கோவை கார் வெடிப்பு சம்பவம்: திமுக, பாஜகவின் அரசியலால் சாதகம், பாதகம் யாருக்கு?

அண்ணாமலை
படக்குறிப்பு, கே. அண்ணாமலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கோயம்புத்தூரில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு உரிய வகையில் பதிலடி கொடுப்பதில் திமுக தடுமாறுவதாக ஒரு பேச்சு பரவலாக உள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

கோயம்புத்தூரில் தீபாவளி தினத்தன்று கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த விவகாரம், தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே மிகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

சிலிண்டர் வெடிப்பு நடந்து சில மணி நேரங்களில் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது பாஜக. இந்த விவகாரத்தைத் தற்கொலைப் படைத் தாக்குதலாகச் சித்திரித்துப் பதிவிட்டார் அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழக உளவுத் துறை தோல்வி அடைந்து விட்டதாகக் குற்றம்சாட்டினார். இந்தியாவிலேயே மிக மோசமான உள்துறை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்றார்.

இதற்கு, அண்ணாமலையின் பெயரைச் சொல்லாமல் ட்விட்டரில் பதிலளித்தார் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. "தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது" என்று தனது பதிவில் கூறினார் செந்தில் பாலாஜி.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதற்கு அடுத்த நாளே இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற முடிவுசெய்து அறிவித்தது தமிழ்நாடு அரசு. இதையடுத்து, "தி.மு.கவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்" என்று பதிவிட்டார் அண்ணாமலை.

அதுவரை அண்ணாமலைக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் இருந்த தி.மு.க, இந்தத் தருணத்தில் செந்தில் பாலாஜி மூலம் நேரடியாகப் பதிலளித்தது. செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, "அரசுக்குத் தெரியாத விஷயங்கள் அண்ணாமலைக்குத் தெரிந்திருக்கின்றன. அவரிடம் தான் முதலில் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறினார்.

தீவிரம் அடையும் வார்த்தைப் போர்

கோவை கார் வெடிப்பு சம்பவம்

இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, செந்தில் பாலாஜியை 'சாராய அமைச்சர்' என அழைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலகுவாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அக்டோபர் 18ஆம் தேதியே மத்திய புலனாய்வு அமைப்புகள் இது தொடர்பாக எச்சரித்ததாகவும் ஜமீஷா முபினைக் கண்காணிப்பதை, திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மறுபடியும் ட்விட்டரில் களமிறங்கிய செந்தில் பாலாஜி, "முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை." என்று பதிலளித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இதற்கிடையில், கோவையில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டினார். அந்தத் தருணத்தில் தூத்துக்குடியில் இருந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அக்டோபர் 29ஆம் தேதி சனிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை எழுப்பிவரும் பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை நேரடியாகப் பதிலளித்தது.

"வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக இந்திய உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, இந்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. 18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்" என்று கூறியது அந்த அறிக்கை.

உளவு ஆவணத்தை வெளியிட்ட அண்ணாமலை

கோவை கார் வெடிப்பு சம்பவம்
படக்குறிப்பு, சி. சைலேந்திரபாபு, தலைமை இயக்குநர் - தமிழ்நாடு காவல்துறை

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்," என்று கூறியதோடு, அந்த அறிக்கைக்கு வரிக்கு வரி பதிலளிக்கப்போவதாகக் கூறி, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர் இதற்கு முன்பாக கூறியிருந்த தகவல்களைக் கூறி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக கோயம்புத்தூரில் முழு அடைப்பு நடத்தப்போவதாக மாவட்ட பா.ஜ.கவால் அறிவிக்கப்பட்டு, பிறகு அந்த அறிவிப்பு ஒரு நீதிமன்ற வழக்கிற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலைமையில்தான், தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக சில விளக்கங்களை முன்வைத்தார். இந்த நிலையில், கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்த இடத்திற்கு அருகில் இருந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற அண்ணாமலை, "ஜூன் 19ஆம் தேதி 'கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்' என உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில் 89ஆவது நபராக ஜமேசா முபின் உள்ளார். அப்படிப்பட்டவர் எவ்வாறு கண்காணிப்பு வளையத்தில் இருந்து தவறினார் என்பதுதான் என் கேள்வி. கோவையில் செப்டம்பர் மாதம் வரை உளவுத்துறைக்கு அதிகாரி நியமிக்கப்படாமலேயே இருந்துள்ளார். இவ்வாறு காவல்துறையில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்" என்றார்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பிற கட்சிகள் ஏதும் பெரிதாக விமர்சிக்காத நிலையில், இந்த விவகாரத்தை தொடர்ந்து விவாத நிலையில் வைத்திருக்கிறார் அண்ணாமலை. இத்தனைக்கும் இந்த விவகாரத்தை அக்டோபர் 27ஆம் தேதியே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிவிட்ட நிலையிலும் இது தொடர்பாக தினசரி ஒரு அறிக்கை அளிப்பதையோ, செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுவதையோ அவர் உறுதிப்படுத்தி வருகிறார்.

பொதுவாக பா.ஜ.கவினர் எழுப்பும் கேள்விகளுக்கு தி.மு.க. தலைமை பதிலளிப்பதில்லை. கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களோ, கீழ் மட்ட நிர்வாகிகளோதான் பதில் அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்திலும் அமைச்சர்கள் இருவரும் செய்தித் தொடர்பாளரும்தான் பதில் அளித்தார்கள் என்றாலும், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை நேரடியாகப் பதில் அளித்தது பலரது புருவங்களை உயர்த்தியது.

அரசியல் களமாடும் பாஜக, திமுக

ஏ.எஸ். பன்னீர்செல்வன்
படக்குறிப்பு, ஏ.எஸ். பன்னீர்செல்வன், மூத்த பத்திரிகையாளர்

தாங்கள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை அண்ணாமலை ஏற்படுத்தியிருக்கிறாரா?

இது குறித்து மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வனிடம் கேட்டபோது, "அப்படி அல்ல," என்கிறார் அவர்.

"பா.ஜ.க. எழுப்பும் அல்லது அண்ணாமலை எழுப்பும் கேள்விகளுக்கு தலைவரோ பொதுச் செயலாளரோ பதில் சொல்கிறார்களா? இல்லை. செய்தித் தொடர்பாளரான ராஜீவ் காந்திதான் பதிலளிக்கிறார். அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள் அளவுக்குத்தான் உங்க கட்சியின் மாநிலத் தலைவர் என்று காட்டுகிறது தி.மு.க." என்கிறார் அவர்.

மேலும், இதுபோலப் பேசுவதால் அரசியல் ரீதியாக தி.மு.க. அதற்கு என்ன விலையைக் கொடுத்திருக்கிறது? அப்படி எந்த விலையும் கொடுக்காத நிலையில், எதற்காக கட்சி கவலைப்பட வேண்டும் என கேள்வி எழுப்புகிறார் அவர்.

ஆனால், ஆளும்கட்சி இந்த விவகாரத்தைக் கையாள்வதில் தடுமாறித்தான் போயிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "எதிர்க்கட்சியான அ.தி.மு.கவைச் சுத்தமாகக் காணவில்லை. ஆகவே அந்த இடத்தை அடையும் முயற்சியை தீவிரமாகச் செய்கிறார் அண்ணாமலை. பதற்றத்தை எப்படியாவது ஏற்படுத்த வேண்டும் என கருதுகிறார். இந்தப் பதற்றம் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வேண்டுமென நினைக்கிறாரோ என்று தோன்றும் வகையில் அவர் செயல்படுகிறார்.

ஆனால், இந்த விஷயத்தை பொதுவெளியில் கையாளுவதில் தி.மு.கவுக்கு தடுமாற்றம் இருக்கிறது. பா.ஜ.க. இதில் ஆதாயம் அடைந்துவிடக்கூடாது எனக் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் அப்படித் தயங்க வேண்டியதில்லை. ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் தவிர, களத்தில் இதை யாரும் பேசவில்லை. கோயம்புத்தூர் அமைதியாகவே இருக்கிறது. இதுபோன்ற வன்முறையை யாரும் விரும்பவில்லை. உதாரணமாக, இதில் இறந்துபோன முபினின் உடலை அடக்கம் செய்ய எந்த ஜமாத்தும் அங்கே முன்வரவில்லை. அதனை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து, பாஜக மதவாத அரசியல் செய்ய நினைப்பதாக கடுமையான அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும்" என்கிறார் குபேந்திரன்.

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊடகங்களில் அதற்குப் பொருந்தாதவகையில் கூடுதல் இடம் பா.ஜ.கவுக்குக் கிடைப்பதுதான் என்று சுட்டிக்காட்டுகிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன். "பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி என்பதற்காக இந்த இடம் கிடைக்கவில்லை. அப்படியானால் தேசியப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். ஆகவே இது அரசியல் சிக்கல் இல்லை. ஊடகங்களின் சிக்கல்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

red line
காணொளிக் குறிப்பு, குஜராத் பாலம் விபத்து: 10 நொடியில் விழுந்த தொங்கும் பாலம் - சிசிடிவி காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: