எல்.சி.யு. என்பது என்ன? லியோ திரைப்படம் அதற்குள் எவ்வாறு பொருந்துகிறது?

பட மூலாதாரம், X/Lokesh Kanagaraj
லியோ படம் வெளியாகியிருக்கும் நிலையில், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பதைக் குறிக்கும் ‘எல்.சி.யு’ (LCU) என்ற மூன்றெழுத்து பிரபலமாகி வருகிறது. சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றால் என்ன, லியோ அதற்குள் பொருந்துகிறதா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் லியோ திரைப்படம், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மூன்றாவது படம் என்று குறிப்பிடப்படுகிறது. முதல் இரண்டு படங்கள், கார்த்தி நடித்த கைதி மற்றும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம்.
சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றால் என்ன?
'சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்பது ஏதோ ஒரு கருத்துடன் அல்லது கதையுடன் தொடர்புடைய, தனித் தனித் திரைப்படங்களைக் குறிக்கும்.
உலகில் முதன் முதலில் மார்வெல் காமிக்ஸ்தான் மார்வெல் யுனிவர்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தி திரைப்படங்களை பிரமோட் செய்தது. ஒரே சினிமாட்டிக் யுனிவர்சிற்குள் வரும் படங்கள் அனைத்திலும் பாத்திரங்கள், பின்னணி, கதைக் களம் ஆகியவை ஒன்றாக இருக்கும். சம்பவங்களும் காட்சிகளும் புதிதாக இருக்கும்.
இதன் மூலம், வெவ்வேறு திரைப்படங்களில் வரும் பாத்திரங்களுக்கு இடையில் மோதல், அவற்றை வைத்து ஒரு புதிய கதை ஆகியவற்றை உருவாக்கிக்கொண்டே போக முடியும்.
சில சமயங்களில் ஒரு படம் வெற்றிபெற்ற பிறகு, அதன் தொடர்ச்சியாக அடுத்த படத்தை எடுப்பது, அதன் தொடர்ச்சியை எடுப்பது என சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்குவார்கள்.
ஆனால், ஒரு சினிமாட்டிக் யுனிவர்சுக்கு கதைத் தொடர்ச்சி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதோ ஒரு பாத்திரமோ, கதையின் ஒரு சிறு பகுதியோ, அந்த யுனிவர்சின் பிற படங்களோடு ஏதோ ஒரு வகையில் பொருந்தியிருந்தால் போதுமானது.
ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, புகழ்பெற்ற பாத்திரங்களின் உரிமத்தை ஸ்டுடியோக்கள் வைத்திருக்கும். ஆகவே, ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை பொதுவாக ஸ்டுடியோக்களே உருவாக்கும். ஆனால், இந்தியாவில் தயாரிப்பு நிறுவனங்கள், கதாநாயகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை மையப்படுத்தியும் சினிமாட்டிக் யுனிவர்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், LOKESH KANAGARAJ
இந்தியாவின் பிரசித்திபெற்ற சினிமாட்டிக் யுனிவர்ஸ்கள்
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பல சினிமாட்டிக் யுனிவர்ஸ்கள் உருவாகியிருக்கின்றன. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ், ரோஹித் ஷெட்டியின் போலீஸ் யுனிவர்ஸ், ராகவா லாரன்ஸின் பேய் காமெடி யுனிவர்ஸ், Hit யுனிவர்ஸ், லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸ் ஆகியவை இதில் முக்கியமானவை.
- யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ்: சல்மான் கானையும் காத்ரீனா கைஃபையும் வைத்து 2012ல் ஏக் தா டைகர் என்ற படத்தைத் தயாரித்தது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். இதன் தொடர்ச்சியாக 2017ல் டைகர் ஜிந்தா ஹை படத்தை தயாரித்தது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். இந்தப் படங்களில் இயக்குநர்கள் மாறினார்கள். இதற்குப் பிறகு, ஷாருக் கானுக்குப் பதிலாக ஹ்ரித்திக் ரோஷனை வைத்து, வார் என்ற படத்தை 2019ல் வெளியிட்டது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். பிறகு வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்தை வைத்து மீண்டும் ஷாருக் கானை ஹீரோவாக வைத்து பதான் படத்தை உருவாக்கியது அந்த தயாரிப்பு நிறுவனம். இந்தப் படங்கள் எல்லாம் சேர்ந்தே ஒய்.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸ் எனக் குறிப்பிடப்படுகின்றன.
- ரோஹித் ஷெட்டியின் போலீஸ் யுனிவர்ஸ்: தமிழில் வெளிவந்த சிங்கம் படத்தை இந்தியில் 2012ல் அதே பெயரில் ரீ மேக் செய்தார் ரோஹித் ஷெட்டி. பிறகு அதன் இரண்டாம் பாகத்தை சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் 2014ல் ரீ மேக் செய்தார். இதற்குப் பிறகு, போலீஸ் கதையை மையமாக வைத்து 2018ல் சிம்பா என்ற படத்தையும் 2021ல் சூரியவன்ஷி என்ற படத்தையும் இயக்கினார். இந்தப் படங்கள் எல்லாம் சேர்ந்து ரோஹித் ஷெட்டியின் காப் யுனிவர்ஸ் என்று குறிப்பிடப்படுகின்றன. விரைவிலேயே இதே யுனிவர்சில் இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் என்ற வெப் தொடரும் தி சிங்கம் அகைன் என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
- ராகவா லாரன்சின் பேய் யுனிவர்ஸ்: ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி 2007ல் வெளிவந்த முனி திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. திகில் அம்சங்களையும் நகைச்சுவையையும் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தப் படம், தமிழில் ஒரு புதிய வகைமாதிரியையே நிலைபெறச் செய்தது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளியானது. இதற்குப் பிறகு காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக காஞ்சனா 4, துர்கா ஆகிய படங்கள் தயாராவதாக கூறப்படுகிறது.
- ஹிட் யுனிவர்ஸ்: தெலுங்குப் பட இயக்குனராக சைலேஷ் கொலானு இயக்கத்தில் 2020ல் வெளியான ஹிட் - தி ஃபர்ஸ்ட் கேஸ்பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஒரு குற்றத்தை காவல்துறை அதிகாரி துப்பறிந்து கண்டுபிடிப்பதுதான் இதன் கதை. இதையடுத்து இதே பாணியில் ஹிட்: தி செகன்ட் கேஸ் என்ற படத்தை 2022ல் வெளியிட்டார் சைலேஷ். இப்போது நானியை வைத்து ஹிட்: தி தர்ட் கேஸ் படம் உருவாகி வருகிறது.

பட மூலாதாரம், LOKESH KANAGARAJ
லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்
லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம், அதன் திரைக் கதைக்காக வெகுவாகக் கவனிக்கப்பட்டு, பெரும் வெற்றிபெற்றது.
இதையடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் விஜய் நடித்த பிகில் படத்துடன் வெளியானது. இருந்தபோதும் விமர்சன ரீதியாக கைதி திரைப்படமே பெரிதும் கவனிக்கப்பட்டது.
இதையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ். அந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்களே வெளியாயின.
அதற்கடுத்ததாக கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கைதி படத்தில் பிஜோய் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த நரேன், விக்ரம் திரைப்படத்திலும் இடம்பெற்றார்.
போதைப் பொருள் கும்பல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவை இந்த இரு படங்களுக்கும் மையப் புள்ளியாக இருந்ததால், கைதியின் தொடர்ச்சியாக விக்ரம் படத்தைப் பார்க்கலாம் என்றார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படம் வெளியாவதற்கு முந்தைய நாள், "விக்ரம் படத்தை பார்ப்பதற்கு முன்பு கைதி படத்தைப் பார்த்துவிடுங்கள்" என்றார். இதையடுத்துத்தான் LCU எனப்படும் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் உருவானது.
இப்போது வெளியாகியிருக்கும் லியோ படத்தில் கைதி, விக்ரம் ஆகிய இரு படங்களையும் இணைக்கும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. லியோவாக வரும் விஜய் தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் எனச் சொல்லும்போது, அவருக்குப் பாதுகாப்பாக கைதி படத்தில் ஜார்ஜ் மரியன் ஏற்று நடித்திருந்த கான்ஸ்டபிள் நெப்போலியனே காவலாக வருகிறார்.
அதேபோல, விக்ரம் படத்தில் நடித்திருந்த மாயா சில காட்சிகளில் வருகிறார். லியோ படம் நிறைவுக்கு வரும்போது, "போதைப் பொருளை ஒரு இடத்தில் அழித்தால் போதாது. எல்லா இடங்களிலும் அழிக்க வேண்டும்," கமல்ஹாசனின் குரல் ஒலிக்கிறது. பிறகு இருவரது அணியும் சேர்வதுபோல படம் நிறைவுக்கு வருகிறது.
ஏற்கனவே, விக்ரம் படத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவை வைத்து அடுத்த படத்திற்கான துவக்கத்தைக் கொடுத்திருப்பார் லோகேஷ் கனகராஜ். இப்போது லியோ படமும் அடுத்த படத்திற்கான துவக்கத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜைப் பொறுத்தவரை, லியோவுக்கு அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. கைதி படத்தின் இரண்டாம் பாகம், விக்ரம் படத்தில் வரும் சூர்யாவின் பாத்திரத்தை மையப்படுத்திய ரோலக்ஸ் திரைப்படம், விக்ரம் படத்தின் அடுத்த பாகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடுத்ததாக இயக்கக்கூடும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












