கொலை குற்றவாளியின் ஒரு கோடி ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்த உ.பி அரசு

கொலை குற்றவாளியின் ஒரு கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல்- உ.பி அரசின் அதிரடி நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (09.04.2022) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

உத்தர பிரதேச மாநிலம் ஷம்லி மாவட்டத்தைச் சேர்ந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட சஞ்சீவ் ஜீவாவின் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நிலங்களை அம்மாநில அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்து, "உத்தரபிரதேச மாநிலம் ஷம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் ஜீவா கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சஞ்சீவ் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது சஞ்சீவ் கைது செய்யப்பட்டு லக்னோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையில், சஞ்சீவ் பலரை மிரட்டி ஷம்லி மாவட்டம் ஆடம்பூர் என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலம் வாங்கி, அந்த நிலங்களை தனது உறவினர் பெயர்களில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ரவுடி சஞ்சீவ் சட்டவிரோதமாக வாங்கி தனது உறவினர்கள் பெயரில் பதிவு செய்துள்ள நிலங்களை உத்தர பிரதேச அரசு பறிமுதல் செய்துள்ளது. அப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்," என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதிமுக பதவி நிலைப்பதற்காக நீட்டை அனுமதித்தனர்" - மு.க.ஸ்டாலின்

சென்னையிலுள்ள கொளத்தூர் தொகுதியில் நேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முந்தைய அதிமுக ஆட்சி பதவி நிலைப்பதற்காக நீட்டை தமிழ்நாட்டிற்குள் நுழைய விட்டதாகக் கூறியுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது பேசியவர், "கருணாநிதி முதல்வராக இருந்தவரையில் நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடவில்லை.

இன்னும் சொல்ல அதிமுக ஆட்சியில் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையிலுமே நீட் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடவில்லை. ஆனால், அவருடைய மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

"அதிமுக பதவி நிலைப்பதற்காக நீட்டை அனுமதித்தனர்" - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

காரணம், பதவி நிலைக்க வேண்டும். ஆகவே தன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை ஏற்றுக்கொண்டு நீட்டை தமிழ்நாட்டிற்குள் நுழைய விட்டார்கள்.

அதனால்தான் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய நம் மாணவர்கள் அதிகமான மதிப்பெண்ணைப் பெற்று தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், நீட்டில் வெற்றி பெற முடியாமல் தற்கொலை செய்திகொண்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது," எனக் கூறியுள்ளார்.

"ஹிந்தி நாட்டின் தேசிய மொழி அல்ல" - சித்தராமையா

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளதாக, தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, டெல்லியில் வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "அரசு நிர்வாகத்தை நடத்துவதில் அலுவல் மொழியாக ஹிந்தியை முழுமையாகப் பயன்படுத்துவது என்று பிரதமர் மோதி முடிவெடுத்துவிட்டார். ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டுமே அன்றி, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல," எனக் கூறியிருந்தார்.

"ஹிந்தி நாட்டின் தேசிய மொழி அல்ல" - சித்தராமையா

பட மூலாதாரம், Getty Images

அவருடைய கருத்துகளை கடுமையாக ஆட்சேபித்துள்ள கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னட மொழி பேசும் ஒருவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவல் மொழி மற்றும் தொடர்பு மொழி குறித்துக் கூறியுள்ள கருத்துகளைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அதை அப்படி அறிவிக்கவும் மாட்டோம்.

மொழி பன்முகத்தன்மை தான் நாட்டின் அடிப்படையாகும். அதுதான் நாட்டை ஒற்றுமையோடு வைத்துள்ளது. இதைச் சீர்குலைக்க பாஜக மேற்கொள்ளும் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம்.

ஹிந்தியைத் திணிப்பது கூட்டுறவு கூட்டாட்சி அல்ல, கட்டாய கூட்டாட்சியாகும். மொழிகள் குறித்த குறுகிய பார்வையை பாஜக திருத்திக் கொள்ள வேண்டும்," என்று சித்தராமையா கூறியுள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: