பாலத்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராடும் அமெரிக்க யூதர்கள் - ஏன்?
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் வாழும் யூதர்கள் பாலத்தீனத்திற்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத "கேனான் ஹவுஸ்" அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர்நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
வாஷிங்டனில் நடந்த பேரணி, இரண்டு இடதுசாரி யூத அமைப்புக்கள்ல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டு அமைப்புகளும் இஸ்ரேல் என்ற நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.
ஒரு பெரிய போராட்டக் குழுவினர் பேரணி நடத்தியதாகத் தெரிவித்த போலீசார், நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள தெருக்களை புதன்கிழமையன்று மூடிவிட்டனர்.
இதற்கிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் துரிதப்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ஹமாஸ் தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடங்கி 1,400 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று 200 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்து இன்று இரண்டு வாரங்களாகிறது.
காஸாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட சுமார் 200 பணயக்கைதிகளில் முதல் இருவர் வெள்ளிக்கிழமை அன்று கத்தார் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
அக்டோபர் 7 ஆம் தேதி அன்று அமெரிக்க பிரஜையான ஜூடித் ரானனும் அவரது 17 வயது மகள் நடாலியும் காஸாவிற்கு அருகில் உள்ள தெற்கு இஸ்ரேலில் உள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தபோது, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின்போது, இஸ்ரேலின் தெற்கு பகுதியில் இருந்த சுமார் 200 பேரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதில், அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு பிறகு, கத்தார் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி இருவரை விடுதலை செய்துள்ளது ஹமாஸ் ஆயுதக்குழு.
இதுகுறித்து அமெரிக்க ஊடகத்தில் பேசிய நடாலின் தந்தை, தனது வாழ்க்கையில் மிகவும் மோசமான இரண்டு வாரங்களை தான் வாழ்ந்ததாக விவரித்துள்ளார்.
"நான் கண்ணீரில் இருக்கிறேன், நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்," என்று மேலும் பேசிய யூரி கூறினார்.
அவர் தனது 17 வயது மகள் தொலைபேசியில் "அதிகம் எதுவும் சொல்லவில்லை" ஆனால் அவர் ஒரு வாரத்தில் சிகாகோவில் உள்ள வீட்டிற்கு வருவார் என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



