பட்டியலின பெண் சடலம் 3 நாட்களாக அலைக்கழிப்பு - எங்கே நடந்தது இந்த அவலம்?

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
விக்கிரவாண்டி அருகே புதைக்க இடம் இல்லாத நிலையில், பட்டியல் சமூகத்தை சார்ந்தவரின் உடலைத் தங்கள் கோயில் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இறந்த மூன்றாம் நாளே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் மாற்றாக வேறு இடம் வேண்டும் என்ற உறுதியை அரசு அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது இடத்தைக் கொடுத்துள்ளார். என்ன நடந்தது?
தங்களுக்கென சுடுகாடு கூட இல்லாத பட்டியலின மக்கள்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களும், 500க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தினரும் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு நிலையான சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களின் உடலை ஏரி, ஓடை, குளம் போன்ற பகுதிகளில் எரிப்பதும், புதைப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.
இதனால் தங்களுக்கு நிலையான சுடுகாடு அமைத்துத் தர வலியுறுத்தி விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். பல முறை மனு கொடுத்தும் நிரந்தரமான சுடுகாடு அமைத்துத் தராமல் தற்காலிகமாக ஒரு சில இடங்களை அந்தந்த சூழலுக்கு ஏற்றவறு மட்டுமே அமைத்து கொடுத்தாக பட்டியல் சாதி மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
இத்தகைய சூழலில் கடந்த 18ஆம் தேதி இரவு கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சார்ந்த 65 வயதான அமுதா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டு வருவாய்த்துறை அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
மே 19ஆம் தேதி அன்று விழுப்புரம் கோட்டாச்சியர் தலைமையில் ஓர் இடத்தைத் தேர்வு செய்தனர். அப்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், அரசு ஒதுக்கிய இடத்தின் அருகிலேயே தங்கள் கோயில் இருப்பதாகக் கூறி அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய நிரந்தரமான சுடுகாடு அமைத்துத் தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்து உயிரிழந்தவரின் உடலை வைத்து அடக்கம் செய்யாமல் போராட்டம் ஈடுபட்டனர்.

மீண்டும் காவல்துறையினர் மற்றும் விக்கிரவாண்டி வட்டாட்சியர் நிலையான சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கான இடத்தையும் தேர்வு செய்துள்ளதாகவும் கூறி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நபர் ஒருவர், பட்டியல் சமூக மக்கள் நிரந்தரமாக உடல் அடக்கம் செய்வதற்கு தனது நிலத்தை வழங்க முன் வந்துள்ளார். பின்னர் அதற்கு மாற்றாக வேறு இடம் வேண்டும் என்ற உறுதியை அரசு அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, கொட்டியாம்பூண்டி கிராமத்தில் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், உயிரிழந்த அமுதாவின் உடல் நேற்று, மே 20ஆம் தேதி, மாலை எரியூட்டப்பட்டது.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது விளக்கமளித்த அவர், "நிரந்தரமாக இடம் வழங்குவது தொடர்பாக முன்பே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் இறுதி சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் வரும் 26ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் அந்த கிராமத்தில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டார். அவர்கள் உயிரிழந்த பிறகு புதிதாக அவர்களுக்கு இடம் கண்டறிந்து ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.''
''அதன்பிறகு அதே ஊரைச் சேர்ந்த வேறொரு நபர் முன்வந்து தன்னுடைய நிலம் கொடுப்பதாகவும், அதற்கு மாற்றாக வேறு இடம் வேண்டும் என்றும் கேட்டார். பின்னர் அந்த இடத்தை தேர்வு செய்து உயிரிழந்தவர் உடலை அங்கே எரியூட்டினர். வரும் காலங்களில் யாரேனும் உயிரிழந்தால் அந்த இடத்தில் அடக்கம் செய்ய நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.''
''முன்னதாக கோயில் அருகே உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வந்துள்ளனர். அதனால் கோயில் பக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். பின்னர் அவர்களுக்கென நிரந்தரமான ஓர் இடம் தேர்வு செய்து கொடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

'நாகரிக சமூகத்திற்கே வெட்கக்கேடு' - கே.பாலகிருஷ்ணனன்
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனன், அரசாங்கம் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைந்து செயல்பட வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"அமுதா என்ற பட்டியல் சாதி பெண்ணின் உடலை புதைக்க இடமில்லாமல் 3 நாட்கள் போராட்டம் நடந்துள்ளது. அந்த கிராமத்தில் இருப்பதில் 10 குடும்பங்கள் மட்டுமே பட்டியல் சாதியினர். பொது மயானம் மறுக்கப்படுவதால் ஏரி, குளம், ஓடை போன்ற இடங்களிலேயே புதைக்கவும், எரிக்கவும் வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்தக் கொடுமையை மாற்றிட அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டு தீர்வு ஏற்படாத நிலையில், அமுதா மரணமடைந்துள்ளார்.''
''அவருக்கும் சாதி ஆதிக்க சக்திகளால் மயானம் மறுக்கப்பட்டதால். செத்த உடலோடு போராடும் நிலைக்கு உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 3 நாட்கள் போராட்டத்துக்கு பின் தற்போது உடல் புதைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மயானத்திற்கான கோரிக்கை நீடிக்கிறது.
சுதந்திர இந்தியாவில், சுடுகாட்டுக்கே வழியில்லை என்றால் இது நாகரிக சமூகத்திற்கே வெட்கக்கேடு," என்று பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








