"இரு விரல் பரிசோதனை அறவே கூடாது" - உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய தகவல்கள்

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய உச்ச நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களிடம் இன்னமும் 'இரண்டு விரல் பரிசோதனை' நடத்தப்படுவதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த சோதனையை நடத்துபவர்கள் தவறான நடத்தைக்கான குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பாலியல் வல்லுறவு வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவரின் தண்டனையை உறுதிப்படுத்திய நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, அத்தகைய பரிசோதனைக்கு "அறிவியல் அடிப்படை இல்லை" என்றும் "பெண்களை மீண்டும் அது பாதிக்கப்படவும் காயப்படுத்துவதவும் மட்டுமே செய்யும்" என்று குறிப்பிட்டனர்."பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை என்று குற்றம்சாட்டப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இரு விரல் பரிசோதனை பயன்படுத்தப்படுவதை இந்த நீதிமன்றம் மீண்டும் நிராகரிக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடும் பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் அந்த பரிசோதனை நடத்தப்படுகிறது," என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களுக்கு மீண்டும் உடல் ரீதியாக அதிர்ச்சி அளிக்கும் வகையில், அத்தகைய தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் 'இரு விரல்' மருத்துவ பரிசோதனை முறையானது, அறிவியல் பூர்வமற்ற, விரும்பதகாத ஒன்று என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

மருத்துவக்கல்லூரிகளில் உள்ளபாட திட்டங்களில் இடம்பெற்றுள்ள இரு விரல் பரிசோதனை முறை தொடர்பான தகவல்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பரந்த அளவில் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் ரத்து செய்து குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்திருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் விதித்து தற்போது தீர்ப்பளித்துள்ளது.

இரு விரல் பரிசோதனை என்பது என்ன?

உச்ச நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய இரு விரல் பரிசோதனை சில பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

இரு விரல் பரிசோதனையின்போது, பாதிக்கப்பட்டவரின் பிறப்புறுப்பில் மருத்துவர்கள் இரண்டு விரல்களை நுழைத்து பரிசோதனை செய்கின்றனர். பாதிக்கப்பட்டவர் பாலியல் உறவுக்கு அடிமையானவரா என்பதை தெரிந்து கொள்ள முயற்சிப்பதற்காக மருத்துவர்கள் இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர்.

பாலியல் வன்கொடுமையின்போது உடலறவு நடைபெற்றதா இல்லையா என்பதை நிரூபிப்பதே இந்த சோதனையின் அதிகாரப்பூர்வ நோக்கமாகும்.

இதில், பிறப்புறுப்பு தசைகளின் நெகிழ்வு தன்மை மற்றும் கன்னித்தன்மை பரிசோதிக்கப்படும். கன்னித்தன்மை என்றழைக்கப்படும் சவ்வு பகுதி பிறப்புறுப்பில் இருக்கும் பட்சத்தில் எந்த வகையிலும் உடல் உறவு நடக்கவில்லை என்று அறியப்படுகிறது. கன்னித்தன்மை பாதிக்கப்பட்டிருந்தால், அந்தப் பெண் பாலியல் செயல்பாடு கொண்டவர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த பரிசோதனை முறைக்கு எதிரானவர்கள், கன்னித்தன்மை எனப்படும் சவ்வு பாதிக்கப்படுவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம் என்று சொல்கின்றனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, பெண்களின் பிறப்புறுப்பில் மெல்லிய தாள் போன்ற திசு பகுதியே கன்னித்தன்மை என்றழைக்கப்படுகிறது. உடலுறவுக்குப் பின்னரோ அல்லது விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கோ இந்த கன்னித்தன்மை பாதிக்கப்படும்.

நிருபயா வழக்குக்குப் பின்னர் விதிக்கப்பட்ட தடை

பாலியல் வழக்கு இரு விரல் பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

2013ஆம் ஆண்டு நிருபயா(ஜோதி பாண்டே) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் இருவிரல் பரிசோதனை முறை தடைசெய்யப்பட்டது. அப்போது இது போன்ற வன்முறைகளுக்கு எதிராக உள்ள சட்டங்கள் குறித்து விவாதங்கள் எழுந்தன.

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிப்பதற்கான தடயவியல் பரிசோதனை வழிகாட்டும் நெறிமுறைகளை இந்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித்துறை வெளியிட்டது.

"இனிமேல் இரு விரல் பரிசோதனை மேற்கொள்வது சட்டவிரோதம். இது அறிவியல்பூர்வமான முறையல்ல. எனவே இந்த பரிசோதனையை உபயோகிக்கக் கூடாது. இந்த முறை மருத்துவ ரீதியாக பயன ற்றது. பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு," என்றும் கூறப்பட்டது.

பாலியல் வன்கொடுமை சட்டங்களை மறு ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வர்மா கமிட்டி, "பாலியல் வன்கொடுமை நடந்ததா அல்லது இல்லையா என்பது குறித்து சட்டபூர்வ ஆய்வு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மருத்துவரீதியான மதிப்பீடு செய்யக்கூடாது," என கூறியது.

கர்நாடகா மாநிலத்தில் பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது குறித்து 2013ஆம் ஆண்டு சட்டம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் ஆய்வு செய்தது.

20 சதவிகிதத்துக்கும் அதிகமான தீர்ப்புகளில் இரு விரல் சோதனை குறித்து வெளிப்படையாக கூறப்பட்டிருந்ததை அறிந்தனர். பாதிக்கப்பட்ட பெண்களின் கடந்த கால பாலியல் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

காணொளிக் குறிப்பு, புவிக் காந்தப் புலத்தில் இருந்து அச்சுறுத்தும் சத்தம் - என்ன இது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: