தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை திருப்பிக் கொடுத்த ரூ.927 கோடி: ஒருவர் கூட பயனடையவில்லையா?

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு தமிழ்நாடு அரசு ரூ.4281.76 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக (2016 - 2021 வரை) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.927 கோடி செலவிடப்படாமல் அரசாங்கத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆர்.டி.ஐ மூலம் பெற்றப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

அதே போல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடு சென்று பட்டம் பெறுவதற்காக ஒதுக்கப்படும் நிதியும் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ள தகவலும் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2012-13 முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான 9 ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்கு வெறும் 22 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதில் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்கு ரூ.2,95,83,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வெறும் ரூ.1,68,66,000 மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1,27,17,000 செலவு செய்யப்படவில்லை.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும் ஒருவர்கூட இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறவில்லை என்கிற தகவல் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பெற்றுள்ள ஆர்.டி.ஐ தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் இந்தத் திட்டத்திற்கு ரூ.5,31,00,000 நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.டி.ஐ செயல்பாட்டாளர் கார்த்திக், "ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 60க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் வன்கொடுமைகளைச் சந்திப்பவர்களுக்கான இழப்பீடு, தொகுப்பு வீடு வழங்குவது, மாணவர் விடுதி பராமரிப்பு, நிதியுதவி எனப் பல்வேறு திட்டங்கள் உள்ளன," என்று கூறினார்.

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.925 கோடி செலவு செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கும்போது போதிய நிதியில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

2016-க்கு முன்னர் சில வருடங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கியதைவிட கூடுதலான நிதி செலவு செய்துள்ளார்கள். எனவே ஒதுக்கப்படும் நிதிக்கு பயன்பாடு இல்லை எனக் கூற முடியாது. 2016-க்கு பின்னர் தான் நிலை மாறியுள்ளது. அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு, எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத் திட்டத்தால் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.927 கோடி

பட மூலாதாரம், KARTHIK

"ஆதி திராவிடர், பழங்குடியினர் சமூக மாணவர்களுக்கு அயல்நாடு சென்று கல்வி கற்க வேண்டும் என்பது பெரிய கனவு. ஆனால் அதற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் கவலையளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 3 மாணவர்கள் மட்டுமே இதன் மூலம் பலனடைந்துள்ளனர்.

கடந்த 2012 முதல் 2021 வரை 9 ஆண்டுகளுக்கு ரூ.2.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.5.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

ஆனால் இந்தத் திட்டம் அதற்குரிய பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. அரசு போதிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். திட்டத்தின் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த வேண்டும். மேலும் கூடுதலான நிதியையும் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்,' என்கிறார் கார்த்திக்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர், `இந்த விஷயத்தில் அரசாங்கம் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். ஒரு துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் சிறிதளவு கூடுதலாகவும் குறைவாகவும் செலவிடப்படுவது யதார்த்தம். ஆனால் ஐந்து ஆண்டுகளில் ரூ.927 கோடி செலவிடப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது.

ஆதிதிராவிடர் நலத் திட்டத்தால் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.927 கோடி

பட மூலாதாரம், KARTHIK

ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அத்துறை ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை உள்ளடக்கி தான் இருக்கும். அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செலவு செய்யப்படாமல் இருக்காது. இவை நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட்டிருக்க வேண்டிய தொகையாகத் தான் இருக்க வேண்டும்.

பல மாவட்டங்களில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற முடியாமல் இருக்கின்றனர். அரசாங்கம் இதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் ஒவ்வொரு காலாண்டும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையான செலவிடப்பட்டு அதன் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பதையும் ஆராய வேண்டும். தமிழக அரசு புதிதாக அமைத்துள்ள சமூக நீதி கண்காணிப்பு குழு மூலம் இதைச் செய்யலாம்.

குறிப்பிட்ட துறைக்கு, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதோடு அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. அதனை செயல்படுத்துவதில் மக்களையும் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். அப்போது திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அதற்குரிய பயனாளிகளைச் சென்றடையும்," என்கிறார்.

ஆதிதிராவிடர் நலத் திட்டத்தால் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.927 கோடி

பட மூலாதாரம், KARTHIK

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், "ரூ.927 கோடி செலவு செய்யப்படவில்லை என்று மிகைப்படுத்தி கூறப்படுகிறது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சம்பளத்திற்கு என ஒதுக்கப்படும் நிதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் அரசுக்கு திருப்பி கொடுத்தாக வேண்டும். மேலும் கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் தொகை அந்த திட்டம் குறித்த காலத்தில் நிறைவடையவில்லையென்றால் நிதியாண்டின் இறுதியில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பது நடைமுறை. அது அடுத்த நிதியாண்டில் சேர்த்து வழங்கப்படும்," என்கிறார்.

"இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட தொகை தான் அது. காலியிடங்கள் என்பது பெரும்பாலும் ஆசிரியர் பணிகளுக்கான காலியிடங்களாக உள்ளன. அதனை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பேசி வருகிறோம். கல்வி உதவித் தொகையை பொருத்தவரை முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம் முறையாக செயல்பட்டு வருகிறது. அயல்நாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கான நிதி தான் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளன."

"அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. அயல்நாடு கல்விக்காக உதவித் தொகை பெறுவோருக்கான ஆண்டு வருமான வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 8 லட்சமாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அந்தத் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. எனவே இனி வரும் காலங்களில் அவை முறையாக அதன் பயனாளிகளைச் சென்றடையும்,` என்கிறார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

Presentational grey line

மகராஷ்டிராவின் அகமது நகரில் முதல் பெண் கவுன்சிலர் - காணொளி

காணொளிக் குறிப்பு, அகமதுநகரின் முதல் பெண் பவுன்சர்: கோமல் காலே சந்தித்த சவால்கள் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: