வீரளூர் தலித் அருந்ததியர் குடியிருப்பு மீது தாக்குதல்: பொதுச் சாலையில் பிணத்தை எடுத்துச் செல்வதை எதிர்த்து அதிகாரிகள் கண் முன் நடந்த சம்பவம்

பாதை
    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பிணத்தை பொதுப் பாதையில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து பெரும்பாலும் வன்னியர்களை உள்ளடக்கிய இடைநிலைச் சாதியினர் அருந்ததியர் குடியிருப்புக்குள் புகுந்து எல்லா வீடுகள் மீதும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அங்கே என்ன நடந்தது என்பதை நேரில் சென்று பார்வையிட்டோம்.

இந்த தாக்குதலில் அருந்ததியர்கள் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. வீடுகள் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகள், ஆட்டோ, வேன் போன்ற வண்டிகள் மோசமாக சேதப்படுத்தப்பட்டிருந்தன.

ஒடுக்கப்பட்டோரிலேயே மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான அருந்ததியர் சமூகம் விதிவிலக்காக, இந்த ஊரில் எண்ணிக்கை வலுவோடும், கொஞ்சம் பொருளாதார வலுவோடும் உள்ளது.பலருக்கு நிலவுடைமை உள்ளது. பல அருந்ததிய இளைஞர்கள் பட்டம் படித்துள்ளார்கள். சிலர் பொறியியல் முடித்துள்ளனர்.

பலர் பெங்களூர் போன்ற இடங்களில் வேலை செய்கின்றனர். அரசு ஊழியர்கள் சிலரும் உள்ளனர். குடிசைகள் மிக அரிதாகவே உள்ளன. பட்டியல் சாதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்து இரண்டு முறை அருந்ததியரே இருந்துள்ளனர்.

கொஞ்சம் பெரிய ஊரான வீரளூரில் வன்னியர்களே ஆதிக்க சாதியினராக உள்ளனர் என்றாலும், குரும்பர், வண்ணார், மருத்துவர், ஆச்சாரிகள், குலாளர் போன்ற இடைநிலைச் சாதியினரும், முஸ்லிம்களும் உள்ளனர். பட்டியல் சாதிகளில் அருந்ததியர் தவிர, ஆதிதிராவிடர்களும் கணிசமான எண்ணிக்கையில் தனி குடியிருப்பில் உள்ளனர்.

பல்வேறு சாதிகளுக்கும் தனித்தனியாக சுடுகாடுகளும் உள்ளன. அருந்ததியருக்கு என்று தனி சுடுகாடும், சுடுகாட்டுப்பாதையும் உள்ளன. ஆனால், இந்த சுடுகாட்டுப் பாதை பராமரிப்பின்றியும், புதர்கள் மண்டியும் கிடப்பதால் அது பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அருந்ததியர் கூறுகின்றனர்.

வீடு

இதையடுத்து, இடைநிலை சாதியினர் குடியிருக்கும் பகுதி வழியாக செல்லும் முதன்மை சாலையில் பிணங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிவந்தனர். இதற்காக 2021 செப்டம்பர் 22ம் தேதி ஆரணி கோட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிக் கூட்டத்தில் இடைநிலை சாதிகள் தரப்பு அதிருப்தியோடு வெளியேறியது.

இதையடுத்து, போக்குவரத்து நடக்கும் பொதுச் சாலை வழியாக பிணங்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதாக அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, கோட்டாட்சியர், வட்டாட்சியர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும், கையெழுத்திட்டனர்.

முன்னாள் ஊராட்சித் தலைவரும் அருந்ததியர் தரப்பைச் சேர்ந்தவருமான முத்துராமன் அளித்த கூட்டத் தீர்மான நகல் மூலம் இந்த தகவல் தெரியவருகிறது.

பைக்

இந்த முடிவை நிறைவேற்றும் வகையில், முதல் முறையாக அருந்ததியர் பகுதியில் இருந்து ஓர் இறுதி ஊர்வலம் கடந்த 13ம் தேதி முதன்மை சாலை வழியாக, போலீஸ் பாதுகாப்புடன் கடந்து சென்றது. இதில் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்பதை இரு தரப்பினருமே ஒப்புக்கொள்கின்றனர்.

இந்நிலையில் மாட்டுப் பொங்கல் நாளான ஜனவரி 15 அன்று அருந்ததியர் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

அவரது இறுதி ஊர்வலத்தை முதன்மை சாலை வழியாக கொண்டு செல்வதற்கு அனுமதியும், பாதுகாப்பும் கோரி போலீசிடம் தகவல் தெரிவித்ததாகவும் ஆனால், தாங்கள் வரும்வரை அமைதிகாக்கும்படி கூறிவந்த போலீசார், அரசு வருவாய்த் துறை அதிகாரிகள் இது தொடர்பாக காணும் பொங்கல் அன்று (ஜனவரி 16) ஊராட்சி அலுவலகத்தில் அமைதிக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாகவும் கூறுகிறார் அருந்ததியர் இளைஞர் சிவப்பிரகாசம்.

இந்தக் கூட்டம் நடந்தபோது வன்னியர் தரப்பில் பெருந்திரளான கூட்டம் கூடிவிட்டதாகவும் அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டு தம்மை அடித்துக் கொல்ல அந்தக் கூட்டம் பாய்ந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தக்க சமயத்தில் தம்மை ஊராட்சி அலுவலகத்தில் தள்ளி பூட்டி காப்பாற்றியதாகவும் கூறுகிறார் முத்துராமன். ஆனால், அதே நேரம் போலீசாரும், அதிகாரிகளும் இருந்த நிலையிலேயே நூற்றுக்கணக்கான வன்னியர்கள் கொண்ட கும்பல் அருந்ததியர் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது ஏராளமான இரு சக்கர வண்டிகள், ஆட்டோ, வேன் போன்ற வண்டிகள் பலத்த சேதமடைந்தன.

ஆட்டோ

ஆனால், போலீசாரோ, அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ உள்ளே வந்துகூட பார்க்கவில்லை என்கிறார் அருந்ததியர் பகுதியைச் சேர்ந்த பாலா என்ற இளைஞர். இவர் பொறியியல் முடித்துவிட்டு தங்கள் நிலத்திலேயே விவசாயம் செய்கிறார்.

இந்த தாக்குதல் நடந்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவற்றின் தலைவர்கள், பிரதிநிதிகள் அருந்ததியருக்கு ஆதரவாக ஊருக்கு வந்தனர். டி.ஐ.ஜி ஆனி விஜயா, காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, திங்கள்கிழமை, 17ம் தேதி காலை மீண்டும் ஒரு அமைதிக் கூட்டம், அருகில் உள்ள காஞ்சி கிராமத்தில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அருந்ததியர் தரப்பு பங்கேற்கவில்லை.

இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமுதாவின் சடலம் முதன்மை சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டு அருந்ததியர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.

அமைதிக் கூட்டத்தில், அருந்ததியருக்கென இருக்கும் பிரத்யேக சுடுகாட்டுப் பாதையை விரைவில் சீரமைத்துத் தருவது என்றும், அதுவரை அருந்ததியர் பகுதியில் ஏதும் மரணங்கள் நடந்தால் அதை முதன்மைச் சாலை வழியாகவே கொண்டுசெல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாகவும் அதைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அந்தக் கூட்டத்தில் வன்னியர் தரப்பில் பங்கேற்றவர்களில் ஒருவரான சு.முருகன் பிபிசி தமிழிடம் கூறினார். இதை, டி.ஐ.ஜி. ஆனி விஜயாவும் பிபிசி தமிழிடம் உறுதி செய்தார்.

போலீஸ் அதிகாரி என்ன கூறுகிறார்?

திங்கள்கிழமை மாலை வீரளூரில் முகாமிட்டிருந்த ஆனி விஜயாவிடம், அருந்ததியர் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று கேட்டபோது, தற்போதுதான் புகார் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவருவதாகவும் கூறிய அவர், உடனடியாக கைது செய்வது அவசியமில்லை என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவதாகத் தெரிவித்தார்.

அப்போது தலையிட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பாதிக்கப்பட்டோர் கூறுவது என்ன?

"போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை ஒருவரைக்கூட கைது செய்யவில்லை. தொகுதி எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவணன் போன்றவர்கள் ஊருக்கு வந்தாலும் வன்னியர் பகுதியிலேயே இருந்தார்," என்கிறார் அருந்ததியர் குடியிருப்பைச் சேர்ந்த காசியம்மாள். அடித்தவர்களை ரிமாண்ட் செய்யவேண்டும் என்பதே அவரது கோரிக்கை.

காசியம்மாள்
படக்குறிப்பு, காசியம்மாள்

வன்முறைக் கும்பல் தாக்கியபோது, குழந்தைகள் வீட்டுக்குள் அஞ்சி நடுங்கியதாகவும், தானே கதவைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நின்றதாகவும் கூறுகிறார் மூன்று மகள்கள், ஒரு மகனின் தாயான பரிமளா.

வன்முறைக் கும்பல் வீட்டின் மின் இணைப்பு மீட்டர் பாக்சை உடைத்து நொறுக்கிவிட்டதால், இருட்டில் இருந்தது விஜயா என்பவரின் வீடு. அவருக்கும் 3 மகள்கள், ஒரு மகன். சென்னையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்யும் அவரது மகன் ரஞ்சித்குமார் உழைப்பில் இப்போதுதான் 8 பேர் கொண்ட அந்தக் குடும்பம் நிமிர்ந்துவருகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் இன்னும் பூச்சுவேலைகூட செய்து முடிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் அந்த வீட்டின் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிவப்பிரகாசம் வீட்டின் கதையும் ஏறத்தாழ அப்படித்தான். பொறியியல் முடித்து வெளியில் வேலையில் இருக்கிற அவர் தற்போதுதான் மாடிவீடு கட்டி, கண்ணாடிகளோடும், மர வேலைப்பாடுகளோடும் அதை அலங்கரித்திருந்தார். அந்த வீடு குறிப்பாக குறிபார்த்து தாக்கப்பட்டிருந்தது.

கண்ணாடி வேலைப்பாடுகள், நாற்காலிகள் நொறுங்கிக் கிடந்தன. மரக்கதவு உடைத்து நொறுக்கப்பட்டு படுக்கையறைக்குள் செங்கற்கள் இறைந்துகிடந்தன.

வீடு

முன்னாள் ஊராட்சித் தலைவர் முத்துராமனை சந்திக்கச் சென்றபோது நன்கு கட்டப்பட்டிருந்த அவரது வீட்டில் தற்போது உட்காரச் சொல்ல ஒரு நாற்காலிகூட இல்லாமல் எல்லாம் உடைக்கப்பட்டுவிட்டதாகவும், கல்வீச்சில் தங்கள் மகள்கள் விரலில் அடிபட்டிருப்பதாகவும், முத்துராமனை கொலை செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் கூறினார் அவரது மனைவி கவிதா.

மினி பவர் பம்ப் என்று கூறப்படும் சிறு குடிநீர்த் தொட்டியும் அதனுடன் இணைக்கப்பட்ட குழாய் அமைப்பும் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தது. இதுவும் வன்முறைக் கும்பலால் உடைக்கப்பட்டதாக கூறினார் பாலா. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் வன்முறைக் கும்பல் ஏறி ஏதோ கலந்துவிட்டதாக சந்தேகப்படுவதாகவும் அதனால், நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் அரசியல் தொடர்புகள் பற்றிக் கேட்டபோது அவர்கள் திமுக, அதிமுக, பாமக என்று பல கட்சிகளில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக கடலாடி போலீஸ் நிலையத்தில் முத்துராமன் அளித்த புகாரில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று 230 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில் முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட மணி திமுகவை சேர்ந்தவர்.

அவரிடம் பேசுவதற்காக அவர் வீட்டைத் தேடிச் சென்றோம். அவர் வீட்டில் இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து அதிமுகவை சேர்ந்தவரும், குரும்பர் சாதியை சேர்ந்தவருமான கண்ணன் என்பவரிடம் பிபிசி தமிழ் சார்பில் உரையாடினோம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருப்பவர் அவர்.

அருந்ததியர் பிணங்கள் ஊரின் முதன்மைச் சாலை வழியாக செல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டோம். "சாதி வித்தியாசம் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவர்களுக்கென சுடுகாட்டுப் பாதை இருக்கும்போது ஏன் இந்தப் பக்கம் வரவேண்டும்?" என்று கேட்டார்.

டேங்

"இந்தப் பக்கம் அவர்கள் இறுதி ஊர்வலம் வந்தால், பெரிய பெரிய பட்டாசுகளை வைப்பார்கள். மாலைகளை தூக்கி வீசுவார்கள். அது வீட்டு வாசலில் வந்து விழும். பக்குவமில்லாத இளைஞர்களுக்குள் இதனால் சண்டை வரும்," என்றார்.

இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா என்று கேட்டோம். "இதற்கு முன்பு ஒருமுறைதான் அவர்கள் பிணம் இந்த வழியாக சென்றது. இப்போது இரண்டாவது முறை. இரண்டு முறையும் போலீஸ் பாதுகாப்பு இருந்ததால் அப்படி நடக்கவில்லை. இப்படியே ஊர்வலம் சென்றால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் இப்படி நடக்கும். பக்குவமான ஊர்ப்பெரியவர்கள் எப்போதும் இருக்க மாட்டார்கள்.

அப்போது இளைஞர்களுக்குள் சண்டை வரும். அதைத் தவிர்க்கவே இப்படிச் சொல்கிறோம். அமைதிக் கூட்டம் நடந்தபோது நானெல்லாம் கூறியதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. ஆனால், அதற்காக அவர்கள் பகுதிக்குள் புகுந்து தாக்கியதெல்லாம் தவறுதான்," என்றார் கண்ணன்.

குலாளர்கள் (குயவர்கள்), ஆச்சாரிகள் புதைக்கும் சுடுகாட்டை அருந்ததியர் ஆக்கிரமித்துக்கொண்டதாகவும் அந்த இடத்தில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார் அவர்.

வண்ணார் சாதியைச் சேர்ந்தவரான முருகன் என்பவரும், அருந்ததியர் தங்களுக்கென இருக்கும் சுடுகாட்டுப் பாதை வழியாகவே செல்லவேண்டும் என்று கூறினார்.

வன்னியர் சாதியை சேர்ந்தவரான மற்றொரு முருகன் பிபிசி தமிழிடம் பேசும்போது, "பல ஊர்களில்ல சுடுகாடு இல்லை. சுடுகாட்டுப் பாதை இல்லை என்ற பிரச்சனைகள் இருப்பதை ஊடகங்களில் பார்க்கிறோம். இங்கே சுடுகாடு இருக்கிறது. பாதை இருக்கிறது.

இருந்தும் பாரம்பரியமாக செல்லும் அந்தப் பாதையை விட்டுவிட்டு இந்த வழியில் ஏன் வரவேண்டும்? பாதை சரியில்லை என்றால் அரசாங்கத்திடம் சொல்லி சரிப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்கள் இரண்டு முறை ஊராட்சித் தலைவராக இருந்தபோது ஏன் அதை சரி செய்துகொள்ளவில்லை?" என்று கேட்டார்.

பைக்

மற்ற சாதியினர் பிணங்களைக் கொண்டு செல்லும் பொதுப் பாதையில் அவர்கள் பிணங்களும் செல்வதில் என்ன பிரச்சனை என்று கேட்டபோது, அவரும் 'பூக்களை வீசுவார்கள், பட்டாசு வெடிப்பார்கள்' என்ற அதே காரணங்களைக் கூறினார். பாரம்பரியமாக செல்லும் பாதையை ஏன் மாற்றவேண்டும் என்ற கேள்வியையே அவர் வலுவாக வைத்தார். ஊர்வலம் அமைதியாக சென்றால் ஏற்பதில் பிரச்சனை இல்லை என்று கூறிய அவர், ஆனால், அப்படி நடக்காது என்று தெரிவித்தார்.

அருந்ததியர் குடியிருப்பில் தாக்குதல் நடத்தியது குறித்து கேட்டபோது, "அது தவறுதான்" என்று அவரும் ஒப்புக்கொண்டார். "ஓரிரு குடும்பங்களே உள்ள குலாளர்கள், ஆச்சாரிகள் புதைக்கும் சுடுகாட்டை அருந்ததியர் ஆக்கிரமித்துக்கொண்டார்களே. அதன் பிறகு அவர்கள் எங்கள் சுடுகாட்டில் புதைக்க இடம் கொடுத்தோம். இதெல்லாம் சரியா," என்று கேட்டார் அவர்.

"சுடுகாட்டுப் பாதையை சரி செய்யும்வரை, சாலை வழியாக அருந்ததியர் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று அமைதிக் கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதை ஏற்றுக்கொண்டோம். அதைப் போல தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் கூறியதையும் ஏற்றுக்கொண்டோம். யார் தவறு செய்திருந்தாலும் தவறுதானே. அவர்கள் செய்வதை அவர்கள் செய்யட்டும். அவர்களைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: