தென்னிந்திய முதல்வர்கள் குழு: மு.க.ஸ்டாலினின் முயற்சியும் 3 கேள்வி பதில்களும்

பட மூலாதாரம், DIPR
- எழுதியவர், ஆ.விஜய் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
மத்திய அரசுக்கு எதிராக தென்னிந்திய முதலமைச்சர்கள் குழுவை உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சரின் பேச்சு, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
`மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோதியையும் குறை சொன்னால் தேசிய அளவில் வளர்ந்துவிட முடியும் என்ற நோக்கத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அவரது முயற்சிகளை நாடகமாகத்தான் பார்க்கிறோம்' என்கிறது பா.ஜ.க. தமிழ்நாடு முதல்வரின் முயற்சிகளால் என்ன நடக்கும்?
அரிச்சுவடியை மாற்றும் அரசியல்
கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 9 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில உறவுகள் என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், `இந்தியாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை 356 ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன் முதலில் கலைக்கப்பட்டது கேரள அரசாங்கம்தான். தமிழ்நாட்டிலும் 1976, 1991 என இரண்டு முறை மக்களால் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. அந்தவகையில் ஒன்றிய, மாநில உறவுகளைப் பற்றிப் பேசும் உரிமை கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கு உள்ளது. மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால் மட்டுமே இந்திய நாடு காப்பாற்றப்படும். மாநிலங்கள் இணைந்தால்தான் நாடு. ஆனால் அரிச்சுவடியை சிலர் மாற்றுகிறார்கள்' என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசுகையில், ` இந்தியாவில் எத்தனையோ மதங்கள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள், கலாசாரங்கள், உடைகள், உணவுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோம். இதனை அழித்து ஒற்றைத் தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே உணவு என கோரஸ் பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்றாகிவிடும். இதைவிட ஆபத்தானது வேறு இருக்க முடியுமா? இதற்கு எதிரான குரல்தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைக் கடந்து தனது அதிகார எல்லையை இந்திய அரசு விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்கூட இப்படியொரு ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கவில்லை. ஆங்கிலேயர்கள்கூட செய்வதற்குத் துணியாததை பா.ஜ.க செய்ய நினைக்கிறது எனக் குற்றம் சுமத்துகிறேன்'' என்றார்.
தென்னிந்திய முதல்வர்கள் குழு
மேலும், டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள், மாநிலங்களை அடிபணியச் செய்வதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், ` இது மக்களுக்குச் செய்யும் துரோகம். எந்தவித விவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அங்கே எந்தக் கேள்விகளுக்கும் பதில் இல்லை. எதற்கும் பொறுப்பேற்காத வகையில் டெல்லியில் உள்ள அரசு செயல்படுகிறது. கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்கு அதிகாரத்துடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் வசம் நீட் தேர்வு விலக்கு உள்பட 11 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இங்குள்ள எட்டு கோடி மக்களைவிட நியமன ஆளுநருக்கு அதிக அதிகாரம் உள்ளதா?' எனக் கேள்வியெழுப்பினார்.
`இதுபோன்ற இடையூறுகளை எதிர்கொள்வதற்கு அரசியலையும் தாண்டி மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும்' எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், `தென்னிந்திய முதலமைச்சர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழுவில் பின்னர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும் சேர்க்கலாம். மாநிலங்களுக்கு அதிக உரிமைகளை வழங்கக் கூடிய வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதற்கு அரசியல் எல்லைகளைத் தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய லட்சியங்களை நம்மால் காப்பாற்ற முடியும்'' என்றார்.

பட மூலாதாரம், DIPR
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் சமூகநீதிக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிய ஸ்டாலின், அதில் இணைய வருமாறு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்தார். இதுகுறித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், `தனித்தன்மைமிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆன நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும்' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், `இது அரசியல் ஆதாயம் பற்றியது அல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்' எனத் தெரிவித்தார். இந்த அமைப்புக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
பா.ஜ.க சொல்வது என்ன?
இதன்தொடர்ச்சியாக, தென்னிந்திய முதலமைச்சர்கள் குழுவை உருவாக்க வேண்டும் எனப் பேசிய கருத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, `` எப்போதும்போல மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோதியையும் குறை சொன்னால் தேசிய அளவில் வளர்ந்துவிட முடியும் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.
அதற்கேற்ப பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி வீழ்ந்துவிட்டது. அதனால் பா.ஜ.கவுக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கி அதில் தான் ஒரு முக்கிய இடம் வகிக்க வேண்டும் என்ற போட்டியில் இட்டுக்கட்டக் கூடிய விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார்'' என்கிறார்.

பட மூலாதாரம், DIPR
தொடர்ந்து ஆளுநர் மீதான ஸ்டாலினின் விமர்சனம் குறித்துப் பேசுகையில், `` எட்டு கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி எனக் கூறிவிட்டு ஆளுநரை விமர்சிக்கிறார். இந்தியாவில் 138 கோடி மக்களுக்கான அதிகாரம் என்பது சட்டம்தான். இங்கு சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. அதற்கு உட்பட்டுத்தான் ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுப்பார். அது முதலமைச்சருக்கு ஏன் தெரியாமல் போனது என்பதுதான் எனது கேள்வி. இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மசோதாக்களை அனுப்பி வைத்திருக்கிறார். மற்ற மசோதாக்களுக்கு அவர் சில விளக்கங்களைக் கேட்டுள்ளார். அதற்கான பதில் அரசுத் தரப்பில் இருந்து இதுவரையில் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதுபோன்ற நேரங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் ஆளுநரால் செயல்பட முடியும்'' என்கிறார்.
சட்டத்தை மதித்தால் புரியும்
`` பெரும்பான்மை இருந்தால் சர்வாதிகாரமாகத்தான் இருக்கும் என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து கொண்டிருப்பது என்ன? தமிழ்நாட்டில் ஸ்டாலினை விமர்சித்தாலே காவல்துறையினர் ஓடிச் சென்று கைது செய்யும் சூழலைப் பார்க்க முடிகிறது. அதேநேரம், `பிரதமரைக் கொல்வோம்' என்றெல்லாம் பேசுகிறவர்களைக் கண்டுகொள்ளாமல் கைகட்டி நிற்கின்றனர். பா.ஜ.க குறித்தோ, நாடு குறித்தோ மு.க.ஸ்டாலின் சிந்திக்கிறார் எனக் கூறுவதே வித்தியாசமாக இருக்கிறது. அண்மையில் அமித் ஷா பேசியதற்கு பதில் கூறும்விதமாக, `இந்தி மட்டும் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லையா?' என ஸ்டாலின் கேட்கிறார். இதுநாள் வரையில் `மாநிலங்களால் ஆனது இந்தியா' எனக் கூறிக் கொண்டிருந்தவர், உண்மையை உணர்ந்து கொண்டு `இந்தியாவின் ஓர் அங்கம்தான் மாநிலங்கள்' என ஒப்புக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதேநிலையை அவர் தொடர்வார் என நம்புவோம்'' என்கிறார் நாராயணன் திருப்பதி.
மேலும், ``மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளை மத்திய அரசு அடிபணிய வைப்பதாகக் கூறுகிறார். சட்டத்துக்கு உட்பட்டுத்தான் மத்திய அரசு செயல் புரிகிறது- சட்டத்தை மதிப்பவர்களுக்கு இது தெரியும். மாநில முதல்வர்கள் குழு, தென்னிந்திய மாநில முதல்வர்கள் என்றெல்லாம் ஸ்டாலின் கூறுவது நாடகம்தான். தென்னிந்தியாவில் தலைமையேற்க முடியுமா என அவர் பார்க்கிறார்'' என்கிறார்.

பட மூலாதாரம், DIPR
படைத்தளபதி யார்?
``சமூக நீதிக் கூட்டமைப்பின் அடுத்த முயற்சியாக இதனைப் பார்க்கலாமா?'' என தி.மு.க செய்தித் தொடர்பாளரும் தலைமைக் கழக வழக்குரைஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, `` சமூக நீதிக் கூட்டமைப்பை முதலமைச்சர் உருவாக்கியபோது வரவேற்பு பெருகியது. சமூகநீதிக்கான தேவையை உணர்த்தவே இந்தக் கூட்டமைப்பு உருவானது. அந்தளவுக்கு நாடு முழுவதும் பா.ஜ.கவின் வகுப்புவாதம் அதிகரித்து வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதுபோல, பா.ஜ.கவை எதிர்ப்பதற்கு முதலமைச்சர்கள் அடங்கிய குழு தேவைப்படுகிறது'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டதாக பா.ஜ.க சொல்கிறது. தேசியக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் ஒன்றுதான். ஒரே நாடு, ஒரு மொழி, ஒரே சிந்தாந்தம் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஓர் அரசானது மதம் சார்ந்து இயங்கக் கூடாது. அந்தவகையில், ராகுல்காந்தி தலைமையில் மட்டுமல்ல, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்கூட கூட்டணி நிறுவப்படலாம். இங்கு எங்களுக்குள் எந்தவித பாகுபாடும் இல்லை. நாடு முழுவதும் சமூக நீதியை முன்னிலைப்படுத்தும் வகையில் வல்லமை பொருந்திய முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். சமூக நீதிக் கூட்டமைப்பின் தலைவராகவும் முதலமைச்சர் இருக்கிறார். இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கக் கூடிய படைத்தளபதி யார் என்பதுதான் முக்கியம்'' என்கிறார்.

பட மூலாதாரம், DIPR
``வேளாண்மை, வருவாய், அணைப் பாதுகாப்பு என மாநில பட்டியலில் உள்ளவற்றுக்கு எல்லாம் ஒன்றிய அரசு சட்டம் இயற்றுகிறது. மக்களாட்சித் தத்துவத்துக்கு ஆளுநர் மூடுவிழா நடத்தப் பார்க்கிறார். அதிபர் ஆட்சி முறையைக் கடைப்பிடிப்பதற்கு பிரதமர் மோதி முயற்சி செய்கிறார். இதனை எதிர்க்கும் படைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்'' எனக் குறிப்பிடுகிறார் சூர்யா வெற்றிகொண்டான்.
மேலும், `` மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட பிறகு அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை அலுவல் மொழியாக தொடர வேண்டும் என்கின்றனர். ஆங்கிலத்தை சுவாசிக்கவே எங்களுக்கு அரை நூற்றாண்டுகள் ஆனது. இந்தியை கற்றுக் கொள்வதற்கு இன்னும் கால் நூற்றாண்டுகள் தேவைப்படும். அந்தவகையில் இது உரிமைக்கான போராக உள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களையும் தென்னிந்திய முதலமைச்சர்கள் குழுவில் சேர்த்துக் கொள்வோம்'' என்றார்.
முதல்வர்கள் குழுவால் என்ன நடக்கும்?
``தென்னிந்திய முதல்வர்கள் குழுவால் என்ன நடக்கும்?'' என மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``எதிர்க்கட்சிகளின் முதல்வர்கள் மாநாடுகள் எல்லாம் முன்பு நடந்துள்ளன. ஆந்திர முதல்வராக என்.டி.ராமாராவ் இருந்த காலத்தில் தென்மாநில முதல்வர்களின் கூட்டமைப்புக்கான முயற்சிகள் நடந்துள்ளன. தற்போது அதற்கான தேவை எழுந்துள்ளது. முன்பெல்லாம் மாநில உரிமைகள் என்பதை தமிழ்நாடு தொடர்ந்து எதிரொலித்து வந்தது. மேற்கு வங்கத்தில் இருந்தும் குரல்கள் வந்தன. தற்போதைய காலகட்டத்தில் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மாநில அதிகாரங்களைப் பறித்து ஒற்றை ஆட்சி முறை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் சிந்தாந்தம். அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
`` மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படக் கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை. அந்த அடிப்படையில் பார்த்தால் நிலைமை மோசமாகி வருகிறது. ஒற்றை ஆட்சி முறையை நோக்கிச் செல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தும் தென்மாநில முதல்வர்களின் குழு என்பது வரவேற்கத்தக்கது. இதற்கான குரலை ராஜ்யசபாவில் அண்ணா எதிரொலித்தார். தொலைநோக்குப் பார்வையுடன் அவர் பேசினார். அதன் தொடர்ச்சியாக அந்த எண்ணத்தை ஸ்டாலின் பிரதிபலிக்கிறார்'' எனக் குறிப்பிட்டார் சிகாமணி.
அதோடு, ``சமூக நீதிக் கூட்டமைப்பு, மாநில முதல்வர்கள் குழு ஆகியவை மிகவும் தேவையான ஒன்று. இது நிச்சயமாக பலன் தரும் என நினைக்கிறேன். மேக்கேதாட்டு அணை விவகாரம், முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்னைகளை தீர்ப்பதற்கும் நல்லுறவை வளர்ப்பதற்கும் இது பயன்படும். மராட்டியத்திலும் ஆளுநரின் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இவை குறித்து அனைவரும் ஒன்றுகூடி பேசுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது'' என்றும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













