‘காஸா மீது போரை நிறுத்தாவிட்டால், நிலைமை கட்டுக்குள் இருக்காது’ - இஸ்ரேலை எச்சரிக்கும் இரான்

இஸ்ரேலை எச்சரிக்கும் இரான்

பட மூலாதாரம், EPA

காஸா மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கில் நிலைமைகள் கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் என இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவையும் பழிகூற வேண்டியுள்ளது என்றார் அவர்.

ஆனால் "இஸ்ரேல் வீரர்கள் தங்கள் நாட்டு உயிர்களுக்காக போர்களத்தில் நிற்கின்றனர்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார்.

ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹெஸ்புல்லா ஆகிய இரு அமைப்புகளையும் இரான் ஆதரிக்கிறது.

ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தரவுகள் படி, கடந்த இரண்டு வாரங்களில் காஸாவில் 5800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை வான் வழி தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

“அமெரிக்கா மற்றும் அதன் பிரதிநியான இஸ்ரேலை எச்சரிக்கிறேன். காஸாவில் மனிதத்துக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்களையும் இனப்படுகொலையையும் நிறுத்தாவிட்டால், என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பிறகு இந்த பகுதியில் நிலைமைகள் கட்டுக்குள் இருக்காது” என்று செய்தியாளர் சந்திப்பில் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை எச்சரிக்கும் இரான்

பட மூலாதாரம், Getty Images

இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா ராணுவ உதவியை இஸ்ரேலுக்கும் வழங்குகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் பிரதிநிதியாகவே இஸ்ரேல் இந்த போரை நடத்துகிறது என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் உயர் அதிகாரிகளும் இந்த மோதல் பிற பகுதிகளுக்கு பரவக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின், அமெரிக்க படைகள் மற்றும் குடிமக்கள் மீது தாக்குதல் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.

“தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், தற்போது நடைபெறும் மோதலை பெரிதாக்க வேண்டும் என எந்தவொரு அமைப்பும் அல்லது நாடும் நினைத்தால் எங்கள் அறிவுரை: வேண்டாம்” என்று அவர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அமெரிக்க செயலாளர் ஆண்டனி பிளின்கென், இரானின் பிரதிநிதிகளான ஹெஸ்புல்லா அல்லது ஹமாஸ் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தக்கூடும் என்று தெரிவித்திருந்தார். இஸ்ரேலை பாதுகாக்கவும், அமெரிக்க குடிமக்களை பாதுகாக்கவும் அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலை எச்சரிக்கும் இரான்

பட மூலாதாரம், Getty Images

சமீப நாட்களில் அமெரிக்க படைகள் பயன்படுத்தும் இராக்கின் தளங்கள், ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

ஹெஸ்புல்லாவுடன் மோதல் நடைபெறும் இஸ்ரேலின் மேற்கு எல்லையில் உள்ள படைகளை இஸ்ரேல் பிரதமர் ஞாயிற்றுகிழமை பார்வையிட்டார்.

“நமது வாழ்வுக்கான போராட்டத்தில் இருக்கிறோம். இது நமது நாட்டுக்கான போர் என்றால் அது மிகையாகாது. செய் அல்லது செத்து மடி. அவர்கள் சாக வேண்டும்” என்றார் அவர்.

ஹிஸ்புல்லா இந்த போரில் நுழைய வேண்டாம் என அவர் எச்சரித்தார்.

“ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறை செய்யக்கூடும். நாங்கள் அவர்களை கற்பனை செய்ய முடியாத பலத்துடன் தாக்குவோம். அது அவர்களுக்கும் லெபனானுக்குமான பேரழிவாக இருக்கும்” என்று அவர் எச்சரித்தார்.

இஸ்ரேலை எச்சரிக்கும் இரான்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், ஹெஸ்புல்லா, இஸ்ரேலை எதிர்த்து போராட முழு வீச்சில் தயாராக இருப்பதாக அறிவித்துளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான மோதலின் போது தெற்கு லெபனான் பகுதியில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள பல குடும்பங்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

அண்டை நாடான் சிரியாவில் இரானுக்கு ராணுவ இருப்பு உள்ளது. சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை ஞாயிற்றுகிழமை நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் இறந்ததாக சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலினால் ஏற்பட்ட சேதம் காரணமாக இரண்டு சர்வதேச விமான நிலையங்களும் தற்போது பயன்பாட்டில் இல்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)