பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரம்யா பாண்டியன் - ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா புதிய மாற்றம்?

பட மூலாதாரம், RAMYA PANDYAN
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மூன்றாவது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் உள்ளே வந்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24*7 என நேரலையாக டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. நாற்பது நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்குவதில் இருந்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விலகிய பிறகு நடிகர் சிலம்பரசனுக்கு இது இரண்டாவது வாரம்.
சிம்பு வந்த பிறகு நிகழ்ச்சியில் நடந்த மாற்றங்கள் என்ன?
கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நடிகர் சிலம்பரசன் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக உள்ளே வந்ததும் முதலில் தனித்தனியாக போட்டியாளர்களை சந்தித்து அவர்களின் பிக்பாஸ் விளையாட்டில் உள்ள ப்ளஸ், மைனஸ் ஆகிய விஷயங்களை சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தினார். பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய முதல் வாரம், முதல் நாள் என்பதால் போட்டியாளர்கள் யாரையும் வெளியேற்றவில்லை.
அதோடு, வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் 'கலக்க போவது யாரு?' புகழ் ஆகிய இருவரையும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே அனுப்பினார். சிம்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா தனக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை எனவும் மற்ற போட்டியாளர்களால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் என்று சொல்லியும் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார் வனிதா.
'ஜாலியாக இருப்போம்; நிகழ்ச்சியை fun ஆக கொண்டு செல்வோம்' என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் சொல்லி இருந்தார் சிம்பு. இப்படி தான் சொன்னதயே போட்டியாளர்கள் அட்வாண்டேஜாக எடுத்து கொண்டு விளையாட்டை இன்னும் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்று கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு அறிவுரை கொடுத்தார் சிம்பு.
மேலும் கடந்த வாரம் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் தாடி பாலாஜி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே, நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்திருந்த நிலையில் மூன்றாவதாக ஒருவர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வருவார் என மேடையிலே அறிவித்து விட்டு விடை பெற்றார் சிம்பு.
பிக்பாஸ் தமிழ் சீசன்களிலேயே மூன்று வைல்ட் கார்ட் எண்ட்ரி வருவது இதுதான் முதல் முறை. அந்த வகையில், பிக்பாஸ்ஸின் நான்காவது சீசனில் இறுதியில் மூன்றாவது இடத்தை பிடித்த நடிகை ரம்யா பாண்டியன் இந்த முறை பிக்பாஸ் அல்டிமேட்டில் மூன்றாவது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்திருக்கிறார். மூன்றாவது வைல்ட் கார்ட் நபராக உள்ளே வர இருப்பவர் லாஸ்லியா என சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட்ட நிலையில் ரம்யா பாண்டியன் உள்ளே வந்திருப்பது எதிர்பாராத ஒன்று.
"கடைசி நாளில் தான் அழைப்பு வந்தது"

பட மூலாதாரம், RAMYA PANDIAN
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனுக்கு அழைப்பு வந்தது குறித்து ரம்யாவின் தம்பி பரசு பாண்டியனிடம் பேசினேன், "மூன்று நாட்களுக்கு முன்பு ரம்யா என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். 'பிக்பாஸ் அல்டிமேட்ல கூப்பிடறாங்க' என என்னிடமும் அக்காவிடமும் சொன்னார். அதை கேட்டதும், 'உன்னுடைய தேர்வு தான்' என்று சொன்னேன். ஏனெனில் இதில் நான் முடிவெடுப்பதற்கு ஒன்றும் இல்லை. ரம்யா பிக்பாஸ் அல்டிமேட்டுக்குள் போக முடிவெடுத்து விட்டதாக சொன்னதும், 'போன முறை விட்டதை பிடித்து விட்டு வா' என்று என்னுடைய வாழ்த்தை சொன்னேன். உங்களை போலவே பிக்பாஸ் அல்டிமேட்டுக்குள் ரம்யாவை நானும் எதிர்ப்பார்க்கவில்லை" என்கிறார்.
கடந்த நான்காவது சீசனில் ரம்யா உள்ளே வந்த போது அவரது விளையாட்டு குறித்து அப்போது சமூக வலைதளங்களில் நிறைய எதிர்மறை கருத்துகளை பார்க்க முடிந்தது. அப்படி இருக்கும் போது மீண்டும் அதே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் அழைப்பு வந்த போது அதை ஏற்க ரம்யா எதுவும் தயங்கவில்லையா என்று கேட்ட போது, அடிப்படையிலேயே ரம்யா மிகவும் தைரியமான, எதிர்மறையான நபர் என்பதால் அதை எதிர்கொள்வதில் எந்த பிரச்சனையும் அவருக்கு இருக்காது என்கிறார் பரசு. மேலும், "வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களை நிச்சயம் எதிர்கொண்டு தான் வந்திருப்பார்கள். ரம்யா வாழ்வில் நிறைய அனுபவங்களை பெற்றவர். அதனால், கடந்த முறை போல இந்த முறை எதுவும் இருக்காது என நம்புகிறேன்" என்கிறார்.
"விளையாட்டில் மாற்றம் ஏற்படும்"

பட மூலாதாரம், DISNEY+ HOTSTAR
ரம்யா உள்ளே வந்ததை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் விளையாட்டில் சுவாரஸ்யமும் மாற்றமும் இருக்கும் என்பதையும் சொல்கிறார் பரசு.
"நான் கேள்விப்பட்ட வரையிலும் பிக்பாஸ் அல்டிமேட்டில் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது என்ற விமர்சனங்களை சமூக வலைதளங்களிலும் நண்பர்கள் மூலமாகவும் அறிந்தேன். அந்த குறையை நிச்சயம் ரம்யா தனது விளையாட்டு மூலம் போக்குவார். 'வெல்வது என்பது இரண்டாம் பட்சம்தான். உன்னுடைய விளையாட்டை நன்றாக விளையாடு என்று சொன்னேன்'.
அதற்கேற்றாற் போலவே ரம்யா உள்ளே போனதும் வாக்குகள் பிரிந்துள்ளதாக கேள்விப்பட்டேன். முந்தைய சீசனில் இருந்தது போலவே, இப்பயும் ரம்யாவுடைய விளையாட்டு அப்படியே தொடரும். மேலும் இந்த சீசனில் தொகுப்பாளரும் மாறியிருக்கிறார் என்பதாலும் விளையாட்டில் மாற்றம் ஏற்படும் என நம்பலாம்" என்று முடித்து கொண்டார் பரசு பாண்டியன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












