைக்கப்பட்ட வீடியோ கிளிப்பில் அவரது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார், அவர் காசாவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அவரும் நிர் ஓஸில் இருந்து கடத்தப்பட்டார் என்று அவரது உறவினர்கள் சிஎன்என் நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
ஒரு அறிஞரும், யூத இனப்படுகொலை வரலாற்றாசிரியரும், அலெக்ஸ் டான்சிக், 75, அக்டோபர் 7 அன்று ஹமாஸால் தாக்கப்பட்டபோது, நிர் ஓஸில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். "அவர் கடத்தப்பட்டார் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும்" என்று அவரது மகன் மதி பிபிசியிடம் கூறினார். அலெக்ஸ் இஸ்ரேலின் யூத இனப்படுகொலை நினைவு மையமான யாட் வஷெமில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இஸ்ரேல் மற்றும் அவர் பிறந்த நாடான போலந்தில் அவரது விடுதலைக்காக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

பட மூலாதாரம், மதி டான்சிங்
ஹாகர் ப்ரோடுட்ச், 40, அவரது மகள் ஆஃப்ரி, 10, மற்றும் மகன்கள் யுவல், 8, மற்றும் ஓரியா, 4, காஸாவின் எல்லைக்கு அருகில் உள்ள கிப்புட்ஸ் என்ற இடத்தில், ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது இருந்ததாக ஹகரின் கணவர் அவிசாய் ப்ரோடுட்ச் தெரிவித்துள்ளார். அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று தான் முதலில் நம்பியதாகவும் , ஆனால் பின்னர் அவர்கள் உயிருடன் காணப்பட்டதாகவும், அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கிப்புட்ஸிடமிருந்து செய்தி வந்ததாக ஏபிசி நியூஸிடம் கூறினார்.
19 வயதான இஸ்ரேலிய ராணுவ வீரர் ரான் ஷெர்மன், எல்லையில் கடத்தப்பட்டதாக அவரது தாய் மாயன் இஸ்ரேலின் i24 செய்தி சேனலுக்கு தெரிவித்தார். பின்னர் ஹமாஸ் வெளியிட்ட காணொளியில் அவரை அடையாளம் கண்டுகொண்டதாக அவர் கூறினார்.
ஷிரி, யார்டன், ஏரியல் மற்றும் கஃபிர் பிபாஸ் அவர்கள் வாழ்ந்த தெற்கு இஸ்ரேலில் உள்ள கிபூட்ஸிலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஷிரி அங்கு தான் மழலையர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தா. ஆயுதமேந்திய ஹமாஸ் குழுவினரால் சூழப்பட்ட 3 வயது ஏரியல் மற்றும் 9 மாதக் குழந்தையான கஃபீர் ஆகியோரை ஷிரி பிடித்துக் கொண்டிருந்த படத்தை பின்னர் காண முடிந்தது.

பட மூலாதாரம், Telegram
ஷிரியின் பெற்றோரான யோசி மற்றும் மார்கிட் சில்பர்மேன் ஆகியோரையும் காணவில்லை, அவர்களும் பிடிபட்டதாக கருதப்படுகிறது.
டாஃப்னா எல்யாகிம் 15, மற்றும் அவரது தங்கை எல்லா நகல் ஒக்ழ் கிப்புட்ஸ் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டில் தடுத்து வைக்கப்பட்டதை காணொளியில் பார்த்ததாக அவர்களுடைய உறவினர்கள் கூறினர். அவர்களின் தந்தை நோம் எல்யாகிம், அவருடைய நண்பர் டிக்லா அரவா மற்றும் அவருடைய 17 வயது மகன் டோமர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
கரினா அரிவ் என்ற 19 வயது ராணுவ வீரர், காசா அருகே ராணுவ தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டார். அவரது சகோதரி அலெக்ஸாண்ட்ரா பிபிசியிடம் கூறுகையில், தாக்குதலின் போது கரினா தனக்கு மேற்கொண்ட அழைப்பில் துப்பாக்கியில் சுடும் சத்தம் கேட்டதாகவும், பின் கரினாவை வாகனத்தில் அழைத்துச் செல்வதைக் காணொலியில் பார்த்ததாகவும் கூறினார்.

பட மூலாதாரம், குடும்பத்தார்
ஆஃபர், ஈரெஸ் மற்றும் சஹர் கால்டெரோன் ஆகியோர் கிப்புட்ஸ் நிர் ஓஸில் பிடிக்கப்பட்டனர். சமூக ஊடகங்களில் கிடைத்த காணொளி ஒன்றில் 12 வயதேயான ஈரெஸ் காஸாவை நோக்கி துப்பாக்கி ஏந்திய நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டது இடம்பெற்றிருந்தது என அவரது உறவினர் இடோ டான் பிபிசியிடம் தெரிவித்தார்.
80 வயதான கார்மெலா டான் மற்றும் அவரது பேத்தி நோயா, 12 ஆகிய மற்ற இருவரும் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது, ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள் பின்னர் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பட மூலாதாரம், இடோ டான்
ஷோஹாம் நகரைச் சேர்ந்த மியா ஷெம் , 21, ஹமாஸ் வெளியிட்ட பணயக்கைதிகளின் முதல் காணொளியில் பேசிய இவர், தான் ஒரு விருந்தில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறினார்.
அவர் பிணைக் கைதியாகப் இருப்பதை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், வீடியோவில் இருந்து படங்களைக் காட்டலாம் என்று ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

சன்னா பெரி, 79, மற்றும் அவரது மகன் நடவ் பாப்பிள்வெல் 51, ஆகியோர் ஹமாஸால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டதாக என்று சன்னாவின் மகள் அய்லெட் ஸ்வாடிட்ஸ்கி கூறினார், துப்பாக்கி ஏந்திய நபர்கள் வந்து சுட்டதை தொலைபேசியில் பேசிய போது பார்த்துள்ளார். ஆயுதம் ஏந்திய நபர்களோடு தனது இரண்டு உறவினர்கள் இருக்கும் படங்களை அவர்கள் அனுப்பி வைத்ததாகவும், இருவருமே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார்.
ஒம்ரி மிரன், 46 தங்கள் பாதுகாப்பு அறைக்குள் ஒரு இஸ்ரேலிய குழந்தைக்கு பாதுகாப்பளிப்பதற்காக கதவைத் திறந்ததால் கடத்தப்பட்டார், இல்லையெனில் அவரை கொன்றிருப்பார்கள் என்று கூறினார் ஓம்ரியின் மனைவி லிஷாய் லாவி. நஹால் ஓஸ் கிப்புட்ஸில் இருந்து மூன்று பணயக்கைதிகளுடன் அவரும் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை தான் பார்த்ததாகக் கூறினார்.

லிரி எல்பாக் 18, ஹமாஸ் தாக்குதலின்போது, காசா எல்லைக்கு அருகே ராணுவ கண்காணிப்பு பணியில் தனது பயிற்சியைத் தொடங்கியிருந்தார் என்று அவரது தந்தை எலி அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார். துப்பாக்கி ஏந்தியவர்கள் கடத்திச் சென்ற இராணுவ வாகனத்தில் பலருடன் தன் மகளும் அமர்ந்திருந்ததை, ஹமாஸால் பின்னர் பரப்பப்பட்ட ஒரு வீடியோவில் பார்த்ததாக எலி கூறினார்.
இசை நிகழ்ச்சியிலிருந்து கடத்தப்பட்டவர்கள்
தெற்கு இஸ்ரேலில் நடந்த சூப்பர்நோவா இசை விழாவில் இருந்து ஏராளமானோர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
40 வயதான மோரன் ஸ்டெலா யானை , ஆபரண வடிவமைப்பாளர், அந்த இசை விழாவில் தனது பொருட்களை விற்றுக்கொண்டிருந்த சமயத்தில் தாக்குதல் நடந்தது. யூதர்களைப் பற்றிய இழிவான வசைச்சொற்கள் பேசப்படும் நிலையில் அவர் தரையில் அமர்ந்திருக்கும்படியான காணொளியில் அவள் காணப்பட்டதாக அவரது சகோதரர் அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அல்மோக் மீர் ஜான் , 21, இசை விழாவில் இருந்து தப்பி ஓட முயன்றார். தன் நண்பரோடு அவரின் காரில் சென்றார், சிறிது தூரம் செல்லும் போதிலே அவர்கள் மடக்கப்பட்டனர். பணயக்கைதிகளின் காணொலியில் அல்மோக்கினை பார்த்தோம் என குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
21 வயதுடைய இன்பார் ஹெய்மன் என்ற மாணவனை, இரண்டு இஸ்ரேலிய இளைஞர்கள் விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர். ஹமாஸ் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் இன்பர் சில நொடிகள் தோன்றியுள்ளார்.

பட மூலாதாரம், மாயா மற்றும் இட்டாய் ரெகேவின் குடும்பம்
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் , 23, ஒரு டிரக்கில் ஏற்றப்பட்டதை சாட்சிகள் பார்த்ததாக அவரது குடும்பத்தினர் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழிற்கு தெரிவித்தனர். அவர் படுகாயமடைந்து சுயநினைவின்றி இருந்ததாக, அவர்கள் கூறினர், அவரது அலைபேசி காசாவின் எல்லையில் கடைசியாக காணப்பட்டது.
ஹெர்ஸ்லியாவைச் சேர்ந்த 21 வயதான மாயா ரெகேவ் மற்றும் அவரது சகோதரர் இட்டாய் 18 ஆகியோரும் பிடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
தாக்குதல் நடந்த அன்று காலையில், மாயா தன் தந்தையை அழைத்துள்ளார். "அப்பா அவர்கள் என்னைச் சுடுகிறார்கள், நான் சாகப்போகிறேன்" என்று கூச்சலிட்டுள்ளார். ஹமாஸ் வெளியிட்ட காணொளியில் ஒரு வாகனத்தின் பின்பகுதியில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இட்டாய் காணப்பட்டார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏறக்குறைய இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாயா மற்றும் இட்டாய் இருவரும் கடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த ஷானி லூக் என்ற சுற்றுலாப் பயணியும் பணயக் கைதிகளில் ஒருவர் என கருதப்படுகிறது.
ஷானி பிடிக்கப்பட்ட பின் அவரை காணொளியில் பார்த்ததாக அவரது தாயார் ரிக்கார்டா கூறினார், பின்னர் ஷானி தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக காசாவில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

பட மூலாதாரம், Instagram
சீனாவில் பிறந்த இஸ்ரேலிய குடிமகன் நோவா அர்கமணியும் இசை விழாவில் இருந்து கடத்தப்பட்டார். இஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்ட காணொளி காட்சிகள் அவரது தந்தை யாகோவ் அர்கமணியால் சரிபார்க்கப்பட்டது - 25 வயது இளைஞன் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் "என்னைக் கொல்லாதே!" என்று கத்துவது அதில் உள்ளது.
21 வயதான பர் குபர்ஸ்டின், அக்டோபர் 7 ஆம் தேதி அதிகாலை தனது குடும்பத்தினருடன் கடைசியாக பேசினார். அதே நாளின் பிற்பகுதியில், தாக்குதலுக்கு பின் ஹமாஸ் வெளியிட்ட காணொளியில் அவரை பார்த்தோம் அதன்பிறகு, தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.
விவியன் சில்வர் , 74, ஒரு புகழ்பெற்ற அமைதி பிரச்சாரகர் ஆவார்.கிப்புட்ஸ் பீரில் உள்ள அவரது வீடு ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் உள்ளன.

19 வயதான ரோனி எஷல் , காசா எல்லையில் உள்ள ராணுவ தளத்தில் தங்கியிருந்தார். ஹமாஸ் தாக்குதல் நடந்த அன்று காலையில் தான் அவளிடம் கடைசியாக பேசியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அவள் இருந்த தளம் தாக்குதலுக்கு உள்ளானது. சுமார் 09:30 மணியளவில் அவள் அம்மாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்: "அம்மா, நான் நன்றாக இருக்கிறேன், நான் வேலையாக இருக்கிறேன், லவ்யூ."

பட மூலாதாரம், எஷெல் குடும்பம்
36 வயதான ஜெர்மன்-இஸ்ரேல் குடிமகனான ஜோர்டான் ரோமன்-காட் , கிப்புட்ஸ் பீரியில் இருந்து அவருடைய கணவர் மற்றும் சிறு குழந்தையுடன் ஹமாஸினால் கடத்தப்பட்டார்.
அவரது கணவர் அலோன் மற்றும் மூன்று வயது ஜெஃபென் ஆகியோர் கார் சிறிது நேரம் நின்ற நேரத்தில் தப்பித்தனர், ஆனால் ஜோர்டான் பிரிந்துவிட்டார், அவரை துரத்திப் பிடித்திருப்பார்கள் என்று, சிஎன்என் செய்தியாளரிடம் உறவினர்கள் கூறினர்.

பட மூலாதாரம், மாயா ரோமன்
ஓஹாட் மற்றும் ஈதன் வஹலோமி அவர்களின் கிப்புட்ஸில் இருந்து கடத்தப்பட்டதாக ஓஹாட்டின் தாயார் எஸ்தர் கூறுகிறார். ஐந்து துப்பாக்கி ஏந்தியவர்கள் தங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது தனது மருமகளும் அவரது இரண்டு பேத்திகளும் தப்பிக்க முடிந்தது, ஆனால் ஓஹாட் மற்றும் 12 வயது ஈதன் ஆகியோர் பிடித்துச் செல்லப்பட்டனர்.
84 வயதான டிட்சா ஹெய்மன் , கிப்புட்ஸ் நிர் ஓஸில் ஹமாஸால் அழைத்துச் செல்லப்படுவதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்ததாக அவரது மருமகள் கூறினார். முன்னாள் சமூக சேவகியான இவர், இரண்டாம் உலகப் போரின் போது நாஜி கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மீட்கும் கிண்டர் டிரான்ஸ்போர்ட்டில் இங்கிலாந்துக்கு வந்த ஸ்வி ஷதைமாவின் இணையர் ஆவார்.

பட மூலாதாரம், டிட்சா ஹெய்மன் குடும்பம்
டோர் ஓர், அவரது மனைவி யோனட், மகன் நோம் மற்றும் மகள் அல்மா ஆகியோர் கிப்புட்ஸ் பீரியில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்படுவதை அண்டை வீட்டுக்காரர் பார்த்ததாக அவர்களின் மருமகன் இம்மானுவேல் பெசோராய் தெரிவித்தார். அதன்பிறகு எந்த தொடர்பும் இல்லை, என்றார். நோமின் வயது 15 மற்றும் அல்மா 13.
டாக்டர் ஷோஷன் ஹரன், அவரது மகள் ஆதி ஷோஹாம், ஆதியின் இணையர் தால் ஷோஹாம் மற்றும் அவர்களது குழந்தைகளான நவே மற்றும் யாஹெல் ஆகியோர் கிப்புட்ஸ் பீரியில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக அவர் நிறுவிய லாப நோக்கற்ற Fair Planet என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் டாக்டர் ஹரனுடனான தொடர்பை இழந்ததாகவும், ஆனால் டாக்டர் ஹரனின் கணவர் அவ்ஷலோமின் தொலைபேசி காசாவில் இருப்பது தெரியவந்தது என்றும் அவர்கள் கூறினர். முழு குடும்பமும் கடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள்.
*
அவ்ஷாலோம் ஹரன் - ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் ஜெர்மன்/இஸ்ரேலிய குடிமகன் - அவர்ப்இப்போது இறந்துவிட்டதாக பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 66. ஷோஷானுக்கு வயது 67, நவேக்கு வயது எட்டு, யாஹேலுக்கு மூன்று வயது.
ஷரோன் அவிக்டோரி, 52, மற்றும் அவரது மகள் நோம், 12 டாக்டர் ஹரனின் உறவினர்களுடன் அதே நேரத்தில் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. எவியடார் கிப்னிஸ், 65 மற்றும் அவரது மனைவி லிலாக் கிப்னிஸ், 60, ஆகியோர் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
85 வயதான யாஃபா ஆதார் , காஸாவின் எல்லைக்கு அருகில் உள்ள கிப்புட்ஸில் இருந்து கடத்தப்பட்டார். அவரது பேத்தி அத்வா நான்கு ஆயுதமேந்திய நபர்களால் சூழப்பட்ட நிலையில், காசாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட காணொளியை அவர் கண்டார்.

பட மூலாதாரம், Facebook
லண்டனைச் சேர்ந்த கலைஞரான ஷரோன் லிஃப்சிட்ஸின் பெற்றோர் , அச்சம் காரணமாக அவர்களின் அடையாளத்தை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர் - கிப்புட்ஸ் நிர் ஓஸிடமிருந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. திருமதி லிஃப்சிட்ஸ், அவரது தந்தை அரபு மொழி பேசுவார், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீனியர்களோடு ஓய்வு காலத்தில் தனது நேரத்தை செலவிட்டதாகவும் கூறினார்.
அடா சாகி , 74, கிப்புட்ஸ் நிர் ஓஸில் உள்ள அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்ரேலிய வீரர்கள் அவரின் இரத்தக் கறைகளைக் கண்டறிந்தனர், ஆனால் அவரது தாயின் எந்த அறிகுறியும் இல்லை என்றும் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களில் அவர் இல்லை என்றும் கூறினார்.

பட மூலாதாரம், நோம் சாகி
நிர் ஓஸ் கிப்புட்ஸ் மீதான அதே தாக்குதலின் போது முறையே டோரன் ஆஷரின் தாய் எஃப்ராட் காட்ஸ் மற்றும் காடி மோஸஸ் மற்றும் அவரது கூட்டாளியும் கடத்தப்பட்டதாக காடி மோஸஸ் விவசாய நிபுணராக பணியாற்றிய இஸ்ரேலிய உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிர் ஓஸ் கிப்புட்ஸ் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து அமெரிக்க-இஸ்ரேலிய குடிமகன் சாகுய் டெகல்-சென் காணாமல் போனதாக அவரது தந்தை ஜொனாதன் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ஜொனாதன் டெக்கல்-சென்
ஹமாஸ் வெளியிட்ட காணொளியில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் வெண்ணெய்ப் பண்ணையில் பணிபுரிந்து வந்த தாய்லாந்து நாட்டவரான அனுச்சா அங்கேவ் காணப்பட்டார். அவரது மனைவி வனிதா மார்சா அவரை பிபிசிக்கு அடையாளம் காட்டினார்.
தம்பதியரான பூந்தோம் பான்காங் மற்றும் நட்டாவேரி "யோ" மூன்கன் ஆகியோர் காசாவிற்கு அருகில் உள்ள காளான்கள் பொதி செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஹமாஸ் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய்லாந்து தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஓ-வாட் சூரியஸ்ரீ தனது கைகளை பின்னால் கட்டிய நிலையில் ஆயுதம் ஏந்தியவர்கள் அவரை பார்த்துக் கொண்டிருப்பது போல, அவரது குடும்பத்திற்கு சக ஊழியர் அனுப்பிய புகைப்படத்தில் கண்டதை தாய்லாந்து தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்த மானி ஜிராசாட் , ஹமாஸ் வசம் ஐந்து தொழிலாளர்களுடன் சேர்ந்து நின்றதை பார்த்ததாக அவரது தந்தை தாய்லாந்து தொலைக்காட்சிக்கு கொடுத்த நேர்காணல் தெரிவித்தது.
நத்தபான் ஒன்கே, கோம்க்ரிட் சம்பூவா, பர்னொயா டேம்க்லங், பட்டனயுத் டோன்சோக்ரி, கியாட்டிசக், தாப் பட்டீ மற்றும் போங்டோர்ன் ஆகியோர் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தால் பணயக்கைதிகளாக பட்டியலில் உள்ளனர். மொத்தம் 14 பேர் பிடிபட்டதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.
இரண்டு அமெரிக்கர்கள் - ஜூடித் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ரானன் - ஆகிய் இருவரும் பதினைந்து நாட்களுக்கு முன்பு தெற்கு இஸ்ரேலில் உள்ள கிப்புட்ஸ் நஹல் ஓஸில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு அக்டோபர் 20 அன்று ஹமாஸால் விடுவிக்கப்பட்டனர் .
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












