இஸ்ரேலுக்காக அமெரிக்கா அதிகபட்சம் என்ன செய்யும்? போரில் இறங்க தயாராக உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜொனாதன் பேலி
- பதவி, பாதுகாப்பு செய்தியாளர், இஸ்ரேல்
அமெரிக்கா தடையற்ற ஆதரவை இஸ்ரேலுக்கு தொடர்ந்து தருவதாக உறுதியளித்துள்ளது. அதற்காக தனது ராணுவ உதவியையும் அளித்துள்ளது. ஆனால் இப்பகுதியில் கடந்த காலச் சிக்கல்களின் வடுக்கள் இன்னும் உணரப்படுவதால், அமெரிக்காவின் ஈடுபாட்டிற்கான வரம்பு எவ்வளவு தூரம் உள்ளது?
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு தனது முதல் எதிர்வினையில், அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்கா யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்தினார்: "அமெரிக்கா இஸ்ரேலுக்கு பின்னே பக்கபலமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
"சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எவருக்கும், என்னிடம் ஒரு வார்த்தை உள்ளது: வேண்டாம்," என்று அவர் மேலும் கூறினார்.
அதாவது, சூழ்நிலையைப் பயன்படுத்தி, இரு தரப்பினருக்கிடையே நடக்கும் மோதலில் தலையிட வேண்டாம் எனும் பொருள் படும்படி கூறியிருந்தார்.
இந்த எச்சரிக்கை ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குத்தான் எனத் தெளிவாகத் தெரிந்தது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகள் சமீபத்திய நாட்களில் பல முறை தாக்கப்பட்டுள்ளதாக பென்டகன் கூறுகிறது.
செங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பு யேமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்துள்ளது. அது, இஸ்ரேலைக் குறிவைத்து ஏவப்பட்டதாக கருதுவதாக பென்கடன் கூறியிருந்தது.
அமெரிக்கா ஏற்கனவே கிழக்கு மத்தியதரைக் கடலில் ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலை நிறுத்தியுள்ளது. விரைவில் அந்த பிராந்தியத்திற்கு மற்றொரு விமானந்தாங்கி போர்க்கப்பலையும் அனுப்பவுள்ளது. ஒவ்வொரு விமானந்தாங்கி கப்பலிலும் 70 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அப்பகுதிக்கு செல்ல ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்களை பைடன் தயார் நிலையில் வைத்துள்ளார்.
அமெரிக்கா இஸ்ரேலின் மிகப்பெரிய ராணுவ புரவலராக உள்ளது. ஆண்டுக்கு $3.8 பில்லியன்(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 31 ஆயிரம் கோடி) இஸ்ரேல் பாதுகாப்புக்காக உதவி செய்கிறது.
காஸா மீது குண்டுவீசும் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் அமெரிக்காவில் தயாரானவை. வழிகாட்டுதலின் பேரில் இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடிய ஆயுதங்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.
இஸ்ரேலின் அயர்ன் டோம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகள் சிலவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை தான்.
இஸ்ரேல் கேட்பதற்கு முன்பே அமெரிக்கா இந்த ஆயுதங்களை மீண்டும் விநியோகித்துள்ளது. அதேபோல, கடந்த வெள்ளியன்று இஸ்ரேலுக்கு உதவியாக 14 பில்லியன் டாலரை வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டார் அதிபர் பைடன்.
அடுத்த நாள், பென்டகன், டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) பேட்டரி உட்பட இரண்டு சக்தி வாய்ந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக அறிவித்தது
ஆனால், ஒரு அமெரிக்க அதிபர், அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கும் ஆண்டில் மற்றொரு போரில் தலையிட தயாராக விரும்புவாரா ?
காஸாவிற்கு நேரடியாக ராணுவத்தை அனுப்புமா அமெரிக்கா?

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவுக்கான முன்னாள் அமெரிக்க இஸ்ரேலிய தூதரான மைக்கேல் ஓரென், அதிபர் பைடன் ஏற்கனவே அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களை அப்பகுதிக்கு நகர்த்துவதன் மூலம் முதல் படியை எடுத்துள்ளதாக நம்புகிறார்.
"நீங்கள் அதைப் பயன்படுத்த தயாராக இல்லாவிட்டால், அந்த வகையான கைத்துப்பாக்கியை நீங்கள் வெளியே எடுக்க மாட்டீர்கள்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால் வாஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் சர்வதேச பாதுகாப்பு இயக்குனர் சேத் ஜி ஜோன்ஸ் கூறுகையில், “காஸாவில் நேரடியாக ராணுவ ரீதியாக ஈடுபடுவதற்கு அமெரிக்கா மிகவும் தயங்குகிறது.” என்றார்.
அமெரிக்க ராணுவத்தின் இருப்பு மற்றும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் திறன் மற்றும் வான் பாதுகாப்புக் கவசம் போன்றவற்றால், அமெரிக்கா துப்பாக்கியால் சுடாமலேயே இஸ்ரேலுக்கு அதிக நன்மைகளைத் தர முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
இது முதன்மையாக இஸ்ரேலின் வடக்கில் இருந்து வரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக ஆயுதக்குழுவான ஹெஸ்புலாவிடமிருந்து வந்த அச்சுறுத்தலாகும். இது இப்போது இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கவலையடையச் செய்கிறது.
காஸாவில் ஹமாஸை விட ஈரானிய ஆதரவுக் குழு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இது சுமார் 1,50,000 ராக்கெட்டுகளின் ஆயுதக் குவியலைக் கொண்டுள்ளது, அவை ஹமாஸ் பயன்படுத்தியதை விட மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் துல்லியமானவை. அது ஏற்கனவே தனது எதிரியான இஸ்ரேலுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இஸ்ரேல் காஸாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சோர்வாக இருக்கும்போது, ஹெஸ்புலா தலையிடக் கூடும் என்று ஓரன் அஞ்சுகிறார்.
அது நடந்தால், லெபனானுக்குள் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்கா தனது கணிசமான வான் படையைச் ஏற்பாடு செய்யும் சாத்தியம் இருப்பதாக ஓரென் நம்புகிறார்.
அமெரிக்காவின் தலையீட்டால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் இருவரும், நிலைமை தீவிரமடைந்து, ஏதேனும் அமெரிக்கப் பணியாளர்கள் அல்லது ராணுவம் குறி வைக்கப்பட்டால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஆஸ்டின், தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள அமெரிக்காவிற்கு உரிமை உண்டு என்றும், "தகுந்த நடவடிக்கை எடுக்க" அது தயங்காது என்றும் கூறினார்.
ஜோன்ஸ், மோதல் விரிவடைவதற்கான அபாயத்தை ஒப்புக்கொள்கிறார்,.
லெபனானில் உள்ள ஹெஸ்புலா, இஸ்ரேலின் வடக்கில் இருந்து ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால், "அவர்கள் மிகவும் கடுமையான பதிலடியை சந்திக்க நேரிடும்" என்று அவர் கூறுகிறார்.
பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள், ஈரானிய தொடர்புடைய குழுக்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க வந்துள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஹமாஸுடனான போரில் இஸ்ரேல் நேரடி ராணுவ ஆதரவையும் கோரவில்லை. ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ராணுவ வரலாற்றின் பேராசிரியர் டேனி ஆர்பாக், இஸ்ரேலின் ராணுவக் கோட்பாடு தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிடுகிறார்.
இந்த வாரம் அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு சென்றது, அமெரிக்காவின் ஆதரவு நிபந்தனைக்கு உட்பட்டது என்பதைக் காட்டுகிறது.
காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். மேலும், இஸ்ரேல் காஸா பகுதியை கால வரையின்றி ஆக்கிரமிப்பதையும் அவர் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது "பெரிய தவறு" என்றும் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் ஆதரவு காலவரையறையுடன் இருக்கலாம். ராணுவ ஆய்வாளரும் ஜெருசலேம் போஸ்ட்டின் கட்டுரையாளருமான யாகோவ், காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை தொடங்கி, பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்தவுடன் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவுக்கு எதிராக அழுத்தம் வரும் என்று நம்புகிறார்.
வரும் வாரங்களில் ஆதரவு குறையும் என்று அவர் நம்புகிறார்.
இஸ்ரேலுக்கான ராணுவ ஆதரவு மற்றும் பிராந்தியத்தில் அதன் சொந்த ராணுவத்தை நிறுத்துவது ஆகியவை மோதல் விரிவடைவதைத் தடுக்க போதுமானதாக இருக்கும் என்று அமெரிக்கா தெளிவாக நம்புகிறது.
இஸ்ரேல் சார்பாக அமெரிக்கா நேரடியாக தலையிட்டதற்கு சில முன் உதாரணங்கள் உள்ளன. 1991 வளைகுடா போரில் இஸ்ரேல் படையெடுப்பிற்கு முன்னதாக, ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க பேட்ரியாட் பேட்டரிகளை அமெரிக்கா அனுப்பியது.
உண்மையில், அமெரிக்கா பெரும்பாலும் இஸ்ரேலின் மீதான தனது ராணுவச் செல்வாக்கை ஒரு கட்டுப்பாட்டுக் கரமாகப் பயன்படுத்துகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












