இந்துக்கள் 400 பேரை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றியதாக 8 பேர் கைது: உத்தரப்பிரதேச சர்ச்சையில் உண்மை நிலவரம் என்ன?

- எழுதியவர், ஷாபாஸ் அன்வர்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள மங்கத்புரம் பகுதி தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இங்கு 400 இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டதாக மீரட் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பெண்கள் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 400 இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பாஜக மாநகர அமைச்சர் தீபக் ஷர்மா மற்றும் இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் முன்னாள் தலைவர் சச்சின் சிரோஹி ஆகியோர் மீரட் காவல்துறையில் ஐந்து நாட்களுக்கு முன்பு புகார் அளித்தபோது, இந்த மதமாற்ற விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இவர்களில் பலர் பலவந்தமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.
"மங்கத்புரம் காலனியைச் சேர்ந்த பலர் என்னிடம் புகார் அளிக்க வந்தனர். நாங்கள் இங்கு மதமாற்றம் செய்யப்படுகிறோம், ஆனால் நாங்கள் எங்கள் மதத்தை விட விரும்பவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். தீபாவளி கொண்டாடுவதை தடுக்கின்றனர். இறைவனை நம்புங்கள், கிறிஸ்தவத்தை நம்புங்கள் என்று சொல்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்," என்று தீபக் ஷர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.


"மதமாற்றத்தை எதிர்த்த பலர் என்னிடம் வந்தனர். பின்னர் நாங்கள் அவர்களை அழைத்துச் சென்று போலீசில் புகார் செய்தோம். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்," என்று அவர் மேலும் கூறினார்.
தீபக் ஷர்மா, சில வீடியோக்கள், புகைப்படங்களை பிபிசியிடம் காண்பித்தார். அதில் பலர் தேவாலயம் என்று கூறப்படும் இடத்தில் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொள்வதை பார்க்கமுடிகிறது. இந்த வீடியோக்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டவை என்று தீபக் ஷர்மா குறிப்பிட்டார்.

குடிசைப்பகுதியில் செயல்படும் தேவாலயத்தில் இருந்து சில பொருட்களும், கட்டுரைகளும் மீட்கப்பட்டுள்ளன என்று இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்த மற்றொரு இந்துத் தலைவரான சச்சின் சிரோஹி பிபிசியிடம் தெரிவித்தார்.
மதம் மாறியவர்கள் எங்கு தேவாலயம் உள்ளது என்ற ரகசியத்தை வெளியிட தயாராக இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தற்போது அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
விக்ராந்த் என்ற உள்ளூர் குடிசைவாசியின் புகாரின் பேரில் மீரட்டின் பிரம்மபுரி போலீசார் ஒன்பது ஆண்கள், பெண்களின் பெயர்களை பதிவு செய்தனர்.
"அக்டோபர் 28 ஆம் தேதி விக்ராந்த் என்பவர் புகாரின் பேரில் 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பிரம்மபுரி) பிரஜேஷ் சிங் பிபிசியிடம் கூறினார்.
2021 ஆம் ஆண்டின் உத்தரப் பிரதேச மத மாற்றத்தடுப்புச்சட்டத்தின் பிரிவு 3 மற்றும் பிரிவு 5(1) இன் கீழ் அவர்கள் அனைவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்று பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குவர். எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரின் பெயர்களும் இதில் இடம்பெறக்கூடும்.
மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் வேறு சிலர் புகாரில் கையெழுத்திட்டுள்ளனர், வேறு சிலரின் கட்டை விரல் ரேகைகளும் அதில் வைக்கப்பட்டுள்ளன.


மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த குடும்பத்தினர்
இந்த முழு விஷயத்தையும் புரிந்து கொள்ள பிபிசி மங்கத்புரம் பகுதிக்குச்சென்றது.
மத மாற்றம் நிகழ்ந்ததை மங்கத்புரம் பகுதியில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
கட்டாய மதமாற்றப் புகாருக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சொல்வது வேறுமாதிரியாக உள்ளது.
மதமாற்றம் குறித்த பேச்சை கடுமையாக மறுத்த அவர்கள், நிலத்தை காலி செய்யவே இவை அனைத்தும் செய்யப்படுவதாக கூறினார்கள்.
இவர்களில் ஒருவர் மம்தா தேவி.
சிறிய குடிசைகள், குப்பைகள் நிறைந்த குறுகிய தெருக்கள் வழியாகச்சென்று நாங்கள் மம்தா வீட்டை அடைந்தோம்.
மதமாற்றம் செய்ததாக மம்தாவின் மாமியார் தித்லி, மாமனார் சர்தார் மற்றும் கணவர் அனில் ஆகியோர் மீது மீரட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிலத்தை காலி செய்யவைப்பதே உண்மையான நோக்கம்: குடிசைவாழ் மக்கள்

"நாங்கள் 40-50 ஆண்டுகளாக இங்கு வாழ்கிறோம். அப்போது அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இப்போது மதமாற்றம் போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்,"என்று பிபிசியிடம் பேசிய மம்தா கூறினார்.
"நீங்கள் இங்கிருந்து போகவில்லை என்றால், மதம் மாற்றியதாக குற்றம் சுமத்தி உங்களை சிக்க வைப்போம் என்று சொன்னார்கள். இங்குள்ள சிலர் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலத்தை நாங்கள் காலி செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்," என்றார் அவர்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த மம்தா, " நாங்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம். ஆனால் நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான். இங்கு சத்சங்கம், திருமணம், பிரார்த்தனை-ஜெபம் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வியும் அளிக்கப்படுகிறது. நிலத்தை காலி செய்யுமாறு எங்களை மிரட்டுகின்றனர்,"என்றார்.
மம்தா பேசிக் கொண்டிருக்கும்போதே அருகில் நின்றிருந்த குல்வா பேச ஆரம்பித்தார்.
"இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. எங்கள் குடிசைகள் ஒரு பக்கம் இருந்தன. அங்கிருந்தும் அவை அகற்றப்பட்டன. எங்களை இங்கிருந்து வெளியேற்றி நிலத்தை ஆக்கிரமிக்க, ஐந்தாறு சாராய மாஃபியாக்கள், நில மாஃபியாக்கள் முயற்சிக்கின்றனர்." என்று அவர் கூறினார்.

மத மாற்றம் நடந்ததாகக்கூறப்படும் தேவாலயத்தைக்காட்ட மம்தா எங்களை அழைத்துச் சென்றார்.
இந்த கூட்டத்தில் நின்றிருந்த ஒரு இளைஞரான பாபி, பிபிசியிடம் பேசினார்.
"இங்கு மக்களை பொய் சொல்ல வைக்கிறார்கள். இதற்காக பணம் விநியோகிக்கப்படுகிறது. எங்களை இங்கிருந்து வெளியேற்றவே இந்த முயற்சி. சில வெளியாட்களும், சில உள்ளூர்வாசிகளும் இதில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
"எங்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதற்காக முயற்சி செய்கின்றனர். கோவிலை சேதப்படுத்துவதாக பொய்க் குற்றமும் சாட்டப்படுகிறது," என்றார் அவர்.
அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் இந்தப் புகாரையே தெரிவித்தனர்.
ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாகவும் பலர் கோபத்தை வெளிக்காட்டினர்.
இந்த விவகாரத்தில் அடிபடும் தேவாலயம்
இந்த தேவாலயம் உண்மையில் சுமார் 20க்கு 12 அடி அளவில் உள்ள ஒரு குடிசை.
இந்த குடிசையின் மேலே பாஜக கொடியும், அருகில் மூவர்ணக் கொடியும் பறக்கின்றன.
'மக்கள் பிரார்த்தனை கூட்டங்களை நடத்துகிறார்கள், மதம் மாற்றுவதில்லை'
மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பிபிசியிடம் பேசிய ஒருவர் தனது பெயரை குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனை விதித்தார்.
"பாருங்கள், இங்கு மதமாற்றம் செய்யப்படுவதில்லை. பிரார்த்தனைக் கூட்டங்கள், சத்சங்கங்கள் நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் இந்துக்கள்,"என்று அவர் குறிப்பிட்டார்.
"குடிசைப் பகுதிகளில் பலர் தவறான பாதையில் செல்கின்றனர். மது வியாபாரம் செய்கின்றனர். சிலர் தவறான செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். சத்சங்கங்கள் மற்றும் பிரார்த்தனை கூட்டங்கள் நடக்க ஆரம்பித்ததில் இருந்து பலர் இந்த தவறான பாதைகளை விட்டுவிட்டு சரியான பாதையில் நடக்கத்தொடங்கியுள்ளனர். மதமாற்றம் என்ற பேச்சு உண்மை அல்ல."என்று அவர் மேலும் கூறினார்.
புகார் அளித்தவர்கள் எங்கே?
விக்ராந்த் என்பவரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஃப்ஐஆர் நகலில் விக்ராந்தின் மொபைல் எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குடிசைப்பகுதியில் விக்ராந்தை அறிந்தவர்கள் யாருமே இல்லை.
எஃப்.ஐ.ஆரில் இருந்த எண்ணுக்கு போன் செய்தபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
புகார் அளித்த சிலரை தொடர்புகொள்ளவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் தீபக் ஷர்மாவிடம் கேட்டபோது, புகாரில் குறிப்பிடப்பட்ட சிலரின் பெயர்கள், எண்களை அவர் கொடுத்தார்.
காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களிடம் பேச பிபிசி முயன்றது.


புகார் அளித்தவர்களில் இக்பால் என்ற பெயரும் இருந்தது. அவருடையது என்று கூறப்பட்ட எண்ணுக்கு போன் செய்தபோது, அந்த எண் ஆதித்யா என்பவருடையது என்பது தெரிந்தது.
"எங்கள் பகுதியில் 100 முதல் 150 பேர் வரை மதம் மாறியுள்ளனர். ஆனால் அவர்களின் பெயர்கள் தெரியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள்தான் மதமாற்றம் செய்துள்ளனர்," என்று ஆதித்யா தெரிவித்தார்.
புகார்தாரர் என்று சொல்லப்பட்ட மற்றொரு நபரைத் தொடர்பு கொண்டபோது தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு அவர் இப்படி சொன்னார்: "நாங்கள் இந்து சமூகத்தில்தான் உள்ளோம். மதம் மாறுவதற்கு எந்த சதியும் இல்லை. மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக குரல் எழுப்புமாறும், அவர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் எங்கள் தரப்பில் சாட்சியமளிக்குமாறும் எங்களுக்கு சொல்லப்பட்டது," என்றார் அவர்.

இதை யார் சொன்னார்கள் என்று அவரிடம் கேட்டபோது, அவருடைய பெயர் தெரியாது என்று பதில் அளித்தார். தன்னிடம் பேசியவரின் அங்க அடையாளர்களை அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு புகார்தாரரான ஆகாஷிடம் பேசியபோது, "இது என் தம்பியின் நம்பர், எனக்கு எதுவும் தெரியாது. என் தம்பி புகார் செய்யப் போயிருக்க வேண்டும். நான் மண்டபத்தில் வேலை செய்கிறேன். மதமாற்ற குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைதாகிவிட்டனர்," என்றார்.
சிலரின் முயற்சியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர்.
ஆனால் புகார் அளித்த எவருமே ஊடகங்களுடன் பேச விரும்பவில்லை. மதம் மாறியதாகக் கூறப்படும் 400 பேரில் ஒருவரைக்கூட எங்களால் சந்திக்க முடியவில்லை.

இந்த முழு விவகாரமும் நிலத்தை காலி செய்வதோடு தொடர்புடையதா?

நிலத்தை சிலர் குறிவைத்திருக்கக்கூடும் என்பதை இந்துத்துவ தலைவர் சச்சின் சிரோஹியும் மறுக்கவில்லை.
இதேபோன்ற புகார் குறித்து அப்பகுதியின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரஜேஷ் சிங்கும் கூறினார்.
"நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பினரை சந்தித்தோம். நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக அவர்கள் புகார் கூறினர். எந்த தவறும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் அவர்களுக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம்" என்றார் பிரஜேஷ் சிங்.
"வாக்குரிமை இல்லை - வாங்கித் தர யாருமில்லை"
"ஆதார் அட்டை வைத்திருந்தாலும் குடிசைவாசிகளுக்கு இங்கு ஓட்டு இல்லை. அவர்களுக்கு வாக்குரிமை வாங்கிக்கொடுக்க யாரும் முயற்சிக்கவில்லை," என்று உள்ளூர் கவுன்சிலர் நவீன் கடீக் கூறினார்.
" குடிசைவாழ் மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் சிறிது காலத்திற்கு முன்பு என்னிடம் வந்தனர். நிலத்தை காலிசெய்ய வைப்பதற்காக சிலர் மிரட்டுவதாக என்னிடம் தெரிவித்தனர். நிலத்தை காலி செய்ய வைப்பதே முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்,"என்று அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பாஜக நியமன கவுன்சிலர் வீர் சிங் சைனி பிபிசியிடம் தெரிவித்தார்.

தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள பாஜக தலைவர்கள்

இந்த குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர் தீபக் ஷர்மா மறுக்கிறார்.
"குடிசை மக்கள் எங்கு இருக்கிறார்களோ, அவர்கள் அங்கேயே இருக்கட்டும். இதைப் பற்றி எங்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை. ஆனால் மதமாற்றத்தை எக்காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள முடியாது. குடிசை வாழ் மக்களின் வறுமை நிலையை சாதகமாக்கிக்கொண்டு அவர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய முயற்சி செய்யப்படுகிறது ," என்று அவர் தெரிவித்தார்.
"ஆறு மாதங்களுக்கு முன்பும் எனக்கு இதுபோன்ற புகார் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் தீவிரம் எங்களுக்குத் தெரியாது, கிறிஸ்தவர்களாக மாறும்படி இந்துக்கள் மிரட்டப்படுகிறார்கள். ஆசை காட்டப்படுகிறார்கள். டெல்லியிலிருந்தும் சிலர் மதம் மாற்றம் செய்ய இங்கு வந்தனர். சில வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர்."
"புகார்தாரர் எவரும் பேச முன்வரவில்லை என்றால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் தலைமறைவாக இருக்கலாம். ஆனால் மீரட் எஸ்பியிடம் புகார் அளிக்க என்னுடன் ஏராளமானோர் வந்தனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."
"நான் இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பில் இருக்கிறேன். மங்கத்புரம் பகுதியில் பெரிய அளவில் மதமாற்ற விளையாட்டு நடக்கிறது. அங்கு கட்டப்பட்டுள்ள தேவாலயத்திற்கு நான் சென்றேன். அங்கிருந்து. கிறித்துவம் தொடர்பான நிறைய பொருட்கள் மீட்கப்பட்டன,"என்று இந்து அமைப்புடன் தொடர்புடைய சச்சின் சிரோஹி கூறினார்.
" போலீசார் முன்னிலையிலேயே தேவாலயத்திற்குள் இருந்து இந்த பொருட்களை எடுத்து நான் காவல்துறையிடம் ஒப்படைத்தேன். ஏழை மக்களை மிரட்டி ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வற்புறுத்துகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாது,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நிலம் யாருடையது? நிர்வாகம் என்ன சொல்கிறது?

இந்த நிலத்தின் உரிமையாளர் யார், மங்கத்புரம் பகுதியின் பரப்பளவு எவ்வளவு என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதிலை அறிய அப்பகுதியின் கோட்டாட்சியர் தேஸ்வி ராஜிடம் பிபிசி பேசியது.
"மங்கத்புரம் நிலத்தில் அரசு நிலம், தனியார் நிலம் என்று இரண்டும் கலந்துள்ளது. இந்த நிலம் முழுவதையும் சட்டவிரோதம் என்று சொல்ல முடியாது. இவர்கள் எந்த நிலத்தில் குடியேறியுள்ளனர் என்பது ஆய்வுசெய்யப்படவேண்டிய விஷயம்" என்று அவர் கூறினார்.
மங்கத்புரத்தின் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் நாட், சைனி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள்.
பெரும்பாலான மக்கள் குப்பை அள்ளுவது, கை வண்டி இழுப்பது, கூலி வேலை செய்வது போன்ற வேலைகளை செய்கிறார்கள். அவர்களின் உடலில் சுத்தமான ஆடைகளோ, வீடுகளில் சுத்தமான பாத்திரங்களோ காணப்படவில்லை.

சிறு விலங்குகளின் சடலங்கள் அழுகிக்கிடக்கும் இடத்திலும், நகரின் குப்பை கூளங்கள் நிறைந்து கிடக்கும் இடத்திலும் இந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புப்பகுதியின் நிலை எப்படியிருந்தாலும், இந்த இடம் டெல்லி சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
அதன் எதிரில் அதிவிரைவு ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. குடிசைப்பகுதியைச் சுற்றி சில குடியிருப்பு பகுதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் நிலத்தின் விலை விண்ணைத் தொட்டுள்ளது.
இங்கு நிலத்தின் விலை, சதுர மீட்டர் 80,000 ரூபாய் அளவை எட்டியுள்ளது என்று அப்பகுதியைச் சேர்ந்த கனக் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













