இஸ்ரோ விண்வெளி வீரர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறது?

பட மூலாதாரம், ISRO / FACEBOOK
- எழுதியவர், ஸ்ரீகாந்த் பக்ஷி
- பதவி, பிபிசி
சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு, இந்திய மக்களிடையே இஸ்ரோவின் நடவடிக்கைகளில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஆர்வம் காணப்படுகிறது.
அதுவும், குறிப்பாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் தங்களது முதல் திட்டத்திற்கான வீரர்கள் தேர்வு குறித்த அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டவுடன், அந்த நான்கு வீரர்களும் எப்படி தேர்வு செய்யப்பட்டார்கள் என்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் பரவலாக நிலவுகிறது.
60 பேரில் இருந்து 4 பேர் இறுதி செய்யப்பட்டது எப்படி?
இந்தியாவின் கனவு திட்டங்களுள் ஒன்றான மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தேவையான விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. அதாவது, கடந்த ஆண்டு மே மாதம் விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தம் இஸ்ரோவுக்கும் இந்திய விமானப்படைக்கும் இடையே கையெழுத்தானது.
12 முதல் 14 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்த வீரர்களுக்கு அடிப்படை பயிற்சி இந்தியாவிலும், மேலதிக பயிற்சிகள் ரஷ்யாவிலும் அளிக்கப்படும் என்று அப்போது இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், ISRO
இந்திய விண்வெளித்துறையை பொறுத்தவரை, தகுதிவாய்ந்த வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியை 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய விமானப்படையின் அங்கீகாரம் பெற்ற இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் மேற்கொள்கிறது. இதே நிறுவனம்தான் இந்திய விமானப்படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் வழங்குகிறது. பொறியியல் பின்னணியுடன், விமானியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களுக்கே விண்வெளி வீரராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும்.
முதல் கட்டமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிவதற்கு விண்வெளி வீரர் தேவைப்படுவதாக இந்திய விமானப்படையின் விமானிகள் குழுவினருக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். அதன்படி, விருப்பத்தின் பேரில் விண்ணப்பிக்கும் விமானிகளின் பல்வேறு விடயங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதிலிருந்து 30 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பிறகு, அவர்களுக்கு விண்வெளியில் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற உடல் தகுதி உள்ளதா என்பது மேலதிக மருத்துவ ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்படும். உடற்தகுதி சோதனையில் வெற்றிபெற்ற 15 வீரர்களுக்கு இரண்டாவது கட்டமாக விண்வெளி வீரருக்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும். பிறகு, அதிலிருந்து திறன் மிக்க ஒன்பது வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வெளிநாட்டில் விண்வெளி வீரருக்கான முழுமையான பயிற்சிகள் வழங்கப்படும் என்று விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஒப்பந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"விண்வெளி வீரருக்கான பணிக்கு விண்ணப்பித்த ஏராளமான இந்திய விமானப்படை வீரர்களில் 60 பேர் மருத்துவ பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தனர். அவர்களில் இருந்து மேலதிக சோதனைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேருக்கு விண்வெளி வீரருக்கான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. அந்த 12 பேரும் மூன்று குழுக்களாக மேலதிக தேர்வுகளுக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், அந்த 12 பேரில் இருந்து நான்கு பேர் முழு நீள பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறுகிறார் பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் நிறுவனரான ரகுநந்தன்.

பட மூலாதாரம், AFP
இரண்டு முதல் மூன்று குழுக்களாக விண்வெளி வீரர்கள் பிரிக்கப்பட்டு தயாராக இருப்பர். ஒருவேளை ஏதாவது ஒரு வீரருக்கு கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவரது இடத்தை மற்றொரு வீரர் உடனுக்குடன் நிரப்புவார் என்று அவர் மேலும் கூறினார்.
ககன்யான் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விமானப்படை விமானிகளுக்கு விண்வெளி ஓடத்தை இயக்குவது எப்படி? ஏதாவது பிரச்சனைகள் எழுந்தால் என்ன செய்வது? நேரத்தை எப்படி செலவிடுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக பயிற்சி வழங்கப்படும். அனைத்து விதமான பயிற்சிகளும் நிறைவு செய்யப்பட்ட பின்னர், அவர்கள் மீண்டும் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்ட பயிற்சிகளையும் நிறைவு செய்தவுடன், விண்வெளி திட்டங்களுக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












