நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விரையும் இந்திய கப்பல்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்த நிலையில், உடனடியாக எதிர்வினையாற்றிய இந்திய அரசு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையர் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.
மேலும், நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு கப்பல் ஞாயிறன்று இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீரற்ற கால நிலை தொடரும் நிலையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமடைந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
பிற செய்திகள் :
களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை மாலை வரையில் 91 மரணங்கள் பதிவாகியுள்ள அதே வேளை 110 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு பேரிடர் முகாமம்துவ மையத்தின் துனை இயக்குநரான பிரதீப் கொடிப்பிலி கூறுகின்றார்.

தென் , மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையில் மேல் மாகாணத்திலே கூடுதலானோர் உயிரிழந்தும் காணாமலும் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அம் மாகாணத்திலுள்ள களுத்துறை மாவட்டத்தில் மட்டும் 38 பேர் மரணமடைந்துள்ளனர்.80 பேர் காணாமல் போயுள்ளனர். மற்றுமோர் மாவட்டமான கம்பகாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 46 பேரும் கேகாலை மாவட்டத்தில் 2 பேரும் என 48 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை -01 மற்றும் காலி -02 என பேர் பலியாகியுள்ளனர். மற்றுமோர் மாவட்டமான மாத்தறை மாவட்டத்தில் 30 பேர் பற்றிய தகவல்கள் இல்லை என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
மூன்று மாகாணங்களிலும் இந்த அனர்த்தம் காரணமாக சுமார் 16 ,500 குடும்பங்களை சேர்ந்த 61 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அரசு பேரிடர் முகாதத்துமம்தின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பிற செய்திகள் :

பட மூலாதாரம், Getty Images
அம்மாவட்டத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை -. 38 என்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை - 80 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை தொடக்கம் நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட சில பிரதேசங்களில் கன மழை பெய்து வருகின்றது.
கன மழை காரணமாக நீர்த் தேங்கங்களும் நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது . பல கிராமங்களும் நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.
வெள்ளத்திலும் நிலச்சரிவு அனர்த்தத்திலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் முப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சில பிரதேசங்களில் போக்குவரத்து தடை தொடர்ந்து காணப்படுகின்றது.

பட மூலாதாரம், Getty Images
தலைநகர் கொழும்புக்கு அண்மித்த களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன இலாகா கூறுகின்றது.
களனி கங்கையை அண்மித்த மற்றும் அதன் கிளைகளை அண்மித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்திற்குள்ளான மாவட்டங்களிலுள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பணியாளர்களின் அனைத்து விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது .
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












