குஜராத் பாலம்: நரேந்திர மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு - அறியப்படாத தகவல்கள்

1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர்

பட மூலாதாரம், Sondeep Shankar

படக்குறிப்பு, 1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர்
    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி இந்தி

மோர்பி, மச்சு நதி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையேயான உறவு மிகவும் பழமையானது. நரேந்திர மோதி பொது வாழ்வில் முத்திரை பதிக்கத் தொடங்கிய இடம் மோர்பி.

அந்த நகரில் மோதி என்ன செய்தார்? அது அவரது வளர்ச்சிக்கு எப்படி உதவியது? இவை பற்றி விவரிப்பதற்கு முன், சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு மோர்பியில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வோம்.

11 ஆகஸ்ட் 1979 - ராஜ்கோட் அருகே உள்ள மோர்பி நகரத்தில், ஜூலை மாதம் மழை பெய்யவில்லை, ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மோர்பி அருகே பாயும் மச்சு ஆற்றில் இரண்டு அணைகள் கட்டப்பட்டன. மச்சு ஆற்றில் 22.56 மீட்டர் உயரமுள்ள இரண்டாவது அணை 1972இல் கட்டி முடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 10, 1979 அன்று மாலையில், மச்சு ஆற்றின் அணை எண்-1இல் இருந்து நீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து, அணை எண்-2இன் இரண்டு கதவுகளையும் திறக்க முற்பட்டபோது தொழில்நுட்ப காரணங்களால், அவை திறக்க முடியாமல் போயின. இதனால் அணையின் நீர் தேக்கத்தில் உபரி நீர் தேங்கியது. இதனால், அணையின் வழியாக பாயும் தண்ணீர் மிக வேகமாக, அதிக அளவில் வெளியேறத் தொடங்கியது.

வெள்ளத்தில் மூழ்கிய நகரம்

குஜராத் மோர்பி நகரம்

பட மூலாதாரம், Sondeep Shankar

படக்குறிப்பு, 1979 இல் மோர்பி நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.

அதிர்ச்சிக்காட்சி

மதியம் ஒரு மணியளவில் அணைக்கு மேல் அலைகள் வரத் தொடங்கின. இரண்டு மணியளவில் அணையின் மேல்பகுதியில் இருந்து ஒன்றரை அடி முதல் 2 அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. மதியம் 2.15 மணியளவில் அணையின் இடதுபுறம் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் வலது பக்க மண்ணும் சரியத் தொடங்கியது.

தண்ணீர் வேகமாக வெளியேறியதால், அணையில் பணியமர்த்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் தங்கள் அறைகளை விட்டு வெளியே வர வாய்ப்பில்லாமல் போனது. 20 நிமிடங்களில் அணையில் இருந்து தண்ணீர் அனைத்தும் அருகில் உள்ள மோர்பி நகருக்குள் நுழைந்தது.

மாலை 3.30 மணியளவில், மோர்பி நகரில் 12 முதல் 30 அடிவரை தண்ணீர் இருந்தது. அடுத்த நான்கு மணி நேரத்தில், மோர்பி நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இரவு 7.30 மணியளவில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கினாலும் அதற்குள்ளாக கிட்டத்தட்ட முழு நகரமும் மூழ்கியது.

மக்கள் மற்றும் கால்நடைகளின் வீங்கிய உடல்கள் எங்கும் கிடந்தன, வெள்ளம் வந்து எட்டு நாட்களுக்குப் பிறகும், அழுகிய உடல்களின் துர்நாற்றம் சுற்றிலும் பரவியது. குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மின்கம்பங்கள் சாய்ந்திருந்தன.

மோர்பி நகரம்

பட மூலாதாரம், Sondeep Shankar

படக்குறிப்பு, அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

முடங்கிய சேவைகள் - திகில் நகரமான மோர்பி

அணை இடிந்து 15 மணி நேரம் ஆகியும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அதுபற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தொடர்ந்து மழை பெய்து வருவதாக அவர்கள் கருதினர்.

சம்பவம் நடந்து 24 மணிநேரம் கழித்து அதாவது ஆகஸ்ட் 12ம் தேதி முதல் முறையாக வானொலியில் இந்த செய்தி ஒலிபரப்பானது. நிவாரணப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் மோர்பிக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் சம்பவம் நடந்த 48 மணிநேரத்திற்குப் பிறகுதான், அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதிதான் அங்கு செல்ல முடிந்தது.

'தந்தி இணைப்புகள்' வேலை செய்யவில்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகத்தின் அலுவலர்களால் தங்களுடைய தகவலை மாவட்ட தலைமையகமான ராஜ்கோட்டிற்குத் தெரிவிக்க முடியவில்லை. அப்பகுதியில் உள்ள அனைத்து தொலைபேசி கம்பங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதனால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது.

அலுவல்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த சோகத்தில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டனர், ஆனால் அதிகாரபூர்வமற்ற புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை சுமார் 25,000 ஆகும். சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு தேசிய பத்திரிகைகள் செய்திசேகரிக்க தங்களுடைய நிருபர்களை அனுப்பி வைத்தபோது, '​​மோர்பி' ஆள் அரவமற்ற திகில் நகரமாக காட்சியளித்தது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், The India Today Group

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி

நிவாரண பணிகள் நரேந்திர மோதி

சில நேரங்களில் பெரிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் அல்லாத காரணங்களால் தூண்டப்படுகின்றன. அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் பாபு பாய் படேல். அப்போது, ​​பாரதிய ஜனசங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவரான கேசுபாய் படேல், அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார்.

மோர்பியில் திடீர் வெள்ளப்பெருக்கு என்ற செய்தியைக் கேட்ட கேசுபாய் உடனடியாக மோர்பிக்கு புறப்பட்டார். ஆனால் மச்சு ஆற்றில் ஆர்ப்பரித்த அலைகள் காரணமாக அவரால் நகரத்திற்குள் நுழைய முடியவில்லை. முதல் சில நாட்களுக்கு எந்த நிவாரணப் பொருட்களையும் அங்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முடங்கியது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு மோர்பிக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார்.

மோர்பிக்கு உதவுவதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) ஊழியர்கள் முன்னிலையில் இருந்தனர். அப்போது ஆர்எஸ்எஸ்-ன் முழுநேர பிரச்சாரகர் நரேந்திர மோதி, மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக்குடன் சென்னையில் இருந்தார். தகவல் அறிந்த அவர் உடனடியாக குஜராத் திரும்பி மோர்பியில் நிவாரணப் பணிகளை தொடங்கினார்.

மோர்பி அணை விபத்தில் மக்களுடன் நின்றதால், அவர்களிடையே ஆர்.எஸ்.எஸ் மீதான அங்கீகாரம் அதிகரித்து, அங்கிருந்து பாரதிய ஜனதா அரசியல் சக்தியாக எழுச்சி பெறத் தொடங்கியது.

நரேந்திர மோதி பொது மேடைக்கு வருவது அதுவே முதல் முறை. அதன் பிறகு அவர் அந்த பகுதியைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அந்த சம்பவத்திற்குப் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் குஜராத்தின் முதலமைச்சரானார்.

எண்பதுகளின் இறுதியில் மச்சு அணை மீண்டும் கட்டப்பட்டது. விபத்தில் இறந்தவர்களுக்காக மணி கோவிலுக்கு வெளியே ஒரு நினைவகம் அமைக்கப்பட்டது, இன்றும் ஒவ்வோர் ஆகஸ்ட் 11ஆம் தேதி, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடுகிறார்கள்.

குஜராத் மோர்பி நகரம்

மோர்பியில் இதுவரை நடந்தது என்ன?

• குஜராத்தின் மோர்பியில் ஆற்றின் மீது ஒரு தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர்.• பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை அறிவிப்பு.• ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு பழமையான இந்த பாலம், பழுதுபார்க்கப்பட்ட பின்னர் சமீப காலங்களில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.• இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது. பாலம் புதிப்புக்கப்பட்ட பிறகு அதற்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.• பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.• இந்த வழக்கில் ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்• கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றமற்ற கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மோர்பி நகரம்
காணொளிக் குறிப்பு, பிக்பாஸ் கமல்: நிகழ்ச்சி பங்கேற்பாளர் அசீமை கண்டித்தது பேசப்படுவது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: