ஒன்றியத்துக்கு ஆளுநர் ரவி தந்த விளக்கம் - ஸ்டாலின் எதிர்த்த பிற்போக்கு கருத்து

பட மூலாதாரம், R.N. RAVI
(இன்று (மார்ச் 12) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்)
"இந்தியா ஓர் ஒப்பந்தப்பிரிவின் ஒன்றியம் அல்ல. இங்குள்ள மக்களின் பன்முகத் தன்மை என்பது நம் உடலின் பல்வேறு பாகங்களின் பன்முகத் தன்மையைப் போன்றது," என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் மாநாட்டிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தபோது பேசியது குறித்து தினமணியில் வெளியான செய்தியில், "இந்திய யூனியன் பற்றிப் பேசுபவர்கள் இந்தியா 1947-ல் பிறக்கவில்லை என்பதையும் அமெரிக்காவை போல ஒப்பந்தக் கூட்டமைப்பு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1, இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதற்கு முன்பு, இந்தியா அது பாரதம் என்று கூறுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் பாரதம் காலம் காலமாக ஒரேயோர் உயிரினமாக இருந்து வருகிறது," என்று ஆளுநர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நாளிதழ், துணைவேந்தர்கள் மாநாட்டில் காணொளி வாயிலாக பங்கேற்று ஸ்டாலின் பேசிய தகவலையும் பதிவு செய்திருக்கிறது.
அதில், பாடத்திட்டத்தில் பிற்போக்குத்தனமான கருத்துக்கள் புகுத்தப்படுவதைத் தடுக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிற்போக்குத்தனமான கருத்துக்களை கல்வியில் புகுத்தி வருகிறது. கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும். மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய தம்பதி கைது
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை வெள்ளிக்கிழமை திருடிச் சென்ற தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன்(29) மற்றும் சுஜாதா(26) தம்பதிக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பிச்சுவாக்கத்தைச் சேர்ந்த ராமன்(35) மற்றும் அவரது மனைவி சந்தியா (30) திருடினர். அரசு மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்குச் செல்லும்போது, அங்கிருந்த காவலர்கள் சந்தேகத்தின் பேரில் இருவரையும் நிறுத்தியபோது, காணாமல் போன குழந்தையின் பெற்றோர் அலறியபடியே ஓடி வந்ததால், பொதுமக்களும் காவலர்களும் இணைந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக, காவல் துறையினர் குழந்தையைத் திருடிய தம்பதியைக் கைது செய்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு நாடு முழுவதும் 150 மாணவர்கள் தேர்வு - இஸ்ரோ
யுவிகா என்ற இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 150 மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்யப்போவதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அதுகுறித்த செய்தியின்படி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி திட்டங்கள் குறித்த ஞானத்தை இளம் மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடம் ஏற்படுத்துவது தான் இதன் நோக்கம்.
மேலும், "இந்தத் திட்டம் மே 16-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 150 பேரை தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இஸ்ரோவில் தங்கி, அந்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும். அந்த நாட்களில் உரைகள், பிரபல விஞ்ஞானிகளின் அனுபவங்கள், சோதனை செயல் விளக்கங்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடல், செய்முறை மற்றும் செயல் விளக்கங்கள் ஆகியவை நடைபெறும். 8-ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி மற்ற்றும் கல்லூர், மத்திய-மாநில அரசுகள் ஏற்பாடு செய்த அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்," என்று இஸ்ரோ தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.
7 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பட மூலாதாரம், Getty Images
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ், 7 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், "பூபதி என்ற 23 வயதான இளைஞர், 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதியன்று 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமியை பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது பின்தொடர்ந்து, வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில், பூபதிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் ரூபாயும் 1.36 லட்சம் ரூபாயை அபராதமாகவும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது," என்று கூறப்பட்டுள்ளது.
காட்டுப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்குத் தடை விதித்த உத்தரவு மறுபரிசீலனை
தேனி மாவட்டம், மேகமலை சரணாலயத்திற்குள் மலைமாடு உரிமையாளர்களை மேய்ச்சலுக்கு அனுமதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள எந்த காட்டுப் பகுதியிலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்தத் தடை உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
சட்டப்படி அவ்வாறு மேய்ச்சலுக்கு அனுமதியளிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர அனைத்து காட்டுப் பகுதிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று திருத்தம் செய்வதாக நீதிமன்றம் கூறியுள்ளது என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையின்போது மனுதாரர், குறிப்பிட்ட காட்டுப் பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றர். எனவே, நீதிமன்றம் விதித்துள்ள முழுத் தடையால், வனத்துறையிடம் மேய்ச்சலுக்கு அனுமதி பெற்று வந்த கால்நடை வளர்ப்போர் சிரமப்படலாம். புலிகள் காப்பகங்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்கு மட்டுமே தடை விதிக்கவேண்டும் என்று மனுதாரர் பரிந்துரைத்தார் என்று தி இந்து நாளிதழில் வெளியான செய்தி கூறுகிறது.
மேலும், மார்ச் 17-ஆம் தேதி உத்தரவை மாற்றியப்பதாகக் கூறிய நீதிபதிகள், மேய்ச்சலுக்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர அனைத்து காட்டுப் பகுதிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்பதைத் தெளிவுபடுத்துவதாகத் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை - சர்ச்சை தகவல்களால் மெளனம் கலைந்த நாடுகள் - முழு விவரம்
- கச்சத்தீவில் கூடிய இந்தியா, இலங்கை மீனவர்கள் - மனம் விட்டுப் பேச்சு நடத்த ஒப்புதல்
- பிக்பாஸ் அல்டிமேட்: ரம்யா பாண்டியனின் வரவால் குதூகலிக்கும் வீடு - இனி என்ன?
- டிராக்டர் பறிமுதலால் தமிழக விவசாயி தற்கொலை - இந்த விதிகள் தெரியுமா?
- "கொரோனா உயிரிழப்பு அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட 18 மில்லியன் அதிகம்" - ஆய்வு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












