தமிழ்நாட்டில் சுடுகாட்டுப் பிரச்னைகள் தொடர்வது ஏன்? இது சமூக சிக்கலா? உள்கட்டமைப்பு சிக்கலா? என்ன தீர்வு?

- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
சுடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லை, கழுத்தளவு தண்ணீரில் பிணத்தை தூக்கிச் சென்ற கிராமவாசிகள், பட்டியல் சாதியினர் சடலங்களை பொதுப்பாதையில் கொண்டு செல்ல எதிர்ப்பு என்ற செய்திகள் வந்தபடியே உள்ளன.
நூறாண்டு கடந்த சமூக சீர்திருத்த மரபினையும், முற்போக்கான பார்வை கொண்ட அரசாங்கங்கள் அமைந்த வரலாற்றையும் கொண்ட தமிழ்நாட்டில், உள்கட்டமைப்பு வசதி, மனித மேம்பாட்டுக் குறியீடு ஆகியவற்றில் இந்திய அளவில் முன்னேறிய மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில், இடுகாடு, சுடுகாடு இல்லை, அதற்குப் பாதை இல்லை, சுடுகாட்டுக்கு செல்ல பட்டியல் சாதியினருக்குப் பாதை இல்லை என்று கூறும் நிலை பல இடங்களில் நீடிக்கக் காரணம் என்ன?
இந்த சிக்கல் நீடிப்பதற்கான காரணங்களை, களைவதற்கான வழிகளைக் கண்டறிய முடியுமா?
தொடரும் சிக்கல்கள்
சில மாதங்களுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில் பொதுப் பாதையில் தங்கள் சுடுகாட்டுக்கு பிணத்தைத் தூக்கிச் சென்ற அருந்ததியர்கள் குடியிருப்பு தாக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ஊரில் இந்தப் பிரச்னை சமூகப் பதற்றத்துக்குக் காரணமாக உள்ளது.
அதற்கு சிறிது காலம் முன்பு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தபோது, அவரது உடலைத் தூக்கிச் செல்ல வழி இல்லை என்று கூறி, 20 அடி உயர பாலத்தில் மேலே இருந்து கயிறு கட்டி பிணத்தை கீழே இறக்கி பிறகு இடுகாட்டுக்கு கொண்டு சென்று புதைத்தனர். சுடுகாட்டுக்கு செல்ல முறையான பாதை இல்லாத நிலையில், இவ்வளவு காலம் பயன்படுத்திவந்த பாதையில் இருக்கும் வயலின் சொந்தக்காரர் ஒருவர் தனது வயலுக்கு வேலி அமைத்துக் கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்று அப்போது கூறப்பட்டது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பேரையம்பட்டி ஊராட்சி ஈஸ்வரன் கோவில் தெருவில் வசிக்கும் அருந்ததியர் குடும்பங்களுக்கு மயானம் இல்லை என்பதால் அவர்கள் சாலையோரத்தில் ஓரிடத்தில் பிணங்களை புதைத்து வருகின்றனர். ஆனால், அந்த இடத்துக்கும் பிணத்தைக் கொண்டு செல்ல உரிய பாதை இல்லாததால், பட்டா நிலங்களில், முள், புதர்களை அன்றன்றைய தேவைக்காக வெட்டி சீர் செய்து அந்த வழியில் கொண்டு செல்கின்றனர். மதுரை மாவட்டத்தில் இது போல பல ஊர்களில் அருந்ததியர்களுக்கு பிரச்னை இருக்கிறது என்கிறார் மதுரையைச் சேர்ந்த செய்தியாளர் பிரசன்னா வெங்கடேஷ்.
50 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டுக்கு நிலம் வேண்டி பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்; மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் ஒரு பலனும் இல்லை என்கிறார் பேரையம்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஈஸ்வரன். சொந்தமாக விலைக்கு நிலம் வாங்கி சுடுகாட்டுக்கென்று கொடுத்தால் அதற்கு பாதை வசதி செய்து தருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், அன்னியூர் ஊராட்சியை சேர்ந்த பாடசாலை என்ற சிற்றூரான அன்னியூரைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இடுகாடு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆற்றைக் கடந்து சென்றுதான் மறுகரையில் உள்ள இடுகாட்டில் பிணம் புதைக்கவேண்டும். ஆற்றில் நீர் பெருக்கெடுத்து செல்லும் நேரங்களில் கழுத்தளவு தண்ணீரில் கூட பிணம் தூக்கிச் செல்லும் நிலை ஏற்படும் என்கிறார்கள் ஊர் மக்கள். இந்த இடத்தில் ஒரு பாலம் கட்டித் தரவேண்டும் என்பது மட்டும்தான் இவர்களது கோரிக்கை.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வலங்கைமான் வட்டம் நரசிங்கமங்களம் என்ற ஊருக்கான இடுகாடும் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் சடலம் எடுத்துச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. எனவே சடலங்கலை வயல், வரப்புகளில் இறங்கி சுமந்து கொண்டு செல்லும் நிலை நீடிக்கிறது என்கிறார் திருச்சியைச் சேர்ந்த செய்தியாளர் அருண்குமார்.

தஞ்சாவூர் மாவட்டம் லட்சுமிபுரம், நெய்குப்பை போன்ற ஊர்களிலும், மயிலாடுதுறை நகரை ஒட்டி உள்ள மாப்படுகை போன்ற ஊர்களுக்கும் சுடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லை. புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி ஊராட்சி, கோவிஞ்சம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களுக்கு இடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லை என்ற புகார் நீண்ட காலமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு பாலம் இல்லாததால், முதியவர் ஒருவரின் சடலத்தை இடுப்பளவு ஓடைத் தண்ணீரில் உறவினர்கள் கொண்டும் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இங்கே பாலம் கட்டித் தரவேண்டும் என்கிறார்கள் ஊர் மக்கள்.

பட மூலாதாரம், A.D.Bala/BBC
இது வெறும் உள்கட்டமைப்பு சிக்கலா? சமூக சிக்கலா? இதுவரை இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கப்படவே இல்லையா?
சமூக சிக்கல்தான் எனில் இது என்னவிதமான சிக்கல்? இது தீண்டாமை சார்ந்த பாகுபாட்டுச் சிக்கல் மட்டும்தானா? பல ஊர்களில் இடை நிலை சாதிகளுக்கு உள்ளேயே தனித்தனி சாதிகளுக்கு, தனித்தனி சுடுகாடுகள் உள்ள நிலையில் ஒரே ஊரில் பல சுடுகாடுகளை, அவற்றுக்கான பாதைகளை நிர்வகிப்பதில் நிர்வாகத்துக்கு என்ன சிக்கல்? இதற்குத் தீர்வு என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடைதேடி, முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும், ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அசோக் வர்த்தன் ஷெட்டியிடம் பேசியது பிபிசி தமிழ்.
"இது நீண்ட காலமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் பிரச்னை," என்கிறார் அவர்.
கட்டமைப்பு சிக்கல் அல்ல சாதிச் சிக்கல் - முன்னாள் அதிகாரி சொல்லும் காரணம்
சுடுகாட்டுப் பிரச்னை என்பது சுடுகாடு தொடர்பானதாக மட்டும் இருந்துவிடுவதில்லை. அது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் பெரிய அளவில் எதிரொலித்து வந்திருக்கிறது என்கிற தகவலை அசோக் வர்த்தன் ஷெட்டி வெளியிடும் ஒரு தகவல் காட்டுகிறது.
"30 முதல் 40 சதவீதம் வரையிலான சிறு குற்ற வழக்குகளுக்கு இந்த சுடுகாடு, சுடுகாட்டுப் பாதை தொடர்பானபிரச்சனைகளே காரணமாக இருந்து வந்துள்ளன" என்கிறார் அவர்.
அதே நேரம், சுடுகாட்டுப் பிரச்சனை என்பது ஒரு உள்கட்டமைப்பு பிரச்னை அல்ல. அது சமூக பிரச்னையாகவே உள்ளது என்பதையும் அவரது கருத்து காட்டுகிறது.

"1991-96காலத்தில் அதிமுக ஆட்சியில் சுடுகாட்டுக் கொட்டகைகள் அமைப்பதற்காகத் தீட்டப்பட்டதிட்டம் ஊழலாக முடிந்தது. அதில் சரிவர பணிகள் நடக்கவில்லை. 2006-11காலகட்டத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதன் கீழ் எல்லா ஊராட்சியிலும் ஒருஒருங்கிணைந்த இடுகாடு/சுடுகாடு வளாகம் மேம்படுத்தப்பட்டு, அதில்எரிமேடை, கொட்டகை அமைக்கப்பட்டது. 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் இது செயல்படுத்தப்பட்டது. ஆனால், அப்படிச்செய்யும்போது ஒவ்வொரு ஊராட்சியிலும் சுடுகாடு ஒன்றாக இருக்கவேண்டும் என்பதுதான்எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால், ஊருக்குப் பொதுவான இந்த சுடுகாடு, இடுகாட்டை எல்லா சாதியினரும் குறிப்பாக தலித்துகள் அணுக முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். பிரச்சனை,கட்டமைப்பு இல்லை என்பது அல்ல. அந்தக் கட்டமைப்பை எல்லோரும் பயன்படுத்தமுடியவில்லை என்பதுதான்.
சாதிதான் பிரச்னைக்கான காரணமாக இருக்கிறது. குறிப்பாக தலித்துகளுக்கு என்று தனி சுடுகாட்டுக் கொட்டகை, எரிமேடை அமைத்தால், அவர்களுக்கு சிக்கல் ஏற்படாது. ஆனால், இந்தப் பிளவை அது ஆழப்படுத்திவிடும். பொது சுடுகாட்டை, இடுகாட்டை பயன்படுத்தவேண்டும் என்று சொன்னால், அவர்கள் அதை அணுக முடியாது. இப்படி இரண்டில் எந்த அணுகுமுறையைக் கடைபிடித்தாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது" என்கிறார் அவர்.
இதை எப்படிக் கையாளவேண்டும், இந்தப் பிரச்சனை தீர என்ன வழி என்று கேட்டபோது,
"காலம்காலமாக இருக்கும் பிரச்சனை என்பதால், உள்ளூர் அளவில் சரியாகிவிடும் என்று நிர்வாகம் அமைதியாக இருக்கக்கூடாது. இந்தப் பிரச்சனையை சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டும். சுடுகாடு,பாதை ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்கவேண்டும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஒரு சிலர் மீது நடவடிக்கையும் எடுத்தால், மற்ற இடங்களில் இது சரியாகும். இது தவிர, ஊராட்சித் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரைக் கூட்டி இதை ஆட்சியர்கள் வலியுறுத்தவேண்டும். இப்படி செய்தால், இதன் முக்கியத்துவத்தை உணரச் செய்தால் ஓரளவு இந்தப்பிரச்சனையை சரி செய்யலாம். பல சாதிகளுக்கு சுடுகாடு, இடுகாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதைவிட ஒரே சுடுகாடு, இடுகாடு என்பதை ஏற்படுத்தி அதை வலியுறுத்தி செயல்படுத்துவதுதான் இதற்குத் தீர்வு," என்கிறார் அசோக் வர்த்தன் ஷெட்டி.
சாதிக்கு என்று சொல்லாமல், ஒரு குடியிருப்புக்கு, பகுதிக்கு தனி சுடுகாடு வேண்டும் என்பார்கள். இதில் சிக்கல் என்ன என்றால், காலம் காலமாக ஒவ்வொரு குறிப்பிட்ட குறிப்பிட்ட பகுதியிலும் சாதியினரே வசிக்கின்றனர். எனவே தங்கள் பகுதிக்கான சுடுகாடு என்பது மறைமுகமாக சாதிக்கு ஒரு சுடுகாடு என்பதாகவே நடைமுறையில் ஆகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சீர்திருத்தவாதியின் பாத்திரத்தை அரசு வகிக்க முடியுமா?
சீர்திருத்தவாதியின் பாத்திரத்தை அரசாங்கம் வகிக்க முடியுமா என்று கேட்டபோது, சட்டத்தை இயற்றிசெயல்படுத்த மட்டுமே அரசாங்கத்தால் முடியும் என்றும், இந்த சுடுகாடு, இடுகாடு சிக்கலின் வேர், சாதியில்தான் இருக்கிறது என்றும் இது 2,500 ஆண்டு காலமாக இருக்கும் சிக்கல் என்றும் அவர் கூறினார்.
இவற்றில் தலையிடுவதற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தக்கூடிய சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் என்று எவரும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்னையை சமூக பிரச்னையாகப் பார்க்க வேண்டுமா? உள்கட்டமைப்புச் சிக்கலாகப் பார்க்க வேண்டுமா என்று கேட்டபோது, பெரிதும் இது சமூகச் சிக்கல்தான் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.
"இந்த சிக்கலை பெரும்பாலான இடங்களில் தலித்துகள்தான் எதிர்கொள்கிறார்கள். உள்கட்டமைப்புச் சிக்கல் என்பது வெகு சில இடங்களில் மட்டுமே," என்று கூறுகிறார் அவர்.
பல இடங்களில் தலித்துகளுக்கு சுடுகாடு இருக்கிறது. ஆனால், அவற்றுக்கு செல்வதற்கு முறையான வழி இல்லை. அவர்கள் ஆதிக்கசாதியினரின் வயல்கள் வழியாக செல்ல நேர்கிறது. அவர்கள் அனுமதிக்காதபோது பிரச்னை வருகிறது.
"தமிழ்நாடு முழுவதும் சர்வே எடுக்க வேண்டும்"
இதை மாநில அளவில் ஒரு முக்கியப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு இதை சரி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அதற்கு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள சுடுகாடுகள், அவை தொடர்பான பிரச்சனைகளை தமிழ்நாடு அரசு சர்வே எடுக்கவேண்டும். பிறகு அவற்றை சரி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
எல்லா சாதியினருக்கும் பொது சுடுகாடு என்பதுதான் சரியானது. அதை அரசாங்கம் செயல்படுத்தவேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.
பல ஊர்களில் இது தலித், தலித் அல்லாதோர் பிரச்சனை மட்டுமல்ல. தலித் அல்லாதோர் அனைவரும் ஒரே சுடுகாட்டைப் பயன்படுத்துவது இல்லை. எண்ணிக்கையில் மிக சொற்பமான மக்கள் தொகை உள்ள சாதிகளுக்கும்கூட தனி சுடுகாடுகள் உள்ளன. இந்நிலையில், இவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒரே சுடுகாட்டில் புதைக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தினால் அது ஏராளமான சட்டம் ஒழுங்கு சிக்கல்களுக்கு வழிவகுக்காதா?
அதை எப்படி சமாளிக்க முடியும் என்று கேட்டபோது, "எல்லா சீர்திருத்தங்களும் இப்படி எதிர்ப்புகளை மீறி செயல்படுத்தப்பட்டவைதான். எதிர்ப்பு வரும் என்று பார்த்திருந்தால் உடன் கட்டை ஏறுதலைத் தடுத்திருக்க முடியாது. எதிர்க்கும் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி செயல்படுத்தவேண்டும். மீறி, இதை எதிர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தப் பணியை அரசாங்கம் மட்டுமே தனித்து செய்ய முடியாது. அரசியல் கட்சிகளும் இதில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்,"என்றார் ராமகிருஷ்ணன்.
நகரங்களில் உள்ள மின்சார, எரிவாயு மயானங்கள் எல்லா சாதியினருக்கும் பொதுவானவைதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இப்படி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் மின் மயானங்களாக மாற்றிவிடுவது தீர்வாகுமா என்று கேட்டபோது, "அது சரிதான். ஆனால், 12 ஆயிரம் ஊராட்சிகளுக்கும் ஒரே நாளில் இப்படி மின் மயானங்களைக் கொண்டுவருவது உடனடியாக சாத்தியமாகாது. பல நகரங்களிலேயே மின் மயானங்கள் இல்லை" என்றார் அவர்.
அரசின் தலையீடு போதுமா?
கடந்த மே மாதம் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தனித்தனி சுடுகாடுகள், சில கோயில்களுக்கும் பட்டியல் சாதியினர் நுழைய முடியாத நிலை போன்றவற்றை சுட்டிக் காட்டி, "இதுதான் திராவிட மாடலா?" என்று கேள்வி எழுப்பினார்.
மக்கள் மனநிலை மாறுவதன் மூலமே இந்தப் பிரச்னை தீர முடியும். அந்த மன நிலை மெதுவாக மாறிவருவதாகத்தான் தோன்றுகிறது என்கிறார் களத்தில் இருந்து பல சமூகப் பிரச்சனைகளை எழுதியவரான மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், சுமார் 50 ஆயிரம் சிற்றூர்கள் உள்ளன. இத்தனை ஊர்களில் அரசாங்கம் குறுக்கீடு செய்ய முடியாது. ஆனால், சமத்துவ சுடுகாடு போன்ற திட்டங்களை தற்போதைய மாநில அரசு செயல்படுத்துகிறது. எல்லா சாதியினருக்குமான பொது சுடுகாடுகளை உருவாக்குவதே இதன் நோக்கம். எல்லா சாதியினருக்கும் பொதுவான சுடுகாடுகளை உருவாக்கும் ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.
இதெல்லாம் உடனடியாக பலனைத் தந்துவிடுமா என்று தெரியாது. காரணம், சாதியமைப்பு மாறுவதற்கு நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளும் என்பதுதான் என்கிறார் இளங்கோவன்.
அரசாங்கம் இத்தகைய திட்டங்களை தீட்டினாலும், ஊர் அளவில் மக்கள் மத்தியில் மன மாற்றத்துக்கான வேலை நடக்காமல், சமூகங்களுக்கு இடையிலே வேலை செய்யும் வினையூக்கிகள் இல்லாமல் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுமா? அந்த வினையூக்கியாக யார் இருப்பார்கள் என்பது எளிய கேள்வி அல்ல.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









