தமிழ்நாடு அரசு பள்ளி மேலாண்மைக் குழுவில் இருளர் சமூகம் புறக்கணிப்பா? கள நிலவரம் என்ன ?

பட மூலாதாரம், TN SCHOOL Edu.Dept
- எழுதியவர், சே. பிரசன்ன வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சமவெளிப் பகுதிகளில் வாழும் இருளர் சமூக மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் இருந்து தனிமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அதற்கான தேர்தல் நடந்தபோது இருளர் சமூக மாணவர்களின் பெற்றோர்கள் வரவில்லை என்கிறது தமிழ்நாடு அரசு தரப்பு. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி சமூகங்களில் இருளர்கள் சமூகத்தினர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் காடுகளில் வாழும் இருளர்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வாழும் இருளர்கள் என இரண்டு பிரிவுகளாக உள்ளனர்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளியையும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதே பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கிய நோக்கம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளி வளாகங்களை மேம்படுத்தி பராமரித்தல், பள்ளிகளில் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக்குதல், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குதல், குழந்தைகளின் கற்றல் அறிவை மேம்பாடு அடைய செய்தல் போன்ற செயல்பாடுகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற முடியும்.
அதோடு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அனைத்து வகை வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், மாணவர்கள் தங்களுடைய பிரச்னைகள், தேவைகளை தெரிவிக்கவும் இந்த குழுக்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளன.
அதிகாரிகள் அவமதித்தாகக் குற்றச்சாட்டு
பழங்குடியின குழந்தைகளுக்கான அரண் கற்றல் மையம் ஒருங்கிணைப்பாளர், ஜோதி கலையரசி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், "தங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில், நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டத்தில், கலந்துகொண்ட இருளர் சமூக மாணவிகளின் பெற்றோர்கள் அதிகாரிகளிடம் மதிய உணவு சரியில்லை என்று கூறியிருக்கிறார்கள். "
"அதற்கு அதிகாரிகள் 'உங்க பொண்ண முதல்ல எண்ணெயை வெச்சு தலைவாரி ஸ்கூலுக்கு அனுப்புங்க. சாப்பாடு சரியில்லை என்றால் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்கலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் இப்பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் பலர் படிக்கும் நிலையில், ஒரு பழங்குடியின மாணவர்களின் பெற்றோரும் இக்குழுவில் தேர்வு செய்யப்படவில்லை.
இதுவும் விதிக்கு புறம்பானது என்றும், பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பல சம்பவங்களில் இதுவும் ஒன்று," எனத் தெரிவித்துள்ளார்.
"எங்களை மதிக்க மாட்டார்கள்"

நாங்கள் படிக்காமல் போய்விட்டோம் எங்கள் பிள்ளைகளும் அதைப்போல் படிக்காமல் போய் விடுவார்களோ என்கிற பயமும் இன்னும் இருக்கிறது என்கிறார் இருளர் சமூகத்தைச் சேர்ந்த செண்பகம். அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "நாங்கள் இருளர்கள் என்பதனால் எங்களை மதிக்க மாட்டார்கள். எங்கள் பிள்ளைகளை சீ.. போ என்றுதான் நடத்துகிறார்கள்."
"இந்த பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டத்தில் எங்களை அழைத்து இருந்தார்கள். நாங்கள் சென்றிருந்தோம், ஆனால் எங்களிடம் இது குறித்து எதுவுமே ஆலோசிக்கவில்லை. அவர்களாகவே ஏற்கனவே முடிவு செய்து வைத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு என் குழந்தையிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து கையெழுத்து வாங்கி வரச் சொன்னார்கள்.
எங்களுக்கு படிக்க தெரியாது என் குழந்தைக்கும் அது என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியவில்லை. என் கணவர் அதில் கையெழுத்திட்டு திருப்பிக் கொடுத்துவிட்டார். மேலாண்மை குழு குறித்து எந்த ஒரு விவரமும் தற்போது வரை எங்களுக்கு தெரியாது. ஒருவேளை இது குறித்து எங்களுக்கு விவரம் தெரிந்து இருந்தால் எங்கள் பிள்ளைகளும் நாங்களும் பயனடைவோம்," என்றார்.
"யாரையும், எதிர்த்து பேசியது கிடையாது"

தொடர்ந்து இருளர் சமூகத்தைச் சேர்ந்த செல்வி கூறுகையில், "எங்களை எதற்குமே கூப்பிட மாட்டார்கள். இதுதான் முக்கியமான மீட்டிங், எங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். நாங்கள் என்ன கேட்டு இருக்க போறோம். யாரையும் எதிர்த்து கூட பேச போவதில்லை, அவர்கள் கூறுவதற்கு தலையாட்டி வந்திருப்போம். "
"என் பிள்ளையை பள்ளியில் விடும் போது கூட என்னிடம் இந்த மேலாண்மை குழு குறித்து யாரும் கூறவில்லை, எதுவும் சொல்லவில்லை. என் பிள்ளை கூட இது குறித்து என்னிடம் எதுவும் சொல்லவில்லை. லட்சியத்தோடு என் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துக் கொண்டு இருக்கிறேன். "
"ஆனால், எங்களை தனிமைப்படுத்துவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.எங்கள் பகுதியில் இருந்து மேலாண்மை குழு கூட்டத்திற்கு ஒருவருக்கு கூட தகவல் செல்லவில்லை . ஒருவேளை எங்களை அழைத்து இருந்தால் இந்த மேலாண்மை குழு குறித்து உரிய விழிப்புணர்வை கிடைத்திருக்கும் தற்போது இக்குழுவில் யார் தலைவர்? யார் துணை தலைவர்? என்கின்ற விவரம் கூட எங்களுக்கு தெரியாது," என்றார்.
முனியப்பன் என்பவர் கூறுகையில், "பள்ளி மேலாண்மை குழுவினர் பெற கூடிய நன்மைகள் தீமைகள் குறித்து எங்களிடம் யாரும் எதுவும் கூறவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது. இதன் அருமை குறித்து எங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தால் நிச்சயம் இதை நாங்கள் தவிர்த்து இருக்க மாட்டோம். நாங்களும் இதில் நிச்சயம் கலந்து கொண்டு இருப்போம், " என்றார்.
இருளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை?
பழங்குடியினரை பொருத்தவரை அவர்களின் "பிரதிநிதித்துவம் எல்லா நிலைகளிலும் குறைவாக உள்ளது" என்கிறார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித் குமார். அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "பள்ளி மேலாண்மைக்குழுவில் இருளர் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பின், அவர்களின் பெற்றோர்களுக்கு நிச்சயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருளர் சமூக மாணவர்களின் பெற்றோர்கள் மேலாண்மை குழுவில் தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்கிற புகார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
"கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்"

சமவெளிப் பகுதிகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் இருளர் சமூக மாணவர்கள் சிறுபான்மையாக இருப்பதனால் யாருக்கும் தெரிவதில்லை என்கிறார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.டில்லிபாபு. அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "பள்ளி மேலாண்மை குழுவில் இருளர் சமூக மாணவர்கள் பள்ளியில் பயில்கிறார்கள் என்றால் அவர்களின் பெற்றோர்கள் இடம்பெற தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் பொறுப்பேற்க வேண்டும்.
கொரோனா தாக்கத்திற்கு பிறகு ஆதிவாசி மாணவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கு செல்வதை மறந்துவிட்டார்கள். இந்திய நாடு முழுவதும் பழங்குடியின மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவித் தொகையாக ஒதுக்கப்பட்ட 7600 கோடி ரூபாய் இந்த மாணவர்களுக்கு முறையாக வந்து சேரவில்லை. இதுகுறித்து ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைமை சார்பாக பிரதமருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.
வட்டார கல்வி அலுவலர் விளக்கம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டார கல்வி அலுவலர் பிரேமலதாவிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, பள்ளி மேலாண்மை குழுவின் உறுப்பினர்கள் சேர்க்கை தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த ஒரு விதி மீறலும் நடைபெறவில்லை என்றார்.
"பள்ளி மேலாண்மை குழுவின் நன்மைகள் குறித்து விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் மூலம் இருளர் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இருந்தபோதும் தேர்தல் நடைபெறும் பொழுது ஒருவர் கூட வரவில்லை. ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொழுது மற்றொருவர், அவரை முன்மொழிய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் வராத பட்சத்தில் அவரை எவ்வாறு குழுவில் இணைக்க முடியும்," என்கிறார்.
மேலும், "மறுமுறை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் பொழுது இது மாதிரியான பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். தேர்தல் நடைபெற்றது வார நாள் என்பதனால், பெரும்பாலான இருளர் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டார்கள். அவர்கள் கலந்து கொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









