சியரா மாட்ரே: துருப்பிடித்த கப்பலை கொண்டு சீனாவுக்கு சவால் விடும் பிலிப்பைன்ஸ் - எப்படி தெரியுமா?

சீனா vs பிலிப்பைன்ஸ்

பட மூலாதாரம், reuters

படக்குறிப்பு, சியரா மாட்ரே

ஞாயிற்றுக்கிழமை சீன கடற்படையின் கடலோரக் காவல் கப்பலுக்கும் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வீடியோவைக் கவனமாகக் கவனியுங்கள்.

மோதலின் போது, ஒரு கப்பலின் பின்புறம் மற்றொரு கப்பலின் மேல் மோதும்போது, அதற்கிடையில் ஒரு பிலிப்பைன்ஸ் தொலைக்காட்சி குழுவினர் இதனை படமாக்க கடுமையாக முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது.

தென் சீன கடலில் உள்ள பவளத் திட்டுகள் தொடர்பாக மணிலாவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.

ஆனால் சமீபத்திய மாதங்களில் ஒன்று மாறிவிட்டது. கடலில் ஏற்படும் மோதல்கள் இப்போது தொலைக்காட்சி ஊடகங்களின் முன்னிலையிலேயே நடக்கின்றன.

கடந்த சில வாரங்களில் இது இரண்டாவது முறையாக பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர்கள் இரண்டாம் தாமஸ் பவளத்திட்டு, ஆயுங்கின் பவளத்திட்டு அல்லது ரென் ஐ பவளத்திட்டு என பல்வேறு விதமாக அறியப்படும் உணர்திறன் மிக்க பவளத்திட்டு அருகே மோதலைப் படம்பிடித்துள்ளனர்.

இதனிடையே பிலிப்பைன்ஸை தாக்க சீனா முயன்றால் அமெரிக்கா சும்மா இருக்காது என அதிபர் பைடன் எச்சரித்துள்ளார்.

சீனா பிலிப்பைன்ஸ் கடலில் மோதல்

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, தெற்கு சீன கடல் அல்லது மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவும் பிலிப்பைன்ஸும் போட்டியிட்டு வருகின்றன.

இது விபத்து அல்ல. இது மணிலா தனது நீர் எல்லைகளில் என்று கூறும் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த நினைப்பதை சீனாவின் "முரட்டுத்தனம்" என்று கூறுகிறது பிலிப்பைன்ஸ். இதனை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட கொள்கையின் ஒரு பகுதியாகும்.

"இந்த ஆண்டு நாம் குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பார்த்துள்ளோம். இதைத்தான் நான் திட்டவட்டமான வெளிப்படைத்தன்மை பிரச்சாரம் என்று அழைக்கிறேன்" என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கார்டியன் நாட் மையத்தின் ஓய்வுபெற்ற கர்னல் ரேமண்ட் பவெல் கூறுகிறார்.

ஜனவரி முதல், பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்த மோதல்களின் வீடியோக்களை உள்ளூர் ஊடகங்களுக்கு அதிகளவில் வழங்கத் தொடங்கியது. கோடை காலத்திற்குள், பிபிசி உட்பட அதிகமான பத்திரிகையாளர்களை தனது படகுகள் மற்றும் விமானங்களில் சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றது.

"சீனாவின் மறைமுக நடவடிக்கைகளில் ஒளி பாய்ச்சுவது போன்றது" என்று கர்னல் பவெல் கூறுகிறார்.

சீனா பிலிப்பைன்ஸ் கடலில் மோதல்

பட மூலாதாரம், REUTERS

துருப்பிடித்த கப்பலைக் கொண்டு சீனாவுக்கு சவால் விடும் பிலிப்பைன்ஸ்

சீனா இந்த புதிய உக்திகளால் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது.

ஓரளவுக்கு இந்த உத்தி வேலை செய்தது போல் தெரிகிறது என்று ஃப்ரீமான் ஸ்போக்ளி இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் ஓரியானா ஸ்கைலர் மாஸ்ட்ரோ கூறுகிறார்: "சீனாவின் நடவடிக்கைகளில் சிறிது தணிவைப் பார்த்தோம்."

பெய்ஜிங் கொஞ்சம் பின்வாங்கியது, மேலும் மணிலா இரண்டாம் தாமஸ் பவளத்திட்டில் உள்ள தனது தளத்திற்கு பல மறுசேவைகளை வழங்க முடிந்தது - இது இரண்டாம் உலகப் போரின் காலத்தைச் சேர்ந்த சியரா மாட்ரே என்ற கப்பல் ஆகும்.

இது 1999 ஆம் ஆண்டு பவளத்திட்டில் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது. அப்போதிருந்து, பிலிப்பைன்ஸ் கடற்படையினரின் ஒரு சிறிய குழு, படிப்படியாக சிதறத் தொடங்கியிருக்கும் துருப்பிடித்த கப்பல் மீது காவலை வைத்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு பிபிசி குழு கப்பலில் ஏறி பார்த்தது. அப்போதுகூட அது மோசமான நிலையில் இருந்தது, அதன் பக்கங்களில் பெரிய துளைகள் இருந்தன, அலைகள் கட்டமைப்பின் வழியாக தெறித்தன.

பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் சீனா நீண்ட கால ஆட்டத்தை ஆடும் அளவுக்கு திருப்தியாக இருப்பதாக நம்புகிறார்கள். பெய்ஜிங் மற்றும் மணிலா இடையிலான உறவுகள் நல்ல நிலையில் இருக்கும்போது, சீனாவின் கடலோரக் காவல் சியரா மாட்ரேவுக்கு மறுசேவையை அனுமதித்துள்ளது. உறவுகள் சீர்கெட்டால், அவர்கள் மறுசேவை கப்பல்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால் பெய்ஜிங்கின் ஒட்டுமொத்த மதிப்பீடு என்னவென்றால், சியரா மாட்ரே என்றென்றும் நீடிக்க முடியாது, மேலும் கப்பல் கடலில் சிதறும்போது, பிலிப்பைன்ஸ் கடற்படையினரை வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சீனா பிலிப்பைன்ஸ் கடலில் மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாம் தாமஸ் பவளத்திட்டில், இரண்டாம் உலகப் போர் காலத்திய சியரா மாட்ரே என்ற தனது கப்பலை மணிலா நிலை நிறுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸின் புதிய அதிபரும் புதிய கொள்கையும்

முன்னாள் அதிபர் ரோட்ரீகோ டுடேர்டெ ஆட்சியின் கீழ் ஆறு ஆண்டுகளில் இந்த அனுமானம் நன்றாக நிறுவப்பட்டதாகத் தோன்றியது. ஆனால் கடந்த ஆண்டு ஜூனியர் பெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பிலிப்பைன்ஸின் வெளியுறவுக் கொள்கை 180 டிகிரி திரும்பியுள்ளது.

அதிபர் மார்க்கோஸ், ரோட்ரீகோ டுடேர்டெ பெய்ஜிங்கிற்கு நெருக்கமாக இருக்கும் கொள்கையை தலைகீழாக மாற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல், அமெரிக்காவுடனான கூட்டணியையும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். மணிலாவின் 200-கடல் மைல்கள் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து உரத்த குரலில் பேசத் தொடங்கியுள்ளார்.

இதில் இன்னும் இருக்கிறது. பிலிப்பைன்ஸ் சியரா மாட்ரேவுக்கு மறுசேவைகள் எடுத்து செல்லும் போது, உணவு மற்றும் தண்ணீர் மட்டும எடுத்துச் செல்லவில்லை என்கிறது மணிலாவில் உள்ள வட்டாரங்கள். சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களை அமைதியாகக் கப்பல் ஏற்றிச் செல்வதாக அவர்கள் கூறுகின்றனர். நோக்கம்: துருப்பிடித்த கப்பலைக் கரைசேர்ப்பது.

சீனா பிலிப்பைன்ஸ் கடலில் மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சியாரா மாட்ரே சிதைந்த பிறகு, இந்த பகுதியில் மோதல்கள் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியரா மாட்ரேவுக்கு முடிவு நெருங்கிவிட்டது

"கப்பலின் ஆயுளை நீட்டிப்பது மிகவும் கடினமாக இருக்கும்," என கர்னல் பவெல் கூறுகிறார். "நாங்கள் ஒரு நெருக்கடி நிலையை நெருங்கி வருவதாக நினைக்கிறேன். சியரா மாட்ரேவுக்கு முடிவு நெருங்கிவிட்டது. அது மிக விரைவில் உடைந்து போகலாம்."

ஒருவேளை இந்த புதிய அவசர உணர்வுதான் மணிலாவையும் பெய்ஜிங்கையும் தீவிரமாக தள்ளுகிறது. ஆயுங்கின் பவளத்திட்டில் தனது இருப்பைத் தக்கவைக்க பிலிப்பைன்ஸ் தவியாய்த் துடிக்கிறது. சியரா மாட்ரே தப்பிப்பிழைக்காது என்பதில் உறுதியாக இருக்கும் பெய்ஜிங், தனது அதிகாரத்தை மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் சியரா மாட்ரே இறுதியாக தென் சீனக் கடலில் - அல்லது மணிலாவில் அழைக்கப்படுவது போல மேற்கு பிலிப்பைன் கடலில் சிதறினால் - பிறகு என்ன நடக்கும்?

பெய்ஜிங் பாய்ந்து வந்து தென் சீனக் கடலில் வேறு எங்கும் செய்ததைப் போல பவளத்திட்டைக் கைப்பற்ற முயற்சிக்குமா? மணிலா ஆயுங்கின் பவளத்திட்டில் மற்றொரு கப்பலை தரையிறக்க முயற்சிக்குமா? வாஷிங்டன் எப்படி நடந்துகொள்ளும்?

யாருக்கும் தெரியாது, ஆனால் அந்த நாள் வருகிறது, விரைவில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)