குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: "நான் பிழைத்து விட்டேன் ஆனால் என் தங்கையை காணவில்லை"

பட மூலாதாரம், Getty Images
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றில் கட்டப்பட்ட பாலம் உடைந்தது இதுவரை 141 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
6 மாதங்களாக மூடப்பட்டு, பழுது பார்க்கப்பட்ட பாலம் அக்டோபர் 28ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
பண்டிகை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
மீட்புப் பணியில் ராணுவமும் ஈடுபட்டுள்ளது, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும் களத்தில் உள்ளன.
நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இடிந்து விழுந்த பாலத்தில் 400க்கும் மேற்பட்டோர் இருந்திருக்க வேண்டும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
நள்ளிரவு வரை பலரை காணவில்லை. அவர்களின் குடும்பத்தினர் காணாமல் போன உறவுகளைத் தேடி வந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆற்றில் இருந்த தடுப்பணை உடைந்தது
மச்சு ஆற்றில் தண்ணீர் தேங்க சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாலத்தின் அருகே கட்டப்பட்ட இதேபோன்ற தடுப்பணை நள்ளிரவில் உடைந்தால் அங்கு நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
பிபிசிக்காக செய்திகளை வழங்கும் செய்தியாளர் ராகேஷ் அம்பாலியா, "பாலம் உடைந்த இடத்தில் வழக்கமாக 20 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும். திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணிக்குப் பிறகும், இங்கு மூழ்கியவர்களை டைவர்கள் தேடிக்கொண்டிருந்தனர்," என்று கூறினார்.
உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மோகன் குந்தாரியா இது குறித்து கூறுகையில், "தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின்னரே இன்னும் எத்தனை பேர் நீரில் மூழ்கியுள்ளனர் என்பது தெரியவரும். ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் செளராஷ்டிராவின் பிற மாவட்டங்களிலிருந்தும் குழுக்கள் இங்கு வந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன," என்று தெரிவித்தார்.
"எங்கும் அலறல் ஒலித்தது"

பட மூலாதாரம், RAJESH AMBALIYA
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியளவில் நடந்தது. செய்தியாளர் ராகேஷ் அம்பாலியா மாலை 6.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
களத்தில் இருந்து அவர் வழங்கிய தகவலின்படி, விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே அவசர ஊர்தி வாகனங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தண்ணீரில் தத்தளித்த மக்களை மீட்கும் பணியில் ஏராளமான அப்பகுதி மக்களும் ஈடுபட்டனர்.
"நான் அந்த இடத்தை அடைந்தபோது சுற்றிலும் அலறல் ஒலித்தபடி இருந்தது. அது மிகவும் அச்சுறுத்தும் காட்சியாக இருந்தது. சிலர் பாலத்தின் இடுபாடுகளில் தொங்கிக் கொண்டிருந்தனர், சிலர் பாலத்தின் நீரில் மூழ்கிய பகுதியில் ஏறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். பலர் நீரில் மூழ்கினர். தங்களை மீட்கக் கோரி அவர்கள் அலறிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் இருந்து தப்பி வந்த ஒருவர், நான் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன், பலர் சிக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்றுங்கள் என்றார்," என்று கூறினார்.
விபத்து நடந்த உடனேயே, உள்ளூரிலும் அருகேயும் இருந்த அனைத்து அவசர ஊர்தி வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. மோர்பி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தன என்கிறார் ராகேஷ் அம்பாலியா.

"நான் பிழைத்துவிட்டேன் ஆனால் என் தங்கையை காணவில்லை"
பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானபோது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் தனது 6 வயது தங்கையை காணவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.
பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய அவர், "நாங்கள் பாலத்தின் மீது நின்றுக் கொண்டிருந்தோம். அப்போது பாலத்தின் மீது நூற்றுக்கணக்கானோர் இருந்தனர்.. நான் இங்கு முதன்முறையாக வந்தேன். நானும் எனது தங்கையும் எங்களின் அலைப்பேசியில் புகைப்படங்களை எடுத்து கொண்டிருந்தோம். அப்போது பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
நானும் எனது தங்கையும் நீரில் விழுந்துவிட்டோம். நான் பிழைத்து கொண்டேன் ஆனால் எனது தங்கையை காணவில்லை." என்றார்.
மேலும் அழுது கொண்டே பேசிய அவர், "நேற்று மாலையிலிருந்து அவளை தேடி கொண்டிருக்கிறேன்.
அரசு மருத்துவமனைக்கு சென்றேன். எல்லா இடத்திலும் தேடினேன் ஆனால் அவளை காணவில்லை" என்றார்.
'நான் பதினைந்து சடலங்களை கயிறு கட்டி வெளியே எடுத்தேன்'

பட மூலாதாரம், ANI
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்களும் ஓடி வந்து உதவி செய்தனர். பாலம் உடைந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரமேஷ் பாய் ஜில்லாரியா வசித்து வருகிறார்.
பிபிசிக்காக செய்தி வழங்கும் ராகேஷ் அம்பாலியாவிடம் ரமேஷ் பாய் கூறுகையில், "நான் சம்பவ பகுதிக்கு அருகேதான் வசிக்கிறேன், மாலை ஆறு மணியளவில் விபத்து பற்றி அறிந்தேன், உடனடியாக கயிறை எடுத்துக் கொண்டு உதவி செய்ய ஓடினேன். கண்ணில் பட்ட சடலங்களை எல்லாம் கயிறு கட்டி வெளியே எடுக்க முடிந்தது. இப்படியாக 15 சடலங்களை வெளியே எடுத்தேன்," என்றார்.
சம்பவத்துக்குப் பின்பு நடந்த சூழலை விவரித்த அவர், "நான் வந்தபோது, உடைந்த பாலத்தில் ஐம்பது அறுபது பேர் தொங்கிக் கொண்டிருந்தார்கள். சூழலை புரிந்துகொண்டு உடனே தொங்கியபடி கிடந்தவர்களை மேலே ஏறி வர உதவினோம்" என்கிறார்.
"அதன்பிறகு, நாங்கள் பார்த்தவை உடல்களைத்தான். நாங்கள் அவற்றை வெளியே எடுக்கச் சென்றோம், அந்த உடல்களில் மூன்று சிறிய குழந்தைகளும் இருந்தனர்."
இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியான சுபாஷ் பாய் கூறும்போது, "வேலை முடிந்ததும் நானும் எனது நண்பரும் பாலத்தின் அருகே அமர்ந்திருந்தோம். பாலம் உடையும் சத்தம் பலமாக கேட்டதால் அந்தப் பக்கமாக ஓடிப்போய் முடிந்தவரை மக்களைக் காப்பாற்றத் தொடங்கினோம்.
"சிலர் நீந்தி வெளியே வந்து கொண்டிருந்தனர்.சிலர் நீரில் மூழ்கினர்.முதலில் குழந்தைகளை வெளியேற்ற ஆரம்பித்தோம்.அதன் பின் பைப்பை எடுத்து பைப்பின் உதவியால் பெரியவர்களை காப்பாற்ற முயன்றோம்.எட்டு ஒன்பது பேருக்கு தண்ணீர் கொடுத்தோம். இரண்டு உடல்களை வெளியே எடுத்தோம்," என்று சுபாஷ் பாய் தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பாலம்
'மச்சு நதி' மோர்பி நகரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம், நகரின் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கிறது. மேலும் இது நகரின் பிரபல சுற்றுலா மையமாக உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலம் பழுது பார்க்கப்பட்டது. குஜராத்தி புத்தாண்டின் போது தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 28ஆம் தேதி இந்த பாலம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர் ராகேஷ் அம்பாலியா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதால், சாதாரண நாட்களை விட இங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் தான் பாலம் வலுவிழந்து ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி இறக்க நேரிட்டது என்றார்.
இது தவிர, பள்ளி விடுமுறை காரணமாக ஏராளமான குழந்தைகளும் பாலத்தில் இருந்ததாகக் கூறுகிறார் அம்பாலியா,
"இந்த பாலம் மோர்பியின் அடையாளம், எனவே பல மாதங்களாக மூடப்பட்ட பிறகு அது மீண்டும் திறக்கப்பட்டபோது, ஏராளமான மக்கள் அதைப் பார்க்க வந்தனர். பலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்." என்றார்.
தகுதிச்சான்றிதழே இல்லை
செய்தி நிறுவனமான பிடிஐ, "மோர்பி நகராட்சி இன்னும் பாலத்துக்கு தகுதிச் சான்றிதழை கூட வழங்கவில்லை," என்று கூறியுள்ளது.
மோர்பி நகராட்சியின் முதன்மை செயல் அதிகாரி சந்தீப் சிங் ஜாலா, "இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓரேவா நிறுவனத்திற்கு பாலத்தை பழுதுபார்க்கும் பணியும் அதை பராமரிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. பழுதுபார்ப்பதற்காக பாலம் மூடப்பட்டது. அந்தப் பணி முடிந்த பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் பழுது நீக்கிய பிறகும் நகராட்சி அதற்கு தகுதிச் சான்றிதழை வழங்கவில்லை," என்று கூறினார்.
இந்த பாலம் 19 ஆம் நூற்றாண்டு கால கட்டுமானம் ஆகும். மோர்பி அரச குடும்பத்தின் இரண்டு அரண்மனைகளான தர்பார்கர் மஹால், நசர்பாக் மஹால் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இது கட்டப்பட்டது.
1.25 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலம், 233 மீட்டர் நீளம் கொண்டது.மாவட்ட நிர்வாக இணையதள தகவலின்படி, இந்த பாலம் அன்றைய ஐரோப்பாவில் நிலவிய அப்போதைய சமீபத்திய தொழில்நுட்ப அடிப்படையில் கட்டப்பட்டது. மோர்பியின் ஆட்சியாளர்களின் அறிவியல் மற்றும் முற்போக்கான அணுகுமுறையை அது காண்பிப்பதாக இருந்தது.
மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்
இதற்கிடையே, பாலம் இடிந்து விழுந்ததில் மோர்பியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தொலைபேசி உதவி எண்ணை மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறை வெளியிட்டிருக்கிறது.
02822 243300 என்ற இந்த எண்ணில் இன்னும் யாராவது குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேசியதாக பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














