லியோ - ரசிகர்கள் விமர்சனம்: குடும்பங்கள் கொண்டாடும் படமா?

லியோ

பட மூலாதாரம், X / Trisha

லோகேஷ் கனகராஜ் இயக்கி, நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நேற்று (வியாழன், அக்டோபர் 19) வெளியானது.

தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானது.

லியோ, விஜய், லோகேஷ் கனகராஜ்

பாலக்காட்டில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானதையடுத்து, தமிழகத்திலிருந்தும் ரசிகர்கள் பாலக்காட்டிற்குச் சென்று படம் பார்த்தனர்.

லியோ, விஜய், லோகேஷ் கனகராஜ்
படக்குறிப்பு, பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கத்தில் 4 மணிக் காட்சிக்காகக் குழுமியிருந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர்

பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கத்தில் 4 மணிக் காட்சிக்காகக் குழுமியிருந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர்.

படம் திரையிடப்பட்டபோது திரைக்கு முன்னும் சென்று நடனமாடித் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

நடிகர் விஜய் ரசிகர்மன்றத்தினரின் கூற்றுப்படி, கேரளாவில் 620 திரைகளில் இப்படம் வெளியிடப்படுகிறது.

படம் பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?

கேரளாவின் பாலக்காட்டில் திரைப்படம் வெளியான திரையரங்கு ஒன்றில் லியோ திரைப்படம் பார்த்த ரசிகர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

"திரைக்கதை மிகவும் வேகமாக இருந்தது. முதல் பாதி மிகவும் போவதே தெரியாது. லோகேஷின் படம் எப்போதும் அப்படித்தான் இருக்கும். இரண்டாம் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. ஆனால் கிளைமேக்ஸ் நெருங்கும்போது விறுவிறுப்படைகிறது." என்று ஒரு ரசிகர் கூறினார்.

"கிராபிக்ஸ் மிகவும் தரமாக இருக்கிறது. கழுதைப் புலிகள் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது" என்று மற்றொரு ரசிகர் கூறினார்.

லியோ

பட மூலாதாரம், X/@LOKESH KANAGARAJ

"இதுவரைக்கும் விஜய் திரைப்படம் என்றால் மாஸ் வசனங்கள் இருக்கும். மாஸ் காட்சிகள் இருக்கும். இரண்டு மூன்று டான்ஸ் இருக்கும். இந்தப் படத்தில் விஜய் என்ற நடிகரை லோகேஷ் கனகராஜ் தேவையான அளவு பயன்படுத்தியிருக்கிறார்" என்று பிபிசியிடம் பேசிய இன்னொருவர் தெரிவித்தார்.

"என்ன எதிர்பார்த்தோமோ அது படத்தில் இருக்கிறது. குடும்பமாகவும் பார்க்கலாம். பெண் ரசிகர்கள் ஏராளமானோர் படத்துக்கு வந்திருக்கிறார்கள்." என்றார் படம் பார்த்த ரசிகர்களில் ஒருவர்

"முழுமையான ஆக்சன் படம் இது" என்று பரவலாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

லியோவில் எல்சியூ காட்சிகள் இருப்பதாக படம் பார்த்த ஒரு ரசிகர் கூறினார்.

லியோ

மதுரை ரசிகர்கள் கூறுவது என்ன?

மதுரையில் பிபிசியிடம் பேசிய ரசிகர் ஒருவர், "இசை, திரைக்கதை போன்றவை சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். வாரிசு திரைப்படம் மெதுவாக நகர்ந்தது. இந்தப்படம் ஆக்ஷனுடன் வேகமாகச் செல்கிறது. குடும்பத்துடன் படத்தை பார்க்கலாம்" என்றார்.

"படம் 200 சதவிகிதம் சிறப்பாக வந்திருக்கிறது" என்று மற்றொரு ரசிகர் தெரிவித்தார்

"சிங்கத்தின் கர்ஜனை சிறப்பாக இருந்தது" என்று ஒரு ரசிகரும், "ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்" என்று மற்றொரு ரசிகரும் கூறினார்கள்.

"எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே படம் இருந்தது. சீட் நுனியில் இருந்து பார்க்க வேண்டியிருந்தது. குடும்பத்துடன் படத்தை பார்க்கலாம்" என்று பெண் ஒருவர் கூறினார்.

லியோ

சென்னையில் பெண் ரசிகர் ஒருவர் கூறும்போது, " எனக்கு திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. எங்கேயும் அலுப்புத் தட்டவே இல்லை, அடுத்து என்ன, அடுத்து என்ன என எதிர்பார்ப்புக்குள்ளேயே வைத்திருந்தது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது என்றார்.

"LCU என்பது வலிந்து தினிக்கப்பட்டிருக்கிறது, ஒரு வேளை அது வியாபார யுக்திக்காக மட்டும் ஹைலைட் செய்யப்பட்டிருக்கலாம். கதையோடு அது ஒட்டவே இல்லை" என்று மற்றொரு ரசிகர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 4 மணிக் காட்சிக்கு அனுமதி மறுப்பு

முன்னர் இந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சிகளை வெளியிட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி அரசிடம் தயாரிப்புத் தரப்பு விண்ணப்பித்தது. அதன்படி, அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை சிறப்புக் காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால், இதற்குப் பிறகு, வேறு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் காட்சிகள் காலை 9 மணிக்குத் துவங்கி இரவு 1.30 மணிக்குள் நிறைவுபெற வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.

அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தயாரிப்புத் தரப்பு அதிர்ச்சியடைந்தது.

மேலும், படத்தின் நீளம் இரண்டே முக்கால்மணி நேரமாக இருக்கும் நிலையில், அரசு குறிப்பிட்டிருக்கும் காலத்திற்குள் ஐந்து காட்சிகளை திரையிடுவது இயலாத காரியம் என்றும் தயாரிப்புத் தரப்புக் கூறியது.

இதையடுத்து, அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி கோரி படத்தைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கூடுதல் காட்சியைத் திரையிட அனுமதித்துவிட்டு, அதற்கான நேரம் வழங்காவிட்டால் எப்படித் திரையிட முடியும் எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்தது.

லியோ படம் தொடர்பாக இதுவரை வெடித்த சர்ச்சைகள்

பொதுவாக நடிகர் விஜய் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமாக நடக்கும் நிலையில், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட விரும்புவதால் ஆளும் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பது உள்பட பல காரணங்கள் இதற்குக் கூறப்பட்டன. ஆனால், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்திருந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தயாரிப்புத் தரப்பு கூறியது.

இதற்குப் பிறகு, லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியான போது அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, ட்ரெய்லரில் அந்த வார்த்தை நீக்கப்பட்டது.

இதற்கு நடுவில் லியோ படத்தில் 'நான் ரெடிதான்' பாடலில் நடனமாடிய நடனக் கலைஞர்கள் 1,300 பேருக்கு பேசியபடி சம்பளம் அளிக்கப்படவில்லையென அவர்கள் புகார் கூறினர். ஆனால், அடுத்த சில நாட்களில் முழுமையாக அளிக்கப்பட்டு இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)