இலங்கையில் இயல்பு நிலைக்கு திரும்பும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தங்கள் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருந்த குடும்பங்களில் பெரும்பாலானவை தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
ஏற்கனவே அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் 25 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த எண்ணிக்கை தற்போது 17 ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட 66 ஆயிரமாக ஆக குறைந்துள்ளது.
208 பேர் இறந்திருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 92 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடருவதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

அனர்த்தங்கள் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருப்பது தொடர்பில் உறவினர்களில் பலரும் நம்பிக்கையிழந்தே தற்போது காணப்படுகின்றனர்
அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது .
1719 வீடுகள் முழுமையாகவும் 10 ஆயிரத்து 477 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளாள 175ஆயிரத்து 514 குடும்பங்களின் 6 இலட்சத்து 74 ஆயிரத்து 558 பேரில், 17 ஆயிரத்து 474 குடும்பங்களை சேர்ந்த 65 ஆயிரத்து 45 பேர் 312 பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்த பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தங்கியுள்ள மற்றும் முழுமையாக சேதமடைந்த பள்ளிக் கூடங்கள் தவிர ஏனையவற்றை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 15 பள்ளிக்கூடங்களிலும் தென் மாகாணத்திலுள்ள 10 பள்ளிக் கூடங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கியுள்ளன. தென் மாகாணத்தில் 19 பள்ளிக் கூடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது
குறிப்பிட்ட 44 பள்ளிக் கூடங்கள் தவிர ஏனைய பள்ளிக் கூடங்கள் அன்றைய தினம் திறக்கப்படும் என கல்வி அமைச்சு கூறுகின்றது.
இதேவேளை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது பற்றி ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபை சிறப்பு அமர்வுக்காக இன்று வெள்ளிக்கிழமை கூடியது.
மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரேரனையொன்றை முன்வைத்திருந்தார்.
மாகாணத்தில் ஒரு கோடி 60 இலட்சம் ரூபா நிதி திரட்டி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக வழங்குவது என கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












