மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்: பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டுகள் சரியா? சர்ச்சையும் 5 கேள்விகளும்

பட மூலாதாரம், DIPR
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் தொடர்பாக பா.ஜ.க எழுப்பி வரும் குற்றச்சாட்டுகள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. `அரசியல்ரீதியாக மற்றவர்களை அச்சுறுத்தி பா.ஜ.க எப்படியெல்லாம் பணம் பெற்றது என்பது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன. அதனை விரைவில் வெளியிடுவேன்' என்கிறார், தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24 ஆம் தேதி துபாய் சென்றார். இந்தப் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வரின் செயலாளர்களான உதயசந்திரன், உமாநாத் உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர். முதல்வரின் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். பயணத்தின் முதல் நாளில் ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சர் அப்துல்லா பின்டுக் அல்மாரி, அந்நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் தானி பின் அகமது அல்கியோதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் முதல்வர்.
பின்னர், சர்வதேச எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்ற முதல்வர், தமிழ்நாட்டின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள முதலீட்டாளர்களையும் சந்தித்துப் பேசினார். மேலும், `வெளிநாடுவாழ் தமிழர்கள், தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டார்.

பட மூலாதாரம், DIPR
அதேநேரம், முதலமைச்சரின் துபாய் பயணத்தை முன்வைத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, `முதலமைச்சர் தனிப்பட்ட நோக்கத்துக்காகத்தான் துபாய் செல்கிறார். கண்காட்சி முடியப் போகும் நேரத்தில் ஏன் செல்ல வேண்டும்? அவரின் கவனம் முழுவதும் துபாய் மீதுதான் உள்ளது' எனக் குறிப்பிட்டுவிட்டு, துபாய்க்குச் சென்ற ஐந்தாயிரம் கோடி ரூபாய் பற்றி பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சர்ச்சை என்ன?
இதனையடுத்து, முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய அண்ணாமலையிடம் 100 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் மன்னிப்புக் கேட்காவிட்டால் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ` பா.ஜ.கவின் தலைவர்களாக இருந்தவர்கள் யாரும் பேசாத அளவுக்கு அண்ணாமலை பேசி வருகிறார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார். பிரதமர் நரேந்திர மோதியும் ஏறக்குறைய 64 முறை வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் ஒவ்வோர் முறையும் இந்தியாவில் சம்பாதித்ததை வெளிநாட்டில் முதலீடு செய்தார் என்று அர்த்தமா? முதலமைச்சரின் பயணம் தொடர்பாக விருதுநகரிலும் சென்னையிலும் அண்ணமலை பேசியிருக்கிறார். அந்தப் பேச்சு இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
மேலும், `நோட்டீஸை பெற்ற 24 மணிநேரத்துக்குள் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கத் தவறினால் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குத் தொடர உள்ளோம். 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எங்களை மிரட்டலாம் என அண்ணாமலை நினைத்தால் அது நிச்சயமாக நடக்காது' என்றார். முன்னதாக, `தேர்தலுக்காக பா.ஜ.க எப்படியெல்லாம் மிரட்டிப் பணம் பெற்றது என்பது தொடர்பான ஆதாரத்தை வெளியிடுவேன்' என ஆர்.எஸ்.பாரதி கூறியது விவாதத்தை ஏற்படுத்தியது.
தி.மு.க தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், `நம் நாட்டில் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனாலும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித அவதூறுகளை சட்டம் அனுமதிக்காது' எனக் குறிப்பிட்டு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை பா.ஜ.கவின் தலைமை அலுவலகத்துக்கு தி.மு.க அனுப்பியுள்ளது.

பட மூலாதாரம், DIPR
இந்த நோட்டீசுக்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு என் மீது மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததை அறிந்தேன். சாதாரண சாமானியனான என்னையும் அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு சரிசமமாக தி.மு.கவின் முதன்மைக் குடும்பம் நடத்துகிறது. நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தி.மு.கவின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதியிடம் 3 கேள்விகள்
அண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் குறித்து தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` நாங்கள் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு அண்ணாமலை விளக்கம் கொடுக்கட்டும். அதன்பிறகு பேசுகிறேன்'' என்றார்.
``பா.ஜ.க தரப்பில் எப்படியெல்லாம் மிரட்டிப் பணம் வாங்கினார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்கிறீர்கள். அது என்ன எனச் சொல்ல முடியுமா?'' என்றோம். ``கர்நாடக தேர்தல் உள்பட எந்தெந்த தேர்தல்களுக்கெல்லாம் பா.ஜ.கவுக்கு எடப்பாடி பழனிசாமி பணம் கொடுத்திருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறு ஆதாரம் இருப்பதால்தான் கூறுகிறேன். அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்தவர்களில் சிலர் கொடுத்த வாக்குமூலங்கள் என்னிடம் உள்ளன. 300 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் என பா.ஜ.கவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அதையெல்லாம் சேகரித்து வைத்துள்ளோம்'' என்கிறார்.

பட மூலாதாரம், RS BHARATHI/FACEBOOK
``பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணத்தை நீங்கள் விமர்சித்தது சரியல்ல என்கிறதே பா.ஜ.க?'' என்றோம். ``மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்காகத்தான் முதலமைச்சர் சென்றுள்ளார். பிரதமர் தன்னுடன் அதானியை அழைத்துக் கொண்டு சென்றாரே? அவர் 64 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். கொரோனா தொற்று பரவியதால்தான் அவரால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அவர் சென்றதன் மூலம் இந்தியாவுக்கு எத்தனை முதலீடுகள் வந்தன? அதுவே முதலமைச்சர் சென்ற இரண்டு நாள்களுக்குள் எத்தனை முதலீடுகள் வந்துள்ளன எனப் பார்க்க வேண்டும். நாங்கள் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு பா.ஜ.க தரப்பில் வரப் போகும் விளக்கத்தைப் பொறுத்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்'' என்கிறார்.
பா.ஜ.கவிடம் 2 கேள்விகள்
ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ``தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அண்ணாமலை கூறியுள்ள கருத்துகள் தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீஸில், `முதல்வரின் மதிப்பையும் மரியாதையையும் குலைக்கின்ற வகையில் பேசப்பட்ட அவதூறு கருத்துகள் என்பதோடு, அந்நிய முதலீட்டை இந்தியாவுக்கு கொண்டுவரும் முதல்வரின் முயற்சியை சீர்குலைக்கும் தேச விரோதப் பேச்சு என்பதால் தேசத் துரோக குற்றச்சாட்டில் கையாள வேண்டிய நடவடிக்கையும்கூட' எனக் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட நாடு கோரிக்கையை வரவேற்பதாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார். இது தேசவிரோதப் பேச்சாக தெரியவில்லையா, பாதுகாப்புக் கண்காட்சியை அர்ப்பணிக்க தமிழ்நாடு வந்த பிரதமர் மோதிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததை எந்தவகையில் சேர்ப்பது? பிரதமர் வெளிநாடுவாழ் பிரதமர், ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார் என 2019 ஆம் ஆண்டு கூறியதை தேச விரோதம் என ஸ்டாலின் ஒப்புக் கொள்வாரா?'' என்கிறார்.
மேலும், ``அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல், `வழக்கு தொடுப்போம்' என்று மிரட்டுவது வேடிக்கையாக உள்ளது. இங்கு நடப்பது தி.மு.க ஆட்சி என ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அதேபோல், நடப்பது பா.ஜ.க ஆட்சி என்பதே எங்களின் பதில்'' என்கிறார்.
``தேர்தல்களுக்காக அ.தி.மு.கவிடம் இருந்து பா.ஜ.க பணம் பெற்றது என்கிறாரே ஆர்.எஸ்.பாரதி?'' என்றோம். ``பா.ஜ.க மிரட்டிப் பணம் கேட்டதாக ஆதாரம் இருந்தால் ஆர்.எஸ்.பாரதி வெளியிடட்டும். அதனை வெளியிடுவோம் எனக் கூறுவதன் மூலம் அவர்கள் ஏதோ தவறு செய்து கொண்டிருப்பதைத்தான் காட்டுகிறது. இந்த நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் தி.மு.க வெளியிடட்டும். நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும்; கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியோடு நேர்மையுள்ள கட்சியாக இருந்தால் தி.மு.க வெளியிட வேண்டும். அதைவிடுத்து பூச்சாண்டி காட்டுவதன் மூலம் அது ஒரு வெண்கலப் பாத்திரம் என்பது தெரிந்துவிட்டது'' என்கிறார் நாராயணன் திருப்பதி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












