லியோ: காலை 4 மணி காட்சிக்கு ஐகோர்ட் அனுமதி மறுப்பு - அஜித் பட நிகழ்வை சுட்டிக்காட்டி அரசு கூறியது என்ன?

விஜய், லியோ, சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், X/ @7SCREENSTUDIO

படக்குறிப்பு, லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது

விஜய் நடிக்கும் லியோ படத்தைச் சுற்றியெழும் சர்ச்சைகள் நின்றபாடில்லை.

முதலில் படத்தின் டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது சர்ச்சையானது, பிறகு அந்த டிரைலரை வெளியிட்ட திரையரங்கை பார்வையாளர்கள் சேதப்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது.

தற்போது, அதிகாலை நான்கு மணிக்குத் திரையிட அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

என்ன நடந்தது இந்த வழக்கில்?

'ஐந்து காட்சிகளை திரையிடுவது இயலாத காரியம்'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சிகளை வெளியிட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி அரசிடம் தயாரிப்புத் தரப்பு விண்ணப்பித்தது.

அதன்படி, அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை சிறப்புக் காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அரசு அரசாணை வெளியிட்டது. இதற்குப் பிறகு, மற்றும் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் காட்சிகள் காலை 9 மணிக்குத் துவங்கி இரவு 1.30 மணிக்குள் நிறைவுபெற வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.

அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தயாரிப்புத் தரப்பு அதிர்ச்சியடைந்தது. மேலும், படத்தின் நீளம் இரண்டே முக்கால்மணி நேரமாக இருக்கும் நிலையில், அரசு குறிப்பிட்டிருக்கும் காலத்திற்குள் ஐந்து காட்சிகளை திரையிடுவது இயலாத காரியம் என்றும் தயாரிப்புத் தரப்புக் கூறியது.

இதையடுத்து, அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி கோரி படத்தைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விஜய், லியோ, சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், X/@LOKESH KANAGARAJ

படக்குறிப்பு, லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் விஜய் கெட்ட வார்த்தை ஒன்றை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது

மற்ற மாநிலங்களில் 4 மணி காட்சிக்கு அனுமதி

அந்த மனுவில் தமிழ்நாடு அரசின் சினிமா ஒழுங்கு முறை விதிகளின்படி ஒரு நாளைக்கு நான்கு காட்சிகளுக்கு மேல் திரையிட முடியாது; கூடுதல் காட்சிகளை நடத்த வேண்டுமென்றால் அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்பதால் கூடுதல் காட்சிகளை அனுமதிக்கக் கோரி கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியன்று அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

அதில், அக்டோபர் 19ஆம் தேதி ஆறு காட்சிகளையும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை ஐந்து காட்சிகளையும் நடத்த அனுமதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது. 19ஆம் தேதியன்று முதல் காட்சியை அதிகாலை நான்கு மணிக்கும் 20ஆம் தேதி முதல், முதலாவது காட்சியை காலை 7 மணிக்கும் துவங்க அனுமதி கோரப்பட்டது.

19 முதல் 24ஆம் தேதிவரை ஐந்து காட்சிகளைத் திரையிட அனுமதியளித்து அக்டோபர் 10ஆம் தேதியன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து 19ஆம் தேதி கூடுதல் காட்சி ஒன்றைத் திரையிட அனுமதி கோரி அக்டோபர் 11ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது.

இது குறித்து அரசாணையை வெளியிட்ட அரசு, ஐந்து காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்ததோடு, காட்சி காலை 9 மணிக்குத் துவங்கி இரவு 1.30க்குள் முடிய வேண்டுமென நிபந்தனை விதித்தது.

லியோ திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடம். படத்திற்கு இடையில் 20 நிமிடம் இடைவேளை இருக்க வேண்டும். ஒரு காட்சி முடிந்த பிறகு அடுத்த காட்சிக்குத் திரையரங்கைத் தயார் செய்ய 30 நிமிட இடைவெளி தேவை. ஆகவே ஒரு காட்சிக்கு 3.45 நிமிடம் ஆகும். அப்படியானால் ஐந்து காட்சிகளைத் திரையிட பதினேட்டே முக்கால் மணி நேரம் ஆகும். ஆனால் அரசு பதினாறரை மணி நேரமே அளித்திருக்கிறது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் நான்கு மணி காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே 19ஆம் தேதியன்று தமிழ்நாட்டிலும் 4 மணிக் காட்சியைத் திரையிட அனுமதிக்க வேண்டும்" என இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விஜய், லியோ, சினிமா, கோலிவுட்
படக்குறிப்பு, கூடுதல் காட்சியைத் திரையிட அனுமதித்துவிட்டு, அதற்கான நேரம் வழங்காவிட்டால் எப்படித் திரையிட முடியும் எனக் கேள்வியெழுப்பினார் நீதிபதி

நீதிபதி சொன்னது என்ன?

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக தயாரிப்புத் தரப்பின் சார்பில் கர்னல் கணேசன் திங்கட்கிழமையன்று முறையிட்டார். வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "படம் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் எனத் தெரிந்திருந்தால் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதித்திருக்க மாட்டோம். நான்கு காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும். ஒரு படத்திற்கு 4 மணிக் காட்சி திரையிடப்பட்ட போது, ஒருவர் உயிரிழந்தார். லியோ படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்ட போது, திரையரங்கே நாசம் செய்யப்பட்டது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே ஐந்து காட்சிகளுக்கு மட்டுமே அனுமதிக்க முடியும். படத்தை 9 மணிக்குத் தான் துவங்க முடியும்" என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

தயாரிப்பு தரப்பின் சார்பில், "கூடுதல் காட்சிகளில் விதிமுறை மீறல் ஏதும் இல்லை. வேண்டுமானால் இடைவேளை நேரத்தை குறைத்துக் கொள்கிறோம்" என்று கோரப்பட்டது.

இதையடுத்து, கூடுதல் காட்சியைத் திரையிட அனுமதித்துவிட்டு, அதற்கான நேரம் வழங்காவிட்டால் எப்படித் திரையிட முடியும் எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்தார். ஆனால், 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அரசிடம் விண்ணப்பிக்க தயாரிப்புத் தரப்புக்கு உத்தரவிட்டார். இது குறித்து நாளை மதியம் ஒன்றரை மணிக்குள் அரசு முடிவெடுக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

விஜய், லியோ, சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், X/ @7SCREENSTUDIO

லியோ படம் தொடர்பாக இதுவரை வெடித்த சர்ச்சைகள்

பொதுவாக நடிகர் விஜய் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமாக நடக்கும் நிலையில், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட விரும்புவதால் ஆளும் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பது உள்பட பல காரணங்கள் இதற்குக் கூறப்பட்டன. ஆனால், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்திருந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தயாரிப்புத் தரப்பு கூறியது.

இதற்குப் பிறகு, லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியான போது அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, ட்ரெய்லரில் அந்த வார்த்தை நீக்கப்பட்டது.

இதற்கு நடுவில் லியோ படத்தில் 'நான் ரெடிதான்' பாடலில் நடனமாடிய நடனக் கலைஞர்கள் 1,300 பேருக்கு பேசியபடி சம்பளம் அளிக்கப்படவில்லையென அவர்கள் புகார் கூறினர். ஆனால், அடுத்த சில நாட்களில் முழுமையாக அளிக்கப்பட்டு இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்திய அதிகாலை காட்சிகள்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி அஜீத் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாயின. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் இந்த இரு படங்களுக்கும் ஒரே நாளில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. துணிவு படத்திற்கு அதிகாலை 1 மணிக்கும் வாரிசு படத்திற்கு அதிகாலை நான்கு மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

துணிவு படம் திரையிடப்படுவதற்கு முன்பாக, திரையரங்கின் முன் வந்த லாரி ஒன்றில் ஏறி நடனமாடிய அஜீத் ரசிகர் ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்தார். திரையரங்கில் இருந்த கட் - அவுட்களும் அடித்து நாசம் செய்யப்பட்டன.

இதற்குப் பிறகு, சிறப்புக் காட்சிகள் குறித்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் வெளியாயின.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)