கோவை கார் வெடிப்பு: தமிழ்நாடு காவல்துறைக்கு அண்ணாமலை 'பதில்' அறிக்கை

தமிழ்நாடு காவல்துறைக்கும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான சொற்போர் தீவிரமடைந்திருக்கிறது.
காவல்துறை மீது அவதூறு பரப்புவதாக அண்ணாமலையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதில்கூறும் வகையில் அண்ணாமலை மற்றொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
"பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம்" எனக் கேள்வியெழுப்பியுள்ள அண்ணாமலை, "இந்தக் குண்டு வெடிப்பிற்கு தமிழக ஆளுநர் காரணம் என சமூக வலைதளங்களில் பரப்பிவரும் திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்றும் கேட்டுள்ளார்.
கடந்த 23ஆம் தேதி ஞாயிறு அதிகாலை கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு மாருதி வாகனம் 2 எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களோடு வெடித்தது. அதில் வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது.
இந்த விபத்திற்குப் பின்னால் தீவிரவாத சதிச்செயல்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பிவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், காவல்துறை மீது அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் விரைவில் பதிலளிக்கப்படும் என அண்ணாமலை ட்வீட் செய்தார்.
இந்த நிலையில், தமிழக காவல்துறையின் அறிக்கைக்கு பதிலளித்து நீண்ட அறிக்கை ஒன்றை அண்ணாமலை இன்று வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ள முக்கிய விஷயங்களை இங்கு வழங்கியுள்ளோம்.
"தமிழக காவல்துறையா, அறிவாலயத்தைக் காக்கும் துறையா?" என்ற கேள்வியோடு அந்த அறிக்கையைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, "முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரியாகவும், தமிழக பாஜகவின் தலைவராகவும்" இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான தமிழக காவல்துறை தனிப்பிரிவு அறிக்கையைப் பகிர்ந்துள்ள அண்ணாமலை, "இந்தச் சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அதை தமிழக அரசு மற்றும் காவல்துறை அறிவிக்காமல் மௌனம் காப்பது ஏன்?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார். தனிப்பிரிவின் இந்த அறிக்கையை காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு இதுவரை பர்க்கவில்லை என்பதை நேற்றைய அறிக்கை தெளிவுபடுத்துகிறது" அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போதுதான் சிலிண்டர் வெடிப்பிலிருந்து குண்டு வெடிப்பிற்கு தமிழக அரசு மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, இதை தீவிரவாதத் தாக்குதல் அல்லது தற்கொலைப்படைத் தாக்குதல் எனக் குறிப்பிட பல மாதங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மாத 18ஆம் தேதி மத்திய அரசு வழங்கிய சுற்றறிக்கை பொதுவானது என்றும், அதில் கோவை தாக்குதல் பற்றி எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என சிறுபிள்ளைத்தனமான வாதத்தை தமிழக காவல்துறை நேற்றைய அறிக்கையில் முன்வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் தனிநபராக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 96 நபர்களின் பட்டியலை அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன்னரே காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறையிடம் காவல்துறையின் ஒரு தனிப்பிரிவு வழங்கியதாகவும், அந்த அறிக்கையில் ஜமேஷா முபீனின் பெயர் 89ஆம் இடத்தில் இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.
காவல்துறை கூறியது என்ன?
தமிழ்நாடு காவல் துறை தலைமையகத்தில் இருந்து நேற்று வெளியான அறிக்கையில், அண்ணாமலை, "புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த வழக்கை தாமதமாக தேசியப் புலனாய்வு முகமைக்கு அனுப்பியதாக கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (UAPA) சேர்க்கப்பட்டாலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008-ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம் ஆனால், நடைமுறையில், ஒன்றிய அரசு, தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.
கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த விஷயத்தை விளக்கிய காவல் துறை அறிக்கை,"சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன்வந்து தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம்.
ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழ்நாடு முதல்வர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தார்.
இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துக்கூட வழக்குகள் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்.ஐ.ஏ. விடம் ஒப்படைக்கப்பட்டன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
" இது போன்ற உண்மையில்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி(யான அவர்) பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













